Published:Updated:

ட்ரம்புக்கும் ட்விட்டருக்கும் அப்படி என்னதான் பிரச்னை...? விரிவான அலசல்! #LongRead

ட்ரம்ப் v ட்விட்டர்
News
ட்ரம்ப் v ட்விட்டர்

அங்கு மொத்த அமெரிக்காவிலும் உரிமைக்குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க ட்ரம்ப் எப்போதும் போல அதிகார தொனியை வெளிப்படுத்திவருகிறார். அப்போதுதான் என்ட்ரி கொடுத்திருக்கிறது ட்விட்டர்....

அமெரிக்கா... வளர்ச்சிக்கும் வல்லரசுக்கும் உதாரணமாகக் காட்டப்படும் நாடு. வளமும், மாட மாளிகைகளும் கூட கோபுரங்களுமென நம் சினிமாக்கள் அமெரிக்கா பற்றிப் பல சித்திரங்களை நமக்குள்ளே உருவாக்கியிருக்கின்றன. அந்தச் சித்திரங்கள் உண்மைதான்.

ஆனால், எல்லாம் 2017-ம் ஆண்டு பிறக்கும் முன்புவரைதான். என்றைக்கு அங்கு டொனால்டு ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் குடிபுகுந்தாரோ, அன்றிலிருந்து அமெரிக்காவுக்கு பிரச்னைதான்.

Trump
Trump
Alex Brandon | AP

ட்ரம்ப்பின் தவறான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்ட பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. சமீபத்திய சொதப்பல்கள் என்றால் கொரோனாவைக் கையாண்ட விதத்தைச் சொல்லலாம். 'எங்களிடம் இருக்கும் சுகாதார கட்டமைப்பிற்குக் கொரோனாவெல்லாம் எம்மாத்திரம்' எனப் பிப்ரவரியில் பேசினார் அவர். ஆனால், இப்போது அமெரிக்காவின் நிலை? பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தொடப்போகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேலான இறப்புகள்.

இது போதாது என இப்போது அமெரிக்காவில் எரியும் தீயில் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். காவல்துறை அடக்குமுறையில் மின்னியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃபிளாய்டு (George Floyd) என்ற 46 வயது கறுப்பினத்தவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து ஜூனியர் விகடனில் 'எரியும் அமெரிக்கா... எண்ணெய் வார்க்கும் ட்ரம்ப்!' என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரையைக் கீழ்க்காணும் லிங்க்கில் படிக்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தச் சம்பவம் எப்படி நடந்தது எனக் கிடைத்த ஆதாரங்களையெல்லாம் வைத்து புலன் விசாரணை செய்து 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவையும் இங்கு காணலாம்.

உலகமே வீட்டிற்குள் அடங்கியிருக்கும் இந்த நேரத்தில் இந்த அநீதிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றனர் அமெரிக்கர்கள். மக்களின் இந்தப் பெரும் கோபம் சில இடங்களில் வன்முறையாகவும் வெடித்திருக்கிறது. இப்படி அங்கு மொத்த அமெரிக்காவிலும் உரிமைக்குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்க ட்ரம்ப் எப்போதும் போல அதிகாரத் தொனியை வெளிப்படுத்திவருகிறார். போராட்டக்காரர்களை மிரட்டும் விதமாக ட்வீட் ஒன்றையும் பதிவிட்டார்.

போராட்டங்கள்
போராட்டங்கள்
Marcio Jose Sanchez | AP

"இந்தக் குண்டர்கள் ஜார்ஜ் ஃபிளாய்டின் நினைவிற்கு அவமரியாதை செய்கின்றனர். ஆளுநர் டிம் வாலஸுடன் பேசினேன், ராணுவம் எப்போதும் துணைநிற்கும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். ஏதேனும் பிரச்னை என்றால் நாங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வோம். சூறையாடுதல் தொடங்கினால் துப்பாக்கிச் சூடும் தொடங்கும். நன்றி" என்பதே அந்த ட்வீட். அதாவது நம்மூர் அரசியல்வாதிகளைப் போல 'சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள்' எனக் காரணம் காட்டி போராட்டக்காரர்களை ஒடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்குதான் டெக் நிறுவனங்கள் உள்ளே வந்தன. ட்விட்டர் இந்தப் பதிவை 'வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது' எனக் குறிப்பிட்டு மறைத்தது. இது ட்ரம்ப்பைப் பெருமளவில் கொதிப்படையச் செய்தது. 'ட்விட்டர், கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கப்பார்க்கிறது' எனச் சரமாரியாக ட்வீட் செய்தார். 'இந்தச் சமூக வலைதளங்களுக்கெல்லாம் விரைவில் ஒரு முடிவு கட்டுகிறேன்' என அவர் வெற்றுச் சவடால்தான் விடுகிறார் என்று நினைத்தால் சமூக வலைதளங்களுக்கு எதிரான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்து கையெழுத்திடும் அளவுக்கு இந்தப் பிரச்னை நகர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட மொத்த இணையத்திற்கும் எதிராகப் போர் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.

சரி அது என்ன சட்டத்திருத்தம், இந்த விஷயத்தில் ட்விட்டர் இப்படிச் செய்தது ஏன், இதில் ஃபேஸ்புக் நிலைப்பாடு என்ன... விரிவாக அலசுவோம்.
ட்விட்டர்
ட்விட்டர்
Matt Rourke

முதலில் ட்ரம்ப்பின் கோபத்தின் காரணம் என்னவென்று பார்ப்போம். ட்ரம்ப்புக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ட்வீட் செய்வதும் ஒன்றாக நிச்சயம் இருக்கும். உலகளவில் ட்விட்டரில் அவர் அளவுக்கு ஆக்ட்டிவாக யாருமே இருக்கமாட்டார்கள். சுமார் 8.1 கோடி பேர் அவரை ட்விட்டரில் பின்தொடருகிறார்கள். ஆதரவாக வரும் கருத்துகளை ரீ-ட்வீட் செய்வது, லைக் செய்வது, எதிர்க்கட்சியினரைப் போட்டு விளாசுவது என அதிபராவதற்கு முன்பே ட்விட்டர்தான் ட்ரம்ப்பின் ஆடுகளம். பல நேரங்களில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், தனிநபரைக் குறிவைத்து பதிவுகளிடுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். எதிர்தரப்பை டேமேஜ் செய்துதான் அதிபரே ஆனார் என்று கூட சொல்லலாம். ட்ரம்ப்பின் இந்த ஏடாகூட கருத்துக்களை ட்விட்டர் பெரிதும் கண்டுகொள்ளாமலேயே இருந்தது. பெரும்புள்ளிகள் சென்றடையும் மக்கள் அதிகம். வேண்டுமென்றால் அவர்களே இது போன்ற பதிவுகளுக்கு எதிர்வினை ஆற்றுவார்கள் என வேடிக்கை பார்த்து வந்தது ட்விட்டர். இதற்காகப் பல வருடங்களாகக் கடும் எதிர்ப்பையும் சந்தித்து வந்தது. ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படவேண்டும் எனப் பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ட்விட்டர் அமைதியாகவே இருந்தது.

இப்படியாகத் தொடர்ந்து ட்விட்டரை வைத்து அரசியல் செய்துவந்தார் ட்ரம்ப். அப்படிதான் கொரோனாவின் காரணமாக கலிஃபோர்னியாவில் நடக்கவிருந்த தபால் முறை வாக்குப்பதிவுகள் பற்றியும் கடந்த வாரமும் ஒரு பதிவிட்டார். தபால் முறை வாக்குப்பதிவுகளை 'பித்தலாட்டம்' என அதில் குறிப்பிட்டிருந்தார். இது 'தவறான தகவல்' என Fact-Check செய்த ட்விட்டர், அந்த ட்வீட்டின் கீழ் 'தபால் முறை வாக்குப்பதிவு பற்றிய உண்மை விவரங்களுக்கு...' என்று லிங்க் ஒன்றையும் வைத்தது. இப்படி ட்ரம்ப்பின் ட்வீட்களுக்கு ட்விட்டர் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறை. இது டெக் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் அரசியலில் ட்விட்டர் தலையிடுகிறது எனக் குற்றம்சாட்டினார் ட்ரம்ப்.

Trump's Tweet
Trump's Tweet

இது நடந்த ஓரிரு நாள்களிலேயே ட்ரம்ப்பின் 'சூறையாடுதல் தொடங்கினால் துப்பாக்கிச் சூடும் தொடங்கும்' என்ற மேலே குறிப்பிட்ட ட்வீட்டையும் 'வன்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது' என மறைத்தது ட்விட்டர். இந்த நடவடிக்கை மூலம் 'ட்விட்டர் இனிமேல் யார் எவர் என்று பார்க்காது, தங்களது விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கும்' எனச் சொல்லாமல் சொன்னது. ட்விட்டரின் இந்தச் செயலுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. மற்ற சமூக வலைதளங்கள் ட்விட்டரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுவருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் ட்ரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் ட்விட்டரை வறுத்தெடுத்து வருகின்றனர். ட்விட்டர் ஊழியர்கள் சிலரையும் குறிவைத்து அவதூறு பரப்புகின்றார். ட்விட்டரின் Head of site integrity-க்கு கொலை மிரட்டல்கள் கூட சென்றிருக்கின்றன.

Conservative Bias
பல வருடங்களாக ட்ரம்ப்பும் அவரது சக குடியரசு கட்சிக்காரர்களும் சமூக வலைதளங்கள் மீது வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு இது.

அதாவது அடிப்படையிலேயே சமூக வலைதளங்கள் பழைமைவாத கொள்கைகளுக்கும், வலதுசாரி சிந்தனைகளுக்கும் எதிரானவையாக இருக்கின்றன என்பதுதான் அவர்கள் குற்றசாட்டு. தங்கள் பதிவுகள் ஆதாரங்கள் இல்லாமல் பொய் பரப்புரைகள் என அவ்வப்போது நீக்கப்படுகின்றன. இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதே அவர்களின் வாதம். ஆனால் உண்மை அல்லாத தவறான விஷயங்களை எப்படி ஏற்றுக்கொள்வது என்கின்றன நிறுவனங்கள். இதுவரை இது தொடர்பாகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எதுவுமே செல்லுபடியாகவில்லை. இந்த விரக்தியும் கோபமும்தான் இந்தச் சமூக வலைதளங்களை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என ட்ரம்ப்பைத் தூண்டியிருக்கிறது. இதனால்தான் இணையச் சட்டங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் 'Section 320 of the Communications Decency Act' சட்டம் திருத்தப்பட வேண்டும் எனக் கையெழுத்திட்டிருக்கிறார் ட்ரம்ப்.

ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி
ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி
Francois Mori

ஒரு தளத்தில் மக்கள் பகிரும் கருத்துக்கு அந்த இணையதளம் பொறுப்பாகாது என்பதை சொல்லுவதே அந்தச் சட்டம். இதைதான் மாற்றியமைக்க முடிவுசெய்திருக்கிறார் ட்ரம்ப். இதனால் இனி அந்தத் தளங்களில் என்ன சர்ச்சைகள் எழுந்தாலும் குறிப்பிட்ட அந்த நிறுவனமும் பதில் சொல்ல வேண்டும், சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டும். இது அவரது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பல வருடங்களாகச் சொல்லிவரும் விஷயம்தான். ஆனால் இதை இணையத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற நோக்கில் ட்ரம்ப் செய்வதாகத் தெரியவில்லை. அந்த நிறுவனங்களை ஒடுக்கும் விதத்திலேயே இதைச் செய்யவிருக்கிறார். இது தொடர்ந்தால் மொத்தச் சமூக வலைதளங்களை மூடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார் ட்ரம்ப். இந்தச் சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. அவற்றை பற்றிப் பிறகு பார்ப்போம்.

ஒரு சமூக வலைதளம் சரியாக இயங்க மிகவும் முக்கியமான செயல்பாடு 'Content Moderation'. மக்கள் பதிவிடும் பதிவுகளைத் தரம்பிரித்து அவற்றை தேவையென்றால் நீக்கும் பணிதான் இது. கேட்பதற்கு எளிமையாக இருந்தாலும், சமூக வலைதள நிறுவனங்களின் பல வருடத் தலைவலியாக இருப்பது இதுதான். சமூக வலைதளங்களில் பதிவாகும் கருத்துகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. அத்தனை பதிவுகளையும் தரம் பிரித்து மோசமான பதிவுகளை நீக்குவது என்பது இமாலயப் பணி. இதனால் ஒப்பந்த அடிப்படையில் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் ஊழியர்கள்தான் இதைச் செய்கின்றனர். இது பற்றி ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறோம் அந்தக் கட்டுரை கீழ்க்காணும் லிங்க்கில்,

Content Moderation
Content Moderation

தரம் பிரிப்பது பெரும் சிக்கல் என்றால் எந்த அடிப்படையில் தரம் பிரிப்பது என்பது இன்னும் கூட பெரிய சிக்கல். எல்லா சமூக வலைதள நிறுவனங்களுமே நிர்வாணப் படங்கள், வன்முறைக் காட்சிகள், ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தும் பதிவுகள் எனத் தங்கள் தளத்தில் எதெல்லாம் இருக்கக்கூடாது எனச் சில வரையறைகள் (Policies) வைத்திருக்கும். இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோமே. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு ஒருவரைச் சுட்டிக்காட்டி ஒரு கொலையை நிச்சயம் அவர்தான் செய்திருப்பார் எனக் கட்டுக்கதை ஒன்றை ட்விட்டரில் ஒருவர் பதிவிடுகிறார் என வைத்துக்கொள்வோம் (இதுவும் ட்ரம்ப் செய்ததுதான்).

வெளியிலிருந்து பார்க்கும் நாம் தார்மிக ரீதியில் அந்தப் பதிவு நீக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டையே எடுப்போம். சமூக வலைதள நிறுவனத்தில் வேலை பார்ப்பவருக்கும் அது தவறான பதிவு என்பது புரியும். ஆனால் இதை என்னவென்று நீக்குவது, என்ன காரணம் சொல்வது? இதில்தான் பிரச்னை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை ஒவ்வொரு கோணத்தில் பார்ப்பார்கள். அப்படியானால் இதே எடுத்துக்காட்டில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது நடக்கக்கூடாது என்றுதான், எது இருக்கலாம், எது இருக்கக்கூடாது என வரையறைகளை வகுத்து வைத்திருக்கின்றன நிறுவனங்கள். முன்பு சொன்னது போல 'Content Moderators' ஒப்பந்த ஊழியர்கள்தான். அவர்களுக்குப் புரியும் அளவுக்கு இந்த வரையறைகள் எளிமையாகவும் இருக்க வேண்டும்.

இந்த எடுத்துக்காட்டுக்கு என்று ஒரு வரையறை வகுப்பது கடினம். அப்படிச் செய்தாலும் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும்போது ஒருவரால் தனது குரலைப் பதிவுசெய்ய முடியாமல் போய்விடும். அதனால் இதுபோன்ற வரையறைகள் வகுப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன நிறுவனங்கள். அப்படிதான் ட்விட்டர் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணுக்குத் தெரியாத கோடு ஒன்றை வரைந்து வந்தது. அதை மீறியதாகத்தான் ட்ரம்ப்பின் இந்தப் பதிவு ஒரு எச்சரிக்கைக்குப் பின் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீக்கப்படவில்லை. இப்போது 'அந்த ட்வீட்டின் அர்த்தமே வேற' என ட்ரம்ப் கூறிவருகிறார். 'சூறையாடுதல் தொடங்கினால் அப்படியே அது துப்பாக்கிச் சூடாக மாறும். அமைதி கெடும்' என்றே அதில் குறிப்பிட்டேன் என 'அட்மின் போஸ்ட்' கணக்காகக் காரணம் சொல்லிவருகிறார் ட்ரம்ப்.

'When the looting starts, the shooting starts' என்பது வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட பிரபலமான வாசகம். மியாமி காவல்துறை தலைவர் 1966-ல் கூறிய வார்த்தைகள் அவை. அதன் பொருளை வைத்துத்தான் இதை வன்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது என முடிவு செய்தோம் எனத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர். இந்த முடிவை எடுப்பதற்கு முன் ட்விட்டர் CEO ஜாக் டார்ஸி மற்றும் பிற உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூடிப் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ட்விட்டர் மட்டுமல்ல, ஃபேஸ்புக்கிலும் இந்தக் கருத்தைப் பதிவிட்டார் ட்ரம்ப். ஆனால் ட்விட்டர் போல அதிரடி காட்டவில்லை ஃபேஸ்புக். ட்ரம்ப்பின் இந்தப் பதிவுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதில் திடமாக இருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். 'ட்விட்டர் பாலிசிகளுக்கும் எங்கள் பாலிசிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு' என அவர் பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் நான் ட்விட்டருடன் உடன்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

Mark Zuckerberg
Mark Zuckerberg
Mark Lennihan | AP
`டெக் நிறுவனங்கள், 100 சதவிகிதம் உண்மை என்று கணிக்கும் விஷயத்தை மட்டும்தான் பதிவுசெய்ய வேண்டும் என்ற கருத்துச் சுதந்திரமற்ற உலகில் வாழ, பெரும்பாலான மக்கள் விரும்பவே மாட்டார்கள். இந்த முடிவு சரியானதுதான்"
-மார்க் சக்கர்பெர்க்.

அரசியல் விளம்பரங்களை இனி `Fact-Check' செய்யமாட்டோம் என மார்க் அறிவித்தபோது கொடுத்த விளக்கம் இதுதான். ’உண்மையோ பொய்யோ அதை மக்களே முடிவு செய்யட்டுமே’ என்பதுதான் அவர் நிலைப்பாடு. இப்படி நடவடிக்கை எடுக்க மறுத்ததால் ஃபேஸ்புக் ஊழியர்கள் பலரும் தங்கள் வேலைகளிருந்து வெளிநடப்பு செய்து எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். சிலர் தங்கள் வேலையை விடுவதாகவும் அறிவித்தனர். 'இப்படி கண்முன் நடக்கும் அநியாயத்தைப் பார்த்து அமைதியாக எப்படி இருப்பது?' என்பதே அவர்களது கோபமாக இருக்கிறது.

இதற்கடுத்து அனைவரையும் சந்தித்துப் பேசினார் மார்க். "எனக்கும் ட்ரம்ப்பின் இந்தப் பதிவு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் அவர் இப்படி செய்தது மிகவும் தவறு. ஆனால், இந்தச் செய்தி மக்களுக்குச் சென்று சேரவேண்டும். அரசு ஒடுக்குமுறையைப் பயன்படுத்தப்போகிறது என்றால் மக்களுக்கு அது தெரியவேண்டும்" என விளக்கம் கொடுத்து இருக்கிறார். கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராக ஃபேஸ்புக் என்றும் துணைநிற்கும் எனவும் அவர் கூறினார். இருந்தும் எதிர்ப்புகள் குறைவதாக இல்லை. இன்னும் இதைச் சுற்றிப் பல விவாதங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

போராட்டங்கள்
போராட்டங்கள்
AP

இந்த விஷயத்தில் ஒப்பிட்டு அளவில் மிகவும் சிறிய நிறுவனமாக இருக்கும் ட்விட்டருக்கு இருக்கும் துணிச்சல் கூட ஃபேஸ்புக்கிடம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'மார்க், மார்க் சொல்வதை மட்டுமே கேட்கிறார், அவருக்குச் சரியெனப் படுவதை மட்டுமே செய்கிறார்' என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களிலிருந்து ஃபேஸ்புக்கில் பணிபுரிந்து தற்போது வேறு வேலைகளில் இருக்கும் சிலர் ஒன்றிணைந்து மார்க்குக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றனர். அந்தக் கடிதம் இங்கே (https://www.nytimes.com/2020/06/03/technology/facebook-trump-employees-letter.html)

சுருக்கமாக என்ன சொல்கிறார்கள் என்றால், "ஃபேஸ்புக்கின் இந்த நிலைப்பாடு சரியல்ல. பொதுமக்களின் அரசியல் கருத்துகள் fact-check செய்யப்படுகிறது. அதே கருத்தை அரசியல்வாதி பதிவிட்டால் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இது எப்படிச் சரியாகும். ட்ரம்ப்பின் பதிவு, அரசு ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் என்ற எச்சரிக்கை மட்டுமல்ல, அவரைப் பின்தொடரும் பலருக்கும் அவர் விட்டு செல்லும் செய்தி அது. நிச்சயம் அது வன்முறையை ஊக்குவிக்கும் பதிவுதான். இதே வார்த்தைகளை அதிபரை நோக்கி மக்கள் பதிவுசெய்தால் சும்மா இருக்குமா ஃபேஸ்புக்? மக்களின் நன்மதிப்பைப் பெற ஃபேஸ்புக் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். 'வன்முறையைத் தூண்டுவதாக இருக்கிறது' எனக் குறிப்பிடுவது கருத்துரிமையைப் பறிப்பதாக ஆகாது" என விண்ணப்பம் வைத்திருக்கின்றனர். மார்க் காதுகளை இது எட்டுமா என்பது கேள்விக்குறிதான்.

சரி ட்ரம்ப் கொண்டுவரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு மீண்டும் வருவோம். Section 320-ல் மாற்றம் கொண்டுவருவதற்கு எதிராக இப்போதே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அப்படிச் செய்வதுதான் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. தங்கள் இணையதளத்தில் என்ன இருக்க வேண்டும், இருக்கக்கூடாது என்பதை முடிவுசெய்யும் உரிமை நிறுவனங்களுக்கு உண்டு என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் இந்தத் தளங்களை ஒரு நாட்டின் வரையறைக்குள் கொண்டுவருவதும் எப்படி சரியாகும்.

ஆனால் ஒன்று, இப்படி ஊரே தீ பற்றி எரிந்துகொண்டிருக்கும்போதும் 'என் வீட்டில் ஹீட்டர் வேலை செய்யவில்லை' என்பது போல் சமூக வலைதள நிறுவனங்களுடன் வெட்டி சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார், உலகின் மிக முக்கியத் தலைவராக இருக்கும் அமெரிக்க அதிபர். இது எங்கு சென்று முடியும் என்றுதான் தெரியவில்லை!