Published:Updated:

தொடர்பு எல்லைக்கு வெளியே!

தொடர்பு எல்லைக்கு வெளியே!
பிரீமியம் ஸ்டோரி
தொடர்பு எல்லைக்கு வெளியே!

ஜியோ உள்ளே நுழைந்ததிலேயே அத்தனை சர்ச்சைகள் உண்டு

தொடர்பு எல்லைக்கு வெளியே!

ஜியோ உள்ளே நுழைந்ததிலேயே அத்தனை சர்ச்சைகள் உண்டு

Published:Updated:
தொடர்பு எல்லைக்கு வெளியே!
பிரீமியம் ஸ்டோரி
தொடர்பு எல்லைக்கு வெளியே!

ப்போதெல்லாம் மாதாமாதம் தல-தளபதி பட அப்டேட் வருகிறதோ இல்லையோ,டெலிகாம் துறையிலிருந்து அப்டேட் வந்துகொண்டேதான் இருக்கின்றன. டெலிகாம் ஏரியாவில் அப்படி என்னதான் பிரச்னை? ஒவ்வொரு பஞ்சாயத்தாகப் பார்ப்போம்.

இலவச அழைப்புகள், குறைந்த விலையில் டேட்டா என ஜியோ என்ட்ரி கொடுக்கும்போதே ஆட்டம் கண்டன மற்ற டெலிகாம் நிறுவனங்கள். ஆனால், ஜியோ உள்ளே நுழைந்ததிலேயே அத்தனை சர்ச்சைகள் உண்டு. ஜியோவின் சோதனை ஓட்டக் காலத்தில்தான் முதல் பஞ்சாயத்து வெடித்தது. ஒரு தொலைத்தொடர்பு சேவையை இன்னொரு தொலைத்தொடர்பு சேவையுடன் இணைக்கும் புள்ளிகளை `Points of Interconnect’ (POI) என்பார்கள். இந்த POI போதுமான அளவில் இருந்தால்தான் நெட்வொர்க்குகளுக்கு இடையே சரியான தொடர்பு இருக்கும். ஆனால், ‘எங்களுக்கு இது சரியாகத் தரப்படவில்லை’ என்று டிராயிடம் புகார் செய்தது ஜியோ. ‘இது முறையான செயல் அல்ல’ என 3,050 கோடி ரூபாயை அபராதமாக அந்த நிறுவனங்களுக்கு விதிக்கவேண்டுமென மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது டிராய்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்த பஞ்சாயத்து IUC கட்டணத்திற்காக. ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளரை அழைத்தால், அந்த அழைப்பைத் தங்கள் வாடிக்கையாளருடன் இணைக்க ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையை ஜியோ வசூலிக்கும். இந்தக் கட்டணம் நிமிடத்துக்கு 14 பைசாவாக இருந்தது. ஆனால், இதை உயர்த்த வேண்டும் என முறையிட்டன ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள். ஜியோ இலவசமாக அழைப்புகள் கொடுத்ததால் அதிக இன்கம்மிங் அழைப்புகள் இந்த நிறுவனங்களுக்குத்தான் வந்தன. அதே சமயம் இந்தக் கட்டணமே வேண்டாம் என்றது ஜியோ. “நெட்வொர்க் கட்டமைப்புகளுக்காக டெலிகாம் நிறுவனங்கள் செலவுசெய்த முதலீட்டைத் திருப்பி எடுக்கவே, இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த முதலீட்டுத் தொகையையெல்லாம் இந்த நிறுவனங்கள் என்றோ எடுத்துவிட்டன” என்று காரணம் சொன்னது ஜியோ. ஜியோ சொன்னதைக் கேட்ட டிராய், IUC கட்டணத்தை 6 பைசாவாகக் குறைத்தது டிராய். ஏற்கெனவே அவுட்கோயிங் தொகை வராமல் இருந்த நிறுவனங்களுக்கு இன்கம்மிங்கில் வரும் வருமானமும் குறைந்தது. இதனால் ஒரு வாடிக்கையாளரிடம் வரும் சராசரி வருமானம் (Average Revenue Per User) சடசடவென சரிந்தது. இது ‘கம்பெனிக்குக் கட்டுப்படி ஆகாது’ என்பதை உணர்ந்த நிறுவனங்கள், எந்தத் தொகையும் கட்டாமல் தங்கள் நெட்வொர்க் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறினாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்தன. இந்த நெருக்கடியில் ஏர்செல் போன்று சில நிறுவனங்கள் மொத்தமாகச் சந்தையிலிருந்து மூட்டையைக் கட்டின. வோடஃபோன் ஐடியாவுடன் இணைந்தது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியாத அளவுக்கு நஷ்டமடைந்தது பிஎஸ்என்எல். வேலிடிட்டி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறைந்தபட்சம் அந்தத் தொகையாவது கட்டினால்தான் ஒரு வாடிக்கையாளருக்கு இன்கம்மிங் அழைப்புகளே வரும். இந்த முடிவு இன்னும் பலரை ஜியோ வாடிக்கையாளர்களாக மாற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெலிகாம்
டெலிகாம்

அடுத்தது ரிங்டைம் குறைப்புப் பஞ்சாயத்து. IUC கட்டணம் 6 பைசாவாகக் குறைந்தாலும், கால்களை இலவசமாகத் தரும் ஜியோ, மற்ற நிறுவனங்களுக்கு IUC கட்டணம் கொடுப்பதை விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை இப்படி IUC தொகையாக மற்ற நிறுவனங்களுக்குக் கொடுத்திருந்தது ஜியோ. இதற்கு ஒரு முடிவுகட்ட ஐடியா ஒன்றைப் பிடித்தது ஜியோ. அதுதான் ரிங்டைம் குறைப்பு. ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா போன்ற பிற நிறுவனங்களுக்குச் செல்லும் அழைப்புகளுக்கு ஜியோவில் 20 விநாடிகள்தான் ரிங் போகும். இப்படி ரிங்டைமைக் குறைத்ததால் பிற நெட்வொர்க் சந்தாதாரர்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் அழைப்புகளை எடுக்கும் வாய்ப்புகள் குறைந்தன. பலரும் மிஸ்டுகாலைப் பார்த்துத் திருப்பி அழைத்தனர். இதன்மூலம் ஜியோவுக்கு IUC செலவு குறைந்ததுடன் வருமானமும் அதிகரித்தது. ஜியோவின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ மற்ற நிறுவனங்களிடம் மேலும் டென்ஷன் ஏற்றியது. மீண்டும் டிராயிடம் முறையிட்டன. “சர்வதேச அளவில் 15 விநாடிகள்தான் சராசரி ரிங்டைமாக இருக்கிறது” என ஜியோ பாயின்ட் பேச, ரிங்டைம் 45 விநாடிகளாக இருக்கவேண்டும் என்றது ஏர்டெல். இறுதியாக மொபைல் அழைப்புகளுக்கு ரிங்டைம் குறைந்தது 30 விநாடிகளாக இருக்கவேண்டும் என நிர்ணயித்தது டிராய். இதற்கு நடுவில் “IUC இருந்தாதானே பிரச்னை!” என்று அடுத்த ஸ்கெட்ச் போட்டது ஜியோ. அதன்படி IUC கட்டணத்தை வாடிக்கையாளர்களிடமிருந்தே வாங்க முடிவுசெய்தது ஜியோ. ஆனால், “இனி வாய்ஸ் கால்களுக்குக் கட்டணமே கிடையாது” என அறிமுகமாகும்போது கொடுத்த வாக்கை இதனால் காப்பாற்றாமல்போனது ஜியோ. ஆனால் யோசித்துப்பார்த்தால் இது ஜியோவின் மற்றொரு மாஸ்டர் பிளான் என்பது புரியும். இப்படியான IUC கட்டணம் என்ற நடைமுறை இருப்பதால்தான் உங்களிடம் கூடுதல் பணம் பெறவேண்டியதாகவுள்ளது என மக்களை டிராய் பக்கம் திருப்பவே இந்த பிளான்.

ஆனால் டிராய் இன்னும் IUC கட்டணத்தை நீக்கவில்லை. ஏற்கெனவே வெறும் நான்கு நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் சந்தையாக மாறியிருக்கிறது தொலைத்தொடர்பு. இதே நிலை தொடர்ந்தால் டிராய் என்ற ஒழுங்குமுறை ஆணையம் இருக்கவேண்டிய அவசியமே இல்லாமல்போய்விடும் என்பது புரிந்தது டிராய்க்கு. “இது இவ்வளவு லேட்டா புரிஞ்சிருக்க வேண்டாம்” என்பதுதான் ஏற்கெனவே பாதாளத்தில் விழுந்து தவிக்கும் நிறுவனங்களின் மைண்ட்வாய்ஸ். இதற்கு நடுவில், கடந்த அக்டோபர் மாதம் வெளியானது Adjusted Gross Revenue (AGR) தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு. AGR என்பது டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்குத் தரவேண்டிய வருவாய்ப் பங்கீட்டுத் தொகை. இதைக் கணக்கிடுவதில் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கும் பல வருடங்களாகக் கருத்துவேறுபாடு இருந்துவந்தது. தொலைத்தொடர்பு அமைச்சகம் டெலிகாம் இயக்கம் அல்லாத சொத்துகள், முதலீடுகள் போன்ற மற்ற வருவாயிலும் டெலிகாம் நிறுவனங்கள் பங்கு தரவேண்டும் எனக் கேட்டது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வெறும் டெலிகாம் இயக்கத்தில் வரும் வருவாயின் பங்கை மட்டுமே வசூலிக்கவேண்டும் என்றது. இதில் அரசுக்கு ஆதரவான தீர்ப்பு வெளிவந்தது. இதனால் சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாய் தொகையைக் கட்டவேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கின டெலிகாம் நிறுவனங்கள். இதில் வோடஃபோன்-ஐடியா மட்டும் சுமார் 53,000 கோடி ரூபாய் அரசுக்குக் கட்டவேண்டிய நிலை.

சமீபத்தில் சந்தைக்கு வந்த நிறுவனம் என்பதால் ஜியோவிற்கு வெறும் 195 கோடி ரூபாய் பாக்கித்தொகைதான் இருந்தது. அதைக் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கச் சென்றுவிட்டது ஜியோ. மற்ற நிறுவனங்கள் இந்தத் தொகையைச் செலுத்தாமலேயே இருந்தன. தொடர்ந்து கால அவகாசம் கேட்டுவந்தன.அப்படியான முறையீடு ஒன்றை விசாரிக்க சமீபத்தில் மீண்டும் கூடியது உச்சநீதிமன்றம். அதில் கட்டணம் செலுத்தாத நிறுவனங்களையும், தீர்ப்பை ஒழுங்காகச் செயல்படுத்தாத தொலைத்தொடர்புத் துறையையும் கடுமையாகச் சாடியது உச்சநீதிமன்றம். சரியான விளக்கம் கொடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும் எச்சரித்தது. இதனால் இரவோடு இரவாகத் தொகையைச் செலுத்தச் சொல்லி இந்த நிறுவனங்களுக்கு வலியுறுத்தியது தொலைத்தொடர்பு அமைச்சகம்.

இதில் ஏர்டெல் 18,004 கோடி ரூபாயும், வோடஃபோன்-ஐடியா 3,500 கோடி ரூபாயும் இதுவரை செலுத்தியுள்ளன. ஏர்டெல்லுக்கு இனி பிரச்னைகள் இல்லை. வோடஃபோன் ஐடியா நிறுவனம்தான் மீதமுள்ள 50,000 கோடி ரூபாயை எப்படிக் கட்டுவது என விழிபிதுங்கி நிற்கிறது. இதனால் வோடஃபோன்-ஐடியா டெலிகாம் சந்தையிலிருந்து வெளியேறலாம் என்ற அச்சம் டெலிகாம் வட்டத்தில் நிலவுகிறது. சுமார் 30 கோடி சந்தாதாரர்கள் கொண்ட இந்த நிறுவனம் வெளியேறினால் அது தொலைத்தொடர்புத் துறைக்கு மிகப்பெரிய சரிவாகவே அமையும். சுமார் 10,000 பேரின் வேலை பறிபோகும். அந்நிய முதலீட்டைக் கொண்டுவரும் மிகமுக்கியமான நிறுவனமாக வோடஃபோன் இருந்து வருவதால், இந்தியப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை அது விட்டுச்செல்லும்.

இந்தச் சூழ்நிலையில் அரசுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியது வோடஃபோன்-ஐடியா நிறுவனம். அதில் சில முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கட்ட வேண்டிய பாக்கித்தொகைக்குப் போடப்பட்டிருக்கும் 18% GST தொகையான 8,000 கோடி ரூபாயை அரசு நீக்க வேண்டும். இந்தப் பெரும் தொகையை 15 வருட காலத்தில் தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும். இதிலும் முதல் 3 ஆண்டுகள் விலக்களிக்க (initial moratorium) வேண்டும் ஆகியவையே அந்தக் கோரிக்கைகள். இதுபோக, தற்போது 4-5 ரூபாயில் இருக்கும் GB-யின் விலை 35 ரூபாய்க்கு உயரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குப் பிறகு தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் முக்கிய ஆணையமான Digital Communications Commission (DCC) கூடிப் பேசியது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசு எடுக்கப்போகும் முடிவுகளைப் பொறுத்துதான் தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும். காத்திருப்போம்!

தொலைத்தொடர்புத் துறையின் இன்றைய நிலை குறித்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் சங்கத்தின் (COAI) தலைமை இயக்குநர் ராஜன் மாத்யூஸிடம் பேசினோம்.

வோடஃபோன்-ஐடியா நிறுவனம் வெளியேறுமா?

“வோடஃபோன்-ஐடியா சந்தையில் நீடிக்கவே முடிந்தளவு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அப்படி நீடிக்காமல்போனால் அது தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள், மீதமிருக்கும் சேவைகளுக்கு மாறவேண்டியதாக இருக்கும். ஆனால் அத்தனை கோடி வாடிக்கையாளர்களைச் சமாளிக்கும் கட்டமைப்பு மற்ற நிறுவனங்களிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஜியோவிடம் 2G சேவை கிடையாது. இதனால் பலருக்கும் சேவை மறுக்கப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது.”

ராஜன் மாத்யூஸ்
ராஜன் மாத்யூஸ்

இதற்குத் தீர்வுதான் என்ன?

“தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறாத வகையில் அரசால் பல நடவடிக்கைகள் எடுக்கமுடியும். மொத்தமாக AGR தொகை வசூலிக்கும் முறையை அவர்களால் மாற்றமுடியும். இந்தக் கட்டணங்களுக்கான GST வரியைக் குறைக்கமுடியும். தவணை முறையில் வட்டியுடன் இதை வசூலிப்பதற்கு வழிவகை செய்யமுடியும்.”

சிலர் கொடுக்கவேண்டிய பாக்கித்தொகைக்கு பதிலாக அரசே வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தை வாங்கி BSNL-உடன் இணைக்கலாம் என்கிறார்களே?

“இது மிகவும் மோசமான விளைவுகளையே தரும். BSNL, MTNL நிறுவனங்களை லாபகரமாக நடத்துவதிலேயே பெரும் சிக்கலைச் சந்தித்துவருகிறது அரசு. இதில் வோடஃபோன்-ஐடியாவையும் வாங்குவது எந்த பலனையும் தராது.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism