Published:Updated:

தலதளபதி பாய்ஸ், லைக்ஸ், வியூஸ விடுங்க... இந்த 'ரியாக்ஷன் வீடியோ' செமல்ல?!

ரியாக்ஷன் வீடியோ
ரியாக்ஷன் வீடியோ

திடீரென வைரலாகும் இந்த வீடியோக்களின் பின்னணி என்ன?

ஃபிலிம், டிஜிட்டல் என மாற்றங்களைக் கண்டுகொண்டே இருக்கும் கேமராக்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அனைவருக்குமான பொதுவுடைமை ஆகியிருக்கிறது. மொபைல்களிலேயே எளிதாக நல்ல வீடியோக்கள் எடுக்க முடியும் என்பது கிரியேடிவ்வான மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம். டிக் டாக் தொடங்கி அனைத்து டிஜிட்டல் பொதுவெளிகளிலும் இந்த கிரியேட்டர்களைப் நம்மால் பார்க்க முடியும். இதில் புகழுடன், வருமானமும் பெற்றுத்தரும் முக்கிய தளங்களில் யூடியூப்பும் ஒன்று. நம்மூர் itisprashanth முதல் டெய்லர் ஷிஃப்ட் வரை இங்கே கல்லாகட்டுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் இப்போது புதிதான ஒரு கூட்டமும் சேர்ந்துள்ளது. அதுதான் 'ரியாக்ஷன்' வீடியோ சேனல்கள்.

ஹிட் அடித்த சேனல்கள் பெரும்பாலும் இந்தியப் பார்வையாளர்களையே கொண்டுள்ளது. ஆனால், எதுவும் இந்திய சேனல்கள் கிடையாது.

'ரியாக்ஷன் வீடியோவா, அப்படினா என்ன?' என்று கேட்பவர்களுக்கு ஒரு குட்டி விளக்கம். இதுவரை பார்க்காத மிகவும் பிரபலமான வீடியோவையோ, நிகழ்வையோ பார்க்கும்போது எந்த மாதிரியாக ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை பதிவு செய்வதே இந்த வீடியோக்கள். படத்தின் டிரெய்லர் தொடங்கி கிரிக்கெட்டே தெரியாதவர்கள் தோனியின் இன்னிங்ஸை பார்ப்பதுவரை இந்த வீடியோக்கள் பல ரகம். இதைச் செய்துதான் கடந்த ஓரிரு ஆண்டுகளில் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கின்றன இந்த சேனல்கள். நன்றாகக் கவனித்தால் ஹிட் அடித்த சேனல்கள் பெரும்பாலும் இந்தியப் பார்வையாளர்களையே கொண்டுள்ளது. ஆனால், எதுவும் இந்திய சேனல்கள் கிடையாது. இதனாலேயே வெறும் ஹாலிவுட் டிரெய்லர்கள், வீடியோக்களுக்கு ரியாக்ட் செய்துகொண்டிருந்த அமெரிக்க சேனல்களின் பார்வை இந்தியா பக்கம் திரும்பியிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்த்தால் உங்களுக்கு இது புரிந்துவிடும். 'OUR STUPID REACTIONS' என்ற ஒரு அமெரிக்க யூடியூப் சேனல் இருக்கிறது. தொடங்கி 10 மாதங்கள்தான் இருக்கும். முதல் மூன்று மாதங்கள் கேப்டன் மார்வெல், அலாதீன், லயன் கிங் எனப் பிரபல ஆங்கில படங்களின் டிரெய்லர்களை பார்த்தே ரியாக்ஷன் வீடியோ வெளியிட்டுவந்திருக்கின்றனர் இவர்கள். இந்த வீடியோக்களுக்கு வந்ததும் சொற்ப வியூஸ்களே. அப்போது எதேச்சையாக அப்போது வெளியான 'கல்லி பாய்' என்னும் இந்திப் படத்தின் டிரெய்லரைப் பார்த்து ரியாக்ட் செய்திருக்கின்றனர். லட்சங்களில் வியூஸ் வந்திருக்கிறது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

இது ஏதோ அதிர்ஷ்டத்தில் நடந்துவிட்டது என அவர்கள் மீண்டும் எப்போதும்போல ஹாலிவுட் டிரெய்லர்களுக்கு ரியாக்ஷன் வீடியோ வெளியிட்டுக்கொண்டிருந்தனர். அவை எதுவும் சிறப்பாகச் சென்றுசேரவில்லை. பின்பு 'மணிகர்ணிகா' படத்தின் டிரெய்லருக்கு ரியாக்ட் செய்ய அதுவும் லட்சங்களில் மக்களால் பார்க்கப்பட்டது. இதை உணர்ந்த அவர்கள் அன்றிலிருந்து இந்தியர்களைக் குறிவைத்தே ரியாக்ஷன் வீடியோக்கள் வெளியிட்டுவருகின்றனர். இந்தக் குறுகிய காலத்தில் சுமார் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றிருக்கிறது இந்த சேனல். இது வெறும் தொடக்கம்தான். இந்தியப் பார்வையாளர்களை அதிகம் பெற்றிருக்கும் எல்லா ரியாக்ஷன் சேனல்களுமே கிட்டத்தட்ட இப்படித்தான் தொடங்கப்பட்டிருக்கின்றன.

Jaby koay என்பவரின் சேனலும் அப்படியே. இப்போது மில்லியன் சப்ஸ்கிரைபர்களுக்கு மேல் பெற்றிருக்கும் இந்தச் சேனலுக்கு யஷ், அதிதி ராவ் ஹைதரி போன்ற பிரபலங்கள் ஸ்கைப் மூலம் இன்டர்வியூ கொடுக்கும் அளவுக்கு இவர்கள் பிரபலம்.

இந்தப் புதிய ட்ரெண்டுக்கு முக்கிய காரணங்கள் சில இருக்கின்றன. அதில் முக்கியமானது இந்தியாவின் மக்கள்தொகை. இணைய சேவை எல்லாருக்குமான ஒன்றாக ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 60 கோடி இணையப் பயன்பாட்டாளர்கள் இங்கு இருக்கின்றனர். 100 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட முதல் யூடியூப் சேனல் என்ற பெருமையை டி-சீரிஸ் தட்டிச் சென்றது இதனால்தான். தற்போது யூடியூப்பின் மிகப்பெரிய சந்தை இந்தியாதான். அப்படியிருக்கும்போது இந்தியர்களின் அபிமானம் கிடைப்பதை வரமாக நினைக்கின்றன இந்த சேனல்கள். இந்தியாவிலிருந்து வரும் வியூஸிற்கும், மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் வியூஸுக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. ஆயிரம் வியூஸுக்கு அங்கு வருவதில் மூன்றில் ஒரு பங்கு விளம்பர வருமானத்தையே பெறுகின்றன இந்த சேனல்கள். ஆனால் வருமானத்தை விடவும் புகழ் முக்கியம்தானே. இத்தனை வியூஸ், இத்தனை சப்ஸ்கிரைபர்கள் என்பதை தங்களது பிராண்ட் வேல்யூவாகப் பார்க்கின்றன இந்த சேனல்கள். அதை பெற்றுத்தருகிறது இந்தியா. ஆனால், இந்தியாவில் வெளியாகும் அனைத்து வீடியோக்களுமா ஹிட் ஆகிறது?

'லாஜிக்கா, அது எங்க கிடைக்கும்?' என்கிற மாதிரி எடுக்கப்படும் நம் படங்களுக்கு அவர்கள் கொடுக்கும் ரியாக்ஷன் பல நேரங்களில் மிகவும் நகைச்சுவையாகவே இருக்கும். இப்படி ஜாலியாக, ஆத்மார்த்தமாக (சில நேரங்களில் சென்டிமென்ட் மழை தூவி) ரியாக்ஷன் கொடுக்கும் சேனல்களே சோபிக்கின்றன. ஆனால், வேறு ஒரு முக்கிய காரணியும் இருக்கிறது. பெரும்பாலான வீடியோக்கள் இந்தியாவில் நடப்பவற்றை வெளிநாட்டுக்காரர்கள் (வெள்ளையர்கள் என்றே சொல்லலாம்) எப்படிப் பார்க்கின்றனர், எப்படி ஆச்சர்யப்படுகின்றனர், கலையை எப்படிப் பாராட்டுகின்றனர்(?!) என்பதைப் பார்த்து பெருமிதம் கொள்ளும் நோக்கிலேயே இந்தியர்களால் பார்க்கப்படுகிறது. உளவியல் ரீதியில் பார்த்தால் நம் தினமும் சுற்றும் விஷயங்களுக்கு இவர்கள் கொடுக்கும் அங்கீகாரத்தை பார்க்கவே இங்கே பார்வையாளர்கள் குவிகின்றனர். ஒருமுறை பார்த்துவிட்டால் போதும் ஹோம் பேஜ் முழுவதும் இதைப்போன்ற வீடியோக்கள் நிரம்பிவிடும் யூடியூப். வீடியோக்கள் எடுப்பவர்களுக்கும் இந்த வரவேற்பால் இந்தியா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டாகிறது. இந்தியர்களுடன் கனெக்ட் ஆக முடிந்ததை அவர்கள் செய்கின்றனர்.

'நம்ம தளபதியின் ஸ்டைல் இவர்களுக்கும் பிடிக்குதுடா', 'நம்ம தல கெத்து இவர்களுக்கும் தெரியுதுடா' என்ற ரசிகப் பாசமும் சில நேரங்களில் இதற்குக் காரணமாக இருக்கும். சொல்லப்போனால் 'ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற படங்களும், சில பொதுவான கருத்துகளும் கொண்டு இந்தியாவை உற்றுநோக்கும் அவர்களுக்கு இங்கு உண்மையில் இருக்கும் நிலவரம் பார்க்க வியப்பாகத்தான் இருக்கும். இதையும் நான் சொன்னால் நம்பமாட்டார்கள், இதையும் கார்ல் ராக்ஸ் என்னும் வெளிநாட்டு யூடியூப் கிரியேட்டர்தான் கூறுகிறார்.

Vikatan

இதில் அப்படி என்ன தவறு இருக்கிறது, வெளிநாட்டுக்காரர்கள் நம் இந்தியாவின் பெருமை அறிவது நல்லதுதானே என நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இதில் தவறென்று எதுவுமே இல்லைதான். ஆனால், இந்த சேனல்கள் பெரும் வியூஸின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது நம் இந்திய மக்களின் மனநிலை தெளிவாக வெளிப்படுகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் விஷயங்களை நாம் என்னதான் மெச்சினாலும், வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் பாராட்டி செர்டிஃபிகேட் கொடுத்தால்தான் மனம் குளிர்கிறது. இந்த மனநிலையில்தான் சிக்கல் இருக்கிறது. 'இனி மொத்த உலகமே ஒரு சிறிய கிராமம்' என உலகமயமாதல் பற்றி வாய்நீள பேசினாலும், மேற்கத்திய கலாசாரமும் கலையும் இங்கு ஊடுருவிய அளவுக்கு நமது கலாசாரமும், கலையும் அங்கு ஊடுருவவில்லை என்பதே நிதர்சனம். இது எப்படி முழுமையான உலகமயமாதல் ஆகும், இந்தப் பரிமாற்றம் ஓரளவாவது இப்போதுதான் தொடங்கவே செய்திருக்கிறது. இந்தப் பரிமாற்றம் இல்லாததால் எதைப் பார்த்தாலும் அவர்களுக்குப் புதிதாகத்தான் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்களுக்கு உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை வாழும் நாட்டைப் பற்றி இருக்கும் அறியாமையைப் பறைசாற்றும் எடுத்துக்காட்டாகவே இந்த ரியாக்ஷன் வீடியோக்களைப் பார்க்க முடிகிறது. இப்படியிருக்க அவர்களின் ரியாக்ஷனைப் பார்த்து நாம் பெருமிதம் அடைந்துகொண்டிருக்கிறோம்.

என்னிடம் இருப்பது ஒரே கேள்விதான். நம் இந்தியர்கள் ஹாலிவுட் படங்களுக்கு ரியாக்ஷன் வீடியோ வெளியிட்டால் அமெரிக்க மக்கள் பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

அடுத்த கட்டுரைக்கு