Published:Updated:

1,35,000 வீடியோக்களை நீக்கியது டிக் டாக்! - காரணம் என்ன?

டிக் டாக் அப்ளிகேஷனில், அநாகரிகமாகமான பதிவுகளை மேற்கொள்பவர்களின் கணக்குகள் தடைசெய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tik ToK
Tik ToK

இன்று, சீரியல் பார்ப்பதைவிட  டிக் டாக் வீடியோக்களைத்தான் அதிகம்பேர் பார்க்கிறார்கள். பெரும்பாலான இளைஞர்களுக்குத் தங்கள் திறமைகளைப் பட்டைதீட்டிக்கொள்ளும் களமாக `டிக் டாக்' அப்ளிகேஷன் உருவெடுத்திருக்கிறது. அதேசமயம், அதில் ஆபாசமான சில வீடியோ பதிவுகளும் கொச்சையான வசனங்களைக் கொண்ட பகிர்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. இதனால், இந்த அப்ளிகேஷனைத் தடைசெய்ய வேண்டும் என சமீபத்தில் போராட்டங்கள் வெடித்தன.

இந்தியாவில் மட்டும் டிக் டாக் பயனாளர்களின் எண்ணிக்கை 200 மில்லியன். இது நாளுக்குநாள் அதிகரித்தபடியே இருக்கிறது.
டிக் டாக் நிறுவன தகவல்

அந்தச் சமயத்தில், டிக் டாக் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களை நீக்கியது. தொடர்ந்து நீக்கியும்வருகிறது. அதனடிப்படையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, கடந்த ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்திற்குள் 1,35,000 வீடியோ பதிவுகளை டிக் டாக் நிறுவனம் நீக்கியிருக்கிறது.

இதே காலகட்டத்தில், மொத்தம் 7,00,257 டிக் டாக் கணக்குகளின் மீது புகார்கள் பதிவாகியிருக்கின்றன. 1,81,926 கணக்குகள் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. டிக் டாக் அப்ளிகேஷனில், அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் அருவருக்கத்தக்க பதிவுகளை மேற்கொள்பவர்களின் கணக்குகள் தடைசெய்யப்படும் என்றும், அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என்றும் டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vikatan

தற்போதைய நிலையில், சந்தை வாய்ப்பு அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாகவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருப்பதாகவும் டிக் டாக் தெரிவித்துள்ளது. இன்றைய நிலையில், இந்தியாவில் மட்டும் டிக் டாக் பயனாளர்களில் எண்ணிக்கை 200 மில்லியனாக இருக்கிறது. இது, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.