Published:Updated:

`ரூ.1,500தான் செலவு..கேமரா; நோயாளிகளுக்குப் பொருள்கள்!’- தூத்துக்குடி மாணவர் வடிவமைத்த அசத்தல் கருவி

கருவியின் செயல்பாட்டை விளக்கும் மாணவர் மதன்
கருவியின் செயல்பாட்டை விளக்கும் மாணவர் மதன்

கொரோனா சிகிச்சையால் தனிமைப்படுத்தப்பட்டவரின் அறைக்கு பொருள்களை தானே எடுத்துச் செல்லும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் மதன்குமார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க, வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறி காரணமின்றி சாலைகளில் சுற்றித் திரிவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தானே தூக்கிச் செல்லும் கருவி
தானே தூக்கிச் செல்லும் கருவி

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருவதால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிட அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ``கொரோனா நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான மருந்து, உணவு வழங்கும் பணியில் செவிலியர்களால் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படும்” எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

திருச்சியிலுள்ள புரொபல்லர் டெக்னாலஜிஸ் என்ற பறக்கும் கேமரா மற்றும் ரோபோக்களை வடிவமைத்து வரும் தனியார் நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படும் வகையில் `ஜாபி’ என்னும் ரோபோவை தயாரித்து அரசுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. வாய்ஸ் இன்ட்ராக்டிவ் தொழில்நுட்பம் மற்றும் மொபைல் மூலமாக கன்ட்ரோல் செய்யப்படும் மனித வடிவிலான 9 ஜாபி வகை ரோபோக்களின் முன்னோட்டம் கடந்த 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னிலையில் நடந்தது.

அமைச்சர், ஆட்சியரிடம் விளக்கும் மாணவர் மதன்
அமைச்சர், ஆட்சியரிடம் விளக்கும் மாணவர் மதன்

இந்நிலையில், கொரோனா மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவும் வகையில் `தானே கொண்டு செல்லும் கருவி' என்ற பெயரில் சிறிய வகையிலான இயந்திரத்தை வடிவமைத்துள்ளார் பொறியியல் மாணவர் மதன்குமார். கோவை, கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மெக்கானிக் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வரும் இவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்.

இதன் செயல்விளக்கத்தை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மாவட்ட எஸ்.பி அருண் பாலகோபாலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து மதன்குமாரிடம் பேசினோம். ``கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு பொறியியல் மாணவரா என்னோட பங்களிப்பு இருக்கணும்னு நினைச்சேன். `Internet of things’ எனப்படும் டெக்னாலஜி மூலமா கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் பயன்படும் வகையிலான `தானே கொண்டு செல்லும் கருவி’ என்ற இயந்திரத்தை வடிவமைச்சிருக்கேன்.

கேமரா கண்காணிப்பு
கேமரா கண்காணிப்பு

இந்த இயந்திரத்தால் இன்டெர்நெட் மூலம் `ப்ளிங்க் ஆப்’ (Blynk App) உதவியுடன் wifi வளையத்திற்குள் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை எளிதாகக் கண்காணிக்க முடியும். மேலும், இதில் பொருத்தப்பட்டுள்ள கூடை மூலம் தனிமைப்படுத்தப்பட்டவரின் அறைக்கு அந்த நபருக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருள்கள் என 3 முதல் 4 கிலோ எடை வரையுள்ள பொருள்களை அனுப்ப முடியும்.

அதேபோல, அறையிலிருந்தும் இதே எடை அளவிற்கு பொருள்களை ஏற்றி வெளியே அனுப்பவும் முடியும். இந்த இயந்திரம் 360 டிகிரியிலும் இயங்கும். இதில், கேமரா பொருத்தப்பட்டிருப்பதால் அவர்களின் நிலையைத் தெரிந்து கொள்ளலாம். இந்த இயந்திர வடிவமைப்பின் மொத்தச் செலவு ரூ.1,500 ஆகும். இந்த இயந்திரம் சமதளத்தில்தான் இயங்கும். மேலும் இதனை விரிவுபடுத்தினால், இதில், கூடுதல் வசதியாக ஜி.பி.எஸ், சென்சார், லைட் போன்றவற்றையும் பொருத்திக் கொள்ளலாம்.

பொறியியல் மாணவர் மதன்
பொறியியல் மாணவர் மதன்

அத்துடன், படிக்கட்டுகள், மேடு, பள்ளம் ஆகிய இடங்களிலும் இயங்கும் வகையிலும் வடிவமைக்கலாம். இந்த வசதிகளுடன் இக்கருவியை வடிவமைக்க ரூ.18,000 முதல் 20,000 வரை செலவாகும். இதே கருவியைக் கொண்டு விவசாய நிலங்கள், வனத்துறை பகுதிகளில் உள்ள ஆபத்தான விலங்களின் நடமாட்டம், அவை பதுங்கியிருக்கும் இடங்கள் குறித்தும் கண்காணிக்க முடியும்” என்றார். செயல் விளக்கத்திற்குப் பிறகு, மாணவரை அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டினார்.

அடுத்த கட்டுரைக்கு