Published:Updated:

"நீங்கள் ட்ரில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கலாம் ஆனால்..!"- வாட்ஸ்அப்பை கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றம்

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய பிரைவசி பாலிஸி குறித்துப் பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றமும் வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த மாதம் வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பாதுகாப்பு கொள்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகள், வாட்ஸ்அப் பயனர்களின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய பிரைவசி பாலிஸி ஜனவரி 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து வாட்ஸ்அப் பயனர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அப்போதிருந்தே ஏராளமான மக்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாறி வருகின்றனர். மேலும், வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய பிரைவசி பாலிஸி இந்திய குடிமக்களின் தனியுரிமையை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய விமர்சனங்களால், வாட்ஸ்அப் தன் புதிய பிரைவசி பாலிஸியை 20 மே 2021 வரை ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Whatsapp Privacy Policy postponed
Whatsapp Privacy Policy postponed

இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி குறித்து குறிப்பிடுகையில், பயனரின் தனியுரிமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றார். மேலும், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் பயனர்களின் எந்த வகையான தரவுகள் பகிரப்படுகின்றன, எந்த வகையான தரவுகள் பகிரப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதி, ”நீங்கள் (ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்) 2 அல்லது 3 ட்ரில்லியன் டாலர் நிறுவனமாக இருக்கலாம். ஆனால் மக்களின் தனியுரிமை அதைவிட மதிக்கத்தக்கது. மக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது நம் கடமையாகும். அவர்கள் வாட்ஸ்அப்பில் பகிரும் செய்தி ஃபேஸ்புக்கிற்குப் பகிரப்படுகிறது என்ற அச்சத்தில் உள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில், "வாட்ஸ்அப் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக்கிற்குத் தருகிறது போன்ற அம்சங்களில் உண்மை இல்லை. வாட்ஸ்அப் தனியுரிமையை எப்போதும் பாதுகாக்கும்" என்றார்.

இந்த வழக்கு மீண்டும் நான்கு வாரங்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு