Published:Updated:

அரசியல் விளம்பரங்கள் குறித்து முரண்படும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர்... எது சரி? #LongRead

Mark Zuckerberg and Jack Dorsey

அரசியல் விளம்பரங்களை சமூக வலைதளங்கள் அனுமதிக்க வேண்டுமா... ஃபேஸ்புக், ட்விட்டர் சொல்வதென்ன?

இன்று அரசியல்வாதிகளின் முக்கிய பிரசாரக் களம் எது தெரியுமா... சமூக வலைதளங்கள்தான். ஃபேஸ்புக் மட்டும் இல்லையென்றால் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகவே ஆகியிருக்கமாட்டார் என்று பலரும் சொல்வதைக் கேட்கமுடியும். `கேம்பிரிட்ஜ் அனலிடிகா’ என்னும் நிறுவனம் அமெரிக்க வாக்காளர்களின் ஃபேஸ்புக் மற்றும் இன்னும் சில தகவல்களைச் சேகரித்து அதன்மூலம் டொனால்டு ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில் உதவிய விவகாரம், பெரும் சர்ச்சையாக அப்போது வெடித்தது. இந்தப் பிரசாரங்கள் வாக்காளர்களை தரம்பிரித்து யாரிடம் என்ன சொன்னால் வாக்கு கிடைக்கும் என்பதை ஆராய்ந்து குறிவைத்து நடத்தப்பட்டன. இது பிரச்னையில்லை; இதில் பலவும் வதந்திகளும், வெறுப்புணர்வைத் தூண்டும் பொய் பரப்புரைகளும் என்பதுதான் சிக்கலே.

டொனால்டு ட்ரம்ப் | Donald Trump
டொனால்டு ட்ரம்ப் | Donald Trump
Vikatan

அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலும் தற்போது நெருங்கிவிட்டது. ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரு கட்சி வேட்பாளர்களுமே இப்போதே தங்களது பிரசாரங்களை தொடங்கிவிட்டனர். இப்படியிருக்க ஃபேஸ்புக் ஒரு முக்கிய அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. தங்கள் தளத்தில் கொடுக்கப்படும் அரசியல் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை ஃபேஸ்புக் சோதிக்காது என்பதுதான் அது.

``டெக் நிறுவனங்கள், 100 சதவிகிதம் உண்மை என்று கணிக்கும் விஷயத்தை மட்டும்தான் பதிவுசெய்ய வேண்டும் என்ற கருத்துச் சுதந்திரமற்ற உலகில் வாழ, பெரும்பாலான மக்கள் விரும்பவே மாட்டார்கள். இந்த முடிவு சரியானதுதான்" என்று எடுத்துரைத்தார் மார்க் சக்கர்பெர்க். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று நிலையாக இருக்கிறார் அவர். இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. `செய்த தவற்றையே திரும்பவும் செய்கிறது ஃபேஸ்புக்' என அமெரிக்க ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது.

Mark Zuckerberg
Mark Zuckerberg

`ஆனால், யார் உண்மையைப் பேசுகிறார்கள், யார் பொய் பரப்புரைகளை மேற்கொள்கிறார்கள் என்பதை முடிவு செய்யவேண்டியது மக்களே. நாங்கள் உண்மை என்று நம்பும் விஷயத்தை மட்டும்தான் விளம்பரமாக மக்களிடம் எடுத்துச்செல்வோம் என்றால் அதுவுமே ஒருபக்கம் சாய்வதாகவே இருக்கும்' என்பதே ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு.

இதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது ட்விட்டர். இதுகுறித்து அறிவித்த ட்விட்டரின் CEO ஜேக் டார்சி ``ட்விட்டரில் இனி அரசியல் விளம்பரங்கள் கூடாது என்று நாங்கள் முடிவுசெய்துள்ளோம். ஒருவரின் அரசியல் கருத்துகள் தானாக மக்களைச் சென்று சேரவேண்டும். அதைப் பணம் கொடுத்து வாங்குவது சரியாகாது” என்றார்.

``எந்த அரசியல்வாதியின் கருத்துகளை பயனாளர்கள் பெறவேண்டும் என்பதை அவர்களே முடிவுசெய்ய வேண்டும். அதாவது follow அல்லது retweet மூலம் வரும் அரசியல் கருத்துகள் மட்டும்தான் அவர்களை சென்றுசேர வேண்டும். மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் குறிவைத்து அரசியல் கருத்துகளை மக்களிடம் திணிக்கக் கூடாது. விளம்பரங்களில் பணம் கிடைக்கும் என்பதற்காக இந்த நிலைப்பாட்டை நாங்கள் மாற்றிக்கொள்ள முடியாது.

எப்போதையும்விட இணைய விளம்பர யுக்திகள் சக்திவாய்ந்ததாகவும், பலரையும் சென்றுசேரும் ஒரு விஷயமாகவும் மாறிவிட்டது. ஆனால், இப்படி சமூக வலைதளங்களிடம் அலாதியான சக்தி இருப்பது அரசியலில் பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. கோடிக்கணக்கான மக்களின் வாக்குகளை அப்படியே மாற்றும் சக்தி இவற்றிடம் இருக்கிறது.

Jack Dorsey
Jack Dorsey
Pinterest

இதுமட்டுமல்லாமல் இணைய அரசியல் விளம்பரங்கள், நம் முன் பல சவால்களை முன்வைக்கின்றன. மெஷின் லேர்னிங் மூலம் குறிவைத்துப் பரப்பப்படும் பொய் பரப்புரைகள், டீப் ஃபேக்ஸ் மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் என விஷம வேலைகள் இதில் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இது அரசியல் விளம்பரங்கள் என்றில்லாமல் அனைத்து இணைய தொடர்புகளையுமே பாதிக்கின்றன. இதனால் முதலில் அடிப்படை பிரச்னைகளை சரிசெய்வதற்கான முயற்சிகளையே செய்யப்போகிறோம். பணம் கிடைக்கிறது என்பதற்காக அரசியல் விளம்பரங்கள் என்ற இந்த கூடுதல் சுமையை நாங்கள் ஏற்க விரும்பவில்லை. எல்லா பிரச்னைகளையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டால் எங்கள் பெயர்தான் அடிவாங்கும்.

`பணம் முக்கியமில்லை; மக்களை பாதிக்கிறது!’ - அரசியல் கட்சிகளுக்கு செக் வைத்த ட்விட்டர்

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், `எங்கள் தளத்தைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க கடுமையாக உழைத்துவருகிறோம். ஆனால், பணம் கொடுத்தால் மக்களை குறிவைத்து எந்த அரசியல் விளம்பரங்களை வேண்டுமானாலும் மக்களிடம் எடுத்துச்செல்வோம்... யார் என்ன சொன்னாலும் கவலைப்பட மாட்டோம்' என்று எங்களால் இருக்கமுடியாது.

ட்விட்டர்
ட்விட்டர்
Pinterest

டிஜிட்டல் விளம்பர உலகில் நாங்கள் ஒரு சிறிய பங்குதான் வகிக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். சிலர் எங்களது முடிவு ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால், விளம்பரம் எதுவும் இல்லாமலேயே பெரும் சமூக இயக்கங்கள் மக்களிடம் பெருமளவில் சென்றிருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். இது வரும்காலங்களிலும் நடக்கும் என்று நம்புகிறோம்.

இதுகுறித்த புதிய நடைமுறைகளை இந்த மாதம் 15-ம் தேதி விரிவாக அறிவிப்போம். இந்த மாற்றங்கள் 22-ம் தேதி நடைமுறைக்கு வரும். இந்த புதிய நடைமுறைகள் விளம்பரதாரர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும். இறுதியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன், இது கருத்துச் சுதந்திரம் பற்றியது அல்ல. இது மக்களிடம் சென்றடையப் பணம் கொடுக்கும் சமாசாரம். இப்படிப் பணம் கொடுத்து அரசியல் கருத்துகளை மக்களிடம் எடுத்து செல்வதன் விளைவுகள் விபரீதமாக இருக்கலாம். இதன் ஆபத்துகளைக் கையாளும் கட்டமைப்பு எங்களிடம் இல்லை. இதனால் ஒதுங்கி நிற்பதே நல்லது" என்று 280 கேரக்டர் லிமிட் கொண்ட ட்விட்டரில் இந்த முடிவுக்கு பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்திருக்கிறார் ஜேக் டார்சி.

இதில் இரண்டு இடங்களில் `எங்களால் ஃபேஸ்புக் மாதிரியெல்லாம் இருக்கமுடியாது' என்ற தொனி வெளிப்படுவதைப் பார்க்கமுடியும்.

இப்படி முன்னணி சமூக வலைதளங்கள் இரண்டும் எதிர்மறையான முடிவுகளை எடுத்திருந்தாலும் இரண்டு முடிவுகளுக்கும் காரணம் ஒன்றுதான். எதை நீக்கலாம் எதை நீக்கக் கூடாது என்பதற்கான தெளிவான வரையறைகள் வகுக்கமுடியாததுதான் அது. ட்விட்டரைப்போல இந்த அரசியல் விளம்பரங்களிலிருந்து முழுவதுமாக ஒதுங்காதது ஏன் என்ற கேள்விக்கு ஒரு விளக்கம் வைத்திருக்கிறது ஃபேஸ்புக்.

``அப்படிச் செய்வது ஆளும் தரப்புக்கே சாதகமாக முடியும். கருத்துச் சுதந்திரம் மிக்க சமூக வலைதளங்கள்தான் அதிகாரத்தைப் பரவலாக்கியிருக்கின்றன; நேராக அனைத்து மக்களிடம் அதைக் கொண்டுசேர்த்திருக்கின்றன. டிவி போன்ற பெரிய ஊடகங்களில் பணம் செலவு செய்யமுடியாதவர்களுக்கும் அதிகம் பேரைச் சென்றுசேரும் வாய்ப்பை ஃபேஸ்புக் தருகிறது. இப்படியான அரசியல் விளம்பரங்களிலிருந்து எங்களுக்கு வரும் வருமானம் என்பது 5% கூட கிடையாது. கருத்துச் சுதந்திரம் என்றும் எங்கள் தளத்தின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும் என்பதால்தான் இதைச்செய்கிறோம்" என்கிறது ஃபேஸ்புக்.

Political Ads in Social Media
Political Ads in Social Media

ஃபேஸ்புக், ட்விட்டர் என இரு நிறுவனங்கள் எடுத்த முடிவுகளிலுமே சிக்கல்கள் இல்லாமல் இல்லை. `நீங்கள் பிரசாரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள் அதைச் சரியான மக்களிடம் எடுத்துச்செல்லும் வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். பொய் சொல்லும் அரசியல்வாதியைக் கண்டுபிடிக்கவேண்டியது மக்கள்தான்' என்பதைதான் சொல்லாமல் சொல்லுகிறது ஃபேஸ்புக். அரசியல்வாதி பேசுவதற்கு மேடை எப்படிப் பொறுப்பாகும்? மேடை குறுக்கிட்டு உண்மையைக் கண்டறிய வேண்டிய அவசியமில்லையே என்பதே ஃபேஸ்புக் கருத்து. இது லாஜிக்காக ஓகேதான். என்றுமே அரசியல் என்பது எதிரணியைக் கழுவி ஊற்றுவது, பொய் குற்றச்சாட்டுகள் வைப்பது என்றுதான் இருந்திருக்கிறது. உலகமெங்கும் இப்படி ஆரோக்கியமில்லாத அரசியல் நடந்துவருவதற்கு ஃபேஸ்புக் பொறுப்பாக முடியாதுதான். ஆனால், இந்தப் பொய் பரப்புரைகளை யாரிடம் கொண்டுசேர்த்தால் தேவையான மாற்றம் வரும் என்பதைச் சரியாகக் கணித்து அவர்களிடம் கொண்டுசேர்க்கும் வேலையைச் செய்வது ஃபேஸ்புக் தானே, மேடை இப்படி மக்களை தரம் பிரித்துப் பார்க்காதுதானே. அதுதான் பிரச்னை.

கடந்த தேர்தலில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா, அமெரிக்கா வாக்காளர்களை இரண்டு வகைகளாகப் பிரித்தது. அதில் ஒன்று நிலையாக இருப்பவர்கள். அவர்களை என்ன செய்தாலும் மற்றொரு கட்சிக்கு வாக்களிக்கவைக்க முடியாது. இன்னொரு பிரிவு `Persuadables’. நிலையாக இல்லாத, எளிதாக மனமாற்றம் அடையக்கூடிய மக்களை `Persuadables’ என அழைக்கின்றனர். இவர்களை எளிதாக ஒரு பக்கம் சாயவைத்துவிடலாம். இவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் ஒரு தேர்தலின் முடிவையே மாற்றும் சக்தி சமூக வலைதளங்களுக்கு உண்டு. இப்படிக் குறிவைத்து நடத்தப்படும் பிரசாரங்களில் இந்த கட்சிக்கு ஓட்டளியுங்கள் என்றல்லாமல் மற்றொரு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொய் பரப்புரைகள்தான் பெரும்பாலும் நடக்கின்றன. இதை தெளிவாக படம்போட்டுக்காட்டியது `தி கிரேட் ஹேக்' என்னும் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படம்.

தி கிரேட் ஹேக் | The Great Hack
தி கிரேட் ஹேக் | The Great Hack
நம்மை நமக்கு விற்கிறார்கள்!

ஃபேஸ்புக் சொல்வதுபோல பொய் சொல்லும் அரசியல்வாதியை மக்கள்தான் கண்டறிய வேண்டும் என்பதே இங்கு செல்லாது. பெரும்பாலும் அதைக் கண்டறியும் திறன் இல்லாதவர்களிடமே இந்த விளம்பரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மதம், இனம், சாதி சார்ந்த வெறுப்புணர்வைத் தூண்டுவது, ஒரு வேட்பாளரை வேண்டுமென்றே தவறாகச் சித்திரிப்பது என்று மிகவும் மோசமாகவே இந்த விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதைதான் கட்டுப்படுத்தமாட்டோம் என்கிறது ஃபேஸ்புக். Digital Literacy பெரிதும் இல்லாத இந்தியா போன்ற ஒரு நாட்டில் இது இன்னும் ஆபத்தாகவே முடியும். இன்று உலகமெங்கும் தலைதூக்கும் வெறுப்பரசியலுக்கு முக்கியக் காரணம் இந்த சமூக வலைதளங்களும்தான்.

ஆனால், இதைத்தவிர்த்து `வாக்களிக்கவேண்டாம்' என்ற பிரசாரங்கள், வெளிநாட்டு ஏஜென்சிகளின் தலையீடு, அரசியல்வாதிகளின் கணக்குகள் ஹேக் ஆகாமல் இருக்கக் கூடுதல் பாதுகாப்பு என்று வரும் தேர்தல்களுக்கு முன்பை விடவும் தயார்நிலையில் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், `தனிநபர் கருத்துகளை மட்டும்தான் உண்மையா பொய்யா என்று ஆராய்வோம், அரசியல் விளம்பரங்களை கண்டுகொள்ளமாட்டோம்' என்ற இந்த முடிவுதான் உறுத்துகிறது.

ஃபேஸ்புக் | Facebook
ஃபேஸ்புக் | Facebook

ஃபேஸ்புக் போல வம்படியாக இல்லாமல் அரசியல் விளம்பரங்களே வேண்டாம் என்று முடிவுசெய்து இந்த விஷயத்தில் மக்களின் வரவேற்பை எளிதாகப் பெற்றுவிட்டது ட்விட்டர். இருந்தும் இதுவும் முழுமையான தீர்வு என்று சொல்லிவிட முடியாது. பெரிய நிதி இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்று இருக்கும் ஒரு வேட்பாளர் (சும்மா வச்சுக்குவோம் பாஸ்!) அல்லது அமைப்புகள் விளம்பரம் செய்யவேண்டுமென்றால் டிவி போன்ற ஊடகங்களில் பெரும் தொகை செலவாகும், இதனால் சமூக வலைதளங்கள்தான் இவர்களுக்கான சரியான களம். இப்படிச் செய்வதால் டிஜிட்டல் உலகில் அவர்களுக்கான அந்த வாய்ப்பு இல்லாமலே போய்விடும். இதனால் ஏற்கெனவே நிலையாக இருக்கும் கட்சிகளுக்கு இது சாதகமாக அமையும் வாய்ப்புகளும் உண்டு. மேலும், அப்படியே உண்மைபோல இருக்கும் போலி டீப் ஃபேக் வீடியோக்கள் பரவலாகத் தொடங்கியுள்ளன. எந்த ஒரு ஆதாரமும் இல்லாத போலிச் செய்திகளும் பகிரப்படுகின்றன. போலிக் கணக்குகளில் ஒருவர் அல்லது ஒரு சமூகம் குறித்து வெறுப்புணர்வு இன்றும் தூண்டப்பட்டேதான் வருகிறது. இதையெல்லாம் சரியாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ட்விட்டருக்கு உண்டு. அரசியல் விளம்பரங்களை நிறுத்தப்போகிறோம் என்று சொல்லிவிட்டு மட்டும் எஸ்கேப் ஆகிவிட முடியாது.

ஜியோ வந்ததற்குப் பிறகு இந்தியா `டேட்டா ப்ளஸ்' நாடாக மாறிவிட்டது.

கடைநிலை மக்கள் வரை இணைய வசதி ஊடுருவிவிட்டது. அதே அளவில் இணையம் சார்ந்த விழிப்புணர்வு (போலிச் செய்திகள் மற்றும் பரப்புரைகள் பற்றியது) மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டதா என்பது கேள்விக்குறிதான். இதனால் இன்றைய ஜனநாயக அரசியலில் சமூக வலைதளங்களும் முக்கிய அங்கமாக இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. அந்த பொறுப்புணர்வுடன் அவை செயல்படவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு