Published:Updated:

`பணம் முக்கியமில்லை; மக்களை பாதிக்கிறது!’ - அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த ட்விட்டர்

அரசியல் விளம்பரம் செய்யப்படும் தளங்களில் எங்களின் பங்களிப்பு என்பது மிகச் சிறியது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

ட்விட்டர்
ட்விட்டர்

இது டிஜிட்டல் யுகம். போராட்டங்கள் தொடங்கி நாட்டை ஆளும் அரசுகள் வரை இணையம் மூலமே அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்னர், சாதாரண போராட்டங்கள், எழுச்சி போராட்டங்களாக உருமாறியதும் அரசு மூடிமறைக்க நினைக்கும் போராட்டங்கள் உலகத்தின் கவனத்தைப் பெற்றதையும் நாம் பார்த்து வருகிறோம். இது ஒருபுறம் என்றால், வாக்காளர்களை எளிதில் சென்றடைய, அனைத்து அரசியல் கட்சிகளும் ஸ்மார்ட்டான பல திட்டங்களை சமூகவலைதளம் மூலம் அறிமுகப்படுத்தி வருகின்றன.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

அரசியல் கட்சிகள் தற்போது விளம்பரங்களுக்காக சமூக வலைதளங்களில்தான் அதிகம் செலவிடுகின்றன. இதற்குக் காரணம், அது கொடுக்கும் `ரீச்’ தான். அடுத்தடுத்த தேர்தல்களில் ட்விட்டர் மூலம் விளம்பரம் செய்யலாம் எனப் பெரும் திட்டத்தோடு இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ட்விட்டரின் புதிய அறிவிப்பு பெரும் அடியாக விழுந்துள்ளது. அதாவது, இனி அரசியல் விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ட்விட்டர் சி.இ.ஓ ஜேக் டோர்சே, ``உலகம் முழுவதும் ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களை நிறுத்துவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். அரசியல் கருத்துகள் மக்களைச் சென்றடைவது என்பது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் இலக்காக இருக்க வேண்டும். அதைப் பணம் கொடுத்து வாங்கக் கூடாது. ஏன், என்பதற்கு சில காரணங்கள்...” எனக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களையும் அவர் விளக்கியுள்ளார்.

ட்விட்டர்
ட்விட்டர்

``ஓர் அரசியல் செய்தியானது, மக்கள் குறிப்பிட்ட அந்தக் கணக்கை பின்தொடரும்போது அல்லது ரீ ட்வீட் செய்யும்போது அதிக ரீச் பெறுகிறது. இதில் மக்களின் கைகளில்தான் முடிவு இருக்கிறது. ஆனால், பணம் மூலம் ரீச் பெறுவது என்பது அதைத் தகர்க்கிறது. மேலும் மக்களிடம் ஒரு கருத்தை அது திணிக்கிறது. இது பணம் மூலம் நடைபெறக் கூடாது என நாங்கள் நம்புகிறோம்.

போலியான விளம்பரங்களை தடுக்கக் கடுமையாக முயற்சிகள் செய்கிறோம் எனச் சொல்லிக்கொண்டே இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.
ட்விட்டர் சி.இ.ஓ

இணையத்தில் செய்யப்படும் விளம்பரங்கள் அதிக சக்தி கொண்டதாகவும் வணிக விளம்பரதாரர்களுக்கு அதிக பலனளிக்கும் விதமாகவும் இருக்கிறது. அதே சக்தி அரசியலுக்கு வரும்போது சில ஆபத்துகளையும் கொண்டு வருகிறது. அது வாக்காளர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

ஜேக்
ஜேக்

இணையத்தில் செய்யப்படும் அரசியல் விளம்பரங்களில் சில நேரங்களில் போலி செய்திகள் பரவும் அபாயமும் இருக்கிறது. இணையத்தில் அரசியல் விளம்பரங்கள் செய்யப்படுவது பெரும் சவால்களைக் கொண்டு வருகிறது. இந்தச் சவால்கள், அனைத்து இணைய சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது சில நேரங்களில் எங்கள் மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது.

இந்த முடிவின் மூலம், ட்விட்டரில் போலியான அரசியல் விளம்பரங்கள் தவிர்க்கப்பட்டுவிடும் என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனாலும், பணம் மூலம் போலியான ரீச் கிடைப்பதைத் தடுக்க முடியும். போலியான விளம்பரங்களைத் தடுக்கக் கடுமையாக முயற்சிகளைச் செய்கிறோம் எனச் சொல்லிக்கொண்டே இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

ஜேக்
ஜேக்

அரசியல் விளம்பரம் செய்யப்படும் தளங்களில் எங்களின் பங்களிப்பு என்பது மிகச் சிறியது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். எங்களின் இந்த முடிவு பதவியில் இருக்கும் சிலருக்குச் சாதகமாக அமையும் என்றுகூட சிலர் சொல்லலாம். நாங்கள் அரசியல் சார்பு இல்லாத பல்வேறு சமூக அக்கறை கொண்ட முன்னெடுப்புகளை நடத்தியுள்ளோம். இது வளரும் என நான் நம்புகிறேன்.

இந்த நடவடிக்கைகளுடன், வரும் காலத்தில் மேலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அரசியல் விளம்பரங்களை ஒழுங்குபடுத்த சில முயற்சிகளை முன்னெடுக்க இருக்கிறோம். அது சிரமமான காரியம் என்பதையும் அறிவோம். விளம்பரத்தில் வெளிப்படத்தன்மை என்பது அதன் ஒரு முயற்சி தான். அது தீர்வு கிடையாது. இதன் முழுமையான பாலிசி நவம்பர் 15-ம் தேதி வெளியாகும்.

ட்விட்டர்
ட்விட்டர்

இறுதியாக ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகிறேன். நிறுவனத்தின் இந்த முடிவு கருத்துரிமைக்கு எதிரானது கிடையாது. இது பணம் மூலம் போலியான ரீச்-ஐ தடுக்கும் முயற்சியே” என நீண்ட விளக்கத்தை அளித்துள்ளார் ஜேக்.

ட்விட்டர் நிறுவனத்தின் இந்த முடிவு குறித்துப் பேசிய ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் செகால், ``ட்விட்டர் நிறுவனத்தின் இந்த முடிவானது கொள்கை சார்ந்து எடுக்கப்பட்டது. பணம் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு கிடையாது” என்றார்.

Facebook
Facebook

கடந்த கால தேர்தல்களில் சமூக வலைதளங்களின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. `ட்விட்டர் எடுத்துள்ள இந்த முடிவை ஃபேஸ்புக்கும் எடுக்குமா?' என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.