Published:Updated:

தடைசெய்யப்பட்ட WeTransfer... மாற்றாக 7 ஃபைல் பரிமாற்ற சேவைகள்!

7 மாற்று ஃபைல் பரிமாற்ற சேவைகள்
7 மாற்று ஃபைல் பரிமாற்ற சேவைகள்

WeTransfer தடையால் பெரிய அளவிலான ஃபைல்களைப் பரிமாற்ற வேறு வழிகள் என்ன இருக்கிறது எனத் தேடத் தொடங்கியுள்ளனர் மக்கள். அந்தத் தேடலுக்கான விடைதான் இந்தக் கட்டுரை.

உலகமெங்கிலும் சுலபமாகத் தகவல் பரிமாற்றம் (Data Transfer) செய்ய 'WeTransfer' என்னும் சேவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த சேவையைத் திடீரென இந்தியாவில் தடைசெய்தது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை.

இந்தத் தடை ஏன்... இந்தியத் தொலைத்தொடர்பு துறை கூறும் காரணங்கள் என்ன? போன்ற தகவல்களைக் கீழே இருக்கிற லிங்கை கிளிக் செய்து படிக்கலாம்.

`வீ-ட்ரான்ஸ்ஃபர் இணையதளத்துக்குத் தடை!’ -இந்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி

இதை தொடர்ந்து ஜியோ, வோடஃபோன், ஹாத்வே போன்ற சில முக்கிய இணைய சேவை நிறுவனங்கள் WeTransfer-க்கு தடை விதித்தனர். இந்த தடையால் பெரிய அளவிலான ஃபைல்களை பரிமாற்ற வேறு வழிகள் என்ன இருக்கின்றன எனத் தேடத் தொடங்கியுள்ளனர் மக்கள். அந்தத் தேடலுக்கான விடைதான் இந்தக் கட்டுரை. 'WeTransfer'-க்கான மாற்று ஆப்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

Firefox Send

'WeTransfer' போலவே ஃபைல்களைப் பரிமாற்றிக்கொள்ள ஒரு சிறந்த மாற்று உண்டெனில் அது இந்த 'Firefox send'தான். WeTransfer விரைவாக ஃபைல்களை அனுப்புவதற்கு மட்டுமல்ல, அதன் பாதுகாப்பு அம்சத்திற்கும் பெயர்போனது. அதைப் போலவே பாதுகாப்பிற்கு ஒரு குறையும் வைக்காமல் 'Firefox Send' மூலம் ஃபைல்களை சுலபமாக அனுப்பமுடியும். இதில் அனுப்பப்படும் ஃபைல்கள் வாட்ஸ்அப் போல, end-to-end encryption செய்யப்படும். (128-bit AES-GCM encryption/ 256-bit-AES encryption) இதனால் ஹேக்கர்களால் ஃபைல்களை சேதப்படுத்தவோ, திருடவோ முடியாது.

Firefox Send
Firefox Send

மொத்தம் 2.5 GB அளவிலான ஃபைல்கள் பதிவேற்றி, அதை ஃபாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கவும் முடியும். இதே வசதிக்கு WeTransfer-ல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் 1 GB-க்கு மேலான ஃபைல்களை அனுப்ப Firefox-ல் அக்கவுன்ட் இருக்கவேண்டியது அவசியம்.

Smash

Smash
Smash

Smash-ம் இதே போன்ற இலவச ஃபைல் பரிமாற்ற சேவைதான். இதன் முக்கிய அனுகூலம் இதன் மூலம் எத்தனை GB ஃபைல்களை வேண்டுமானாலும் இலவசமாக அனுப்பமுடியும். ஆனால் 2 GB-க்கு மேலான ஃபைல்களை அனுப்பினால், அது சென்று சேர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சற்றே பொறுமைகாக்க முடியுமென்றால் இது உங்களுக்கான பர்ஃபெக்ட் ஃபைல் ஷேரிங் பார்ட்னர். ஃபாஸ்வேர்டு பாதுகாப்பு போன்ற வசதிகளும் இலவசமாகவே கிடைக்கின்றன. ஃபைல்கள் 256-bit-AES முறையில் encryption செய்யப்படுகின்றன. அனுப்பிய பின் 14 நாள்கள் மட்டுமே இதனால் அந்த ஃபைல்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். அதற்கு மேலே என்றால் பணம் கட்டி பயன்படுத்திக்கொள்ளலாம்.

Send Anywhere

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் 'திறந்துடு சீசேம்' என்ற மந்திரச் சொல்லைச் சொன்னால்தான் குகை திறக்கும். அதே போலத்தான் நீங்கள் ஃபைலைப் பதிவேற்றியவுடன் 6 இலக்க எண் (இன்புட் கீ) ஒன்று உங்களுக்குக் கொடுக்கப்படும். பதிவிறக்கம் செய்ய வேண்டியவர்களுக்கு இந்த இன்புட் கீயை வாட்ஸ்அப், மெயில் என எதாவது ஒரு வழியில் நீங்கள் அனுப்பிவிடலாம். அவர்கள் அந்த 6 இலக்க எண்ணை உள்ளிட்டால் போதும் அந்த ஃபைல்லைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

Send Anywhere
Send Anywhere

லிங்க் மூலமோ மெயில் மூலமோதான் ஃபைல் பரிமாற்றம் செய்யவேண்டும் என்ற நிலை வந்தால், இதில் அக்கவுன்ட் தொடங்க வேண்டியதாக இருக்கும். மற்ற சேவைகள் போல இதுவும் encryption பயன்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் என்ன வகை encryption என்பது மட்டும் குறிப்பிடப்படவில்லை. இந்த எளிய ஃபைல் பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த இதில் வரும் விளம்பரங்களை மட்டும் பொறுத்துக்கொள்ள வேண்டும். விளம்பரங்கள் வேண்டாம், பாஸ்வேர்டு பாதுகாப்பு வேண்டும் என நினைத்தால் பணம் கொடுத்து சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். சுலபமாக அனுப்ப இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 10GB வரை இலவசமாக ஃபைல்களை அனுப்பிக்கொள்ளலாம்.

FileMail

FileMail
FileMail

WeTransfer போல அல்லாமல் இது கட்டணம் கட்டி பயன்படுத்தும் சேவை. பிஸினஸ் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களைப் பார்த்துக்கொள்வதால் இதில் பாதுகாப்புக்கு அதிகம் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் பெரிய பெரிய ஃபைல்களை பத்திரமாக அனுப்ப இதனை நம்பிப் பயன்படுத்தலாம். மாதம் 5 டாலர்கள் (சுமார் 370 ரூபாய்) கட்டி, 100 GB வரை ஃபைல்களை இதில் ஸ்டோர் செய்து அனுப்பிக்கொள்ளலாம். இது தனிநபர் ஃபைல் பரிமாற்றங்களுக்கு ஒத்துவராது என்றாலும் பிசினஸ் தொடர்பாக ஃபைல்களை பத்திரமாக அனுப்ப இதை நிச்சயம் பயன்படுத்தலாம். மேம்படுத்தப்பட்ட AES-256 key encryption தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது.

Google Drive

Google Drive
Google Drive

உலகமெங்கிலும் அதிக அளவில் பயன்படுத்தும் ஃபைல் ஷேரிங் தளம் இதுவாகத்தான் இருக்கும். இதைப் பற்றிப் பெரிய அறிமுகம் தேவையில்லை. ஜிமெயிலில் பெரிய ஃபைல்கள் அனுப்புபவர்கள் இதைப் பயன்படுத்துவது வழக்கம். WeTransfer போலவே அதிக பாதுகாப்பு அம்சங்களை இலவசமாகக் கொண்டது. 128-bit AES encryption இதில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கூகுள் கணக்கிற்கு 15 GB வரை ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இலவசமாகத் தரப்படுகிறது. அதற்கு மேல் வேண்டுமென்றால் பணம் கட்டி கூகுளின் இந்த கிளவுட் ஸ்டோரேஜ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதில் ஃபைல்களை அனுப்பக் கண்டிப்பாகக் கூகுள் அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும். அது ஓகே என்றால் இதுவே உங்களது முக்கிய ஃபைல் பரிமாற்ற தேவைகளைப் பூர்த்திசெய்துவிடும்.

Drop Box Transfer

Drop Box
Drop Box

பிரபல கிளவுட் ஸ்டோரேஜ் சேவையான DropBox சில மாதங்களுக்கு முன்பு WeTransfer போன்ற ஒரு ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் வசதியை அறிமுகப்படுத்தியது. இதில் 100MB வரை ஃபைல்களை அனுப்பலாம். 'இது எப்படி பாஸ் பத்தும்?' என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. WeTransfer-ல் போன்ற பெரிய பரிமாற்றங்களுக்கு இது சரிவராதுதான். ஆனால் சின்னச் சின்ன ஃபைல்கள் அனுப்பப்போகிறீர்கள் என்றால், இதுதான் பெஸ்ட் சாய்ஸ். அனுப்புவது மட்டுமல்லாமல் அனுப்பியது சென்று சேர்ந்துவிட்டதா, எத்தனை பேர் பதிவிறக்கியிருக்கிறார்கள் போன்ற தகவல்களையும் இதில் காணலாம். பாதுகாப்புக்கு AES 128-bit encryption பயன்படுத்தப்படுகிறது. மேம்பட்ட AES 256-bit encryption வேண்டுமென்றால் Cryptomator என்ற இலவச கிளவுட் பாதுகாப்பு சேவையை இதனுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ஃபைல்களை அனுப்புபவர் dropbox அக்கவுன்ட் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தரவிறக்கம் செய்பவர் அக்கவுன்ட் வைத்திருக்கத் தேவையில்லை. சிறிய ஃபைல்களை சிறந்த பாதுகாப்போடு அனுப்ப இதைப் பயன்படுத்தலாம்.

100 MB-க்கு மேல் ஃபைல்களை அனுப்ப வேண்டும் என்றால் உங்கள் DropBox கிளவுட் அக்கவுன்ட்டில் அதை பதிவேற்றி அதை ஷேர் செய்யலாம். DropBox கிளவுடில் 2 GB வரை இலவசமாக ஃபைல்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

One Drive

One Drive
One Drive

கூகுளுக்குப் போட்டியாக அதே அம்சங்களைக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட்டின் சேவைதான் இந்த One Drive. இதைக்கொண்டு 5 GB வரையிலான ஃபைல்களை அனுப்பமுடியும். இதற்கும் நிச்சயம் மைக்ரோசாப்ட் அக்கவுன்ட் ஒன்று வைத்திருக்க வேண்டும்.

இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், இது கொடுக்கும் கூடுதல் பாதுகாப்புதான். ஒவ்வொரு ஃபைலும் ஒவ்வொரு 'Unique Key' கொண்டு AES 256-bit அளவிலான மேம்பட்ட encryption செய்யப்படுகிறது. இந்த 'Unique Key' அனைத்தும் மைக்ரோசாஃப்ட்டின் Azure Key Vault-ல் பத்திரமாகச் சேமிக்கப்படுகிறது. இதனால் இதில் தகவல்கள் அனுப்பினால் அதற்கு எந்தப் பிரச்னையும் வராது என நம்பிக்கையாகச் சொல்லலாம்.

இதில் உங்களுக்கு செட் ஆகும் எனத் தோன்றும் ஃபைல் பரிமாற்ற சேவை எது, பயன்படுத்திவிட்டு கமென்ட்டில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு