Published:Updated:

ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்... சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?

'தொடரும் ஆழ்துளை அவலங்கள்'
News
'தொடரும் ஆழ்துளை அவலங்கள்' ( ஹாசிப் கான் )

ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பது ஏன் இத்தனை சவாலாக இருக்கிறது?

Published:Updated:

ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்... சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?

ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பது ஏன் இத்தனை சவாலாக இருக்கிறது?

'தொடரும் ஆழ்துளை அவலங்கள்'
News
'தொடரும் ஆழ்துளை அவலங்கள்' ( ஹாசிப் கான் )

பண்டிகை காலம் என்பதையும் மறந்து மொத்த தமிழகமும் ஓர் உயிருக்காகப் பதைபதைத்துக்கொண்டிருந்தது. சுஜித் வில்சன் என்னும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 80 மணிநேரங்களுக்குப் பிறகுதான் வெளியில் எடுக்கப்பட்டான். முதலில் பல மீட்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும் சிறுவனை வெளியே மீட்க முடியாத நிலையே இருந்தது. இந்த இயந்திரங்கள் கைகொடுக்காததால் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து 3 மீட்டர் தொலைவில் சுமார் 1 மீட்டர் சுற்றளவில் ஒரு குழி தோண்ட முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக குழந்தை இறந்துவிட்டது தெரிந்தவுடன் வேறு வழியின்றி வீரர்கள் சுஜித் விழுந்த குழி வழியாகவே அவனின் உடலை உயிரற்ற நிலையில் இன்று அதிகாலை மீட்டனர்.

ஆழ்துளைக் கிணற்றிலில் விழுந்த சுஜித் மீட்புப் பணி
ஆழ்துளைக் கிணற்றிலில் விழுந்த சுஜித் மீட்புப் பணி
தே.தீட்ஷித்

இந்தச் சம்பவம் ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தியிருக்க, மறுபக்கம் நிலவுக்குச் செயற்கைக்கோள் அனுப்பும் ஒரு நாட்டிடம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கத் தொழில்நுட்பம் இல்லையே என்ற கோபமும் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கோபத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இந்த அவலம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தாலும் ஏன் இதற்கான ஒழுங்கான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.

ஏன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்பது இன்றும் பெரும் சவாலாக இருக்கிறது?

'செவ்வாய் பரப்பைப் பற்றி நமக்குத் தெரிந்தளவுக்குக்கூட ஆழ்கடல் பற்றி நமக்குத் தெரியாது' என்று அறிவியல் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. உண்மையில் நம் ஆழ்கடல் அனுபவங்கள் விண்வெளி அனுபவங்களைவிட குறைவுதான். இதுவரை விண்வெளிக்கு மனிதன் சென்றதைவிட கீழ் நோக்கி பூமிக்குள் பெரும் ஆழத்துக்குச் சென்ற நிகழ்வுகள் குறைவு. மேல்நோக்கி விண்வெளிக்குச் செல்லும்போது காற்றுமண்டலங்களையும் வெற்றிடங்களையும் (Vacuum) கடந்தால் போதும். ஆனால், கீழ் நோக்கிச் செல்லும்போது தண்ணீர் அல்லது மணல், பாறைகள் போன்றவற்றைக் கடந்து செல்ல வேண்டும். உள் செல்ல செல்ல மேலே இருக்கும் இவற்றின் அழுத்தமும் கூடிக்கொண்டே இருக்கும். அதுதான் பெரும் சிக்கல்.

சுஜித் மீட்புப் பணி
சுஜித் மீட்புப் பணி

கிலோமீட்டர் கணக்கில் ஆழம் செல்வதில் சிக்கல் இருக்கும் சரி, சில அடிகள் கூடவா செல்ல முடியாது என்ற உங்கள் கேள்வி புரிகிறது. சொல்லப்போனால் 40,000 அடிகள் (Kola Super-deep Borehole) வரை மனிதன் துளையிட்டுச் சென்று இருக்கிறான். குழி தோண்டுவதற்கு மனிதனுக்குத் தனியாகச் சொல்லித் தர வேண்டுமா என்ன... அதனால் அதில் பெரும் சிக்கல்கள் ஏற்படாது. இப்படித் தோண்டிய குழிகளில் விழும் குழந்தைகள் மீட்பதில்தான் பிரச்னையே வருகிறது.

பெரும்பாலும் இப்படியான ஆழ்துளைக் கிணறுகள் மிகவும் குறுகிய சுற்றளவு கொண்டதாகவே இருக்கின்றன. அதனால் இதற்குள் விழுந்து சிக்குவதற்கான வாய்ப்புகள் சுமார் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் சூழலால் இந்தக் கிணறுகள் பல மீட்டர் ஆழம் வரை தோண்டப்படுகின்றன. இதனால்தான் நல்ல ஆழத்தில் குழந்தைகள் சிக்கிக்கொள்கின்றன, மீட்பதும் கடினமாக இருக்கிறது.

சிறுவன் சுஜித் மீட்புப் பணி
சிறுவன் சுஜித் மீட்புப் பணி

இந்தப் பிரச்னை புதிதல்ல என்பதால் ஏற்கெனவே பல பொறியியல் மாணவர்கள் மற்றும் தன்னார்வ கண்டுபிடிப்பாளர்கள் இதற்கு சில தீர்வுகள் கூறியிருக்கின்றனர். இதற்கென்றே பிரத்யேக எந்திரங்களும் ரோபோக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றில் இருக்கும் சிக்கல்களை சுஜித் மீட்பில் நடந்த நிகழ்வுகளை வைத்தே சொல்லிவிட முடியும்.

நான்கு தன்னார்வ குழுக்கள் தங்களின் எந்திரங்களுடன் சுஜித்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இது அனைத்துமே கிட்டத்தட்ட ஒரே செயல்பாடு கொண்டவையே. நேராக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்று குழந்தையைத் தூக்கிவரும் வகை இயந்திரங்கள். ஒன்றில் கயிற்றைக் குழந்தையின் கைகளைச் சுற்றிக் கட்டவேண்டியதாக இருக்கும். இன்னொன்றில் இயந்திரமே குழந்தையைத் திடமாகப் பிடித்து மேலே கொண்டுவரும். மற்றொன்றில் குழந்தை இயந்திரத்தில் இருக்கும் கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும் நிலை இருக்கும்.

சுஜித்தை மீட்கும் முயற்சிகள்
சுஜித்தை மீட்கும் முயற்சிகள்

ஆழத்தில் சரியான காற்று வசதிகள் இல்லை என்பதால் வெப்பம் சற்றே அதிகமாக இருக்கும். முதல் மீட்பு இயந்திரத்தை இறக்கவே மூன்று மணிநேரம் ஆகிவிட்டதால் சுஜித்துக்கு அதற்குள் நன்றாக வியர்த்திருக்கிறது. இதனால் வழுவழுப்பான அந்த வியர்வை படிந்த பிஞ்சு கைகளில் முடிச்சுகள் போட முடியவில்லை. இதனால் முதல் இயந்திரத்தால் குழந்தையை மீட்க முடியவில்லை.

அடுத்தது 'Gripper' மூலம் குழந்தையின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும் இயந்திரம். ஈர்ப்பதுடனான மணல் மற்றும் கை மடங்கியிருந்த காரணத்தாலும் குழந்தை சற்றே நன்றாகச் சிக்கிக்கொண்டதாலும் இந்த இயந்திரத்தாலும் மீட்க முடியாமல்போனது.

அடுத்த இயந்திரம் அளவில் பெரியதாக இருந்ததால் குழந்தையை மீட்க முடியாமல் வெளிவந்தது. ஆழம் செல்ல செல்ல குழியின் சுற்றளவு குறுக்கிக்கொண்டே இருந்திருக்கிறது. ஏற்கெனவே உள்ளே சிக்கி மனதளவில் பாதிப்புகள் இருக்கும் என்பதாலும் இரண்டு வயது மட்டுமே ஆகிறது என்பதாலும் கயிற்றைத் தானாகப் பிடிக்கும் வலிமை சுஜித்திடம் இருக்காது. எனவே, குழந்தையின் திறனை நம்பிய வேறொரு இயந்திரத்தையும் பயன்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்ததாக வேக்யூம் பம்பை பயன்படுத்தி வெற்றிடத்தை ஏற்படுத்தி குழந்தையை மேலே இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த முயற்சி தோல்வியடைந்ததுடன், குழந்தை 60 அடி ஆழத்திற்கு நழுவிச் சென்றது. அடுத்தடுத்த முயற்சிகளும் பலன் அளிக்காமல் போக நழுவி கீழே சென்றுகொண்டே இருந்தான் சுஜித்.

சமூக வலைதளங்களில் காற்றடைக்காத பலூன் ஒன்றை உள்ளே அனுப்பி பின்பு அதைப் பெரிதாக்கி குழந்தையைத் தாங்கும் வண்ணம் வைத்து அப்படியே மேலே தூக்கிவரலாம் என்ற ஐடியாக்களையும் பார்க்க முடிகிறது. இதை, சில பொறியியல் மாணவர்களும் முன்பே கூறியிருக்கின்றனர். ஆனால், கரடுமுரடான குழியில் அந்தப் பலூனுடன் குழந்தையை மேலே தூக்கும்போது பலூனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைக்கு அது மேலும் ஆபத்தாக அமையும் என்பதை நாம் கவனிக்க மறக்கிறோம். மேலும், குழந்தை ஒரு குறுகிய குழியில் நன்றாகச் சிக்கிக்கொண்டிருப்பதால் இது சரியாக வராது. இப்படியான முழுமை பெறாத ஐடியாக்களைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தாகவே முடியும்.

சீனாவில் விரைவில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி அந்தத் தொழில்நுட்பம் இங்கு இல்லையா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுவதையும் பார்க்க முடிகிறது. முதலில் சில வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் குறிப்பிடுவதைப் போல அந்தக் குழந்தை 300 அடி ஆழத்தில் சிக்கவில்லை. 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் 33 அடி ஆழத்தில்தான் சிக்கியது. அங்கும் கயிறு கட்டியே குழந்தை மீட்கப்பட்டது. அதற்கான சூழல் அங்கிருந்திருக்கிறது. குழி இதைவிடவும் சற்றே அகலமாக இருந்திருக்கிறது. ஆனால், சுஜித் விழுந்திருக்கும் கிணற்றின் சூழலே வேறு. கிட்டத்தட்ட இதே முறை முயற்சி செய்யப்பட்டு தோல்வியே மிஞ்சியது. அதே சீனா இயந்திரம் வந்திருந்தாலும் இதே நிலைதான் என்கின்றனர் களத்தில் நின்ற தன்னார்வ கண்டுபிடிப்பாளர்கள். இதனால் சீனாவுடனான ஒப்பீடு தேவையற்றது.

இதுமட்டுமல்லாமல் இந்தியாவைச் சுற்றிலும் இன்னும் சில பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் இறுதி வருட புராஜெக்ட்டாக இவை போன்ற எந்திரங்களை வடிவமைத்திருக்கின்றனர். இவை அனைத்தும் பெயரளவில் ப்ரோடோடைப்களாக மட்டுமே இருப்பதுதான் பிரச்னை. அனைத்துமே அவர்கள் வைத்திருக்கும் சோதனைக் களத்தில் நன்றாகவே இயங்கும். ஆனால், உண்மை சூழல் அப்படியே சோதனை செய்த சூழல் போலவே அமையாது. மற்ற இடர்ப்பாடுகளும் தடங்கல்களும் வரும். அப்படி வரும்போதுதான் சொதப்புகின்றன இந்த எந்திரங்கள்.

பொறியியலில் 'Problem Statement' என்று சொல்வர். அதை மையமாக வைத்துதான் தீர்வுகள் காணப்படும். இதுபோன்ற ஆழ்துளைக் கிணறு மீட்புகளில் இந்த 'Problem Statement' ஒரே மாதிரியாக இருக்காது. சுஜித் மீட்பில் வந்த தடைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். குழியின் சுற்றளவு ஆழம் செல்ல செல்ல குறுகியிருக்கிறது. இதைச் சமாளிக்க சில இயந்திரங்களிடம் பதில் இல்லை. ஈரப்பதம், வியர்வை போன்ற சாதாரண விஷயங்கள்கூட தடையாக இவற்றுக்கு அமைந்திருக்கின்றன. இதில் மழை வேறு. ஒவ்வோர் ஆழ்துளை மீட்பிலும் சூழல் ஒவ்வொரு மாதிரி இருப்பதுதான் பொதுவான மீட்பு இயந்திரம் என்று ஒன்றைக் கண்டுபிடிக்க பெரும் சவாலாக இருக்கிறது.

ஆனால், அதற்காக இதற்குத் தீர்வென்பதே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. எந்த ஓர் அறிவியல் தயாரிப்பும் காலம் செல்ல செல்ல அனுபவம்கூடக் கூடத்தான் மெருகேறும். இதற்காகத்தான் வெவ்வேறு சூழல்களை 'simulate' செய்து சோதனைகள் மேற்கொள்கின்றனர். இதில் நடக்கும் தவறுகளைக் கண்டுபிடித்து அதற்கேற்ப எந்திரங்கள் மாற்றி வடிவமைக்கப்படுகின்றன. ஒரு வணிக இயந்திரத்துக்கு இவையெல்லாம் நிச்சயம் நடக்கும். அதற்காகத் தனியாகச் செலவும் செய்யப்படும். ஆனால், இது போன்ற சோதனைகளைத் தன்னார்வலர்களால் செய்ய முடியாது. அவர்களால் இயன்ற சோதனைகளை மட்டுமே செய்திருப்பர். இதனால்தான் இந்த அனைத்து சூழலுக்குமான முழுமையான தீர்வாக இவை அமையாது.

இதற்கென சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டால்தான் முழுமையான தீர்வு என்று கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 80% சூழல்களில் சரியாக வேலைசெய்யும் ஓர் இயந்திரம் கிடைத்துவிட்டாலே அது ஒரு மைல்கல்தான். செயற்கை நுண்ணறிவு தொடங்கி பல தொழில்நுட்பங்கள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன. பேசிக் எந்திரங்களாக இருக்கும் இவற்றுக்கும் இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பங்களிப்பு இது போன்ற எந்திரங்களுக்கும் வந்துசேர வேண்டும் என்றால் அரசு உதவி நிச்சயம் தேவை. ஏனென்றால் இது வணிகத்துக்கான பொருள் கிடையாது.

பொறியியல் மாணவர்களுக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் 'ஹேக்கதான்' போட்டிகள் நடப்பது வழக்கம். அதில் வங்கி தொடங்கி அரசு மேலாண்மை வரை அனைத்துத் துறைகளிலும் இருக்கும் முக்கியப் பிரச்னைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். அதில் சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். அப்படி இதற்கும் ஒரு தேசிய அளவிலான போட்டி ஒன்று வைத்துச் சிறந்த இயந்திரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை மேலும் மெருகேற்றும் வாய்ப்பையும் நிதியையும் அரசு தந்தால் இன்னும் நல்ல ஒரு இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியும் என்பது என் நம்பிக்கை. நேராக விழுந்த ஆழ்துளை கிணற்றின் வழியே குழந்தையை மீட்பதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நேரமும் குறைவாகதான் எடுக்கும்.

 3 மீட்டர் தூரத்தில் இன்னொரு குழி
3 மீட்டர் தூரத்தில் இன்னொரு குழி

ஆனால், அப்படி நேராக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்று காப்பாற்ற முடியாத சூழல் இருந்ததால் அருகில் சுமார் 3 மீட்டர் தூரத்தில் இன்னொரு குழி தோண்டப்பட முடிவுசெய்யப்பட்டது. இதுதான் அதிக நேரத்தை எடுத்தது. மிகவும் கடுமையான பாறைகள் இருப்பதால் மிகவும் குறைவான வேகத்தில் இந்தப் பணி நடந்தது. இரண்டு சக்தி வாய்ந்த ரிக் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும் இந்தப் பாறைகளைக் குடைவது பெரும் சவாலாகவே அமைந்தது. துளையிடும் பற்கள் கூர் இழக்கும் அளவுக்கு இந்தப் பாறைகள் வலிமையாக இருந்தன. அதனால் போர்வெல் கொண்டே மூன்று சிறிய துளைகள் இட்டு அதில் மூன்று பேர் செல்லும் அளவுக்குப் பெரிய குழியாக ரிக் எந்திரம் மூலம் மாற்றும் பணி நடந்தது. வெடிபொருள்கள் பயன்படுத்தினால் இன்னும் வேகமாக இதைச் செய்திருக்க முடியும்தான். ஆனால், அந்த அதிர்வுகள் சுஜித் சிக்கிக்கொண்டிருக்கும் குழியைப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் முடிந்தளவு மென்மையாகவே இந்தக் குழி தோண்டப்பட்டது. இதற்கு மாற்று வழிகளும் இல்லை.

தொடர்ந்து புதிய ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட சமயத்தில்தான் சுஜித் விழுந்த கிணற்றுக்குள் இருந்து தூர்நாற்றம் வீசத் தொடங்கியது. சுஜித் உயிரோடு இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்தியதும் குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் வழியாகவே நவீன உபகரணங்கள் மூலம் சுஜித்தின் சடலத்தை மீட்டுள்ளனர். இது தமிழகம் மட்டுமன்றி மொத்த நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுஜித்
சுஜித்

மீட்பு இயந்திரங்களைவிடவும் இந்த விபத்துகளுக்கு எளிய தீர்வு உண்டு. அது ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதுதான். எந்த ஒரு விஷயத்திலுமே வரும்முன் காப்பதுதான் சிறந்த தீர்வாக முடியும். ஆனால், பேனர் கலாசாரத்தை நிறுத்த சுபஸ்ரீ, போர்வெல் கிணறுகளை முறையாக மூட சுஜித் என பிரச்னைகளை கண்டறியவும் தீர்க்கவும் உயிர்கள் பலிகேட்கும் மனநிலையே இங்கு நிலவுகிறது. இல்லையென்றால் 'பேனர்தானே, போர்வெல் தானே' என்று கடந்துபோய்விடுகிறோம். இப்படியான அலட்சியம்தான் பெரும் வியாதியாக இன்று இருக்கிறது. வாகன விபத்துகள் போன்ற மற்ற விபத்துகளுக்கும் இது போன்ற ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் விபத்துகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இது முற்றிலும் அலட்சியத்தில்தான் நடக்கிறது. இவற்றை முற்றிலுமாக தவிர்க்க முடியும். இத்தனை உயிர்கள் குடித்தும் இந்த ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் விடப்படுகிறது என்றால் யாரைக் குறைசொல்வது? ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். இதில் குழந்தையைப் பெற்றோர்கள்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வாதத்தைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் துளியும் நியாயமே இல்லாத அபத்தமான விவாதங்கள்.

இப்படியான மூடாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு ஆற்ற முடியும். இன்று அனைவர் கையிலும் மொபைல் இருக்கிறது. இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டால் அவற்றைப் பற்றி புகார் செய்ய ஒரு சிறப்பு ஆப்பை உருவாக்கலாம். இதை அரசு செய்தால் நன்று. இல்லை தன்னார்வ குழுக்களாலேயே இவற்றைச் செய்ய முடியும். இந்தக் கிணறுகளின் துல்லியமான இருப்பிடத்தைக்கூட இன்று மொபைலிலிருந்து ஷேர் செய்ய முடியும். இது ஒரு சின்ன ஐடியாதான். இதுபோன்ற பல வழிமுறைகளால் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறியப் பயன்படுத்தலாம்.

இந்த ஆழ்துளைக் கிணறுகள் மூடினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. மழை, காற்று போன்றவற்றால் பாதிக்காத வண்ணம் முறையாக அவை மூடப்படவேண்டும். எப்போதுமே நாம் அழுத்தம் தரும்போதுதான் நல்ல தீர்வுகளுடன் தொழில்நுட்பம் நம்மிடம் திரும்பிவரும். அந்த அழுத்தத்தைத் தரவேண்டிய கடமை தற்போது நமக்கும் இந்த அரசுக்கும் இருக்கிறது.