Published:Updated:

`MX TakaTak', `Moj', 'Reels'... டிக் டாக்குக்கு மாற்றாக வந்துள்ள ஆப்கள் எப்படி?- ஒரு ரவுண்டப்!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

இப்போது அரசின் இந்தத் தடையால் டிக் டாக்குக்கு மட்டுமல்ல... பல டிக் டாக் க்ரியேட்டர்களுக்கும் வருமானம் தடைபட்டுள்ளது. இதனால் மாற்றுகளைத் தேடத்தொடங்கிவிட்டனர் டிக் டாக் க்ரியேட்டர்கள்.

கடந்த வாரம் மத்திய அரசு, 59 சீன ஆப்களைத் தடைசெய்வதாக அறிவித்திருந்தது. 130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆப்கள் தொடர்ந்து பயனர் தகவல்களை இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வருகின்றன என்றும் தெரிவித்தது அரசு. இந்த நடவடிக்கை பலராலும் வரவேற்கப்பட்டது.

Tik Tok
Tik Tok

உண்மையில், இந்த ஆப்கள் பலவற்றில் பல தகவல் பாதுகாப்பு பிரச்னைகளும் குழப்பங்களும் இருக்கவே செய்தன. தடைசெய்யப்பட்ட 52 ஆப்களில் பலவற்றை நாம் எங்கும் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம்தான். ஆனால், இதில் இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தும் ஆப்களும் இடம்பெறாமல் இல்லை. அப்படித் தடைசெய்யப்பட்டிருக்கும் சீன ஆப்களில் மிகவும் பிரபலமானது டிக் டாக். பல விமர்சனங்கள் இருந்தாலும் க்ரியேட்டிவ்வான குட்டி வீடியோக்களை உருவாக்கச் சிறந்த தளமாக இருந்தது டிக் டாக். இந்தியாவில் நகர்புறங்கள் மட்டுமல்லாமல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது டிக் டாக். எளிய மனிதர்கள் பலரையும் உலகுக்கு அடையாளம் காட்டியது. ஆனால், இப்போது அரசின் இந்தத் தடையால் டிக் டாக்குக்கு மட்டுமல்ல பல டிக் டாக் க்ரியேட்டர்களுக்கும் வருமானம் தடைபட்டுள்ளது.

இந்தத் தடையால் டிக் டாக் மொத்தமாக 45,000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கலாம் எனக் கணிக்கப்படும் அதே நேரத்தில் இந்தியாவின் டாப் 20 டிக் டாக் பிரபலங்கள் மட்டும் இந்தத் தடையால் மொத்தமாக சுமார் 120 கோடி வரை இழப்பைச் சந்திப்பார்கள் எனச் சமீபத்தில் வெளியான IIHB (The Indian Institute of Human Brands ) அறிக்கை தெரிவிக்கிறது. லட்சங்களில் ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்கள் தொடங்கி கோடிகளில் ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்கள் வரை அனைவருக்குமே வருமான இழப்பு என்பது நிச்சயம் இருக்குமாம்.

டிக் டாக் தடையால் ஜாக்பாட்! - ஒரு கோடி டவுன்லோடுகளைக் கடந்த `சிங்காரி’

டிக் டாக்கில் முதல் தலைமுறை இணையப் பயன்பாட்டாளர்கள் அதிகம். 18 - 24 வயதுக்கிடையே உள்ள பயனாளர்களும் அதிகம். இந்தக் காரணத்தால் பெரும் நிறுவனங்கள் பலவும் இந்த டிக் டாக் பிரபலங்களை ('Influencer' என்று சொல்லலாம்) வைத்து தங்கள் பிராண்ட்டை புரொமோட் செய்துவந்தன. தற்போது மார்க்கெட்டிங் உலகில் இருப்பவர்களுக்கு 'Influencer Marketing'-ன் மகத்துவங்கள் தெரிந்திருக்கும். இந்த டிக் டாக் தடைக்குப் பிறகு அதிலிருக்கும் பிரபலங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் குறைந்தே காணப்படுகிறதாம். இதுதான் வருமான இழப்புக்கு முக்கிய காரணம்.

இந்த க்ரியேட்டர்கள் பலரும் டிக் டாக் எப்படியும் மீண்டும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். டிக் டாக் தடையை சந்திப்பது இது முதல்முறை கிடையாது. ஏற்கெனவே ஆபாச வீடியோக்கள் பகிரப்பயன்படுகிறது என்ற சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்துள்ளது டிக் டாக். தற்போதைய தடைகுறித்து பேசிய டிக் டாக்கின் இந்தியத் தலைவர் நிகில் காந்தி, "இந்திய அரசின் இந்த உத்தரவுக்கு டிக் டாக் அடிபணிகிறது. பிரச்னைகளை கலந்து பேச அரசு தரப்பில் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு சட்டங்களையும் சரிவரப் பின்பற்றி வருகிறோம். இதுவரை இந்தியப் பயனர்கள் தகவல்களைச் சீனா உட்பட எந்த அரசிடமும் நாங்கள் பகிரவில்லை. அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அதை நாங்கள் செய்ய மாட்டோம். பயனர்களின் பிரைவசியைப் பாதுகாப்பதே எங்களது அதிகபட்ச முன்னுரிமை" என்று தெரிவித்திருந்தார்.

இந்தத் தடைக்கு அரசு சொல்லும் முக்கியக் காரணங்களில் ஒன்று இந்தியா அல்லாத இடங்களிலுள்ள சர்வர்களில் இந்தியப் பயனர்களின் தகவல்கள் சேமிக்கப்படுகிறது என்பதுதான். இதையும் இந்திய அரசு சுட்டிக்காட்டும் மற்ற சிக்கல்களையும் சரிசெய்யும்பட்சத்தில் டிக் டாக் மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம்.
Tik Tok v Mitron
Tik Tok v Mitron

ஆனால், அதுவரை என்ன செய்வது என்று மாற்றுகளைத் தேடத் தொடங்கிவிட்டனர் டிக் டாக் க்ரியேட்டர்களும் பயனாளர்களும். இது டிக் டாக் போன்ற செயல்பாட்டுடன் இருக்கும் பிற சேவைகளுக்கு மிகப்பெரிய 'ஜாக்பாட்' வாய்ப்பு. டிக் டாக் 12 கோடி இந்தியர்களால் (Monthly Active Users) பயன்படுத்தப்பட்டது. அந்தப் பயனாளர்களைக் கைப்பற்றுவதில் பலரும் தீவிரம் காட்டிவருகின்றனர். சமீபத்தில் இப்படி அறிமுகமான இந்திய ஆப்களான மித்ரோன், சிங்காரி என இரண்டுமே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. ஷேர் சாட் 'Moj' என்ற ஷார்ட் வீடியோ சேவை ஒன்றை வழங்கிவருகிறது. ட்ரெல் (Trell) என்ற ஆப்பும் பலரையும் ஈர்த்துவருகிறது. நேற்று MX Player 'MX TakaTak' என்ற சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த பிரிவில் இன்னும் பல சேவைகளை எதிர்பார்க்கலாம். அந்த அளவுக்கு எப்போதுமில்லாத கடும் போட்டியைக் காணமுடிகிறது.

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
இப்படியான சூழலில்தான் நேற்று மிகவும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் அதன் 'ரீல்ஸ்' சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. டிக் டாக் போன்றே பல வசதிகளைக் கொண்டிருக்கும் இது தனி சேவை கிடையாது. இது இன்ஸ்டாகிராமுடன் இணைக்கப்பட்டிருக்கும் சேவை.

எப்படிப் பயன்படுத்துவது?

  • முதலில் இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

  • பின்பு ஸ்டோரி பட்டனை கிளிக் செய்து இன்ஸ்டாகிராம் கேமராவை ஓப்பன் செய்யுங்கள்.

  • அதில் கீழே Boomerang, SuperZoom, Handsfree போன்ற வசதிகளுடன் 'Reels' இருப்பதைப் பார்க்கலாம்.

  • அதை க்ளிக் செய்தால் கிட்டத்தட்ட டிக் டாக் போன்றதொரு திரை வரும். அதில் உங்களால் ஆடியோ சேர்த்துக்கொள்ள முடியும்.

  • ஏற்கெனவே சோனி போன்ற பிரபல இசை லேபிள்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதால் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பாடல்களுமே இதில் இருக்கிறது. இதில் ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம். இல்லை ஆடியோ இல்லாமல் லைவ்வாக உங்கள் குரலில் கூட வீடியோ ரெகார்ட் செய்யலாம்.

  • இதுபோக நிறைய AR effects-ம் இன்ஸ்டாகிராமில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். டைமர், ஸ்பீட் ஆப்ஷன்களும் உண்டு.

  • இப்படி இந்த வசதிகளை கொண்டு வீடியோவை உருவாக்கிவிட்டீர்கள் என்றால் அதை உங்களைப் பின்தொடர்பவர்கள் மட்டும் பார்க்கும் வண்ணம் ஸ்டோரியாக பதிவிடலாம், இல்லை அனைவருக்கும் தெரியும் வண்ணம் 'ரீல்ஸ்' எனப் பதிவிடலாம்.

நேற்று இது அறிமுகமானதிலிருந்தே திரைப்பிரபலங்கள் பலரும் இதைப் பயன்படுத்தி வீடியோக்கள் பதிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. டிக் டாக் இல்லாத இந்த சூழலில் மற்ற எந்த ஆப்பை விடவும் இதுதான் மக்களிடம் நன்கு சென்று சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

ரீல்ஸ் | கத்ரீனா கைஃப்
ரீல்ஸ் | கத்ரீனா கைஃப்

முதல் காரணம், எந்த ஒரு தொய்வும் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுகிறது 'ரீல்ஸ்'. டிக் டாக் போல வேண்டிய வசதிகளும் அதிகம் இருக்கிறது. அடுத்த காரணம், ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் இந்தியாவில் மிகவும் பிரபலம். 8 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்கள். நாளுக்கு நாள் இது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. திரை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும் பயன்படுத்தும் ஒரு சேவையாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. ஏன் டிக் டாக் பிரபலங்கள் கூட புகைப்படங்கள் பதிவிடுவது, ரசிகர்களுடன் உரையாடுவது என இன்ஸ்டாகிராமில்தான் செம ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்கள். இதனால் 'ரீல்ஸ்'தான் மக்களை சென்றடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரே குறை, இன்ஸ்டாகிராம் நகர்ப்புற மக்களின் சேவையாகவே பார்க்கப்படுகிறது. டிக் டாக் அளவுக்கு பயன்படுத்த இன்ஸ்டாகிராம் எளிமையாக இருக்காது. இதுதான் இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' முன்னிருக்கும் முக்கிய சிக்கல். ஆனால் பிரபலங்கள் அதிகம் இருப்பது, வீடியோக்களை உருவாக்க பல நல்ல வசதிகள் இருப்பது என இன்ஸ்டாகிராம் பக்கம் அனைவரையும் ஈர்ப்பதற்கான சக்தி இருக்கிறது. புதிய பயனாளர்களை இதன் மூலம் பெற்றுவிட்டால் 'ரீல்ஸ்' ஹிட்தான்.

சிங்காரி | Chingari
சிங்காரி | Chingari

இந்திய ஆப்களான மித்ரோன், சிங்காரி, மோஜ், ட்ரெல், ரோபோஸோ போன்ற சேவைகள் இப்போதுதான் களம் கண்டுள்ளன. இதனால் இன்னும் பல விதங்களில் இவை மேம்பட வேண்டியிருக்கிறது. இவை முழுமையான வடிவம் பெற இன்னும் சில காலம் எடுத்துக்கொள்ளும். இதற்கு முக்கிய காரணம் பலவும் இப்போது சமீபத்தில் டிக் டாக் எதிர்ப்பை பார்த்துத் தொடங்கப்பட்டவை. ஆனால், இன்ஸ்டாகிராம் பல காலமாக இந்த வசதியைக் கொண்டு வரத் திட்டம் திட்டிவந்தது. சில நாடுகளில் டெஸ்ட் செய்தும் வந்தது. இப்போது சரியான நேரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட மற்ற சேவைகளுக்கு இருக்கும் முக்கிய சிக்கல் தற்போது நிலவும் கடும் போட்டி. டிக் டாக் வரும்போது ஷார்ட் வீடியோ பிளாட்பார்முக்கு என்று அவ்வளவு போட்டியில்லை. வளர வளர மேம்பட்டுக்கொண்டே வந்தது டிக் டாக். ஆனால், இப்போது நிலை அப்படியில்லை. ஷார்ட் வீடியோ தளம் தங்க முட்டையிடும் வாத்து என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் அனைவரும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என இதில் களமிறங்கி வருகின்றனர். இப்படி தேர்ந்தெடுக்கப் பல சேவைகள் இருப்பதால் டிக் டாக் பயனாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இழுத்து செல்லப்படுவதைப் பார்க்கமுடிகிறது. கூகுள் ப்ளே ஸ்டோர் ரேட்டிங் வைத்துப் பார்க்கும்போது ட்ரெல் மட்டுமே அதிகம் பாசிட்டிவ் ஃபீட்-பேக் வைத்திருக்கிறது. மற்ற ஆப்களில் டிசைன் தொடங்கி செயல்பாடு வரை குறைகள் இருப்பதாகவே பயனாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். நம் பயன்பாட்டிலுமே அது தெரிந்தது. ஏற்கெனவே அதிக அளவில் பயனாளர்களை கொண்டுள்ளதால் இன்ஸ்டாகிராமுக்கு இந்த பிரச்னை இருக்காது.

இந்திய ஆப்கள், ஃபேஸ்புக் போன்ற ஒரு தொழில்நுட்ப ஜாம்பவன் பின்னிருக்கும் இன்ஸ்டாகிராமை எதிர்த்துச் சாதிக்க முடியுமா என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக நம்முன் நிற்கிறது.

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? நீங்கள் டிக் டாக்குக்குப் பதிலாக எந்த ஆப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? கமென்ட்டில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு