Published:Updated:

விடைபெறும் Internet Explorer: அன்றைய பிரௌசர்களின் அரசன் மீம் மெட்டீரியலானது எப்படி?!

Internet Explorer

95% பேர் பயன்படுத்திவந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நாளடைவில் மற்ற பிரௌசர்களைப் பதிவேற்ற மட்டும் பயன்படும் பிரௌசராக மாறியது. அதன் அசாத்திய(!) வேகத்துக்காக மீம் கான்செப்ட்டானது. இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?

விடைபெறும் Internet Explorer: அன்றைய பிரௌசர்களின் அரசன் மீம் மெட்டீரியலானது எப்படி?!

95% பேர் பயன்படுத்திவந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நாளடைவில் மற்ற பிரௌசர்களைப் பதிவேற்ற மட்டும் பயன்படும் பிரௌசராக மாறியது. அதன் அசாத்திய(!) வேகத்துக்காக மீம் கான்செப்ட்டானது. இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?

Published:Updated:
Internet Explorer

நம்மில் பலரும் பயன்படுத்திய முதல் வெப் பிரௌசர் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரராகதான் இருக்கும். 27 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்த பிரௌசரின் சேவையை இன்றுடன் முற்றிலுமாக நிறுத்துகிறது மைக்ரோசாஃப்ட். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை என்றாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கால நினைவுகளை மீட்டு அதற்கு பிரியாவிடை கொடுத்துவருகின்றனர் உலகமெங்கும் இருக்கும் இணையப் பயன்பாட்டாளர்கள்.

நாமும் அதற்கு பிரியாவிடை கொடுக்கும் முன், ஒரு காலத்தில் இணையத்தை ஆண்டுகொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், இன்று யாருமே சீண்டாத பிரௌசராக மாறியது எப்படி என்ற குட்டி வரலாற்றைப் பார்ப்போமா!
Netscape Navigator
Netscape Navigator

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1990-களின் முற்பகுதி... வளர்ந்த நாடுகளில் வெப் பிரௌசிங் பரவலாகத்தொடங்கிய காலம். எண்ணற்ற புதிய இணையதளங்கள் உருவாகத்தொடங்கின. அதை அலச தேவையான பிரௌசர்களும் உருவாகின. முதலில் 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற பிரௌசர்தான் பலராலும் பயன்படுத்தப்பட்டது. அப்போதுதான்,1995-ல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை அறிமுகம் செய்தது மைக்ரோசாஃப்ட். புதிய வசதிகளுடன் உடனடியாக மக்கள் அபிமானத்தைப் பெற்றது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். சொல்லப்போனால் இணைய உலகத்தில் பல புதிய விஷயங்களுக்கு அன்று வித்திட்டது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான்.

Internet Explorer
Internet Explorer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைய இணையதளங்கள் போல் அன்றைய இணையதளங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. வெறும் தகவல்களின் தொகுப்பாக மட்டுமே அவை இருந்தன. அதை முதலில் மாற்றிய பெருமையும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோருக்கே. ஆம், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான் முதலில் CSS-க்கு சப்போர்ட் கொடுத்தது. இணையதளங்களின் லுக்கை CSS கோடிங் மொத்தமாக மாற்றியது. AJAX-க்கு முதலில் சப்போர்ட் கொடுத்ததும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்தான். ரிஃப்ரெஷ் செய்யாமல் இணையதளத்தில் இருக்கும் தகவல்கள் தானாகவே மாற AJAX வழிவகுத்தது. இப்படி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் ஏராளம்.

பொறியியலாளர்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மனதில் வைத்து இணையதளங்களை வடிவமைக்கும் அளவுக்கு அப்போது ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு விண்டோஸின் வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணம். கணினி என்றால் அது விண்டோஸ் ஓஎஸ்ஸுடன்தான் வரும் என்று அனைவரும் நினைக்கும் அளவுக்கு அனைத்து இடங்களுக்கும் விண்டோஸை எடுத்து சென்றிருந்தார் பில் கேட்ஸ். கிட்டத்தட்ட விண்டோஸ் ஓஎஸ்ஸின் அங்கமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை வைத்திருந்தது மைக்ரோசாஃப்ட். இதுவும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். இப்படி 'தனக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு அதன் சொந்த பிரௌசரையே வளர்த்துக்கொண்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட்', 'போட்டி பிரௌசர்களின் வளர்ச்சியை வேண்டுமென்றே தடுக்கிறது' என பல வழக்குகளையும் இதற்காகச் சந்தித்திருக்கிறார்கள் பில் கேட்ஸ் அண்ட் கோ!

விடைபெறும் Internet Explorer: அன்றைய பிரௌசர்களின் அரசன் மீம் மெட்டீரியலானது எப்படி?!

இப்படி, 2003-ல் 95% பேர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். 'என் காடு, நானே ராஜா' என்ற மனநிலைக்கும் வந்துவிட்டது மைக்ரோசாஃப்ட். புதிய வசதிகளை அவ்வப்போது கொடுத்தால் போதும் என்ற மெத்தனமும் தொற்றிக்கொண்டது. ஏகப்பட்ட பாதுகாப்பு கோளாறுகள் இருக்கின்றன, புதிய இணையதளங்கள் லோடு ஆக லேட் ஆகிறது என பல குற்றச்சாட்டுகளை வாடிக்கையாளர்கள் முன்வைத்தும் அவற்றுக்கு செவிசாய்க்கவில்லை மைக்ரோசாஃப்ட். இணையத்தை நிர்வகிக்கும் W3C (World Wide Web Consortium) நடைமுறைகளையே உதாசீனப்படுத்தும் அளவுக்கு இது சென்றது. இப்படியான நேரத்தில்தான் 2004-ல் களமிறங்கியது மொஸில்லாவின் ஃபயர்ஃபாக்ஸ் பிரௌசர். வேகமான பிரௌசராக, தொழில்நுட்பப் பிரியர்களுக்கென பிரத்யேக வசதிகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்தது ஃபயர்ஃபாக்ஸ். 2003-ல் 95 சதவிகிதமாக இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாடு 2008-ல் 70-க்கும் கீழ் சரியத்தொடங்கியது. அப்படியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை மைக்ரோசாஃப்ட். 2009-ல் கூகுள் குரோம் பயன்பாட்டுக்கு வந்தது. 'Incognito mode' தொடங்கி ஏகப்பட்ட வசதிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது குரோம். மக்களிடையே இந்த பிரௌசர்களை எடுத்துச்செல்ல கூகுளும் மொஸில்லாவும் பல முயற்சிகளை மேற்கொண்டன. 'சரி, அதுக்கு என்ன இப்போ?' என அதையும் கடந்துசென்றது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி நாளடைவில் புதிய இணையதளங்களை வேகமாக லோடு செய்ய முடியாமல், புதிய வசதிகள் எதுவும் இல்லாமல் மற்ற பிரௌசர்களை பதிவேற்ற மட்டும் பயன்படும் பிரௌசராக மாறியது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். அதன் அசாத்திய(!) வேகத்துக்காக மீம் கான்செப்ட்டாகவே மாறியது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். சில சாம்பிள் மீம்ஸ் உங்கள் பார்வைக்கு!

எப்படியோ ஒரு கட்டத்தில் மைக்ரோசாஃப்டுக்கு நிலைமை புரிய, புதிய பிரௌசர்களுக்கு இணையான வசதிகளுடன் எட்ஜ் என்ற பிரௌசரை 2015-ல் அறிமுகப்படுத்தியது மைக்ரோசாஃப்ட். அப்போதே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மொத்தமாக மைக்ரோசாஃப்ட் கைகழுவிட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மைக்ரோசாஃப்ட் சேவைகளே இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை சப்போர்ட் செய்வதை நிறுத்தின. கடந்த ஆண்டு அதிகாரபூர்வமாக இதை அறிவித்தது. ஜூன் 15, 2022 தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் கடைசிநாள் என்றது. அந்த நாள்தான் இந்த நாள்!

விடைபெறும் Internet Explorer: அன்றைய பிரௌசர்களின் அரசன் மீம் மெட்டீரியலானது எப்படி?!

இதன்மூலம், மொத்தமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு முடிவு வருகிறதா? என்று கேட்டால் ஆம், இல்லை என்ற இரண்டு பதில்களையுமே சொல்லலாம். ஆம், பிரௌசராக இனி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வேலை செய்யாது. ஆனால், அதே நேரத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரால் மட்டுமே முடிந்த சில விஷயங்கள் இருந்தன. அன்று வடிவமைக்கப்பட்ட பழைய இணையதளங்களை இன்று இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கொண்டு மட்டுமே காணமுடியும். இதற்கு தீர்வாக எட்ஜ் பிரௌசரில் 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மோடு' என்ற தனி வசதியை கொடுத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரால் மட்டுமே முடிந்த சில விஷயங்களை எட்ஜ் பிரௌசரிலும் செய்யலாம். அப்படி 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' தொடர்ந்து வாழ்ந்துகொணடே இருக்கும்!

பி.கு: 'சரி, ஜூன் 15 நேத்தே முடிஞ்சிருச்சே, இப்போ ஏன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பத்தி கட்டுரை போடுறீங்க?'னு நீங்க கேட்கலாம். 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' சம்மந்தப்பட்ட கட்டுரையை ஒரு நாள் கூட லேட்டா போடலைன்னா எப்படி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism