சினிமா
Published:Updated:

இனி ட்விட்டரில் பேசலாம்!

ட்விட்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
ட்விட்டர்

பெரிய அளவில் எழுதும் மனிதர்களுக்காக இணையத்தில் உருவாக்கப்பட்டது பிளாக். எழுதும் வடிவத்தை அப்படியே வைத்துக்கொண்டு நண்பர்கள் சூழ் உலகை உருவாக்கியது ஃபேஸ்புக்

எழுதவே சோம்பேறித்தனப்படுபவர்கள் மத்தியில் உருவான ட்விட்டரில், தற்போதெல்லாம் அரைடஜன் குழந்தைகள் பெற்றெடுத்த வீடுபோல் எப்போதும் ஸ்பீக்கர் ஒலிச்சத்தம். ‘ஸ்பேசஸ்’ என விண்வெளி பெயரில் வீம்பாக விளையாடிவருகிறது ட்விட்டர்.

பெரிய அளவில் எழுதும் மனிதர்களுக்காக இணையத்தில் உருவாக்கப்பட்டது பிளாக். எழுதும் வடிவத்தை அப்படியே வைத்துக்கொண்டு நண்பர்கள் சூழ் உலகை உருவாக்கியது ஃபேஸ்புக். ‘ஏன் எழுதிக் கஷ்டப்படறீங்க, 140 எழுத்துகளில் என்ன சொல்ல முடியுமோ அதை மட்டும் சொல்லுங்க’ என்றது ட்விட்டர். கொரோனா காலத்தில் எழுதவும் பலர் சோம்பித் திரிய, ஆடியோ கேட்கலியோ என உள்நுழைந்தன ஆடியோ சாதனங்கள். பாட்காஸ்ட், ஆடிபிள் எல்லாம் முன்னரே இருந்தாலும், லாக்டௌனில் கதைகள் கேட்க, விவாதங்கள் கேட்க என ஒலிக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் உச்சம் அடைந்தனர்.

அட, ஆடியோவுல இத்தனை விஷயம் இருக்கா என யோசித்த ஆல்ஃபா எக்ஸ்ப்ளோரேஷன் என்கிற நிறுவனம், 2020 ஏப்ரல் மாதம் கிளப் ஹௌஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. ஐபோன் பயனாளர்களுக்கு மட்டுமே, மேலும் இன்வைட் கொடுத்துவிட்டு ஆரம்பக்கால ஜிமெயில்போல் தேவுடு காக்க வேண்டும் என்கிற ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் அறிமுகமானது கிளப்ஹௌஸ். ஒரு ஆடியோ சாட் ரூமுக்கு இத்தனை அலப்பறையா என நொந்துகொண்டனர் நெட்டிசனஸ். தடுப்பூசி போடணும்னு ஆனதுக்கு அப்புறம் அதென்ன 45+, 60+ என்பதுபோல், தற்போது ஸ்பேசஸ் என்கிற ஆடியோ ரூம்களை ட்விட்டருக்குள் உலவ விட்டிருக்கிறார் அதன் நிறுவனர் ஜேக் டார்ஸி. வாட்ஸப் , ஃபேஸ்புக்கில் வரும் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்குப் போட்டியாக ட்விட்டர் ஃப்ளீட்ஸ் என்கிற ஆப்ஷனை அறிமுகம் செய்தது. வாட்ஸப் மொழியில் ஸ்டேட்டஸ், ட்விட்டர் மொழியில் ஃப்ளீட்ஸ் அவ்வளவுதான் வித்தியாசம். இந்த முறை, அந்த ஃப்ளீட்ஸ் இடத்திலேயே ஸ்பேசஸை அறிமுகம் செய்து ஃபேஸ்புக்கிற்கு முன் கோதாவில் குதித்திருக்கிறது ட்விட்டர். ஸ்பேசஸ் ஆரம்பித்த நேரம், ட்விட்டரில் 24*7 நீயா நானாக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இனி ட்விட்டரில் பேசலாம்!

தேர்தல் கண்டெய்னர் லாரிகள் ஆரம்பித்து, நாம் தமிழர் தம்பிகள் அறச்சீற்றம், தடுப்பூசி, கர்ணன், ஐபிஎல் வரை என்ன டாபிக் என்றாலும் பேச பத்து நபர்களையும் கேட்க 100 நபர்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அழகன் பட ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடல்போல கடந்த வாரம் நடந்த ஒரு விவாதம், நாள் முழுக்க இழுத்து கிராஷ் ஆகி நின்றிருக்கிறது.

இன்னும் ட்விட்டர் வெப் பிரவுசர்களில் ஸ்பேசஸ் இல்லை யென்றாலும், மொபைல் ஆப் பயனாளர் களுக்கு ஸ்பேசஸ் எளிதாக இருக்கிறது. ஒரு க்ளிக்கில் ஒரு ஸ்பேசஸை ஆரம்பித்து விடலாம். ‘நீ உன் நண்பனைச் சேர். உன் நண்பன் அவன் நண்பனைச் சேர்க்கட்டும். அப்படியே எல்லோரும் இதனுள் வந்துவிடலாம்’ என்பதுதான் ஸ்பேசஸில் ஆள் சேர்க்கும் யுக்தி. கூகுள் மீட்டிலும், ஜூமிலும் ம்யூட் போட்டது தெரியாமல் பேசிக் கொண்டி ருப்பது போன்ற ரகளைகளும் ஸ்பேசஸில் நடக்கின்றன.

எதிர்க் கடையில் காளான் தோசை சக்கைப்போடு போட்டால், நம் கடையில் தக்காளி தோசையாவது போட வேண்டுமே என மார்க்கும் ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே வைத்திருக்கும் ரூம்களைத் தூசிதட்டி, சுத்தம் செய்து ஆடியோ மேடைகளாக மாற்றவிருக்கிறார். நம்மை எழுதவைக்கப் படாதபாடு பட்ட செயலிகள் இப்போது ‘பேசு மச்சான்ஸ்’ என்கின்றன. IVRS மெஷின் மொழிகளையே மொபைல்களில் பெரும்பாலும் கேட்கும் நமக்கும் இந்த விவாதங்கள் உரையாடும் வாய்ப்பை வழங்குகிறது என்பது வரை எல்லாம் ஓகேதான்.

சமூக வலைதளங்களில் தங்கள் பட விளம்பரங்களை ட்விட்டாக, போஸ்ட்டாக மட்டுமே வெளியிட்டுக்கொண்டிருந்த பிரபலங்கள், அவ்வப்போது என்னிடம் கேளுங்கள் என ட்விட்ஸ்டார்ம் நடத்துவதுண்டு. கடந்த வாரம் ரஹ்மான், தன் புதிய படத்துக்காக ட்விட்டரின் புதிய ஆப்ஷனான ஸ்பேசஸில் உரையாடிக்கொண்டிருந்தார். ரசிகர்களுக்கும், பிரபலத்துக்குமான இடைவெளியை பெருமளவில் குறைக்கவல்லது ஸ்பேசஸ். ஆம், இனி எல்லாம் இப்படித்தான்.