Published:Updated:

யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்த தமிழ் விக்கிப்பீடியர்கள்! - களைகட்டிய ஆண்டு விழா #MyVikatan

கடந்த செப்டம்பர் மாதத்துடன், இந்த விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு தொடங்கப்பட்டு 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

ஆண்டு விழா
ஆண்டு விழா

அனைவரும் எழுதக்கூடிய, இலவச இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா, உலகில் அதிகமாகப் பயன்படும் இணையதளங்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. இதில், இணையவாசிகளே எழுதிக்கொண்டும் அதைச் சரிபார்த்துக்கொண்டும், மேம்படுத்திக்கொண்டும் இருப்பதால், தன்னார்வலர்களால் தன்னிறைவான வளர்ச்சியைப் பெற்றுவருகிறது.

சமூகத் தளங்களிலும் கணினி விளையாட்டுகளிலும் நேரத்தை வீணடிப்போர் மத்தியில், இணையத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துபவர்களால் விக்கிப்பீடியா ஒவ்வொரு நாளும் வளர்கிறது. 'விக்கிப்பீடியா அறக்கட்டளை' என்று நிறுவனமாக அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், இது சர்வதேச அறிவு இயக்கமாகச் செயல்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு தொடங்கப்பட்டு, 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அதைக் கொண்டாடும் விதமாக, தமிழ் விக்கிப்பீடியா 16-ம் ஆண்டு நிறைவு விழா அக்டோபர் 19 மற்றும் 20ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கடந்த 2013ல் 10-வது ஆண்டு நிறைவு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அதனால், அடுத்த விழா இலங்கையில் நடத்த முடிவுசெய்யப்பட்டு, பொறியாளர் சிவகோசரன் உட்பட இலங்கைப் பயனர்களின் ஒருங்கிணைப்பில் திட்டமிடப்பட்டது. இதில், இருபதுக்கும் மேற்பட்ட விக்கிப்பீடியர்கள் இந்தியாவிலிருந்து கலந்துகொண்டனர்.

Representational Image
Representational Image

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிவிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்றன. விக்கிப்பீடியா கடந்துவந்த பாதைகள் குறித்து கி. மயூரநாதன் குறிப்பிடுகையில், ``தொடக்கத்தில் ஒன்றிரண்டு நபர்கள் கொண்டு வளர்ந்தாலும் இன்று பலரது உழைப்பால் ஒரு லட்சத்து இருபத்து மூன்றாயிரம் கட்டுரைகள் அளவிற்கு வளர்ந்துள்ளதைக் குறிப்பிட்டார். விக்கிப்பீடியாவை ஒத்த திட்டமாகத் தொழிற்கலைகள் ஆவணப்படுத்தும் 'ஆவணகம் டாட் ஆர்க்' குறித்து பிரசாத் சொக்கலிங்கம் விளக்கினார். தமிழக அரசுடன் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் குறித்து முனைவர் மா. தமிழ்ப்பரிதி பேசினார்.

விக்கிப்பீடியாவில் படங்களைக் கொடையாகக் கொடுத்ததன் மூலம் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் குறித்து, தனது அனுபவத்தை ஏற்காடு இளங்கோ பகிர்ந்துகொண்டார். நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து ரவிசங்கர் அய்யாக்கண்ணும், நிகழ்படங்கள் குறித்து தகவலுழவனும், பதிப்புரிமை குறித்து த.சீனிவாசனும், தொழில்நுட்பம் குறித்து நீச்சல்காரனும் உரையாடினர். தொடர்ச்சியாக மாலை, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து அறிவியல் கருத்தரங்கம் நடந்தது. இதில் விக்கிப்பீடியாவில் நடந்த போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Representational Image
Representational Image

மேலும், 'அறிவியல் தமிழ் வளர்ச்சியில் ஈழத்தவர்களின் பங்களிப்பு' எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் நீண்ட சிறப்புரையாற்றினார். தேனுவரைப்பெருமாள் தொடங்கி பாடநூல் ஆக்கம், பதிப்பியல், பத்திரிகை, அகராதியியல், வரலாற்றியல், மொழி நடையியல், மொழிபெயர்ப்பியல், கலைக்களஞ்சியம், கலையியல் என அனைத்துத் துறைகளிலும் உள்ள ஈழத்தமிழர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். கணினி யுகத்திலும் ஈழத்தமிழர்களின் விருபா.காம், நூலகம். ஆர்க் போன்ற திட்டங்களையும் குறிப்பிட்டார். தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடங்கியவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மயூரநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளாக கலாசாரச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்து வரலாற்று இடங்களுக்கு விக்கிப்பீடியர்கள் சென்றுவந்தனர். பிற்பகலில் நடந்த கலந்துரையாடலில் வேங்கைத் திட்டம், பெண்கள் பங்களிப்பு, புதுப் பயனர்கள் ஈர்க்கும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் கட்டுரைப் போட்டியான வேங்கைத்திட்டப் போட்டியில், தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெறச்செய்ய உறுதிபூண்டனர். மேலும், புதுப் பயனர்களுக்குப் பயிற்சியளிக்கவும் விக்கிப்பீடியாவை அனைவருக்கும் கொண்டு செல்லவும் முடிவுசெய்யப்பட்டது.

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/