இந்தியாவின் Human Space Flight Centre (HSFC)-ன் புதிய இயக்குநராக உமாமகேஸ்வரனை நியமித்திருக்கிறது விண்வெளித்துறை. நேற்று HSFC-யில் தன்னுடைய புதிய பதவியில் இணைந்திருக்கிறார் உமாமகேஸ்வரன். HSFC-ன் தற்போதைய முந்தைய இயக்குநராக இருந்த உன்னிகிருஷ்ணன் நாயர், விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ. அந்த ககன்யான் திட்டத்திற்குத் தேவையான திட்ட வரைவை அளிப்பது, அந்தத் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவது மற்றும் விண்வெளியில் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை உருவாக்குவது உள்ளிட்ட வேலைகளை HSFC-யே கவனித்துக் கொள்கிறது.

தற்போது HSFC-யின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் உமாமகேஸ்வரன், 1987-ல் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் பணியில் இணைந்தார். இவர் 1985-ல் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியலில் BE பட்டமும், 1996-ல் ரஷ்ய மொழியில் MA பட்டமும், 2007-ல் சாப்ட்வேர் சிஸ்டத்தில் MS பட்டமும் பெற்றிருக்கிறார். இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்களான PSLV, GSLV மற்றும் GSLV-Mk III ஆகியவற்றின் உருவாக்கத்தில் இவருடைய பங்கும் இருந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை சுயமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியது மூன்றே நாடுகள் தான். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே, மற்ற நாடுகளுடைய துணையின்றி சுயமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியிருக்கின்றன. ககன்யானை திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும்பட்சத்தில் நான்காவதாக இந்தியா அந்தப் பட்டியலில் இணையும். முதன் முதலில் ககன்யான திட்டமிடப்பட்ட போது இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 2022-ல் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் 2023-க்கு இந்தத் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. மனிதர்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னாள், மனிதர்கள் இல்லாமல் ஏவுதல் வாகனத்தையும் மற்ற தொழில்நுட்பங்களையும் சோதனை செய்யத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பாதிக்கு மேல் ஒரு முறை, இந்த ஆண்டு இறுதியில் ஒரு முறை என இரண்டு முறை ஆளில்லாமல் ராக்கெட்டை ஏவி சோதனை செய்யவிருக்கிறது இஸ்ரோ.