Published:Updated:

ஃபேஸ்புக்கின் `Fuel for India 2020' நிகழ்வு... அம்பானியும், சக்கர்பெர்கும் என்ன பேசினார்கள்?!

Fuel for India 2020
Fuel for India 2020

கடந்த ஏப்ரல் மாதம்தான் ஜியோவில் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் வாங்கியிருந்தது. இவர்கள் பேசிக்கொண்டதுதான் இந்த நிகழ்வின் இன்றைய முக்கிய ஹைலைட்.

முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நேற்றும், இன்றும் 'Fuel for India' என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்தியாவின் டிஜிட்டல் கனவுகளை நனவாக்க ஃபேஸ்புக் என்ன மாதிரியாக உதவ இருக்கிறது என்று எடுத்துரைப்பதற்கே இந்த விழா. 'Google for India' என்று இதே போன்றதொரு நிகழ்வை கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திவருகிறது.

இப்போது முதல்முறையாக ஃபேஸ்புக்கும் இந்தியாவுக்கென அது வைத்திருக்கும் பிரத்யேக திட்டங்களை விரிவுரைக்க இப்படி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் CEO மார்க் சக்கர்பெர்க், COO ஷெரில் சண்ட்பெர்க், CRO டேவிட் பிஷர் என ஃபேஸ்புக்கின் தலைமை பொறுப்புகளில் இருக்கும் முக்கிய புள்ளிகள் அனைவருமே பங்குகொண்டனர். ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் இந்த நிகழ்வில் பங்குகொண்டு மார்க்குடன் பேசினார். கடந்த ஏப்ரல் மாதம்தான் ஜியோவில் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் வாங்கியிருந்தது. இவர்கள் பேசிக்கொண்டதுதான் இந்த நிகழ்வின் இன்றைய முக்கிய ஹைலைட். அப்படி என்ன பேசிக்கொண்டார்கள்?!

Facebook
Facebook

"ஜியோ மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்கள் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை நீங்கள் உயர்த்தியிருக்கிறீர்கள். உங்களுடன் கூட்டணி அமைப்பதில் நான் ஆர்வமாக இருந்ததுக்கு முக்கிய காரணம், நீங்கள் கால்பதிக்கும் துறைகளிலெல்லாம் புரட்சி செய்திருக்கிறீர்கள். பன்மடங்கு அந்தத் துறையை முன்னேற்றியிருக்கிறீர்கள். இன்னும் பலரது வாழ்வுகளை மேம்படுத்தும் பசி உங்களிடம் இருக்கிறது." என்று அம்பானியை புகழுரைத்த ஃபேஸ்புக் CEO மார்க் சக்கர்பெர்க் ஜியோ-ஃபேஸ்புக் கூட்டணி எந்த மாதிரியான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் அம்பானியுடன் பேசினார்.

"ஜியோ - ஃபேஸ்புக் கூட்டணி பல சிறு குறு தொழில்களுக்குப் பலன் தரும். குறிப்பாக கொரோனாவின் தாக்கத்திற்குப் பிறகான இந்தக் காலத்தில் தொழில்கள் டிஜிட்டலை நோக்கி நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அதற்கு இந்தக் கூட்டணி பெருமளவில் உதவும்."
மார்க்

We are excited to bring you the first edition of Facebook Fuel for India on December 15-16, a two-day virtual event that...

Posted by Facebook on Monday, December 14, 2020
"எந்தத் தயக்கமும் இன்றி சொல்லுவேன். நெருக்கடியான லாக்டெளன் நேரத்தில் ஃபேஸ்புக்கின் முதலீடு ஜியோவுக்கு மட்டுமல்ல மொத்த இந்தியாவுக்குமே இன்றியமையாததாக அமைந்தது."
முகேஷ் அம்பானி

இந்தியாவில் இருக்கும் UPI நடைமுறையையும் பாராட்டினார் மார்க். இந்தியாவில் மெசேஜ் அனுப்புவது போல பணம் அனுப்ப வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இந்தியாவில் அதன் வாட்ஸ்அப் பே சேவையை வழங்கவிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

அடுத்த கட்டுரைக்கு