Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 40

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
UNLOCK அறிவியல்

- அண்டன் பிரகாஷ்

UNLOCK அறிவியல் 2.O - 40

- அண்டன் பிரகாஷ்

Published:Updated:
UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
UNLOCK அறிவியல்

சென்ற வாரக் கட்டுரையில் நாம் விரிவாக அன்லாக் செய்திருந்த பெகாசஸ் உளவு மென்பொருள் தாக்குதலில் ஒரு முக்கிய விவரம் மிஸ்ஸாகிவிட்டது. NSO நிறுவனத்தின் பெகாசஸ் தொழில்நுட்பம் எப்படி வன்நுழைவு செய்கிறது? இதைப் பல மீடியா நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து துப்பறிந்த த அம்னெஸ்டி நிறுவனம், உங்கள் அலைபேசி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் கருவித்தொகுப்பு (Toolkit) ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பைத்தான் என்ற நிரலிமொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் பற்றிய விவரம், https://mvt.readthedocs.io/ என்ற தளத்தில் இருக்கிறது. நிரல்மொழிப் பயிற்சி இல்லாமலேயே இதைப் பயன்படுத்த முடியும். உங்களது அலைபேசியில் ஒருவேளை பெகாசஸ் வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் வந்தால், இதைப் பயன்படுத்தி உறுதி செய்துவிடுங்கள்.

20 வருடங்களுக்குப் பின்னர், 99 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு சமீபத்திய சில வாரங்களில் கடைசி ஆறு ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் மாபெரும் பணியை முடித்திருக்கிறார்கள். அந்தப் பணி - மனித மரபணுத் திட்டம் (Human Genome Project). வரும் வாரங்களில் Nature போன்ற சஞ்சிகைகளில் தீர்க்கமாக அலசப்படப்போகும் இந்த முடிவுக் கட்டுரைகள், நோய்களை டிஎன்ஏ மூலம் புரிந்து கொள்வது எப்படி என்பதிலிருந்து, செல்கள் எப்படி குரோமோசோம்களில் டிஎன்ஏ-வை அழகாகப் பொதிந்து வைத்திருக்கின்றன என்ற சூட்சுமம் வரை விளக்குகின்றன. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் மனிதர்களுக்குள் பல்வேறு மரபியல் மாற்றங்களுடன் (Genetic variations) இருப்பதை விளக்கும் ஒரு கட்டுரை, இந்த மாற்றங்கள் எப்படி குறிப்பாகப் புற்றுநோய் போன்றவற்றை உண்டாக்குகிறது என்பதை உணர்த்தி, அதை குணப்படுத்த மருந்துகளைக் கண்டறியவும் உதவலாம். 23 ஜோடிகளான குரோமோசோம்களில் மரபணுக்கள் பொதிருந்திருப்பது தெரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், அவற்றை வகைப்படுத்துவதும் மரபியல் மாற்றங்களைப் பதிவு செய்வதும் மிக மிகக் கடினமான பணி. Genome என்ற மொத்த மரபணுத் தொகுப்பில் ஒரு சிறிய பகுதி மட்டுமே மரபணுக்களைக் கொண்டது. வைரஸ்களால் காப்பி செய்து கொண்டே செல்லப்பட்ட டிஎன்ஏ எச்சங்கள் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது என்பது ஒரு சிக்கல். மரபணுக்கள் பல தங்களது சொந்தப் பிரதிகளாக Genome-க்குள் அமர்ந்திருப்பது அடுத்த சிக்கல். இந்தச் சிக்கல்களின் காரணமாக, குறிப்பிட்ட சில பகுதிகளை வரிசைப்படுத்த முடியாமல் திணறியது ஆராய்ச்சி முயற்சிகள். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது இருந்த கணினித் தொழில்நுட்பம், தகவல்களைத் தொகுக்கவும், அலசவும் பயன்படும் வகையில் கிடுகிடுவென வளர்ந்தது முக்கிய காரணம். அவ்வப்போது மாடல் மனித மரபணுத் தொகுப்பு (Reference genome) என்பதை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டதுண்டு. இதற்கு முன்னதாக 2013-ம் வருடத்தில் மாடல் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்த மாடலில், கிட்டத்தட்ட எட்டு சதவிகிதம் நிரப்பப்படாமல் இருந்தது. சென்ற வாரத்தில் இது முடிவடைந்தது. மனித மரபணுத் தொகுப்பு மூன்று பில்லியன்களுக்கு மேல் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு அறிவிக்கிறது. சராசரி மனிதனின் மரபணுத் தொகுப்பை அகராதி (Dictionary) எனச் சொல்லலாம். படிக்கும் வாக்கியத்தில் புரியாததை அகராதியில் பார்த்துக் கொள்வதுபோல், இதைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட மனித உடலுக்கு குறிப்பிட்ட நோய் ஏன் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் சாத்தியத்தை நெருங்கிவிட்டோம்.

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த மனித மரபணுத் திட்ட ஆராய்ச்சிக்குழுவினர்
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த மனித மரபணுத் திட்ட ஆராய்ச்சிக்குழுவினர்

‘நான் அறிவியலை நம்புகிறேன். டொனால்டு ட்ரம்ப் நம்புவதில்லை.’ - தேர்தலுக்கு ஆறு நாள்கள் முன்னால் இப்படி ட்வீட் செய்திருந்தார் அப்போதைய வேட்பாளரும் இப்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். சலவைக்குப் பயன்படும் ப்ளீச் (Bleach) கிருமிகளையும் கொன்றுவிடுகிறது என்பதால், அதைப் பயன்படுத்தி கொரோனாவை அழிக்கலாமா என மீடியா சந்திப்பில் சொல்லி, அதில் கலந்துகொண்ட மருத்துவர்களை அலற வைத்த சம்பவம்போல், ட்ரம்ப் சகாப்தத்தில் பலவற்றைச் சொல்லலாம். அவற்றையெல்லாம் குறிப்பாகச் சுட்டிக்காட்டாமல், ஆனால் ரத்தினச் சுருக்கமாக விமர்சிக்கும் ட்வீட் அது.

‘எதையும் ஏன், எதற்கு, எப்படி, எப்போது என்று கேள்வி கேட்டபடியே இருப்பதுதான் அறிவியல் பார்வை’ எனப் பொதுவாக வரையறுக்கலாம். உதாரணத்திற்கு, ஃபைஸர் அல்லது மடோர்னா போன்ற mRNA வகைத் தொழில்நுட்பத்தைக் கொண்ட கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களுக்கு உடல் காந்தமாகி, ஸ்பூன் ஒட்டிக்கொள்கிறது என சமூக வலைதளங்களில் படங்களாகவும், வீடியோக்களாகவும் பலரும் பகிர்ந்துகொண்டதைப் பார்த்திருக்கலாம். எனக்கும் அப்படி சில வந்தன.

முதலில், காந்தத் தன்மை என்றால் என்ன? உலகின் ஒவ்வொரு பொருளும் அணு என்ற அலகினால் ஆனது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் மின்சாரத்தை உட்கொண்ட எலெக்ட்ரான்கள், அணுவின் மையமாக இருக்கும் நியூக்ளியஸ் என்ற கருவைச் சுற்றி வந்தபடியே இருக்கின்றன. இந்தச் சுழற்சியின் காரணமாக, ஒவ்வொரு அணுவில் இருக்கும் ஒவ்வொரு எலெக்ட்ரானும் ஒரு துளியூண்டு சைஸ் காந்தமே. ஆனால், பெரும்பாலான பொருள்களில் சம அளவிலான எலெக்ட்ரான்கள் எதிரும் புதிருமாகச் சுற்றுவதால், அதன் மொத்தக் காந்த விளைவு பூஜ்யமாகிவிடுகிறது. ஆனால், இரும்பு, கோபால்ட், நிக்கல் போன்றவற்றில் பெரும்பாலான எலெக்ட்ரான்கள் ஒரே திசையில் சுற்றுவதால், அவற்றிற்கு காந்தப் புலத்தால் ஈர்க்கப்படும் தன்மை ஏற்படுகிறது. ஆனால், அவை நிரந்தர காந்தங்களாக மாறுவதற்கு, வலுவாக இருக்கும் காந்தப்புலம் நுழைய வேண்டும்.

அப்படியானால், நிரந்தர காந்தங்களை எப்படி உருவாக்குகிறார்கள்? அதற்கான சுருக் பதில் - உலோகப் பொடியாக்கம் (Powder Metallurgy). இதைச் சமையல் குறிப்பு பாணியில் இப்படி விவரிக்கலாம்...

காந்தத்தன்மையுள்ள குறிப்பிட்ட சில உலோகங்களைக் காற்று நீக்கப்பட்ட அடுப்பில் சூடாக்கவும். சூடான உலோகக்கலவையை அப்பளம் போல மெல்லிய தகடுகளாக ஊற்றிக்கொள்ளவும். இவற்றை நொறுக்கிப் பொடியாக்கவும். இந்தப் பொடியின் துகள்கள் ஒவ்வொன்றும் மூன்றிலிருந்து ஏழு மைக்ரான்கள் சுற்றளவு கொண்டவையாக இருக்க வேண்டும். இந்தத் துகள்கள் எரியும் தன்மை கொண்டதால், ஆக்சிஜன் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேற்படி துகள்களைப் புட்டு அவிக்கும் குழாய்போன்ற ஒன்றில் வைத்து அழுத்தவும். இவை அழுத்தப்படும்போது, குழாயின் பக்கவாட்டில், வெளியிலிருந்து காற்று அல்லது நீர் மூலம் பலமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். துகள்களால் உருவான இந்த உலோகப் புட்டுகளை சூடான அடுப்பில் மீண்டும் வைத்து இறக்கவும். நிரந்தர காந்தம் உருவாவதற்கான அடிப்படையான பொருள் தயார். காந்தமாக மாற்றுவதற்கு இதை சார்ஜ் செய்ய வேண்டும்.

எவ்வளவு காந்தத்திறன் வேண்டுமோ அதற்கு தகுந்த வகையில் மின்சாரம் பாயும் சுருள் கம்பிகளுக்கு அருகில் வைக்கப்பட்டதும் நிரந்தர காந்தம் தயாராகிவிடுகிறது.

சரி, தடுப்பூசிக்குத் திரும்ப வரலாம். கொரோனாத் தடுப்பூசியைப் பொறுத்தவரை இரண்டு வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை நாம் சில வாரங்களுக்கு முன்னால் விரிவாக அன்லாக் செய்திருந்தோம். மழுங்கடிக்கப்பட்ட வைரஸை நம் உடலுக்கு பழகிக்கொள்ளும்படி செய்யும் தொழில்நுட்பத்தின் லைசென்ஸில்தான் இந்தியாவில் பிரதானமாக விநியோகிக்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டும் தயாரிக்கப்படுகின்றன. இரண்டாவது வகையான mRNA தொழில்நுட்பம், வைரஸ் உடலுக்குள் புகுந்தால், அதுபோலவே தன்னை வடிவமைத்துப் போரிடும் தன்மை கொண்டது. தொழில்நுட்பம் எப்படி இருந்தாலும், அடிப்படையில் தண்ணீர், சற்று உப்பு, லேசாக சர்க்கரை இவற்றுடன் மழுங்கடிக்கப்பட்ட வைரஸ் அல்லது RNAவைக் கொண்டிருக்கும் கொழுப்பு (Lipid). இதில் நிரந்தர காந்தத்தை நுழைத்து, ஊசி வழியாகச் செலுத்துவது சாத்தியமே இல்லை.

மனித உடலில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரால் ஆனது. தண்ணீருக்கு காந்தத் தன்மை கிடையாது. அதற்கு அடுத்து அதிகமாக இருப்பது கொழுப்பு மற்றும் புரதங்கள் (Proteins). இவை இரண்டிற்குமே காந்த சக்தி கிடையாது.

‘வெயிட் அண்டன், உடலில் இரும்புச் சத்து இருக்கிறதே, அது வேதிவினைக்கு உட்பட்டு காந்தமாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறதுதானே’ என்ற கேள்வி விபரீதமாக இருந்தாலும், அறிவியல் பார்வையில் அதையும் அன்லாக் செய்துவிடுவோம்.

ஆம், ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற சிவப்பு செல்களும், மயோகுளோபின் எனப்படும் தசைகளின் செல்களும் இரும்புச் சத்து நிரம்பியவையே. நுரையீரலால் உடலுக்குள் வரும் ஆக்சிஜனை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல இரும்புச் சத்து அவசியம் என்பதால், கீரை, பருப்பு, மாமிசம் போன்ற உண்ணும் உணவில் இருக்கும் இரும்புச்சத்தினை உடல் ஆர்வமாக எடுத்துக்கொள்ளும். ஆனால், உடலில் இருக்கும் ஹீமோகுளோபின், மயோகுளோபின் இரண்டுமே காந்தவயப்படுத்த முடியாதவை என்பது ஆராய்ச்சிகளின் முடிவு.

UNLOCK அறிவியல் 2.O - 40

பாட்டம்லைன்: தடுப்பூசிக்குப் பின்னர் உடலில் ஸ்பூன் ஒட்டுகிறது என்பதற்கு சாத்தியமில்லை.

‘எதையும் கேள்வி கேள்’ என அறிவியல் சொல்வதால், அதையும் கேள்வி கேட்டாக வேண்டும் என்ற வாதத்தையும் அறிவியல் சார்ந்த விவாதங்களில் பார்க்க முடியும். ஆனால், அதையும் அறிவியல்பூர்வமாக அலசி அன்லாக் செய்ய வேண்டும் என்பது நியதி. உதாரணத்திற்கு, காலநிலை மாற்றம் என்பது மனிதச் செயல்பாட்டால் உருவானது. நமது செயல்களால் உருவாகும் கார்பனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் அதிமுக்கியப் பணி, பெருந்தொற்று வரப்போகும் சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்து, உலக நாடுகளைத் தயார்படுத்துவது. “மனித குலத்திற்கு இருக்கும் பெரும் சவால் கால நிலை மாற்றமே” என 2015-ல் அறிவித்து, அதைப்பற்றிய செயல்பாடுகளில் கவனம் செலுத்தி, பெருந்தொற்று வரப்போவதைக் கண்டறிவதில் அது கோட்டை விட்டுவிட்டது என்பது இதுபோன்ற விமர்சகர்களின் பார்வை.

ஆர்க்கிமிடிஸில் இருந்து ஆரம்பித்த அறிவியல் வழிப் பாதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனத் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. பல தருணங்களில் இந்தப் பாதை எளிதாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு, 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிலியோ ‘சூரியனை பூமி சுற்றுகிறது’ என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்தார். ‘இது தங்களது நம்பிக்கைக்கு மாறானது’ எனச் சொல்லி ஆயுள் தண்டனை அளித்தது கிறிஸ்தவ திருச்சபை. இது போன்ற சில பின்னடைவுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அறிவியல்பூர்வ சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மட்டுமே நம்மை முன்னேற்றிக் கொண்டு செல்கிறது என்பது தெளிவு.

இந்த வாரத்துடன் தொடர் முடிகிறது. வாட்ஸப் மூலமாக உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து அனுப்பிய அனைவருக்கும் என் நன்றிகள். இந்த வாரக்கட்டுரை மற்றும் தொடர் பற்றிய உங்கள் பின்னூட்டங்களை https://unlock.digital/join என்ற உரலியைப் பயன்படுத்திப் பதிவிடுங்கள்.