Published:Updated:

`ஹேக்கர்களால் சிதைந்த விக்கிப்பீடியா!' - நடந்தது என்ன?

ம.காசி விஸ்வநாதன்

இதற்குக் காரணமான DDoS தாக்குதல் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

Wikipedia
Wikipedia

உலகின் மாபெரும் தகவல் களஞ்சியமாக இருந்துவரும் விக்கிப்பீடியா தளம் சில ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சில நாள்களாகச் சரியாக வேலைசெய்யவில்லை. இதனால் மக்கள் பலராலும் இந்தத் தளத்திலிருந்து தகவல்களைப் பெறமுடியாமல் இருந்தனர். இது ஹேக்கர்களின் கைவண்ணம் என விக்கிப்பீடியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் விக்கிமீடியா (Wikimedia) ஜெர்மன் பக்கம் ட்விட்டரில் இதைப்பற்றிய தகவலை வெளியிட்டது. "விக்கிமீடியா சர்வர் பெரிய DDoS தாக்குதலைச் சந்தித்துவருகிறது" என்று அதில் கூறப்பட்டிருந்தது. விக்கிபீடியா வெளியிட்டிருக்கும் அதிகாரபூர்வ அறிக்கையிலும் இதைப் பற்றித் தெரிவித்திருக்கிறது.

அது என்ன DDoS தாக்குதல்?

Distributed Denial of Service என்பதன் சுருக்கமே DDOS. ஒரு சர்வருக்குக் கையாள முடியாத அளவில் பல ரெக்குவஸ்ட்கள் வெவ்வேறு வடிவங்களில் வரும்போது சர்வரின் சராசரி செயல்பாடு தொய்வுபெறும். சிலநேரங்களில் வேலைசெய்யாமலேயே போய்விடும். இது பெரும்பாலும் போலி Bot-களால் நடத்தப்படுகின்றன. இதற்கென பிரத்யேக DDoS-as-a-Service தளங்களும் இருக்கிறது. அவற்றிடம் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்கெனவே ஹேக் செய்யப்பட்ட பல்வேறு சாதனங்களிலிருந்து அதன் உரிமையாளருக்கே தெரியாமல் குறிப்பிட்ட தளத்துக்கு ரெக்குவஸ்ட்கள் அனுப்பலாம். இதனால் அந்தத் தளம் செயலிழந்துபோகும். சிறிய ஹேக்கர்கள் முதல் சைபர்-தீவிரவாதிகள் வரை இந்த உத்தியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதிகளவில் டேட்டா சர்வர்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் இதைப்போன்ற தாக்குதல்களிலிருந்து தப்பித்துவிடும். ஆனால், இப்போது விக்கிப்பீடியா போன்ற ஒரு முன்னணி தளமே இந்தத் தாக்குதலுக்கு இரையாகியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

DDoS Attack
DDoS Attack
Wikipedia

தற்போது இந்தத் தாக்குதலிலிருந்து முழுவதுமாக மீண்டுவரும் முயற்சியில் இருக்கிறது விக்கிப்பீடியா. இதைப்போன்று மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையும் யோசித்துக்கொண்டிருக்கிறது அந்த நிறுவனம்.

Vikatan