Published:Updated:

மோடி- ஜின்பிங் பாதுகாப்புக்குத் தமிழகக் காவல்துறை உருவாக்கிய `ஃபோட்டோகிராமெட்ரிக் மேப்பிங்'!

மோடி – ஜின்பிங் சந்திப்புக்கு, தமிழகக் காவல்துறை `ஃபோட்டோகிராமெட்ரிக் மேப்பிங்' என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பு கொடுத்துள்ளது. அது என்ன என்பதை பார்ப்போம்.

மோடி-ஜின்பிங்
மோடி-ஜின்பிங்

இந்தியா-சீனா உறவைப் பலப்படுத்த கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில், இந்திய பிரதமர் மோடி, சீன பிரதமர் ஜி ஜின்பிங் இருவருக்கும் இடையே முதல் இன்ஃபார்மல் மீட்டிங் நடைபெற்றது. அப்போது, ஆண்டுதோறும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்தத் திட்டமிட்டப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு சந்திப்பு இந்தியாவில் நடக்கிறது. இருநாட்டு தலைமையும் மாமல்லபுரத்தை டிக் செய்ய பாதுகாப்பு பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.

காவல்துறை பாதுகாப்பு
காவல்துறை பாதுகாப்பு

VVIP பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் எந்தெந்த இடங்களில் எத்தனை பேர் பாதுகாப்புக்கு நியமிக்கவேண்டும் என்று திட்டமிடப் பயன்படுத்தப்படும் `ஃபோட்டோகிராமெட்ரிக் மேப்பிங்' (photogrammetric mapping) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலைகளில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. இதை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியோடு செய்துமுடித்துள்ளது.

ட்ரோன்
ட்ரோன்

அதென்ன `ஃபோட்டோகிராமெட்ரிக் மேப்பிங்'?

காவல்துறையில் இருக்கும் சீனியர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``VVIP பாதுகாப்பு கொடுக்கிறதுக்கு கூகுள் மேப்பைதான் இதுவரை பயன்படுத்தி வந்தோம். பில்டிங், சின்னச் சின்ன குறுக்குச் சந்துகள், காலி இடங்கள் எல்லாம் எங்க இருக்குனு மொத்தமும் கூகுள் மேப் அல்லது லோக்கல்ல இருக்க சிலருடைய உதவியை வச்சுதான் பிளான் பண்ணுவோம். ஆனால், கூகுள் மேப் அடிக்கடி அப்டேட் ஆகாது.

மாமல்லபுரம் பாதுகாப்பு
மாமல்லபுரம் பாதுகாப்பு

இதனால், நாங்களே விஜிபி கோல்டன் பீச்சில இருந்து மாமல்லபுரம் வரை இருக்கும் 35 கி.மீ சுற்று வட்டாரத்தை 6 டிரோன் உதவியோடு 30,000 ஹை ரெசல்யூஷன் படங்கள் எடுத்து அதை வச்சு ஒரு மேப் வரைஞ்சோம். இந்த மேப் பயன்படுத்தி தேவைப்படுற இடங்கள்ல காவலர்களை நியமிச்சிருக்கோம். திரும்பத் திரும்ப டிரோன்களைப் பறக்கவிட்டு அப்பப்ப லைவ் ஃபீட் எடுத்து அதுக்கு ஏத்தமாதிரி பாதுகாப்பை மாத்திட்டே இருப்போம். இந்த மேப் மொத்தத்தையும் தமிழ்நாடு காவல்துறைதான் உருவாக்கியிருக்கு. உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படும்போது இனி எதிர்காலத்துலேயும் இந்த முறையைப் பயன்படுத்துவோம்'' என்றார்.

ஃபோட்டோ கிராமெட்ரிக் மேப்
ஃபோட்டோ கிராமெட்ரிக் மேப்

`ஃபோட்டடோகிராமெட்ரிக் மேப்பிங்' பற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் Institute of Remote Sensing (IRS) துறை பேராசிரியர் சிலரிடம் பேசினோம்.

``இது பல நாடுகளில் பல துறைகளில் பயன்படுத்தும் ஒரு தொழில்நுட்பம்தான். உங்களுடைய ஒரு கண்ணால் பார்க்கும்போது எல்லாமே 2Dயா தெரியும். ரெண்டு கண்ணால பார்க்குறப்போ 3D-யா தெரியும். இதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை. ஒரு குறிப்பிட்ட தொலைவு இடத்தை மேப் பண்றீங்கனா, அந்த இடத்துக்கு மேல் சில டிரோன்களைப் பறக்கவிட்டுக் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை, ஒவ்வொரு ஆங்கில்ல இருந்தும் ஃபோட்டோ எடுத்துக்கிட்டே இருக்கணும்.

பாதுகாப்பில் இருக்கும் காவலர்கள்
பாதுகாப்பில் இருக்கும் காவலர்கள்

ஒவ்வொரு ஃபோட்டோவுலேயும் பொதுவா இருக்க இடங்களை ஒண்ணாக்கி, அதை அளந்து 3D-யில அந்த இடம் எப்படி இருக்கும்னு வடிவமைப்பாங்க. இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு மேப்பை உருவாக்கும்போது அங்க பில்டிங் இருக்குனு மட்டும் தெரியாம அந்த பில்டிங்குடைய உயரம், நீளம், அகலம், அந்த பில்டிங் எப்படி இருக்கும், பக்கத்துல இருக்கும் தெரு, அந்தத் தெருவுடைய நீளம், அகலம்னு எல்லாமே தெரிஞ்சிடும். ஒரு இடத்தை 100 படங்கள் எடுத்து அதை எல்லாத்தையும் சேர்த்து தைத்து, ஒரு 3D படமா மாத்துவாங்க. இது பாதுகாப்புக்கு மட்டுமல்ல, மைனிங், கன்ஸ்ட்ரக்‌ஷன், மெடிசன்னு பல துறைகளில் பயன்படுத்துறாங்க. தமிழக அரசுடைய பல துறைகளுக்கு இந்தப் பயிற்சியைக் கொடுத்திருக்கிறோம். கொஞ்சம் தொழில்நுட்ப பயிற்சி, நிறைய கணிதம் சார்ந்த விஷயம் இது" என்கிறார்கள்.

`சென்னையில் இருக்கும்போதே இதை மறக்காம பண்ணிருங்க ஜின்பிங்..!’ நெட்டிசன்களின் கோரிக்கை