அவசர வேலையாக வெளியில் சென்றுகொண்டிருக்கும் நேரம், வாகன நெரிசலில் சிக்கியிருக்கும் நேரம், முக்கியமான சந்திப்புகள் என நாம் பதற்றமான நிலையில் இருக்கும்போது திடீரென மொபைல் போனில் ரிங் அடிக்கும். எடுத்துப் பார்த்த்தால் அது 'ஸ்பேம்' (Spam Call)' அழைப்பாக இருக்கும். அப்படியே எரிச்சல் தலைக்கு ஏறும்.

இதுபோன்ற ஸ்பேம் கால்களின் தொல்லைகளைத் தடுக்க தற்போது பல்வேறு செயலிகள் இருக்கின்றன. அதில் பிரபலமானது ட்ரூ காலர் (True Caller) செயலி. Caller ID சேவை வழங்கும் இந்த 'ட்ரூ காலர்', தேவையற்ற அழைப்புகள் பற்றிய ஆய்வறிக்கை (Truecaller Insights Report 2019) ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஸ்பேம் கால்கள் பிரச்னையை அதிகம் சந்திக்கும் டாப் 20 நாடுகளின் பட்டியலும், எங்கிருந்தெல்லாம் ஸ்பேம் கால்கள் அதிகம் வருகின்றன போன்ற தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன்படி 2019-ல் உலகமெங்கும் 2,600 கோடி ஸ்பேம் கால்கள் வந்துள்ளன. இது 2018-ம் ஆண்டைவிட 15 சதவிகிதம் அதிகம். அதேபோல 11,600 கோடி அடையாளம் காணப்படாத அழைப்புகள் (Unknown calls) வந்துள்ளன. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டைவிட 56 சதவிகிதம் அதிகம்.

ஸ்பேம் கால்கள் அதிகம்வரும் நாடுகளில் பிரேசில் முதலிடத்தில் இருக்கிறது. பிரேசிலில் ஒரு மாதத்தில், ஒரு நபருக்கு சராசரியாக 45.6 ஸ்பேம் கால்கள் வருகின்றன. இரண்டாவது இடத்தில் இருக்கும் பெரு நாட்டில் ஒரு நபருக்கு 30.9 கால்களும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தோனேசியாவில் ஒரு நபருக்கு 27.9 கால்களும் வருகின்றன.
சிறப்பு ஆஃபர்கள் பற்றிய அறிவிப்புகள், டேட்டா பிளான், அன்லிமிட்டெட் கால்ஸ் குறித்த அறிவிப்புகளுக்காக, மொபைல் ஆபரேட்டர்களால்தான் தேவையற்ற கால்கள் அதிகமாக வருகின்றன.-Truecaller Insights Report -2019
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. உலகளவில் ஸ்பேம் கால்கள் அதிகம் வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒரு மாதத்தில், நபர் ஒருவருக்கு சராசரியாக 25.6 ஸ்பேம் கால்கள் வருகின்றன. இந்தப் பட்டியலில், தென்னாப்பிரிக்கா, சிலி, அமெரிக்கா, ரஷ்யா, கொலம்பியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தப் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கடந்த ஆண்டைக்காட்டிலும் 2019-ல் 7 சதவிகிதம் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஸ்பேம் கால்களில் 67 சதவிகிதம் மொபைல் ஆபரேட்டர்களிடமிருந்தும் 17 சதவிகிதம் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தும் வருவதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் 6 சதவிகித கால்கள் மோசடி (scam calls) செய்யும் நோக்குடன் வருபவை. சிறப்பு ஆஃபர்கள் பற்றிய அறிவிப்புகள், டேட்டா பிளான், அன்லிமிட்டெட் கால்ஸ் குறித்த அறிவிப்புகளுக்காக, மொபைல் ஆபரேட்டர்களால்தான் தேவையற்ற கால்கள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதாக ட்ரூ காலர் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அல்லது முறையற்ற கால்கள் அல்லது குறுஞ்செய்தி வருகிறது.
ஸ்பேம் கால்கள் ஒருபுறமிருக்க, அடிக்கடி கவனத்தை திசைதிருப்புவது ஸ்பேம் மெசேஜ்கள்தான். இந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அல்லது முறையற்ற கால்கள் மற்றும் குறுஞ்செய்தி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேவையற்ற ஸ்பேம் மெசேஜ்கள் அதிகம் வரும் நாடுகளின் பட்டியலில், எத்தியோப்பியா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு மாதத்தில், நபர் ஒருவருக்கு 119 ஸ்பேம் மெசேஜ்கள் வருகின்றன. இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவில் ஒரு நபருக்கு 114 மெசேஜ்கள் வருகின்றன.

கென்யா, பிரேசில், கொலம்பியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஸ்பேம் மெசேஜ் அதிகம் வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்தில், நபர் ஒருவருக்கும் 61 ஸ்பேம் மெசேஜ்கள் வருகின்றன. ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளன. மேலும், மோசடி (scam) போன்ற அழைப்புகளைப் பெறும் நாடுகளில் மலேசியா முதலிடத்தில் உள்ளது. மலேசியாவில் மாதத்துக்கு 63 சதவிகித கால்கள் மோசடி தொடர்பாக வருகிறது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா (60%), மூன்றாவது இடத்தில் லெபனான் (49%) உள்ளது.

ஸ்பேம் கால்கள் மற்றும் ஸ்பேம் மெசேஜிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
தேவையற்ற எண்களிலிருந்து மிஸ்டுகால் வந்தால் அதை மீண்டும் தொடர்புகொள்ள முயல வேண்டாம். வெளிநாடுகளில் நண்பர்கள், உறவினர்கள் இருந்தால், அவர்களது பகுதி தொலைப்பேசி எண்ணைத் தெரிந்து வைத்துக்கொள்ளலாம். ட்ரூ காலர், ஸ்பேம் நம்பர் போன்ற சில பாதுகாப்பான செயலிகள் கால் செய்பவரை பற்றிய தகவலைத் தருகின்றன. எனவே, இது போன்ற செயலிகளை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

போஸ்ட் பெய்டு சிம் வைத்திருப்பவர்கள் தவறாமல் ஒவ்வொரு மாதமும் பில்லை சரிபார்ப்பது அவசியம். அப்போதுதான் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட அழைப்புகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும்.