இதுவரை ட்விட்டரை பயனர்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் புதிதாகப் பணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையிலான 'Super Follow' என்னும் வசதியை அறிமுகப்படுத்துவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டது ட்விட்டர் நிறுவனம்.
இந்தப் புதிய வசதியானது குறிப்பிட்ட நபர்களின் ட்விட்டர் (Twitter) கணக்குகளை பின் தொடர்வதற்கும், அவர்கள் பகிரும் பதிவுகளைக் காண்பதற்கும் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற நடைமுறையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படைப்பாளிகள் நேரடியாகப் பயனடைவார்கள். ஆனால் இந்த சேவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இது நடைமுறைக்கு வர சில காலம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது மட்டுமல்லாமல், ஃபேஸ்புக்கில் இருப்பது போலவே ஒரே தலைப்பில் கலந்துரையாடும் வகையிலான குழுக்கள் போன்ற அமைப்பை ட்விட்டரில் உருவாக்கும் முனைப்பிலும் அந்த நிறுவனம் இருக்கிறது. இதனுடன் மேலும் சில பாதுகாப்பு அம்சங்களும் ட்விட்டரில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 24 மணி நேரத்தில் மறைந்து விடக்கூடிய 'Fleet' என்னும் வசதியைச் சென்ற ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கட்டண முறையில் சேவை என்பது யூ-டியூப் போன்ற தளங்களுக்குச் சரியாக இருக்கலாம், ஆனால் ட்விட்டர் போன்ற தளங்களுக்கு அது சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. மக்களும் இதை விரும்பமாட்டார்கள் என்றே தெரிகிறது. ஆனால், புதிய வருவாய்க்கான வழிகளைத் ட்விட்டர் தேடி வருகிறது. இதற்கு முன் விளம்பர வருவாயில் மட்டுமே ட்விட்டர் இயங்கி வந்தது. தற்போது இந்தப் புதிய வழிமுறையைக் கையில் எடுத்திருக்கிறது. இது வெற்றியடையுமா அல்லது தோல்வியில் முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.