Published:Updated:

NFT: 520 கோடி ரூபாய் ஏலம்; டிஜிட்டல் கலைப்பொருள், பெருகி வரும் NFT-க்கள் பற்றிய ஓர் அலசல்!

NFT
News
NFT

NFT என்றால் என்ன... கோடிகளில் அங்கு பணம் புழங்குவது எதனால்?

NFT.. இந்த பெயர்ச்சுருக்கத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது வரை கேள்விப்பட்டது இல்லை என்றாலும் இந்த ஆண்டு கண்டிப்பாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிப்டோகரண்ஸிக்களுடன் புழங்குபவர்களுக்கு இந்த வார்த்தை சில ஆண்டுகளுக்கு முன்பே பரிட்சியம் ஆகியிருக்கலாம். இந்த ஆண்டின் சென்சேஷன்களான தலைப்புகளுள் ஒன்று NFT. சென்சேஷன் ஆகும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா.

520 கோடி ரூபாய்
மைக் வின்கேல்மணின் NFT ஏலம் போன விலை

இந்த வருடம் கடந்த மார்ச் மாதம் டிஜிட்டல் வடிவில் இருக்கும் மைக் வின்ஹெல்மன் என்பவருடைய கலைப்பொருள் ஒன்று 69.8 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 520 கோடி ரூபாய் விலைக்கு ஏலம் போயிருக்கிறது. அப்படி ஏலம் போன அந்த டிஜிட்டல் கலைப்பொருள் தான் NFT. பொதுவாக ஓவியர் ஒருவர் வரையும் ஒரு கலைப்படைப்பை 'ஓவியம்' என்ற பொதுப்பெயருடன் குறிப்பிடுகிறோம் அல்லவா, அது போல டிஜிட்டலாக உருவாக்கப்படும் ஒரு கலைப்படைப்பை NFT என்ற பொதுப்பெயரால் குறிப்பிடுகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
520 கோடிக்கு விற்பனையான டிஜிட்டல் கலைப்பொருள் | NFT
520 கோடிக்கு விற்பனையான டிஜிட்டல் கலைப்பொருள் | NFT

NFT, டிஜிட்டல் உலகின் கலைப்பொருள்:

கடந்த சில ஆண்டுகளாகத் தான் நம்முடைய தினசரி வாழ்வில் கிரிப்டோகரண்ஸி என்ற ஒன்று அறிமுகமாகியது. முதல் கிரிப்டோகரண்ஸி உருவாக்கப்பட்டது 2010-ல் என்றாலும், நம் எல்லோருக்கு அது அறிமுகமானது சமீபத்தில் தான். பிசிக்கல் வடிவம் இல்லாமல் டிஜிட்டலாக மட்டுமே ப்ளாக்செயின் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாணயம் என்று கிரிப்டோகரண்ஸிக்கு விளக்கம் கொடுத்தார்கள் கிரிப்டோ ஆர்வலர்கள். கிரிப்டோவே ஏன் எதற்கு என நாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, டிஜிட்டல் உலகின் கலைப்படைப்பு என NFT-க்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது கிரிப்டோ உலகம்.

NFT
Non - Fungible Token

Fungible என்றால், அதே போன்ற தோற்றமுடைய, அதே மதிப்புடைய வேறு ஒரு பொருளால் மாற்றிவிட முடியும். உதாரணத்திற்கு, ஒரு 100 ரூபாய்த் தாளை அதே போன்று, அதே மதிப்புடன் இருக்கும் இன்னொரு 100 ரூபாய்த் தாளைக் கொண்டு மாற்றி விட முடியும். ஆனால், Non- Fungible என்றால், அதனைப் போன்ற அதே மதிப்புடைய வேறு ஒரு பொருளை வைத்து அதனை ஈடு செய்ய முடியாது என்று பொருளாம். எளிதாக ஒரு உதாரணத்தோடு கூற வேண்டும் என்றால், அசல் மோனாலிசா ஓவியத்திற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. மோனாலிசா போன்ற பல நகல் ஓவியங்கள் இருக்கலாம். ஆனால், அசல் மோனாலிசா ஓவியத்திற்கென்று ஒரு தனி மதிப்பு இருக்கிறதல்லவா, அது போலத்தான் இந்த NFT-க்களும் என குதூகலிக்கிறார்கள் NFT ஆர்வலர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

எவையெல்லாம் NFT:

டிஜிட்டலாக இருக்கும் எதை வேண்டுமானாலும் NFT-யாக மாற்றலாம், எதை வேண்டுமானாலும். ஒரு புகைப்படம், ஒரு பேஸ்புக் அல்லது டிவிட்டர் பதிவு, ஒரு வீடியோ, ஒரு டிஜிட்டல் ஆவணம், ஒரு டிஜிட்டல் வரைபடம், இதோ நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என எதை வேண்டுமானாலும் NFT-யாக மாற்றி விற்கலாம். உதாரணங்கள் ஒன்றைக் கூற வேண்டும் என்றால், ட்விட்டர் நிறுவனர் ஜாக் டார்ஸே ட்விட்டரில் தான் செய்த முதல் ட்வீட்டை NFT வடிவில் ஏலம் விட, அது 2.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் தோராயமாக 21 கோடி ரூபாய்) ஏலம் எடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த ட்வீட்டை ஒரு நபர் தனக்குச் சொந்தமாக்கியிருக்கிறார். அந்த ட்வீட்டை நீங்கள் 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்திருக்கலாம், ஆனால் அந்த ட்வீட் ஏலம் எடுத்த நபருக்குச் சொந்தமானது. ஜாக் டார்ஸேவின் முதல் ட்வீட் ஏலம் எடுத்த அந்த நபருக்குத் தான் சொந்தம் என ஒரு சர்ட்டிபிகேட் கொடுக்கப்படும், மேலும் ப்ளாக்செயின் லெட்ஜரிலும் அது பதிவு செய்யப்படும். எனவே, அந்த ட்வீட் தனக்குச் சொந்தமானது என வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. குழப்பமாக இருக்கிறதா?

NFT-யாக விற்கப்பட்ட ஜாக் டார்ஸேவின் ட்வீட்
NFT-யாக விற்கப்பட்ட ஜாக் டார்ஸேவின் ட்வீட்
நம்மைப் பொருத்தவரை அது ஒரு சாதாரண ஸ்கிரீன்ஷாட் அல்லது மவுசில் 'Right Click' செய்து 'Save' செய்யும் ஒரு விஷயம். ஆனால், NFT ஆர்வலர்களைப் பொறுத்தவரை இது ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷம். அப்படித்தான் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏதாவது ஒரு டிஜிட்டல் NFT இப்படி அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது வாங்கப்பட்டிருந்தாலோ 'ஒரு நாள் கூத்து' என இதனைக் கடந்து சென்று விடலாம். ஆனால், தினம் தினம் NFT வியாபாரம் கோடிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. NFT-யை நாம் தினசரி பரிவர்த்தனையில் பயன்படுத்தும் ரூபாய் அல்லது டாலர் கொடுத்து வாங்கிவிட முடியாது. இதனை எத்திரியம் (Ethereum) என்ற கிரிப்டோகரண்ஸியைக் கொண்டு இதற்கென இருக்கும் தளங்களில் தான் வாங்க முடியும் (எத்திரியத்தை ரூபாய் அல்லது டாலர் கொண்டு தான் வாங்க முடியும்).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துலிப் மேனியா:

16-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட துலிப் மேனியா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் துலிப் பூக்களுக்கு ஏகப்பட்ட தட்டுப்பாடு ஏற்பட்டது. காரணம் துலிப் பூக்களை வைத்திருப்பது என்பது ஒரு சமூக அந்தஸ்தாகப் பார்க்கப்பட்டது. செல்வந்தர்கள் எல்லாம் துலிப் பூக்களை எந்த விலைக்கும் வாங்கி தங்களுடைய தோட்டத்தில் வைக்கத் தயாராக இருந்தனர். இதனால், பல தோட்டங்களில் துலிப் செடிகள் காணாமல் போனது வேறு கதை. 1634-ல் மக்களுக்கு இந்த துலிப் பூக்களுக்கு மேல் இருந்த மோகம் இன்னும் அதிகமானது, அதன் மேல் இருந்த ஈர்ப்பால் அல்ல, துலிப் பூக்கள் தொடர்ந்த விலை உயர்ந்ததால். இன்று தங்கத்தை வாங்கி வைத்து ஒரு மாதத்திற்குப் பின் அதன் விலை உயர்ந்த பின் விற்றால் குறிப்பிட்ட அளவு லாபம் கிடைக்குமல்லவா. அப்படி துலிப் பூக்களைப் பலரும், வாங்கி விற்கத் தொடங்கினர். 1636-ல் துலிப் பூக்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்றது.

துலிப் பூக்களின் விலை உயர்வைக் குறிப்பிடும் வரைபடம்
துலிப் பூக்களின் விலை உயர்வைக் குறிப்பிடும் வரைபடம்

இன்றைய மதிப்புக்கு சில துலிப் பூக்கள் அன்று 5 கோடி ரூபாய் அளவு மதிப்புக்குக் கூட விற்கப்பட்டதாம். சராசரியாக இன்றைய மதிப்புக்கு 50 முதல் 90 லட்சம் ரூபாய் வரை அன்று துலிப் பூக்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அது எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதனை வாங்குவதற்கு மக்கள் தயாராகவே இருந்திருக்கிறார்கள். காரணம், இன்று இந்த விலைக்கு வாங்கி, நாளை இதை விட அதிக விலைக்கு விற்க முடியும் என்கிற நம்பிக்கையில் துலிப் பூக்களை மக்கள் வாங்கினார்களாம்.

ஆனால், இந்த நிலை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 1637-ல் துலிப் பூக்கள் மேல் இருந்த இந்த மோகமும் நம்பிக்கையும் குறைந்து 70, 80 லட்சம் ரூபாய்களுக்கு விற்றுக் கொண்டிருந்த துலிப் பூக்கள் 1000 ரூபாய்க்குக் கூட வாங்க ஆளில்லாமல் போனதாகக் கூறப்படுகிறது.

எப்போதெல்லாம் உள்ளார்ந்த மதிப்பில்லாத ஏதாவது ஒரு பொருள் சந்தையில் அதிக விலையில் விற்பனையாகும் போது, மக்கள் அதனை விரும்பி வாங்கும்போது இந்த துலிப் மேனியா நிகழ்வை அதனுடன் ஒப்பிடுவார்கள்.

NFT-யைும் முழுமையாக துலிப் மேனியாவுடன் ஒப்பிட முடியாது என்றாலும், கொஞ்சம் அதனுடன் ஒத்துப் போவது போலவே இருக்கிறது NFT-க்கள் மேல் திடீரெனத் தோன்றிய இந்த மோகம் என்று இதன் மீது விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. NFT-க்களைப் பற்றித் தெரிந்து கொண்டு நான் இன்று ஒரு NFT-யை வாங்குகிறேன் என்றாலும், நாளை என்னிடம் இருந்து அதிக விலைக்கு ஒரு ஒருவர் அதனை வாங்கிக் கொள்வார் என்கிற நம்பிக்கையில் தான் நான் வாங்குவேன்.

NFT-க்களை டிஜிட்டல் கலைப்பொருள் என NFT ஆர்வர்கள் சிலாகித்தாலும், NFT-யை வாங்கும் அனைவரும் அந்தச் சிலாகிப்பில் தான் வாங்குவார்கள் எனக் கூற முடியாது. நிறைய மக்களுக்கு NFT குறித்து தெரியவர, NFT-க்கான விலைகள் இன்னும் கூடும்.

NFT-க்களை விற்பனை செய்யும்/ ஏலம் விடும் தளங்களுள் ஒன்று
NFT-க்களை விற்பனை செய்யும்/ ஏலம் விடும் தளங்களுள் ஒன்று

மேலும், தனிப்பட்ட நபர்கள் மட்டுமின்றி ட்விட்டர் நிறுவனர் ஜாக் டார்ஸே, குவான்டின் டாரண்டினோ, மார்வெல் என பலரால் பின்தொடரப்படும் பிரபலங்கள் பலரும் தங்களுடைய படைப்புகளை NFT-யாக மாற்றி, இந்த NFT மேனியாவில் கலந்து கொள்ள ஆதீத விருப்பதுடனே இருக்கிறார்கள். இதுவும் NFT-க்கள் மீதான நெட்டிசன்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆனால் இது நிலையானதா, அல்லது துலிப் மேனியா போல் இதுவும் சில வருடங்களிலும் நீர்த்துப் போகும் விஷயமா என்பதைக் காலம் தான் கூறும்.

குறிப்பு: கிரிப்டோவைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் கிரிப்டோ உலகிற்குள் நுழைய வேண்டாம் எனத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறார்கள் கிரிப்டோ வல்லுநர்கள்.

NFT பற்றிய உங்களது கருத்துகள், சந்தேகங்கள், கேள்விகளை கமென்ட்டில் பதிவிடவும்.