Published:Updated:

ஸ்னோடென் குறிப்பிட்ட பெகாஸஸ், இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவக் காரணம் என்ன?

ஆளும் பாரதிய ஜனதா அரசுதான் பெகாஸஸ் உதவியுடன் இதைச் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

வாட்ஸ்அப்-பெகாஸஸ்
வாட்ஸ்அப்-பெகாஸஸ்

"என்.எஸ்.ஓ நிறுவனம், தங்களது உளவுபார்க்கும் மென்பொருளை சவுதி அரேபிய அரசுக்கு விற்காமல் இருந்திருந்தால் பத்திரிகையாளர் ஜமால் கஸோகி ஒருவேளை காப்பாற்றப்பட்டிருப்பார்” என 2019 தொடக்கத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார், விக்கிலீக்ஸ் புகழ் எட்வர்ட் ஸ்னோடென். ஜமால் கஸோகி, அக்டோபர் 2018-ல் சவுதி அரேபிய இளவரசரின் ஆணையின் பேரில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர், பத்திரிகையாளர்.

ஜமால் கஸோகி
ஜமால் கஸோகி

ஸ்னோடென் குறிப்பிட்ட என்.எஸ்.ஓ நிறுவனத்தின் அந்த மென்பொருளின் பெயர், ’பெகாஸஸ்’. அந்த பெகாஸஸ்தான் தற்போது இந்தியப் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வரை அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி வேவுபார்த்ததாகச் சொல்லப்படுகிறது (Whatsapp Snooping Scandal).

இதை, 30 அக்டோபர் 2019 அன்று ஃபேஸ்புக் நிறுவனம் உறுதிசெய்தது. 2014ல் வாட்ஸ்அப் நிறுவனத்தை வாங்கிய ஃபேஸ்புக், அதில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்த, ஒரு தொடர்பிலிருந்து மற்றொரு தொடர்புக்கும் End to end encryption முறையைச் செயல்படுத்தியது. அதன்பிறகு, முழுக்க முழுக்க பாதுகாப்பான தொடர்பு முறையாக வாட்ஸ்அப் கருதப்பட்டாலும் இந்த End to end encryption முறையை ஹேக் செய்வதற்கான வழிமுறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துவந்தன. 2014-க்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இடையிலான சந்திப்புகள், இந்தியச் சூழலில் வாட்ஸ்அப் செய்திப் பரிமாற்றம் குறித்த பாதுகாப்பைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிவந்தது.

`கூடங்குளம் சைபர் தாக்குதலில் என்ன நடந்திருக்கும்?’ - விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன்

இதற்கிடையேதான், தற்போது பெகாஸஸ் ஊடுருவல் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. இதுதொடர்பாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் என்.எஸ்.ஓ நிறுவனத்துக்கு எதிராகத் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளது அந்த நிறுவனம். பெகாஸஸ் ஊடுருவல் குறித்து செப்டம்பர் 2019-லேயே மத்திய அரசுக்கு எச்சரிகைத் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ அல்லது பொது எச்சரிகையோ வெளியிடப்படாத நிலையில், ஆளும் பாரதிய ஜனதா அரசுதான் பெகாஸஸ் உதவியுடன் இதைச் செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடைய செயற்பாட்டாளர்கள்
பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடைய செயற்பாட்டாளர்கள்

தொடக்கத்தில், பீமா கோரேகான் வழக்கில் தொடர்புடைய செயற்பாட்டாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் கண்காணிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கடுத்து, இந்திய வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாட்ஸ்அப்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து மற்ற இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கைச் செய்தி அனுப்பியதுபோல, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கும் அந்த நிறுவனத்திலிருந்து செய்தி கிடைக்கப்பெற்றிருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்புப் பிரிவு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையின் கையெழுத்து இல்லாமல் அந்த நிறுவனம் பெகாஸஸை விற்பனைசெய்ய முடியாது.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

காங்கிரஸின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது வரை தாங்கள் யாருக்கு பெகாஸஸை விற்பனை செய்தோம் என்கிற விவரத்தை என்.எஸ்.ஓ நிறுவனம் வெளியிடவில்லை. இஸ்ரேலியப் பாதுகாப்புத்துறையின் கையெழுத்து இல்லாமல் அந்த நிறுவனம் பெகாஸஸை விற்பனை செய்யவும் முடியாது. அரசுபூர்வமான ஒப்புதல் தேவைப்படும் என்கிற நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடனான பிரதமர் மோடியின் வலுவான நட்பையும் சுட்டிக்காட்டுகிறது மத்திய காங்கிரஸ்.

மோடியுடன் நெதன்யாஹூ
மோடியுடன் நெதன்யாஹூ

2017-ம் வருடம் நெதன்யாஹூவுடனான கடற்கரை உரையாடல், கடந்த செப்டம்பரில் இந்தியா வந்த நெதன்யாஹூ உள்ளிட்ட நிகழ்வுகளும் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், “பெகாஸஸ் சாஃப்ட்வேரை இஸ்ரேலிய அரசு உளவுத்துறை உபயோகப்படுத்துவதுபோல, மற்ற நாடுகளின் அரசுகள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும்” என்று தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கண்காணிக்கப்படவேண்டிய மொபைல் போனின் GPS வசதி, மைக் மற்றும் கேமரா செயல்பாட்டைக் கையகப்படுத்திக்கொள்ள இந்த ஒருவார காலம் பெகாஸஸுக்குத் தேவை.

பெகாஸஸ் சாஃப்ட்வேர், குறிப்பிட்ட போனில் நிலையாகச் செயல்பட, குறைந்தது ஒருவாரம் ஆகும். இதன் ஒருவருட கால உரிமத்துக்கான தொகை 7-8 மில்லியன் டாலர்கள். கண்காணிக்கப்படவேண்டிய மொபைல் போனின் GPS வசதி, மைக் மற்றும் கேமரா செயல்பாட்டைக் கையகப்படுத்திக்கொள்ள இந்த ஒருவார காலம் பெகாஸஸுக்குத் தேவை.

ஷாலேவ் ஹூலியோ
ஷாலேவ் ஹூலியோ

இதைக் கண்காணிக்க, அந்த ஒருவார காலத்துக்கு பெகாஸஸ் நிபுணர் ஒருவரும் நியமிக்கப்படுவார். இந்த வழிமுறையைக் கொண்டுதான், கடந்த 2011ல் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த எல் சாப்போ என்னும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி, என்.எஸ்.ஓ உதவியுடன் கைது செய்யப்பட்டார். இதற்காக அப்போதைய மெக்சிகோ பிரதமர் ஃபெலிப் கால்ட்ரான் அந்த நிறுவனத் தலைவர் ஷாலேவ் ஹூலியோவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பெகாஸஸ் ஊடுருவலுக்கும் தங்களுக்குமான தொடர்புகுறித்து இந்திய அரசு எவ்வித அதிகாரபூர்வ செய்தியும் வெளியிடவில்லை என்றாலும், நீதித்துறை மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், வாடஸ்அப் செய்திப் பரிமாற்ற பாதுகாப்புக்கான நெறிமுறைகள் இந்தியாவில் வலுவானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பெகாஸஸ் ஊடுருவல் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்புகொண்டுவருவதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

NSO நிறுவனத்தின் வலைதளப் பக்கம்
NSO நிறுவனத்தின் வலைதளப் பக்கம்

சர்வதேச சைபர் ஊடுருவல், அமெரிக்கா போன்ற வல்லரசுகளை மட்டுமே இதுவரை பாதித்துவந்த சூழலில், இந்தியாவில் ஊடுருவத் தேவையற்றதொரு சூழலில் நுழையக் காரணம் என்ன? ஊடுருவியது யார்? என்கிற கேள்வியை முதன்மையாக எழுப்பியிருக்கிறது பெகாஸஸ் சர்ச்சை.

`பிரியங்கா காந்தி மொபைலுக்கும் அலர்ட் வந்தது!' - வாட்ஸ்அப் உளவு விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ்