Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 32

UNLOCK அறிவியல் 2.O
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O

- அண்டன் பிரகாஷ்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சில நாள்களில் பலருக்கு முகரும் மற்றும் சுவைக்கும் திறன் குறைவது என்பது முக்கியமான அறிகுறி (symptom). காரணம், காய்ச்சல், இருமல் போன்றவை எல்லா வைரஸ் அல்லது பாக்டீரியாக்களால் வரும் பிணிகளின்போதும் தென்படும் அறிகுறிகள். முகர்வு மற்றும் சுவையை பாதிக்கும் நிலை கொரோனா வைரஸால் மட்டுமே வருவது என்பதால், இதை முக்கியமான அறிகுறியாக எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்கள். நமக்கிருக்கும் முகர்வுத் திறன் நம் மூக்கில் இருக்கும் ஆல்பேக்டரி செல்களில் இருந்து கிடைக்கிறது. மேல் மூக்குப் பகுதியில் இருக்கும் ஐந்து கோடி ஆல்பேக்டரி செல்கள் வாசனையை முகர்ந்து, அதை வகைப்படுத்தி மூளைக்கு இதைப்பற்றிய டேட்டாவைக் கொண்டு செல்லும் நியூரான்களுடன் தொடர்புகொள்ளும் பணியைச் செய்கின்றன. இவற்றின் உதவியால்தான், மல்லிகை வாசம் மகிழ்ச்சியையும், சாக்கடை வாடை முகச்சுளிப்பையும் மூளைக்குள் உருவாக்குகின்றன.

சுவையின் அறிவியல் சற்று மாறுபட்டது. நம் நாவில் இரண்டாயிரத்தில் இருந்து எட்டாயிரம் வரையான சுவை அரும்புகள் (taste buds) இருக்கின்றன. ஒவ்வொரு அரும்பிலும் கிட்டத்தட்ட நூறு சுவை ஏற்பி செல்கள் (taste receptor cells). உணவை வாயில் மெல்லும்போது, அதன் சுவையை உள்வாங்கிக் கொண்டு, நியூரான்கள் மூலம் மூளைக்கு சுவை சார்ந்த தகவல்களைக் கடத்துகின்றன இந்த அரும்புகள். அறுவகையான சுவைகளைத் தரம் பிரித்து, அதில் ஒவ்வொரு பிரிவிற்கும் எவ்வளவு அளவு ஏற்புடையது என்ற விவரத்தை மூளை தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கும். வாழை இலையில் பரிமாறப்பட்ட அவியலும் பொரியலும் கலந்து சோற்றுக் கவளங்களை ரசித்து கட்டுக் கட்டிக்கொண்டிருக்கும்போது, ஓரத்தில் இருக்கும் உப்பைத் தவறாக அதிகம் கலந்துவிட்டால், அதை சகிக்க முடியாமல் தவித்து தண்ணீர் குடிக்க உந்துவிப்பது மேற்படி அரும்பு/செல்/நியூரான் அமைப்பே.

UNLOCK அறிவியல் 2.O - 32

பை தி வே, முகர்விற்கான ஆல்பேக்டரி செல்கள் மற்றும் சுவை ஏற்பி செல்கள் தாங்கள் சேகரிக்கும் தகவல்களைக் கொண்டு செல்வது மூளையின் ஒரே இடத்திற்கே என்பதால், இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி இயங்குபவை. இதனால்தான், ஆவியில் அவியும் இட்லியின் மணம் மூக்கைத் தொட்டதும் நாக்கில் எச்சில் சுரந்து, சுவை அரும்புகள் உணவை எதிர்கொள்ளத் தயாராகிவிடுகின்றன.

நிற்க!

விவகாரமான வில்லன் இந்தக் கொரோனா வைரஸ். நமக்குள் நுழைந்து நம் முகர்வையும், சுவையையும் பாதிப்பதன் மூலமாக உணவில் விருப்பம் இழக்க வைக்கிறது. உணவு அருந்தாமல் போவதன் மூலம், உடலின் எதிர்ப்பு சக்தி இயந்திரம் வலுவாக இயங்க விடாமல் செய்ய முடியும். இதனால்தான், சத்தான உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி எப்போதும் இல்லாததைவிட இந்தப் பெருந்தொற்று காலத்தில் அதிகம் சமூக ஊடகங்களில் கீச்சுக்களும் பேச்சுக்களும் கேட்கின்றன. பழங்களும் கீரைகளும் கடலைகளுமாக உண்பது நல்லது எனப் பலரும் டயட்டீஷியன்களாக உருமாறி அறிவுரை மழை பொழிகிறார்கள். உணவுச் சத்து அறிவியல் (Food & Nutrition Science) செய்திகளை இந்த வாரம் ஆழமாகப் பார்க்கலாம். அதற்கு முன்னால், வைரஸ் சம்பந்தப்பட்ட மற்றொரு செய்தி.

UNLOCK அறிவியல் 2.O - 32

கொரோனா வைரஸ் உடலில் இருக்கிறதா என்பதை அறுதியிட்டுத் தெரிந்துகொள்ளும் பரிசோதனைகளில் தலையாயது RT-PCR. வைரஸின் ஆர்என்ஏ-வில் இருந்து டிஎன்ஏ-வைப் பிரித்து எடுத்து, அது பெருகுகிறதா என்பதை சுழற்சி முறையில் பார்ப்பதுதான் இந்த சோதனை. முப்பத்தைந்து சுழற்சிகளில் டிஎன்ஏ இருப்பது தெரியவில்லை என்றால், நெகட்டிவ் என முடித்து சொல்லிவிடுவார்கள். அதற்கு முன்னரே வைரஸ் தென்பட்டால், பாசிட்டிவ். இப்படி முப்பத்தைந்து முறை மீண்டும் மீண்டும் பெருக்கத்தைப் பார்க்க வேண்டுமென்பதால், இதில் இருக்கும் பெருங் குறைபாடு - நேர விரயம். குறைந்தது ஆறு மணி நேரம் எடுக்கிறது RT-PCR சோதனை. இந்தக் காரணத்தால், பயணங்களுக்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்னால் சோதனை எடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், சோதனைக்கு ஆளாகி முடிவுக்குக் காத்திருக்கும் தருணத்தில் வைரஸ் தொற்றிக் கொண்டால் கண்டறிவது எப்படி? வணிக, விளையாட்டு, பொழுதுபோக்கு வளா கங்களுக்கு வருபவர்களைப் பாதுகாப்பாக அனுமதிப்பது எப்படி? ஆக, குறுகிய காலத்தில் நம்பகமான முடிவுகளைக் கொடுக்கும் சோதனைகளைக் கண்டறிவது பற்றிய ஆராய்ச்சி கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. சிங்கப்பூரில் இருக்கும் Breathonix என்ற நிறுவனம், ‘மூச்சுக் காற்றை மட்டும் எடுத்து அதில் இருந்து வெளியாகும் கரிம வஸ்தாதுகளை (Volatile Organic Compounds) அளந்து பார்ப்பதன் மூலம் வைரஸ் உடலில் இருக்கிறதா என்பதை ஒரு நிமிடத்திற்குள் கண்டறிந்துவிடலாம்’ எனச் சொல்லியிருக்கிறது. பலரும் ஒரே கருவிக்குள் வாயை வைத்து ஊதுவது எவ்வளவு பாதுகாப்பானது போன்ற பல கேள்விகள் இந்தத் தொழில்நுட்பத்தின் மீது வைக்கப்படுகின்றன.

மனிதனின் சிறந்த நண்பன் மூலமாக மற்றொரு பரிசோதனை முறை மிகவும் துல்லியமாக, வேகமாக மற்றும் பாதுகாப்பாகச் செய்யமுடியும் என நிருபிக்கப்பட்டு வருகிறது. வைரஸ் உடலில் நுழைந்து நம் உடலின் செல்களை, குறிப்பாக நுரையீரலின் செல்களைக் கிழித்து தன்னைப் பெருக்கிக்கொண்டு போக, பாதிப்படைந்த செல்கள் உடலை விட்டு பல்வேறு வகையில் வெளியேறும். வியர்வை அந்த வடிகால்களில் முக்கியமான ஒன்று. பஞ்சு ஒன்றை வைத்து சருமத்தைத் துடைத்து, பயிற்சி கொடுக்கப்பட்ட நாயிடம் முகரக் கொடுத்தால், வைரஸால் உடல் பாதிப்பு அடைந் திருக்கிறதா என்பதை மோப்ப மிட்டுச் சொல்லி - கரெக்‌ஷன் - குரைத்துக் காட்டி விடும். போதைப் பொருள்கள், வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பதையெல்லாம் கண்டறியும் மோப்ப நாய்களுக்கு வைரஸால் பாதிக்கப்பட்ட உடலின் வாசனை அறிவது கடினமல்ல. காரணம், நாய்களுக்கு நம்மைவிட ஆறு மடங்கு அதிகமான ஆல்பேக்டரி செல்கள் உண்டு. விஜய் படம் பார்ப்பதற்கு தியேட்டர் செல்லும் போது, ஜிம்மி வந்து முகர்ந்து பார்த்துத் தலையசைத்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலை வரலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 32

வெயிட் அண்டன், முகக் கவசமும், தனிமனித இடை வெளியும்தானே வைரஸ் பரவாமல் இருக்க அவசியம். வியர்வையில் இருந்து வைரஸ் பரவும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி வரலாம். பதில் - இல்லை. மூச்சுக் காற்று மற்றும் இருமல் போன்றவற்றில் இருக்கும் நீர்த்துளிகளில் பொதிந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது என்பதையும் வியர்வையில் கலந்து வெளியேறும் இறந்த செல்களில் அது இருப்பதில்லை என்பதையும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டார்கள்.

சரி, உணவுச்சத்து அறிவியலுக்குள் நுழையலாம்.

மணிக்கு ஆயிரம் மைல்கள் வேகத்தில் சுழலும் பூமி ஒவ்வொரு 24 மணி நேரமும் தன்னை முழுச் சுற்றுக்கு உட்படுத்திக்கொள்கிறது. இந்தக் கால இடைவெளியில் புவிப்பந்தில் இருக்கும் கிட்டத்தட்ட 800 கோடி மனிதர்களும் சராசரி ஆளுக்கு இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை எடையுள்ள உணவு வகைகளைத் தின்று தீர்க்கிறோம். இந்த உணவில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துகளின் உதவியுடன் நம் பணிகளைச் செய்கிறோம். நான் இந்த வரியை எழுதுகிறேன்; நீங்கள் அதைப் படிக்கிறீர்கள்.

எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.எஸ்.சுவாமிநாதன்

முதலில், சமீபத்திய சம்பவங்கள் இரண்டைப் பார்க்கலாம்:

சென்ற வாரத்தில் சீனாவின் புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளரான யுவான் லாங்பிங் இறந்த தகவல் வெளியானது. பெருந்திரளராக மக்கள் கலந்துகொண்டதாக வந்த செய்தி வியப்பளிக்கவில்லை. காரணம், உணவுப் பாதுகாப்பு என்பதைத் தன் வாழ்க்கையின் கொள்கையாக எடுத்துக்கொண்ட யுவான், சீன மக்களுக்கு ஒரு ஹீரோ. அவரது ஆராய்ச்சி ஏரியா - அரிசி. அறுபதுகளில் சீனத்தில் இருந்த பசி, பஞ்சத்திற்கு ஒட்டு ரக அரிசியே தீர்வு எனத் தீர்க்கமாகப் பேசியவர், களத்திலும் இறங்கினார். அவரது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்ட ஒட்டு ரக அரிசி மூலமாக மட்டும் ஏழு கோடிப் பேர் உணவு பெற்றுக் காப்பாற்றப் பட்டார்கள் என்கிறது புள்ளிவிவரம் ஒன்று. அவரது வாழ்நாள் சாதனையைப் பாராட்டி ‘ஒட்டு ரக அரிசியின் தந்தை’ என்ற அடைமொழியுடன் உலக உணவுப் பரிசு (World Food Prize) 2004-ம் ஆண்டில் வழங்கப்பட்டது. உணவுச் சத்து அறிவியலாளர்களுக்குக் கொடுக்கப்படும் புகழ் பெற்ற இந்த விருதை முதன்முதலில் பெற்றுக்கொண்டவர் யார் தெரியுமா? கட்டுரையை முடிக்கும் முன்னால் சொல்லிவிடுகிறேன். தொடர்ந்து படியுங்கள்.

உலகின் பல அரசாங்கங்களால் நிர்வகிக்கப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) செல்லும் விண்வெளி வீரர்கள் ஆறு மாதம் அங்கே தங்கியிருந்து ஆராய்ச்சிகள் செய்வது இப்போதைய நடைமுறை. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தனது விண்கலங்களில் தங்களது வீரர்களையும், சகோதர நாடுகளின் வீரர்களையும் அனுப்புவதுண்டு. டெஸ்லா கார்களைத் தயாரித்து உலகப் பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற பெயரில் விண்வெளி டாக்ஸி சேவையை ஆரம்பித்து, ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு போய் விடுவதும், அழைத்து வருவதும் என கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறார். அன்னாரின் சேவையில் சென்ற மாத இறுதியில் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் என்னென்ன துறைகளில் ஆராய்ச்சி செய்யப்போகிறார்கள் என்பதையும் தாண்டி ஊடங்கங்களில் கவரான செய்தி - ‘விண்வெளி வீரர்கள் என்ன சாப்பிடப்போகிறார்கள்?’ அந்த நால்வரில் ஒருவர், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த தாமஸ் பெஸ்கெட். உணவு ரசனைக்காரர்களான பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் ஊர்க்காரரை விண்வெளிக்கு அனுப்பும்போது என்ன சாப்பாடு பார்சல் கட்டி அனுப்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவ்வளவு ஆர்வம். டூத் பேஸ்ட் ட்யூப் வடிவில் இருப்பவற்றில் திரவ சாக்லேட், ஆப்பிள் சாஸ் போன்றவற்றை விண்வெளிக்குக் கொண்டு போய் சாப்பிட்ட பரிதாப நிலையெல்லாம் இப்போது இல்லை. முழுக்க உலர வைக்கப்பட்ட நிலையில் இருக்கும் உணவுப் பொருள்களை 140 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சமைத்து, காற்றுப்புகாத வண்ணம் அடைத்துக்கொண்டு சென்று, தண்ணீரை மட்டும் சேர்த்தால் அது ஓரளவிற்கு உயர்தர உணவகத்தில் பரிமாறும் உணவுபோல மாறிவிடுகிறது. பிரெஞ்ச் உணவில் ஒயின் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். உடலின் நீர்ச்சத்தை ஆல்கஹால் உறிஞ்சிவிடும் என்பதால் விண்வெளியில் அதற்கு அனுமதியில்லை. ஆனால், கிளம்புவதற்கு முன்னால் தாமஸ் ‘ஆல்கஹால் அகற்றப்பட்ட ஒயினை எடுத்துக்கொள்ளப் போகிறேன்’ என்றார். ஆறு மாதத்திற்குப் பின்னர் ஸ்பேஸ் எக்ஸ் வண்டியில் பூமி திரும்பியதும் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்வியில் இது நிச்சயம் இடம் பெறும்.

உணவுச்சத்தைப் பொறுத்தவரை மாவுச்சத்து விலக்கிய, விலங்குப் புரதங்கள் கொண்ட கீட்டோ (keto), விலங்குகளில் இருந்து வரும் எதையும் சேர்த்துக்கொள்ளாத வீகன் (vegan), எதை வேண்டுமானாலும் சமச்சீராக (Balanced) உண்பது எனப் பல கருத்துகள் எதிரும் புதிருமாக வைக்கப்படுகின்றன. இதில் எது ஒருவருக்குப் பொருத்தமானது? அது அவரது உடல்நலத்தையும், உடற்பயிற்சி அளவையும், அவரது மருத்துவரின் ஆலோசனையும் சார்ந்தது என்பது என் எண்ணம்.

மேற்கண்ட எதிர்/புதிர் கருத்துகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் ஒன்றை மட்டும் மையக்கருத்தாக ஒப்புக் கொள்கிறார்கள். ‘எந்த உணவை உண்டாலும் அதன் முழு வடிவத்தில் (Wholefoods) உண்பது நல்லது’ என்பதுதான். முழு வடிவத்தில் இருக்கும் உணவை ப்ராசசிங் செய்து புதிதாக உருவாக்கப்படும் உணவு வகைகளில், முழு வடிவத்தில் இருக்கும் உணவைவிட ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது அனைவரும் அறிந்ததே.

பெருகிவரும் மக்கள்தொகையின் உணவுத் தேவையைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய உணவு வகைகளும், அவற்றைப் பதப்படுத்தும் வழிமுறைகளும் நவீனமாகி வருகின்றன. இதற்கிடையே, உணவில் ஒவ்வாமை (allergy) அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, நிலக்கடலை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் போன் றவற்றிற்கு ஒவ்வாமை கொண்ட வர்களின் எண்ணிக்கை உலக மக்கள்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் சற்று மேல் ஆகிவிட்டது. சிலருக்கு இறால், நண்டு போன்ற வகை விலங்குகளிலிருந்து செய்யப்பட்ட உணவுகளில் ஒவ்வாமை உண்டு. இவர்களின் உணவுச்சத்துத் தேவைகளை எப்படி எதிர் கொள்வது? ஒவ்வாமைப் பொருள்களை விலக்கி, தேவையான சத்துப் பொருள்களை மட்டும் உள்ளடக்கி, அதன் கலோரி அளவு மிகாமல் துல்லியமாக உணவை பிரின்ட் செய்து தரும் 3டி உணவு பிரின்டர்கள் விரைவில் நம் சமையலறைகளில் இடம் பிடிக்கலாம்.

யுவான் லாங்பிங்
யுவான் லாங்பிங்

இறுதியாக, உலக உணவுப் பரிசு அமைப்பின் முதல் பரிசை வாங்கியவர் - மாங்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், சுருக்கமாக எம்.எஸ்.சுவாமிநாதன். உலகப் புகழ்பெற்ற மரபியல் ஆராய்ச்சியாளர் (geneticist). இங்கிலாந்து, அமெரிக்கா என இரண்டு நாடுகளிலும் ஆராய்ச்சிப் பட்டங்கள் வாங்கி இந்தியா திரும்பியவர், தொடர்ந்து எடுத்த முயற்சிகள் காரணமாகத்தான் உணவுப்பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருந்த இந்தியாவில் ‘பசுமைப் புரட்சி’ ஏற்பட்டது என சிலாகிக்கிறார்கள் உணவுச்சத்து அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த வாரக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை எப்போதும் போல் +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பி விடுகிறீர்களா?

- Logging in