Published:Updated:

வெடித்து சிதறிய ஒன்ப்ளஸ் போன், எலான் மஸ்க் பெயரில் புதிய கிரிப்டோ... இன்றைய டெக் அப்டேட்!

வெடித்து சிதறிய ஒன்ப்ளஸ் போன், எலான் மஸ்க் பெயரில் புதிய கிரிப்டோ... இன்றைய டெக் நிகழ்வுகளின் தொகுப்பு!

ஒன்ப்ளஸ் நார்டு 2 வெடித்ததாக மீண்டும் குற்றச்சாட்டு!

ஒன்பிளஸ் நார்டு 2
ஒன்பிளஸ் நார்டு 2

சில வாரங்களுக்கு முன்பு ஒன்ப்ளஸ் நார்டு 2 மொபைல் ஒன்று வெடித்ததால் அந்த நிறுவனத்தின் தயாரிப்பு மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த முறை மொபைலை வைத்திருந்தவருக்கு உடலில் எந்தவித காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை. ஆனால், தற்போது சுஹித் ஷர்மா என்பவர் தனது ஒன்ப்ளஸ் நார்டு 2 மொபைல் வெடித்திருப்பதாக புகைப்படங்களோடு ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மொபைல் பாதிக்கப்பட்டவரின் பாக்கெட்டில் இருந்ததால், அதனைப் பயன்படுத்தியவருக்கும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

வெடித்த ஒன்பிள்ஸ் நார்டு 2
வெடித்த ஒன்பிள்ஸ் நார்டு 2

இதற்கு முன்னர் நடந்த விபத்துகளில் ஒன்ப்ளஸ் மொபைல் வெடித்த போது, 'அது வெளிப்புற காரணிகளால் நிகழ்ந்திருக்கிறது. தயாரிப்புக் குறைபாட்டால் அந்த விபத்து ஏற்படவில்லை' எனக் கூறியிருந்தது அந்த நிறுவனம். "இந்த விபத்து குறித்து விசாரிக்க ஒன்ப்ளஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழுவை அனுப்பியிருக்கிறோம்." என இப்போது பதிலளித்திருக்கிறது ஒன்ப்ளஸ்.

ஒன்ப்ளஸ் மொபைல் மட்டுமின்றி கடந்த செப்டம்பர் மாதம் ஒன்ப்ளஸ் சார்ஜர் ஒன்று வெடித்த சம்பவமும் அரங்கேறியது. அந்த சம்பவத்தின் போதும் தங்கள் தயாரிப்புகளில் தவறு எதுவும் இல்லை எனவும், மின் அழுத்த ஏற்ற இறக்கம் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகவும் ஒன்பிளஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன ஒன்ப்ளஸ் இதெல்லாம்! 😒

வெளியானது லாவா அக்னி 5G!

லாவா அக்னி 5G
லாவா அக்னி 5G

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா தங்கள் முதல் 5G ஸ்மார்ட்போனான லாவா அக்னி 5G போனை வெளியிட்டிருக்கிறது. இந்திய நிறுவனம் வெளியிடும் முதல் 5G ஸ்மார்ட்போன் இது. மீடியடெக் டைமன்சிட்டி 810 ப்ராசஸரோடு வெளியாகியிருக்கிறது இந்த மொபைல். மேலும், 5000 mAh பேட்டரி, 30W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது லாவா அக்னி 5G. 90 நிமிடங்களில் இதன் 5000 mAh பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும் எனத் தெரிவித்திருக்கிறது லாவா. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கும் இந்த மொபைலின் 8GB RAM + 128 GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இந்தியாவில் 19,999 ரூபாய் விலையில் விற்பனையாகவுள்ளது. நவம்பர் 18 முதல் இந்த மொபைலை கடைகளிலோ அல்லது ஆன்லைனிலோ வாங்க முடியும்.

பெயரிலேயே லாவா-அக்னி... ஒன்ப்ளஸ் மாதிரி வெடிக்காம இருந்தா சரி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய ஆல்ஃபபெட்!

2 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய ஆல்ஃபபெட்
2 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய ஆல்ஃபபெட்

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் 2020 ஜனவரியில் 1 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டியிருந்தது. ஆனால், இரண்டே ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்கு வளர்ந்திருக்கிறது ஆல்ஃபபெட்டின் சந்தை மதிப்பு. ஆம், நேற்று 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்பை எட்டியிருக்கிறது ஆல்ஃபபெட். நேற்றைய நாள் முடிவில் 2,987.03 அமெரிக்க டாலர்கள் விலையில் ஆல்ஃப்பெடின் பங்குகள் வர்த்தகமாகியிருக்கிறது. இதன் மூலம், 2 ட்ரில்லியன் சந்தை மதிப்பை எட்டிய மூன்றாவது அமெரிக்க டெக் நிறுவனமாக மாறியிருக்கிறது ஆல்ஃபபெட். 2021-ன் மூன்றாம் காலாண்டு ஆல்ஃபபெட்டுக்கு சிறப்பான காலாண்டாக அமைந்திருக்கிறது. இந்த மூன்றாம் காலாண்டில் அந்த நிறுவனத்தின் வருவாய் 41 சதவிகிதமும், லாபம் 69 சதவிகிதமும் உயர்ந்துள்ளதாத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

ஏப்ரம் 2020-ல் ஆப்பிளும், கடந்த ஜூன் மாதம் மைக்ரோசாப்டும் 2 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டின. மேற்கூறிய நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் விரைவில் 2 ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதன் சந்தை மதிப்பு 1.7 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது.

வி ஆர் வெயிட்டிங்!
`SQUID GAME' கிரிப்டோ மோசடி, மாயமாய் மறைந்த பல கோடி... நடந்தது என்ன?!

எலான் மஸ்க் பெயரில் புதிய கிரிப்டோ!

எலான் மஸ்க் பெயரில் புதிய கிரிப்டோ
எலான் மஸ்க் பெயரில் புதிய கிரிப்டோ

நேற்று (திங்கள்கிழமை) எலான் மஸ்க் ட்விட்டரில் தனது பெயரை லார்டு எட்ஜ் (LORDE EDGE) என மாற்றினார். எலானின் இந்தப் பெயர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று நெட்டிசன்கள் தலையை உருட்டிக்கொண்டிருக்க, இதை வைத்து ஆதாயம்அடைய நினைத்த சிலர் எலானின் இந்த புதிய ட்விட்டர் பெயரிலேயே ஒரு கிரிப்டோகரண்ஸியை உருவாக்கி கிரிப்டோ சந்தையில் வெளியிட்டிருக்கிறார்கள். ELONEDGE எனப் பெயரிடப்பட்ட அந்த கிரிப்டோகரண்ஸியை நேற்று 0.000003192 அமெரிக்க டாலர்கள் விலையில் கிரிப்டோ மார்க்கெட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியிட்ட சில மணி நேரத்திலேயே அதன் விலை 825 சதவிகிதம் உயர்ந்து 0.00002954 டாலர்கள் விலையில் அந்தப் புதிய கிரிப்டோ கிரிப்டோ மார்க்கெட்டில் வர்த்தகமாகியிருக்கிறது.

EDGEEELON
EDGEEELON

எலான் மஸ்க்குக்கும் இந்தப் புதிய கிரிப்டோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், இதனை உருவாக்கியவர்கள் எலான் மஸ்க்கின் பெயரைப் பயன்படுத்தியே விலையை ஏற வைத்திருக்கிறார்கள். இந்தக் கிரிப்டோவை உருவாக்கியவர்கள் இதற்கென ஒரு இணையதளம், ஒயிட்பேப்பர், வருங்கால திட்டங்கள் என அனைத்தையும் ஒரே நாளில் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்தப் புதிய கிரிப்டோவின் சந்தை மதிப்பு 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்திருப்பதாக அதன் ஒயிட்பேப்பரில் குறிப்பிட்டிருக்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள். சமீபத்தில்தான் பிரபல 'ஸ்க்விட் கேம்' தொடரின் பெயரில் ஒரு மோசடி கிரிப்டோ சந்தையில் அரங்கேறியது.

கிரிப்டோ ரசிகர்களே உஷார்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு