Published:Updated:

ஐபோனுக்கு 'டைப் சி' போர்ட்; பப்ஜி விளையாடினால் ரூ.12,50,000 பரிசு?! இன்றைய டெக் அப்டேட்ஸ்!

பப்ஜி விளையாட்டை வைத்து நடைபெறும் Gaming Masters 2.0-வில் பரிசுத்தொகையை 12,50,000 ரூபாய், அறிவித்திருக்கிறது ஜியோ நிறுவனம்.

ஐபோனுக்கு 'டைப் சி' போர்ட்!

டைப் சி போர்ட்டுடன் ஐபோன்
டைப் சி போர்ட்டுடன் ஐபோன்

டைப் சி சார்ஜிங் போர்ட்டோடு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'ஐபோன் X' ஒன்று சமீபத்தில் இணையதளத்தில் ஏலத்திற்கு வந்தது. டைப் சி போர்ட்டோடு ஐபோனா எனக் குழம்ப வேண்டாம். ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ரோபோடிக்ஸ் துறையில் பயிலும் கென் பில்லோனெல் (Ken Pillonel) என்கிற மாணவர் தான் தனிப்பட்ட முறையில் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். டைப் சி சார்ஜிங் போர்ட்டுக்கு ஏற்றவாறு ஐபோனின் PCB போர்டிலும் மாற்றங்களைச் செய்து ஐபோனை டைப் சி போர்ட்டுடன் மறுவடிவமைப்பு செய்திருக்கிறார். இவர் சொந்த முயற்சியால் மறுவடிவமைப்பு செய்த ஐபோன், வழக்கமான ஐபோனைப் போலவே சார்ஜிங் மற்றும் தகவல் பரிமாற்றம் என எல்லாவற்றையும் செய்ய முடிகிறது, ஆனால் டைப் சி பேபிளுடன்.

ஹார்டுவேர் தொழில்நுட்பத்தில் கென்னுக்கு கொஞ்சம் அனுவபவம் இருந்ததனால் இதனை அவரால் சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது. இந்த ஐபோனை இணையத்தில் ஏலத்திலும் விட்டிருக்கிறார். டைப் சி சார்ஜிங் போர்ட்டோடு ஐபோன் இருக்கிறது என்ற தகவல் தீயாய்ப் பரவ 86,001 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் தோராயமாக 64 லட்சம் ரூபாய்) அந்த ஐபோனை ஏலத்தில் எடுத்திருக்கிறார் ஒருவர். ஐபோனை டைப் சி சார்ஜிங் போர்ட்டோடு மறுவடிவமைப்பு செய்தது குறித்த காணொளி ஒன்றையும் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார் அவர்.

ஐரோப்பாவில் அனைத்து மொபைல் போன்களுக்கு டைப் சி சார்ஜரை மட்டுமே கொடுக்க என ஐரோப்பிய யூனியன் உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி விளையாடினால் பதக்கம் ஜெயிக்கலாம்!

பப்ஜி
பப்ஜி

பப்ஜியில் கில்லியா நீங்கள்? அப்போ இந்த போட்டி உங்களுக்காகத் தான். சிப் உற்பத்தியாளரான மீடியாடெக்குடன் இணைந்து E-ஸ்போர்ட் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது ஜியோ. Gaming Masters 2.0 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த போட்டிக்கான நீங்களும் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் Gaming Masters என்ற பெயரில் Free Fire விளையாட்டை வைத்து ஒரு போட்டியை நடத்தியது ஜியோ. தற்போது அதன் இரண்டாவது சீஸனாக பப்ஜியின் இந்திய வெர்ஷனான BGMI விளையாட்டை வைத்து Gaming Masters 2.0-வை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது ஜியோ. ஜியோ கேம்ஸ் இணையதளத்தில் இதற்கான பதிவு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜியோ கேம்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதன் படி இந்தப் போட்டியானது வரும் நவம்பர் 23-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுத் தொகை 12,50,000 ரூபாய்.

அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் சீனாவில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் E-ஸ்போர்ட்ஸையும் ஒரு விளையாட்டாக அங்கீகரித்துச் சேர்த்திருக்கிறது தேர்வுக்குழு. அதில் EA Sports FIFS, Hearthstone, DOTA 2, Arena of Valor மற்றும் League of Legends உள்ளிட்ட ஏழு விளையாட்டுக்களைப் பதக்க விளையாட்டுகளாகத் தேர்ந்தெடுத்திருந்தது தேர்வுக் குழு. அதாவது இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு மற்ற விளையாட்டுக்களைப் போலவே பதக்கம் வழங்கப்படும். தற்போது அந்தப் பட்டியலில் பப்ஜியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தான் அறிவித்தது க்ராஃப்டன் நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

QR Code மோசடி!

QR Code மோசடி
QR Code மோசடி

QR கோடுகள் நம் தினசரி பணப்பரிவர்த்தனையைச் சமீப காலங்களில் சுலபமாக்கியிருக்கின்றன. பணப்பரிவர்த்தனை மட்டுமின்றி போட்டோ, வீடியோ, லிங்க் என எல்லாவற்றிற்கும் நம்மால் QR கோடை உருவாக்கிப் பயன்படுத்த முடியும். இப்படியான சமயங்களில் தான் கவனமாகவும் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது சமீபத்தில் இணையத்தின் மூலம் நடந்த சம்பவம் ஒன்று. OLX மூலமாக ஒரு பொருளை விற்பனை செய்வதற்காகப் பதிவிடுகிறார் பெண் ஒருவர். அந்தப் பொருளை வாங்குவதற்காகத் தொடர்பு கொண்ட நபர் அந்தப் பெண்ணிடம் பணத்தை முழுவதுமாகக் கொடுப்பதாகவும், அவர் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்தால் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் அந்தப் பொருளுக்கான மொத்தப் பணமும் வந்து சேரும் எனவும் கூறியிருக்கிறார். தொழில்நுட்பத்தைப் பற்றி பெரிய அறிமுகமில்லாத அந்தப் பெண்ணும் மோசடி நபர் அனுப்பிய QR கோடை ஸ்கேன் செய்து UPI பின் நம்பரை உள்ளீடு செய்திருக்கிறார். மறுநொடியே அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்திருக்கிறது, மோசடி நபர் மாயமாய் மறைந்திருக்கிறார்.

இது போன்ற சம்பவங்கள் தற்போது கொஞ்சம் அதிகரித்திருக்கிறது. இது போன்ற மோசடிகளில் இருந்து கொஞ்சம் உஷாராக இருந்தாலே தப்பித்துவிடலாம். ஒரு பணப்பரிவர்த்தனையில் நாம் பணம் செலுத்த வேண்டும் என்றால் மட்டுமே QR கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப வேண்டும். எதிர்த்தரப்பில் இருந்து பணம் அனுப்ப நம்முடைய மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் இருந்தாலே போதுமானது. QR கோடை நம் மின்னஞ்சலுக்கு வரும் தேவையற்ற மோசடி லிங்க்கின் மறுவடிவமாகவும் பயன்படுத்த முடியும். எனவே, இணையத்தில் பார்க்கும் அல்லது பொதுவெளியில் நம்பத்தகாத இடங்களில் QR கோடுகள் இருந்தால் அதனை ஸ்கேன் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

Findaway நிறுவனத்தை வாங்குகிறது ஸ்பாட்டிஃபை!

Findaway + ஸ்பாட்டிஃபை
Findaway + ஸ்பாட்டிஃபை

ஆடியோ சேவைகளில் முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என 2019-ல் ஆங்கர் (Anchor) மற்றும் கிம்லெட் (Gimlet) ஆகிய பாட்காஸ்ட் நிறுவனங்களை வாங்கிய கையோடு தெரிவித்திருந்தது ஸ்பாட்டிஃபை நிறுவனம். பாட்காஸ்டிங்கைத் தொடர்ந்து தற்போது ஆடியோபுக் சேவையையும் தன்னுடைய போர்ட்ஃபோலியோவில் இணைத்துக் கொள்ள விரும்பியிருக்கிறது ஸ்பாட்டிஃபை. இதற்காக உலகளாவிய பிரபலமான ஆடியோபுக் நிறுவனமான Findaway நிறுவனத்தை வாங்குகிறது ஸ்பாட்டிஃபை. இதன் மூலம் ஆடியோபுக் சேவையிலும் தங்களை முதன்மையாக நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என நினைக்கிறுத ஸ்பாட்டிசஃப். ஆடியோபுக் சேவையை வழங்குவதற்கு ஏற்கனவே இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஸ்டோரிடெல் நிறுவனத்துடன் ஸ்பாட்டிஃபை கைகோர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடிபில் (Audible) போல ஆடியோபுக் சேவைகளுக்குத் தனி சப்ஸ்கிரிப்ஷன் வசதியை ஸ்பாட்டிஃப் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடியோபுக் சேவையைத் தங்கள் தளத்தில் விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகளை ஸ்பாட்டிஃபை எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான புத்தகமான 'ஹாரிபாட்டரும் ரசவாதக் கல்லும்' என்ற புத்தகத்தை ஆடியோ வடிவமாக ஸ்பாட்டிஃபையில் வெளியிடவும் ஜேகே.ரௌலிங்கின் Wizarding World நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு