ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்களுக்கு பொதுவாக யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தது. இதன்படி டிசம்பர் 2024 முதல் யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க இந்திய அரசாங்கமும் திட்டமிட்டுள்ளது.
இந்தியத் தர நிர்ணய பணியகம் (Bureau of Indian Standards) யூஎஸ்பி டைப்-C போர்ட்டை இந்தியாவில் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், மின்னணு சாதனங்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய சார்ஜரை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக பேசிய யூனியன் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், "மின்னணு கழிவுகளைக் குறைக்கவும், மக்கள் பல சார்ஜர்களை வாங்குவதைத் தவிர்க்கவும்தான் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான கான்பூர் ஐஐடி-யில் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் புளூடூத் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜிங் போர்ட்டை உருவாக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன் தொழில்துறையுடன் சேர்ந்து முடிவு எடுக்கப்படும்.

கடந்த மாதம் நடைபெற்ற மீட்டிங்கில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு துணைக் குழுவை உருவாக்க நுகர்வோர் விவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பிரதமர் நரேந்திர மோடி மிஷன் லைஃப் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்திருந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது மூலம் தேவையற்ற மின்னணு கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.