Published:Updated:

புதிய டிராய் DTH விதிகள்... இனி உங்கள் கேபிள் பில் ஏறுமா, இறங்குமா?!

சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் மக்களுக்கு வேண்டிய சேவையைச் சரியான விலையில் அவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஏற்கெனவே கடந்த வருடம் கேபிள்/டிடிஹெச் விலை நிர்ணயத்தில் மாற்றங்கள் கொண்டுவந்திருந்தது டிராய்.

குறையும் டிவி விலைகள்!
குறையும் டிவி விலைகள்!

கடந்த ஆண்டு கேபிள் மற்றும் டிடிஹெச் (DTH) சேவைகளின் கட்டணம் நிர்ணயத்தில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (Trai). அந்த மாற்றங்களின்படி ஒவ்வொரு சேனலுக்கும் தனி MRP விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தேவையான சேனல்களைத் தேர்வுசெய்து அதற்கான தொகையைக் கட்டவேண்டியதாக இருந்தது.

கேபிள்/டிடிஹெச்
கேபிள்/டிடிஹெச்

சந்தையில் ஒரு வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், மக்களுக்கு வேண்டிய சேவையை சரியான கட்டணத்தில் அவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இது கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தது டிராய். இதன்மூலம் கேபிள் மற்றும் டிடிஹெச் டிவி சந்தையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் சேவையின் கட்டணங்களும் சீராக இருக்கும் எனவும் நம்பிக்கை அளித்தது அந்த அமைப்பு. இந்தப் புதிய கட்டணத் திட்டத்தைத் தீர்மானிக்கக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆலோசித்திருந்தது டிராய். ஆனாலும், `முன்பைவிட இப்போதுதான் அதிகம் செலவழிப்பதாக இருக்கிறது' என கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இதனால் இப்போது இதில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது டிராய்.

தற்போது கட்டணம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

tv Channels
tv Channels

இப்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளின்படி, 100 சேனல்களுக்கான நெட்ஒர்க் கொள்ளளவைப் பெற network capacity fee (NCF) எனப்படும் தொகையாக 130 ரூபாய் கட்ட வேண்டும். இது ஜி.எஸ்.டி வரியுடன் மொத்தம் ரூ.153.40 வரும். இந்தத் தொகை என்பது network capacity fee தான். இதில் நீங்கள் தேர்வு செய்யும் 100 சேனல்களுக்கும் அவற்றுக்குரிய விலையைத் தனியாகத் தர வேண்டும். இலவச சேனல்கள் (Free-to-air) என்றால் தனியாகத் தொகை எதுவும் கட்டவேண்டியதில்லை. இந்த 100 சேனல்களில் 25 இலவச தூர்தர்ஷன் சேனல்கள் கட்டாயமாக வந்துவிடும். மீதி 75 சேனல்களை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இதற்கும் மேலாக சேனல்கள் வேண்டுமென்றால் 25 சேனல்களுக்கான NCF தொகையாக ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.23.60 செலுத்த வேண்டும். HD சேனல்கள் இந்த நெட்ஒர்க் கொள்ளளவில் 2 சேனல்களுக்கான இடங்களை எடுத்துக்கொள்ளும். இந்தக் கட்டண நிர்ணயம் பற்றி இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ளக் கீழுள்ள கட்டுரையைப் படியுங்கள்!

Vikatan

புதிதாக வந்திருக்கும் மாற்றங்கள் என்ன?

தற்போது இந்த NCF தொகையைக் குறைத்திருக்கிறது டிராய். அதே 130 ரூபாயில் (ஜி.எஸ்.டியுடன் 153.40) இப்போது 200 சேனல்களுக்கான நெட்ஒர்க் கொள்ளளவைப் பெறலாம். முன்பு போல இதில் அரசு கட்டாயமாகத் தரும் 25 தூர்தர்ஷன் சேனல்கள் இனி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அதனால் தூர்தர்ஷன் சேனல்கள் போக 200 சேனல்களை இதில் நீங்கள் தேர்வுசெய்துகொள்ளலாம்.

டிராய்
டிராய்

ஸ்டார், சன், ஜீ போன்ற நிறுவனங்கள் தங்களது குழும சேனல்கள் அடங்கிய காம்போ பேக்குகளையும் (Bouquet plans) கொடுத்துவந்தன. இப்படியான பேக்குகள் மூலம் உங்களால் பணத்தை மிச்சம் செய்யமுடியும். இதிலும் தற்போது பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 12 ரூபாய்க்கு குறைவான MRP விலையுடைய சேனல்கள் மட்டும்தான் இனி காம்போ பேக்குகளில் இடம்பெற முடியும். மேலும், ஒரு காம்போ பேக்கில் இருக்கும் சேனல்களின் மொத்த விலை அந்த காம்போ பேக்கின் விலையைவிட ஒன்றரை மடங்கிற்கு மேல் இருக்கக் கூடாது.

ஒரு சேனல் அது இருக்கும் காம்போ பேக்கில் இருக்கும் சேனல்களின் சராசரி விலையைவிட 3 மடங்கிற்கு மேல் அதிகமாக இருக்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாடுகளுடன்தான் இந்த காம்போ (Bouquet plans) பேக்குகள் வடிவமைக்கப்பட வேண்டும்.

DTH
DTH

இந்த மாற்றங்களால் சேனல்களின் MRP விலைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும் கேபிள்/டிடிஹெச் நிறுவனங்கள் நீண்டகால சந்தாக்களுக்கு (ஆறு மாதங்களுக்கு மேல்) தள்ளுபடிகள் வழங்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்தப் புதிய விதிமுறைகளின்படி நிறுவனங்கள் தங்கள் சேனல்களின் புதிய விலைகளை ஜனவரி 15-ம் தேதிக்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது டிராய். இந்த மாற்றங்கள் மார்ச் முதல் நடைமுறைக்கு வரும்.

ஏற்கெனவே மக்கள் பலரும் OTT ஸ்ட்ரீமிங் தளங்கள் பக்கம் திரும்பியிருக்கின்றனர். 2019, மார்ச் மாத முடிவில் இந்தியாவிலிருந்த டி.டி.ஹெச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7.2 கோடி. இதுவே 2019, ஜூன் மாத முடிவில் 5.4 கோடியாகக் குறைந்திருந்தது. இதனால்தான் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், இதனால் நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வரும் சராசரி வருமானம் (Average Revenue Per User) 10% வரை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.