Published:Updated:

`ப்ளூ டிக் வழங்குவதில் சாதிய பாகுபாடு; கொந்தளித்த நெட்டிசன்கள்!’ - என்ன சொல்கிறது ட்விட்டர்?

`CancelAllBlueTicksinIndia’ என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் உலகம் முழுவதும் விவாதமானது.

Twitter| ட்விட்டர்
Twitter| ட்விட்டர் ( Pinterest )

பிரபலங்களின் பெயரில் போலிக் கணக்குகளைத் தொடங்கி அதன்மூலம் பொய்யான செய்திகளைப் பரப்புவதைத் தடுப்பதற்காக சமூக வலைதளப் பக்கங்கள், `வெரிஃபைடு’ சான்று அளிக்கும் பணியில் இறங்கியது. ட்விட்டர் நிர்வாகமும் கணக்குகளைச் சரிபார்த்து உண்மையான கணக்குக்கு ப்ளூடிக் அளிக்கிறது. இதன்மூலம் பயனாளர்கள் உண்மையான நபர்களைக் குழப்பமில்லாமல் பின்தொடர முடியும்.

Twitter
Twitter

இந்த விஷயத்தில்தான் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் ப்ளூடிக் வழங்குவதில் ட்விட்டர் நிர்வாகம் சாதிய பாகுபாடு பார்ப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, பட்டியலின மக்களின் கணக்குகளைத் தவிர்த்து மற்ற கணக்குகளுக்கு ப்ளூடிக் வழங்குவதாகவும் சொல்கின்றனர்.

சமூகச் செயற்பாட்டாளர் திலீப் மண்டல் `VerifySCSTOPMinority' என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து செயற்பாட்டாளர் ஹன்ஸ்ராஜ் மீனா தன்னுடைய கணக்கும் சரிபார்க்கப்பட்டு ப்ளூடிக் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, `CancelAllBlueTicksinIndia’ என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்த விவகாரம், உலகம் முழுவதும் விவாதப் பொருளாகவும் மாறியது. இதனையடுத்துப் பலரும், `ட்விட்டர் நிர்வாகம் இந்த விஷயத்தில் பதிலளிக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தனர்.

Social Media
Social Media

இந்நிலையில், `ட்விட்டர் இந்தியா’ இந்தக் குழப்பங்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், `இந்தியாவில் ட்விட்டர் நிறுவனம் சார்புடன் செயல்படுவதாக விவாதங்கள் நடைபெற்றன. ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்லிவிடுகிறோம். அதாவது, எங்கள் நிறுவனத்தில் புதிதாக பாலிஸி தயாரிக்கும்போதும் சரி, புதிய வசதிகள் அறிமுகப்படுத்தும்போதும் சரி, நாங்கள் நடுநிலைமையுடன்தான் செயல்பட்டு வந்துள்ளோம். எந்த அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது சித்தாந்தத்தையோ நாங்கள் எப்போதும் பின்பற்றியது கிடையாது.

ட்விட்டர் அதன் சேவையில் தெளிவாக இருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களின் குரல்களையும் ட்விட்டரில் கேட்கலாம். வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பின்மைதான் எங்களின் கொள்கை. எங்கள் விதிகள் எல்லாமே தனிநபர்களின் நம்பிக்கை மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல் நியாயமாகவும் பாரபட்சமின்றியும் செயல்படுகிறோம். எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் ஒவ்வொரு ட்வீட்டையும் கணக்கையும் கவனமாக ஆராய்கிறோம்.

Twitter
Twitter

ட்விட்டர் விதிகளை அமல்படுத்துவதற்காகச் சிறப்பு டீம் இருக்கிறது. எங்களது பயிற்சியில் மதம் மற்றும் சாதிகள் குறித்தும் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வெறுக்கத்தக்க விஷயங்களை அனுமதிக்க மாட்டோம். தற்போது ப்ளூடிக் அளிக்கும் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தச் செயல்பாட்டையும் மறு ஆய்வு செய்ய உள்ளோம். இந்தியாவில் பொது உரையாடலுக்குச் சேவை செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம்' எனக் கூறப்பட்டுள்ளது.