Published:Updated:

`இவை மனிதர்கள் உருவாக்கிய மீம்ஸ் அல்ல!' மீம் கிரியேட்டராகவும் களமிறங்கிய AI

AI உருவாக்கிய மீம்ஸ்
AI உருவாக்கிய மீம்ஸ்

அரசியல், சினிமா தொடங்கி அனைத்து பிரிவுகளிலும் நடக்கும் லேட்டஸ்ட் விஷயங்களைக்கூட சரியாகப் பிரதிபலிக்கும்வண்ணம் மீம்களை உருவாக்குகிறது இந்த AI.

நாளுக்கு நாள் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இந்த நூறாண்டையே 'AI நூற்றாண்டு' என்று அழைக்கக்கூடிய அளவுக்கு அத்தனை முன்னேற்றம் கண்டுவருகிறது AI சார்ந்த தொழில்நுட்பங்கள். கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலுமே பங்காற்றத் தொடங்கியிருக்கும் AI, இப்போது மீம் கிரியேட்டர்களுடனும் போட்டிபோட வந்துவிட்டது. ஆம், சொந்தமாக மீம் உருவாக்க ஆரம்பித்துவிட்டது AI. 'This Meme Does Not Exist' என்ற தலைப்பிலான கீழ்க்காணும் இணையதளத்தில் மீம் கிரியேஷனில் AI-ன் கைவண்ணத்தை உங்களால் பார்க்கமுடியும்.

https://imgflip.com/ai-meme

இதில், சர்வதேச அளவில் வைரலான 48 மீம் டெம்ப்ளேட்களை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு சொந்தமாக கேப்ஷன் வைக்கிறது செயற்கை நுண்ணறிவு. மீண்டும் ரீ-லோடு செய்தால் இன்னொரு மீம் உருவாக்கப்படுகிறது. வேண்டுமானால் டெம்ப்ளேட்களில் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம். இவை அனைத்துமே முதல்முறையாக உருவாக்கப்படுபவை. ஒவ்வொரு முறையும் பிரெஷ்ஷாக ஒரு மீம்மை நமக்குத் தருகிறது இந்த AI. அப்படி இந்த AI உருவாக்கிய மீம்களில் சில சாம்பிள்கள் இங்கே...

இது எப்படி சாத்தியமானது?

இதே தளத்தில், 'மீம் மேக்கர்' டூல் கொண்டு மக்கள் உருவாக்கிய மீம்கள் அனைத்தையும் கொண்டு மீம்களை உருவாக்க இந்த AI நியூரல் நெட்வொர்க் தினமும் பயிற்றுவிக்கப்பட்டுவருகிறது எனத் தெரிவிக்கிறது இந்த இணையதளம். இப்படி மக்களின் கருத்துகள் பயிற்றுவிக்கப்படுவதால், அரசியல், சினிமா தொடங்கி அனைத்து பிரிவுகளிலும் நடக்கும் லேட்டஸ்ட் விஷயங்களைக்கூட சரியாகப் பிரதிபலிக்கும் வண்ணம் மீம்களை உருவாக்குகிறது இந்த AI. கொரோனாவை கூட விட்டுவைக்கவில்லை.

இது ஆரம்பக்கட்டம்தான் என்பதால் பாதிக்கு பாதி, சரியில்லாத அர்த்தமில்லாத மீம்களையும் உருவாக்குகிறது. ஆனால், மக்கள் உருவாக்கும் மீம்களை தினந்தோறும் கவனித்து, அதிலிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறது என்பதால், நாள்கள் செல்லச் செல்ல இதுவும் பெருமளவில் குறைந்துவிடும். இப்போதே தனியாக மீம் பக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு நல்ல மீம்களைக் கொட்டுகிறது இந்த AI.

இப்படித்தான், கடந்த வருடம் உலகத்தில் எங்கும் காணமுடியாத முகங்களை உருவாக்கியது ஒரு AI. அது குறித்த கட்டுரை கீழே உள்ள லிங்க்கில்

Vikatan

இப்படி கிரியேட்டிவிட்டி சார்ந்த பல விஷயங்களிலும் AI பின்னிப்பெடலெடுக்கத் தொடங்கியிருக்கிறது.

அடுத்தது என்ன, நம்ம வடிவேலு மீம்களையெல்லாம் இறக்கி சட்டுபுட்டுனு நம்மூர்ல AI-யை ட்ரெயின் பண்ணுங்க பா..!
அடுத்த கட்டுரைக்கு