Election bannerElection banner
Published:Updated:

சார்ஜ் போடத் தேவையில்லை... 28,000 ஆண்டுகள் உழைக்கும்! அது என்ன நானோ டைமண்ட் பேட்டரி?

பேட்டரி சார்ஜிங்
பேட்டரி சார்ஜிங்

இது பாதுகாப்பானது, சுற்றுச்சூழலைப் பாதிப்பதில்லை என்கிறது இந்த பேட்டரி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் NDB, Inc நிறுவனம். உண்மையில் இப்படி ஒரு பேட்டரியை உருவாக்குவது சாத்தியம்தானா?

நம் கையில் இருக்கும் செல்போன் தொடங்கி விமானம் வரை அனைத்திற்கும் ஏதோ ஒரு வகையில் பேட்டரி என்பது தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. முந்தைய நூற்றாண்டுடன் ஒப்பிடும்போது இப்போது இருக்கும் பேட்டரிகள் பல வகைகளில் மேம்பட்டிருக்கின்றன. மேலும் புதிய பேட்டரி தொழில்நுட்பங்கள் மீதான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன.

அப்படி சமீபத்தில் கவனம் ஈர்த்த ஒரு புதிய தொழில்நுட்பம்தான் இந்த நானோ டைமண்ட் பேட்டரி. இதில் நாம் நம்பவே முடியாத முக்கியமான இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று இந்த பேட்டரியை சார்ஜ் செய்யவே வேண்டாம் என்பது. மற்றொன்று இது 28,000 ஆண்டுகள் வரைக்கும் தொடர்ந்து செயல்படும் என்பது.
பேட்டரி
பேட்டரி

இப்போதைய பேட்டரிகளில் இருக்கும் சிக்கல்கள் என்ன?

நம்மிடையே இப்போது பயன்பாட்டில் இருக்கும் பேட்டரிகள் இரண்டே வகைகள்தான். ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடிபவை, மற்றொன்று ரீசார்ஜ் செய்து பயன்படுத்த முடிபவை. இந்த இரண்டு பேட்டரிகளுக்கும் குறிப்பிட்ட கால அளவு ஒன்று உண்டு. அதன் பின்னர் இவற்றில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருள்களின் செயல்திறன் குறைந்து விடும். எனவே இவற்றால் ஆற்றலை உற்பத்தி செய்யவோ சேமித்து வைக்கவோ முடியாது. இப்போது இருக்கும் பேட்டரிகளுக்கு அதிக இடமும் தேவைப்படும். சில நேரங்களில் வெப்பமும் உருவாகும். ஆனால் இது போன்ற சிக்கல்கள் இந்த நானோ டைமண்ட் பேட்டரியில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படிச் செயல்படுகிறது இந்த நானோ டைமண்ட் பேட்டரி?

தற்போது பேட்டரிகளில் இருப்பதைப்போல எந்த வேதியியல் பொருள்களும் இதில் பயன்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக வைரம் பயன்படுத்தப்படும். சாதாரணமாக ஒரு வைரத்திலிருந்து எந்த ஆற்றலும் வெளிப்படுவதில்லை. ஆனால் இந்த நானோ டைமண்ட் பேட்டரியில் பயன்படுத்தப்படும் வைரம் அணுக் கழிவில் இருந்து உருவாக்கப்படுவது என்பதுதான் முக்கியமாக இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.

பொதுவாக அணுக் கழிவுகள் அனைத்தும் கடுமையான கதிரியக்கம் கொண்டவை. வெப்பத்தை ஆற்றலாக அதன் வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதனால்தான் அணு உலைகளிலிருந்து கிடைக்கும் கழிவுகள் பூமிக்கடியில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த நானோ டைமண்ட் பேட்டரிக்குத் தேவைப்படும் கார்பன்-14 அணுக் கழிவில் இருந்து உருவாக்கப்படும். எனவே இது சிதைவுறும் போது எலக்ட்ரான்களை ஆற்றலாக வெளிப்படுத்துகிறது.

நானோ டைமண்ட் பேட்டரி
நானோ டைமண்ட் பேட்டரி

நானோ டைமண்ட் பேட்டரியில் கார்பன்-14 பல அடுக்குகளாக வைக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து வெளிப்படும் ஆற்றலை ஒரு சூப்பர் கெப்பாசிட்டர் ஒருங்கிணைத்து மின்சாரமாக மாற்றி வெளிப்படுத்த உதவுகிறது. பேட்டரியின் உள்ளே இருக்கும் கார்பன்-14 வெளிப்படுத்தும் கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த ஆய்வகத்தில் உருவாக்கப்படும் செயற்கையான கார்பன்-12 வைரம் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனவே இது பாதுகாப்பானது, சுற்றுச்சூழலைப் பாதிப்பதில்லை என்கிறது இந்த பேட்டரி தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் NDB, Inc நிறுவனம்.

உண்மையில் இப்படி ஒரு பேட்டரியை உருவாக்குவது சாத்தியம்தானா?

கலிபோர்னியாவில் இருக்கும் NDB, Inc நிறுவனம் இதுவரை இந்த பேட்டரியின் மாதிரியை உருவாக்கவில்லை. இது எப்படிச் செயல்படப் போகிறது என்ற தகவலை மட்டுமே இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த பேட்டரியை உருவாக்குவதற்குத் தேவையான முதலீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அப்படி முதலீடு கிடைத்தாலும் இப்படி ஒரு பேட்டரியை உருவாக்க முடியுமா என்பதற்கு சில சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. முதலில் ஆற்றல் அழிவின்மை விதியின் படி இந்த பேட்டரியின் செயல்பாடு கேள்விக்குள்ளாகிறது. இந்த விதியின்படி பார்த்தால் ஆற்றலைச் சிறிதும் இழப்பின்றி 100 சதவிகிதம் வேறு வடிவத்துக்கு மாற்றுவது சாத்தியமில்லாதது. மேலும் ஆற்றல் மாற்றமடையும் போது கழிவுகள் உருவாகும். அது வெப்பமாகவோ அல்லது வேறு பொருள்களாகவோ இருக்கலாம். ஆனால் நானோ டைமண்ட் பேட்டரியில் அப்படி எந்தக் கழிவுகளும் உருவாவதாகக் குறிப்பிடப்படவில்லை. மேலும் ஆற்றல் உருவாக்கத்தின்போது வெளியாகும் அதிக அளவிலான வெப்பம் எப்படி வெளியேற்றப்படும் என்ற தகவல்களும் விளக்கப்படவில்லை.

நானோ டைமண்ட் பேட்டரி
நானோ டைமண்ட் பேட்டரி

மேலும் கார்கள், விமானங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் இந்த பேட்டரியை பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். காரணம் இவற்றுக்கு அதிக திறன் மிக்க மின்சாரம் தேவைப்படும். அப்படிப் பார்த்தால் பேட்டரியில் பயன்படுத்தப்படும் வைரத்தின் அடுக்குகளையும் அதிகப்படுத்த வேண்டும். அதற்கு ஈடாக வெளிப்படும் வெப்பத்தையும் வெளியேற்றுவதற்கான வழியை உருவாக்க வேண்டும். இட வசதியும் அதிக அளவில் தேவைப்படும் என பல்வேறு சிக்கல்கள் இந்த பேட்டரியில் இருக்கின்றன. இதுவரையில் இந்த பேட்டரியின் மாதிரியை நிறுவனம் உருவாக்கி அதன் திறனைப் பரிசோதிக்கவில்லை. ஆகவே இது மக்கள் பயன்பாட்டுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு