Published:Updated:

"நம்புங்க உங்க பிரைவசிக்கு எந்த ஆபத்தும் இல்லை!"- விரிவாக விளக்கும் வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த விளக்கத்தை அளிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது வாடஸ்அப்.

ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் தளம் வாட்ஸ்அப். 2014-ல் 19 பில்லியன் டாலருக்கு வாட்ஸ்அப்பை வாங்கியது. டெக் உலகில் மட்டுமல்ல மொத்த பிசினஸ் உலகிலும் மிக டீலாக இது பார்க்கப்பட்டது. பெரிய வருமானம் எதுவும் ஈட்டாத வாட்ஸ்அப்பில் இத்தனை பெரிய தொகையை ஃபேஸ்புக் ஏன் முதலீடு செய்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இன்று வரை வாட்ஸ்அப் இலவச சேவையாகத்தான் இருந்துவருகிறது. தொடர்ந்து பிரைவசி மற்றும் டேட்டா பாதுகாப்பு சிக்கல்களில் ஃபேஸ்புக் சிக்கிவந்தாலும் வாட்ஸ்அப்பை அது எந்த விதத்திலும் பாதிக்காமலிருந்து வந்தது. காரணம், ஃபேஸ்புக்கின் சேவையாக இருந்தாலும் வாட்ஸ்அப் ஓரளவு தனித்தே செயல்பட்டது. ஆனால், இப்போது அந்த சூழல் மாறப்போகிறது என்பது வாட்ஸ்அப் சுற்றிய இத்தனை பரபரப்புக்கும் முக்கிய காரணம்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தது. இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது எனப் பயனர்களுக்கு பாப்-அப் மெசேஜ் ஒன்றை சில நாட்களுக்கு முன்பு காட்டியது வாட்ஸ்அப். அனைவருமே இந்த செய்தியைப் பெற்றிருப்பீர்கள். பலரும் 'Agree' கொடுக்கவும் செய்திருப்பீர்கள். அப்படிக் கொடுக்காமலிருந்தால் அடுத்த மாதம் முதல் வாட்ஸ்அப்பை உங்களால் பயன்படுத்த முடியாது. பிரைவசி கொள்கைகளில் செய்யப்பட்டிருக்கும் இந்த மாற்றங்களில் தகவல்களைத் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் மற்ற தயாரிப்புகளுடன் பகிர்ந்துகொள்வோம் எனச் சொல்ல மக்கள் பலரும் வாட்ஸ்அப்பின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிவருகின்றன. அகில இந்திய வணிகர் சங்கமான CAIT வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை தடைசெய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்குமளவு பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் புதிய பிரைவசி கொள்கைகள் குறித்து விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த விளக்கத்தை அளிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது வாடஸ்அப்.

20 கோடி இந்தியர்களின் டேட்டா... வாட்ஸ்அப், பேஸ்புக் நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தா?!
`Agree' கொடுக்கவில்லை என்றால் `Access' கட்... வாட்ஸ்அப்பின் புதிய பிரைவசி பாலிசி சொல்வது என்ன?

அதில் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனுப்பப்படும் மெசேஜ்களின் பிரைவஸி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப். மாறாக பிசினஸ் கணக்குகளுடன் நடக்கும் உரையாடல் குறித்தே புதிய கொள்கைகள் பேசுகின்றன என வாட்ஸ்அப் தெரிவிக்கிறது. புதிய பிரைவசி கொள்கை பற்றி அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களை விளக்க பிரத்யேக பக்கம் ஒன்றையும் தயார் செய்திருக்கிறது வாட்ஸ்அப்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப்
மாதிரி புகைப்படம்

அதில் முக்கியமான வாட்ஸ்அப் ஹைலைட் செய்ய நினைக்கும் விஷயங்கள் இவைதான்,

- நீங்கள் அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ்களை வாட்ஸ்அப்பாலும் சரி ஃபேஸ்புக்காலும் சரி பார்க்கமுடியாது. அதே போல அழைப்புகளும் ஒட்டுக்கேட்கப்படாது. இவை எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யப்படும். இந்த பாதுகாப்பை மாற்றும் எண்ணம் துளியும் எங்களுக்கு இல்லை.

- நீங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்புகிறீர்கள், அழைக்கிறார்கள் என்ற ரெகார்டை நாங்கள் ஸ்டோர் செய்வதில்லை. பொதுவாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இது போன்ற தகவல்களைச் சேகரித்து வைப்பார்கள். ஆனால், 200 கோடி வாடிக்கையாளர்களுக்கு இதைச் செய்வது வெறும் பிரைவசி ஆபத்தாக மட்டுமல்ல பாதுகாப்பு பிரச்னையாகவும் பார்க்கிறோம். அதனால் அதை நாங்கள் செய்வதில்லை.

- உங்கள் போனில் இருக்கும் கான்டக்ட்ஸை ஃபேஸ்புக்குடன் ஷேர் செய்ய மாட்டோம். உங்களிடம் கான்டக்ட் அனுமதி பெறுவது வேகமான மற்றும் நம்பகத்தன்மையான மெசேஜிங் சேவையை வழங்குவதற்குத்தான்.

- உங்கள் இருப்பிடத்தை எங்களால் பார்க்க முடியாது. நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு லொகேஷன் அனுப்புகிறீர்கள் என்றால் அதுவும் எண்டு-டு-எண்டு எனகிரிப்ட் செய்யப்படும். அதையும் எங்களால் பார்க்கமுடியாது.

- வாட்ஸ்அப் குரூப் பற்றிய தகவல்கள் பிரைவேட்டாகவே இருக்கும். Spam, Abuse போன்றவை எங்கள் சேவையில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் குரூப் பற்றிய தகவல்களைப் பெறுகிறோம். இதை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள மாட்டோம். அதில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் அனைத்தும் எண்டு-டு-எண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்டவைதான்.

- கூடுதல் பிரைவசிகாக சமீபத்தில் 'Disappearing Messages' வசதியை கொண்டுவந்தோம். அனுப்பிய பிறகு தானாக அழிந்துவிடும் வண்ணம் உங்களால் மெசேஜ் செய்யமுடியும்.

- உங்களை பற்றி என்னென்ன தகவல்கள் எங்களிடம் இருக்கிறது என்பதை நீங்களே எங்கள் ஆப்பில் பதிவிறக்கிப் பார்க்க முடியும்.

மேல் குறிப்பிட்ட எதிலும் டேட்டா பகிரப்படாது எனத் தெரிவித்திருக்கும் வாட்ஸ்அப் எப்போது டேட்டா பகிரப்படும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

- பிசினஸ் கணக்குகளுடன் உரையாடுவதும் சாதாரண கணக்குகளுடன் உரையாடுவதும் வெவ்வேறு விதங்களில் கையாளப்படும். பெரும் தொழில் நிறுவனங்கள் அவர்களது வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்துவார்கள். அதனால்தான் பாதுகாப்பான ஹோஸ்டிங் சேவைகளை ஃபேஸ்புக்கும் வழங்குகிறது. வாடிக்கையாளர்களுடன் வாட்ஸ்அப்பில் சாட் செய்ய, கேள்வி கேட்டு பதில் பெற, பில் ரெசிப்ட்களை அனுப்ப இந்த ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்துவார்கள். இப்படி நீங்கள் அவர்களுடன் உரையாடும் போது அந்தத் தகவல்கள் சேகரிக்கப்படலாம். அது ஃபேஸ்புக் மார்க்கெட்டிங்கிற்கு பயன்படுத்தப்படலாம். பயனர்களுக்கு ஒரு கணக்கு பிசினஸ் கணக்கு என்பது தெரியவேண்டும் என்பதற்காக அதைத் தெளிவாக சாட் தொடக்கத்தில் குறிப்பிடுகிறோம்.

- ஆன்லைன் வர்த்தக வசதிகளைப் பயன்படுத்தினால் தகவல்கள் பகிரப்பட வாய்ப்புகள் உண்டு. இன்று மக்கள் அதிக அளவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டுகின்றனர். ஃபேஸ்புக்கிலும் 'Shops' போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன. இதனால் பிசினஸ் கணக்குகளைத் தயாரிப்புகளை நேராக வாட்ஸ்அப்பிலேயே உங்களுக்குக் காட்ட வாய்ப்புகள் உண்டு. இதில் நீங்கள் ஷாப் செய்ய நேர்ந்தால் அந்த தகவல்கள் பெறப்பட்டு அதற்கேற்றவாறு உங்களுக்குத் தயாரிப்புகளும், விளம்பரங்களும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் காட்டப்படும். இது போன்ற வசதிகள் ஆப்ஷனல்தான். இவற்றை நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் தகவல்கள் எப்படி ஃபேஸ்புக்கிடம் பகிரப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

- நேரடியாக வாட்ஸ்அப்பில் பிசினஸ்களை தொடர்புகொள்ளும் வண்ணம் ஒரு பட்டனுடன் விளம்பரங்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம். நீங்கள் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்திருப்பவராக இருந்தால் அதை கிளிக் செய்து நேரடியாக அந்த நிறுவனத்துடன் உரையாடலாம். இப்படியான விஷயங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும். இதைப் பயன்படுத்தி உங்களுக்கேற்றவாறு விளம்பரங்களைக் காட்டும் ஃபேஸ்புக்.

இன்று வெளியிட்டிருக்கும் அந்தப் பக்கத்தில் இவைதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. புதிய கொள்கைகளில் ஃபேஸ்புக்குடன் தகவல் பகிரப்படும் என்றதும்தான் இந்தச் சர்ச்சை பெரியதாக வெடித்தது. அதில் இந்த அளவு விரிவான விளக்கம் இல்லை என்பதுதான் இந்தச் சந்தேகங்களுக்கும் குழப்பத்திற்கும் முக்கிய காரணம்.

முதல்லேயே இதெல்லாம் சொல்ல மாட்டீங்களா பாஸ்!
அடுத்த கட்டுரைக்கு