Published:Updated:

`தவறான தகவல்.. தீவிரமாக கண்காணிக்கும் சமூக வலைதளங்கள்!' -ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர் #corona

ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர்
ரஜினி வீடியோவை நீக்கிய ட்விட்டர்

மோடியின் Janata Curfew-க்கு பிரபலங்கள் உட்பட பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் ரஜினி, கமல் இருவருமே இதுகுறித்து வீடியோக்களை இன்று வெளியிட்டனர். இதில் ரஜினி வீடியோவை நீக்கியுள்ளது ட்விட்டர்!

உலகமெங்கும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாகி வருகிறது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளின் நிலை இந்தியாவுக்கும் வந்துவிடக்கூடாதென முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, நாளை (மார்ச் 22) மட்டும் காலை 7 முதல் இரவு 9 மணி வரை, 14 மணி நேரத்துக்குப் பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கைக் (Janta Curfew) கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இதற்காக மொத்த நாடும் பரபரவென தயாராகி வருகிறது.

ரஜினி
ரஜினி

இதற்குப் பிரபலங்கள் உட்பட பலரும் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் ரஜினி, கமல் இருவருமே இதுகுறித்து வீடியோக்களை இன்று வெளியிட்டனர். இதில் ரஜினி, "கொரோனா பாதிப்புகளில் இந்தியா இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது அது மூன்றாவது கட்டத்திற்குப் போய்விடக்கூடாது. பொது இடங்களில் இருக்கும் கொரோனா வைரஸ், 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே இந்த மூன்றாவது கட்டத்தை அடையாமல் தடுத்து நிறுத்திவிடலாம். இதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சுய ஊரடங்கு உத்தரவைக் கொடுத்துள்ளார். இதே போன்று இத்தாலியிலும் கொரோனா இரண்டாவது கட்டத்தில் இருக்கும்போதே அரசால் இப்படியான சுய ஊரடங்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிபோகியுள்ளது. இதனால் இதை நாம் நிச்சயம் கடைப்பிடிக்கவேண்டும்." என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோவை தற்போது ட்விட்டர் நீக்கியுள்ளது. 'தங்களது விதிமுறைகளை இந்தப் பதிவு மீறுகிறது' என்று ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. இதற்கு ரஜினி பேசியதிலிருந்த தவறான கருத்தே காரணம் என்றும் தெரிகிறது. 'கொரோனா வைரஸ், 12-14 மணிநேரங்கள் பரவாமல் இருந்தாலே அது செயலிழந்துவிடும்'என்னும் நோக்கில் அவர் பேசியதில்தான் சிக்கல் இருந்திருக்கிறது.

 ரஜினிகாந்த் வீடியோவை நீக்கிய ட்விட்டர்!
ரஜினிகாந்த் வீடியோவை நீக்கிய ட்விட்டர்!

தகவல் உறுதிசெய்யும் (Fact-Checking) நிறுவனங்களால் தவறு என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அது. கொரோனா சில பரப்புகளில் மூன்று நாள்கள் வரை தங்கவல்லது. மேலும், பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டு வாரங்கள் வரை இன்னொருவருக்குக் கொரோனா வைரஸைப் பரப்பமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வல்லுநர்களை விகடன் சார்பிலும் தொடர்புகொண்டோம். அந்தத் தகவல்களைப் படிக்க கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

`14 மணி நேரத்தில் கொரோனா அழிந்துவிடுமா..!' -மருத்துவர்கள் சொல்வதென்ன? #FactCheck

ட்விட்டர் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்கள் அனைத்துமே கொரோனா வதந்திகளை மிகவும் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றன. இதன் விளைவாகப் பல ஆயிரம் பதிவுகள் கடந்த சில நாட்களில் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு