Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 24 - 5G

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

UNLOCK அறிவியல் 2.O - 24 - 5G

- அண்டன் பிரகாஷ்

Published:Updated:
UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
UNLOCK அறிவியல் 2.O

பொருள்களின் இணையம் (Internet of Things) பற்றி முந்தைய கட்டுரைகள் சிலவற்றில் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். கணினி, அலைபேசி போன்ற சாதனங்கள் பொதுப் பயன்பாட்டிற்கானவை. அதற்கு மாறாக, குறிப்பிட்ட பணிக்காக மட்டும் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் இணைந்திருக்கும் சாதனங்களைத்தான் பொதுவாக `பொ.இ’ என அழைக்கிறோம். உதாரணத்திற்குச் சிலவற்றைப் பார்க்கலாம்:

இணையத்தில் இணைக்கப் பட்ட பாதுகாப்பு கேமரா. சிசிடிவி போன்ற பாதுகாப்புக் கருவிகள் தமக்குள்ளாகவே சேமிக்கும் வசதியுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும். தன் கேமராக் கண்களில் தெரிவதைத் தொடர்ந்து அது பதிவு செய்துகொண்டிருக்கும். அந்தக் காட்சிகளைப் பார்க்க வேண்டுமானால், அது சேமிக்கப்பட்டிருக்கும் ஹார்டு டிரைவில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். சேமிப்பு இப்படி லோக்கலாக இருப்பது ஒரு விதத்தில் வசதி என்றாலும், ‘ஹார்டு டிரைவை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்; குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர் சேமிப்பு அளவு நிறைந்ததும், முந்தைய நாள்களின் பதிவுகளை அழித்து இடம் உருவாக்க வேண்டும்’ எனப் பல குறைபாடுகளும் உண்டு. இணையத்தில் எப்போதும் இணைக்கப்பட்ட சிறிய சைஸ் கேமராக்கள் இந்தக் குறையைத் தீர்க்கின்றன. நிகழ் நேரத்தில் காட்சிகளை இணையத்தில் பதிந்து வைத்துக்கொள்ளலாம்; அல்லது, லைவ்வாகப் பார்க்கலாம். நான் பயன்படுத்தும் Wyze கேமரா சிசிடிவி அளவைவிடப் பல மடங்கு சிறியது. ஆனால், அளவில் சிறுத்த கடுகாக உழைக்கிறது. இத்தகைய கேமராக்கள் பொதுவாக Wifi பிணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும். (https://wyze.com/)

UNLOCK அறிவியல் 2.O - 24 -  5G

வாகனங்களில் OBD (Onboard Diagnostics) என்ற வசதி உலகம் முழுதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட இந்தத் தர நிர்ணய வழிமுறை வாகனங்களின் தகவல்களை அதன் இன்ஜின் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வழிசெய்கிறது. கார்பன் உமிழ்வு, இயந்திரக் கோளாறுகளைக் கண்டறிவது என்பதற்கான வசதி இது. இந்தத் தகவலைத் திரட்டுவது என்பது மட்டுமல்லாமல், வாகனம் இருக்கும் இடம், அளவைவிட அதிகமான வேகத்தில் ஓட்டிய நேரம், விபத்து நடந்தால் குறிப்பிட்ட நபர்களுக்குத் தெரிவிப்பது போன்ற வசதிகள் கொண்ட சாதனங்கள் கிடைக்கின்றன. நான் பயன்படுத்தும் Bouncie சாதனம் தனக்குள் இருக்கும் SIM மூலமாக இணையத்தில் இணைகிறது. அலைபேசியின் தகவல் வேகம் சற்றே குறைவு என்பதால், நான் வீடு வந்து சேர்ந்து பல நிமிடங்களுக்குப் பின்னர் ‘அண்டன் வீட்டுக்கு வந்தாச்சு’ என எனது வாகனம் குறுஞ்செய்தி அனுப்புவது வேடிக்கை. (https://www.bouncie.com/)

UNLOCK அறிவியல் 2.O - 24 -  5G

கால்நடைப் பண்ணைகளை நடத்துபவர்களின் பெரும்பொறுப்பு, தங்களது கால்நடைகளின் நலனைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்பது. மந்தையை விட்டு ஏதாவது ஒரு விலங்கு வெளியேறிச் சென்றுவிட்டால் அது உடனடியாகத் தெரிய வேண்டும். அவற்றின் உடல் வெப்பத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவை குழுவாகக் கூடும் இடங்களுக்கு அருகில் தண்ணீர் எப்போதும் இருப்பதுபோல் பார்த்துக் கொள்வதும் அவசியம். விலங்குகளின் காதில் பொருத்தும் `பொ.இ’ சாதனங்கள் இவை அனைத்தையும் சாத்தியமாக்கு கின்றன. உதாரணத்திற்கு, herddogg. மாடுகளின் காதில் டெக் கம்மலாகப் பொருத்தப்படும் மேற்படி சாதனம், சாட்டிலைட் மூலமாக இணையத்திற்குத் தகவல் அனுப்புகிறது. சாட்டிலைட் இணைப்பின் வேகம் மிகக் குறைவு என்பதால், இருக்கும் இடம், உடல் வெப்பம் போன்ற எளிய தகவல்களையே பெற முடியும். (https://herddogg.com/)

மேற்கண்ட மூன்று உதாரணங்களையும் பார்த்தால் ஒன்று புலப்படும். அது, பொருள்களின் இணையம் என்பது பல வகையானது என்றாலும், அதன் பயனும் திறனும், அது இணைந்துள்ள தொடர்பின் வேகத்தைச் சார்ந்தது. இந்தச் சிக்கலைத் தீர்க்க ஆபத்பாந்தவனாக வரும் 5ஜி தொழில்நுட்பத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 24 -  5G
UNLOCK அறிவியல் 2.O - 24 -  5G

முதலில் சில அடிப்ப டைகளை அலசிவிடலாம்.

கற்கால மனிதன் தகவல் தொடர்பிற்குப் பயன்படுத்தியது நெருப்பு, அதிலிருந்து வரும் வெளிச்சம் மற்றும் அது எரிந்து முடிந்த பின்னர் வரும் புகை. ‘ஆபத்தில் இருக்கிறேன் - உதவி வேண்டும்’ என்பதற்காக நெருப்பு/புகை இரண்டையும் கடல் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் இன்றும் பயன்படுத்துகிறார்கள். கற்காலம் கழிந்து நவீனகாலத்தில் உருவாக்கப்பட்ட தகவல் தொடர்பு ஊடகங்களாக, அச்சடித்த காகிதம், ரேடியோ, தொலைக்காட்சி எனப் பல வந்து அலைபேசியில் வந்து நிற்கிறோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டாலும், இணையத்தில் இணைந்த பின்னர்தான் நம் கைகளையும் பைகளையும் விட்டுப் பிரிக்க முடியாத இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறது அலைபேசி.

அலைபேசியின் அடிமைகளாக இருக்கும் நமக்கு, அது நடந்து வந்த பாதையைப் பார்த்தால், அதில் ‘ஜி’ என்பது பல மைல் கற்களில் எழுதப்பட்டிருப்பது தெரியும். 2ஜி, 3ஜி, 4ஜி என்றெல்லாம் பல வகை பஜ்ஜிகளாக அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பங்களில் இருக்கும் ‘ஜி’ என்பது என்ன? தலைமுறை என்பதன் ஆங்கில வார்த்தையான ஜெனரேஷனின் (Generation) முதல் எழுத்துதான் ‘ஜி’. 2ஜி என்ற பெயர் இந்தியாவில் பிரபலமாகத் தொழில்நுட்ப அறிவு மட்டும் காரணமல்ல என்ற புரிதலைத் தாண்டி, 2ஜி-க்கு முன்னால் 1ஜி என்ற ஒன்று இருந்ததா என்ற கேள்வி எழுந்தால், அதற்கு பதில்: ஆம், இருந்தது. ஆனால், அது நுகர்வோர் பயன்பாட்டிற்கு வரவில்லை. காரணம், 1ஜி என்பது கிட்டத்தட்ட இரு வழி எஃப்.எம் ரேடியோ போன்ற தொழில்நுட்பம். சத்தத்தை மட்டுமே அனுப்ப முடிந்தது. 2ஜியும், அதைத் தொடர்ந்து வந்த மற்ற ஜி-க்களும், டிஜிட்டல் வழிமுறையைப் பயன்படுத்தின. இதன்மூலம் சத்தம் (Voice) மட்டுமல்லாமல், தகவலையும் (Data) எளிதாக அனுப்ப முடிகிறது.

கண்களால் பார்க்க முடிகிற ஒளியைத் தாண்டி அமைந்திருக்கும் மின்காந்த நிறமாலை என்பது மாறுபட்ட அதிர்வெண்களால் (Frequency) அமைந்திருக்கிறது. நம் கண்களால் பார்க்க முடியாத அதிர்வெண் அளவீட்டில் அமைந்திருக்கும் ரேடியோ அதிர்வெண் பகுதியில்தான் மேற்கண்ட ஜி தொழில் நுட்பங்கள் அனைத்தும் கட்டமைக் கப்பட்டுள்ளன. அதிர்வெண் அதிகமாக இருக்கும் அலைக்கற்றைப் பகுதியில் அதிக தகவல்களைத் திணித்து அனுப்ப முடியும். ஆனால், அதிர்வெண்கள் குறிப்பிட்ட அளவே இருப்பதால், அவற்றைப் பயன்படுத்த கடும் போட்டி. நிறுவனங்கள் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் அலைக்கற்றை அதிர்வெண்களைப் பயன்படுத்தும் லைசென்ஸ் உரிமைகளைப் பெரும்பணம் கொடுத்து ஏலத்தில் எடுக்கின்றன. 3ஜி தொழில்நுட்பம், அதற்குப் பின் வந்த 4ஜி தொழில்நுட்பம் இரண்டுமே அதிக அளவில் அதிர்வெண்களைப் பயன்படுத்தி அதன் மூலம் அதிக அளவிலான தகவல்களை அனுப்பும் தொழில்நுட்ப வடிவங்களைக் கொண்டுவந்தன. 2ஜி நொடிக்கு 65,000 பிட்டுகளை அனுப்பியது. பிட் என்பது ஒன்று அல்லது பூஜ்யம். 3ஜி நொடிக்கு 81 லட்சத்திற்கும் மேற்பட்ட பிட்டுகளை அனுப்பியது. 4ஜியால் 5 கோடியே 12 லட்சம் பிட்டுகளை அனுப்ப முடிந்தது. இப்போதைக்கு பெரும்பாலும் பயன்பாட்டில் இருப்பது 4ஜி என்றாலும், இதையடுத்த 5ஜி தொழில்நுட்பம் செயலுக்கு வந்த படி இருக்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 24 -  5G

5ஜி முற்றிலும் புரட்சிகரமான தொழில்நுட்பம். அதிக அளவிலான அதிர்வெண்ணில் இயங்கும் இந்தத் தொழில்நுட்பம் நொடிக்கு ஆயிரம் கோடி பிட்டுகளைக் கடத்தும் என்ற கற்பனைக்கு நிகரான வேகம் ஒரு புறமிருக்க, இந்த வேகத்தின் பயன்பாடு நம்மை எப்படியெல்லாம் மாற்றியமைக்கப் போகிறது என்பதைப் பற்றிய முழுப் புரிதல் இல்லை.

5ஜி அதிக அதிர்வெண்ணைப் பயன்படுத்துவதால், ஓங்கி உயர்ந்த அலைபேசி கோபுரங்கள் இதற்குத் தேவையில்லை. மாறாக, இதன் ஆன்டனாக்கள் நெருக்கமாக நிறுவப்பட வேண்டும். பயனீட்டாளர்கள் நிலையாக ஒரு இடத்தில் இருந்தாலும், நகர்ந்து கொண்டிருந்தாலும், தகவல் தடையில்லாமல் கிடைக்க இப்படி அமைக்கப்பட்ட ஆன்டனாக்கள் தேவை. இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், 5ஜி-யை நாடெங்கிலும் கொண்டு செல்வது அதிக செலவினம் எடுக்கும் ஒரு பணி. அமெரிக்காவில் இருக்கும் சில நகரங்களில் இப்போது 5ஜி பரிசோதனை முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த வருட இறுதியில், அல்லது அடுத்த வருடத் தொடக்கத்தில் இந்தப் பணி ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இன்னும் சில வருடங்களில் மின் கம்பங்கள், தெரு விளக்குகள், வீட்டுக்கூரைகள் என நம்மைச் சுற்றி வியாபிக்கப்போகின்றன 5ஜி ஆன்டெனாக்கள்.

புதிதாக வெளிவந்திருக்கும் சில அலைபேசி மாடல்களில் 5ஜி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் ரேடியோ இணைக்கப்பட்டுவிட்டது. உதாரணத்திற்கு, சாம்சங்கின் S21 Ultra அல்லது iPhone 12 Pro அலைபேசிகளில் இது இருக்கிறது. ஆனால், 5ஜி முழுதும் நிறுவப்படும் வரை இது பயனற்றதாக இருக்கும்.

‘5ஜி-யில் இருந்து வரும் ஆற்றல் நம் உடல்நலத்திற்குக் கேடானது; புற்றுநோய் விளைவிப்பது’ என்ற ஒரு கூக்குரல் கேட்கிறது. அறிவியல் படி அது சரியானதுதானா என்று கேட்டால், அழுத்தமான குரலில் இல்லை என்பேன். ‘வேற்று கிரகத்தார் நம் பூமியில் இருக்கிறார்கள்; நம்மைப் பார்த்தால் நம் மூளையில் இருப்பதைப் படித்துவிடுவார்கள் என்பதால் தலையில் அலுமினியப் பானையை வைத்துக்கொள்ளப்போகிறேன்’ என்பதற்கு நிகரான அசட்டுத்தனம் இது. காரணத்தை விளக்குகிறேன் - அதிக அதிர்வெண்களைக் கொண்ட காமா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவையே. மின் திறன் கொண்ட கதிர்வீச்சு (Ionizing Radiation) என்று இந்தக் கதிர்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றை விட அதிர்வெண் வீரியம் குறைவு கொண்டது நாம் கண்ணால் பார்க்கமுடிகிற ஒளி. அதற்கும் குறைவான வீரியம் கொண்டதே ஜி தொழில்நுட்பங்கள். ஆக, 5ஜி-யின் மீது யாருக்காவது பயம் இருந்தால், டியூப் லைட்டில் இருந்து வரும் ஒளியின் மீது பல மடங்கு பயம் இருந்தாக வேண்டும்.

கட்டுரையின் தொடக்கத்தில் பொருள்களின் இணையம் பற்றிய மூன்று உதாரணங்களைப் பார்த்தோமல்லவா? 5ஜி முழுக்க நிறுவப்பட்ட பின்னர் அதுபோன்ற சாதனங்கள் அனைத்தையும் இணைத்து மின்னல் வேகத்தில் இயங்கும் சமூகமாக நாம் மாறப்போகிறோம்.

கடைசியாக, வேறென்ன பயனீடுகள் இருக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

வாகனங்கள் அனைத்திலும் 5ஜி ரேடியோ பொருத்தப்பட்டு, அவற்றிற்குள் தகவல் பரிமாற்றம் நிகழ்நேரத்தில் நடந்து தானியங்கி கார்கள் என்பது சாத்தியமாகும்; சாலை விபத்துகளே இல்லாமல்போகும்.

UNLOCK அறிவியல் 2.O - 24 -  5G

பயணம் முடித்துத் திரும்பி வரும் உங்கள் விமானம் தரையிறங்கும் நேரத்தைக் கணக்கிட்டுப் புறப்படுகிறது தானியங்கி கார். பாதி வழியில் உங்கள் விமானம் தாமதமாகும் எனத் தெரிந்ததும், வீட்டில் இருக்கும் பல உபகரணங்களுக்குச் செய்தி அனுப்புகிறது. உங்களுக்குப் பிடித்தமான சோப் குறைவாக இருக்கிறது எனக் குளியலறையும், பால் குறைவாக இருக்கிறதென ஃபிரிட்ஜும், கார் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மளிகைக் கடையில் ஆர்டர் செய்ய, அவற்றைப் பெற்றுக்கொண்டு, நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்போது, உங்களை பிக்-அப் செய்யத் தயாராக நிற்கும்.

அறுவை சிகிச்சை மருத்துவர்கள் 5ஜி-யால் இணைக்கப்பட்ட சாதனங்களைத் தங்கள் கையில் பொருத்திக்கொண்டு, திரை ஒன்றைப் பார்த்தபடி பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வார்கள்.

எந்த மின்னணு வடிவத் தகவலையும் சேமிக்கும் அவசியம் இருக்காது. கோப்புகள், இசை, பாடல்கள், திரைப்படம் என எல்லாமும் தேவைப்படும்போது நேரடியாகத் தரவிறக்கம் செய்யப்படும். இதனால், அலைபேசிகளில் சேமிப்பு (Storage) என்பதே இல்லாமல்போய்விடும்.

வேறு என்னவெல்லாம் நடக்கும் என்பதை நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்களுடைய யூகங்களையும் பின்னூட்டங்களையும் +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்.

- Logging in...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism