Published:Updated:

தனிமையை விரட்டுகின்றனவா வீடியோ கால்கள்? புதிய சர்வே சொல்லும் முடிவுகள்!

Loneliness
Loneliness

வீட்டிலேயே முடங்கி இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் வீடியோ கால்கள் மூலம் இணைந்திருப்பது தனிமையை போக்குவதாக உணர்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே பல்வேறு தரப்பினரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் சிறிது இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், தற்போது மீண்டும் ஊரடங்கில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கில் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல துறைகள் வீட்டில் இருந்தபடியேதான் வேலை பார்த்து வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது பெரும்பாலான அலுவலகச் சந்திப்புகள் கூகுள் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மற்றும் ஜூம் ஆகிய செயலிகள் மூலமே நடைபெறுகின்றன. அவற்றைத் தினமும் பயன்படுத்தும் அலுவலக ஊழியர்கள் ஜும் உள்ளிட்ட செயலிகளில் நடைபெறும் வீடியோ மீட்டிங்குகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவதாகத் தெரிவித்திருக்கும் இதே வேளையில், வீடியோ கால்கள் மூலம் தங்கள் தனிமையைப் போக்கிக் கொள்ள முடிகிறது என மற்றொரு ஆய்வின் முடிவில் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

Zoom Call
Zoom Call

ஜூம் மற்றும் குவாஸ்ட்ரிக்ஸ் சர்வேயில் சில புதிய முடிவுகள் தெரிய வந்துள்ளன. ஜென் ஸி (Gen Z) தலைமுறை மட்டுமல்லாது வயது முதிர்ந்தவர்கள் கூட ஆடியோ கால்களை விட வீடியோ கால்கள் தங்கள் தனிமையைப் போக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற 90 சதவிகித மக்கள் இந்த வீடியோ கால்கள் தங்கள் தனிமையை எதிர்கொள்வதை எளிதாக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அவற்றின் மூலம் மற்றவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது எனவும், இதன் மூலம் தங்கள் மனநலன் மேம்படுவதாகவும் 75 சதவிகிதம் பேர் தெரிவித்திருக்கிறார்கள்.

`Work from home'-ஆல் ஏற்படும் மனச் சோர்வு... ஜூம் காலில் என்ன பிரச்னை?!
Work From Home
Work From Home

வேலைக்காக ஜூம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் போது, ஒரு நாளில் பெரும்பகுதியை அவற்றிலேயே செலவழிக்கும் படியான நிலை இருப்பவர்கள்தான் அவை மன அழுத்தம் தரக்கூடியதாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அப்படி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் வீடியோ கால்கள் மூலம் இணைந்திருப்பது தனிமையை போக்குவதாக உணர்கிறார்கள்.

வீட்டிலிருந்தே முழுமையாக வேலை பார்ப்பது என்பது எளிதாக இருந்தாலும், அப்படி இருப்பது எல்லா நேரமும் சுலபமாக இருப்பது இல்லை. இனி வரும் காலங்களில் 'ஹைபிரிட் ஒர்க்ப்ளேஸ்' அதாவது முழுமையாக அலுவலகமும் அல்லாமல், முழுமையாக வீடும் அல்லாமல் இரண்டும் கலந்து வசதிக்கேற்ப வேலை செய்யும் முறையே சிறந்ததாக இருக்கும் எனப் பலர் விரும்புகிறார்கள். கூகுள் போன்ற நிறுவனங்கள் அதனைப் பற்றிய முடிவுகளையும் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு