Published:Updated:

`சீனாவுக்கு `குட்பை' சொல்லும் ட்ரம்ப்... இந்தியாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்?

அமெரிக்காவின் முடிவால் இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வது அதிகரிக்கலாம்.

Donald Trump and Narendra Modi
Donald Trump and Narendra Modi

சீனாவும் அமெரிக்காவும் சில ஆண்டுகளாகவே வணிகப் போரில் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. இரு நாடுகளுமே தங்களிடையேயான வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் வைத்துக்கொண்டே செல்ல இந்த வணிகப்போரால் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதில் ட்ரம்ப் அரசு கூடுதல் எரிபொருள் போலச் செயல்பட்டுவருகிறது.

Huawei
Huawei

சீனாவின் முக்கிய ஸ்மார்ட்போன் நிறுவனமான வாவேவுடன் (Huawei) வணிகம் செய்யக் கூடாதெனச் சமீபத்தில் தடைவிதித்து பின்பு அதைத் திரும்பப் பெற்றது ட்ரம்ப் அரசு. இப்படி இரு நாடுகளுக்கிடையேயான பிரச்னை ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் சீனாவின் புதிய ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளால் கடுமையான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதில் அமெரிக்கா "பொறுத்தது போதும், இன்னும் எத்தனை நாள் சீனாவின் சுரண்டல்களைப் பொறுத்துக்கொண்டு இருக்கப்போகிறோம். ஏற்கெனவே சீனாவிடம் அமெரிக்கா பல்லாயிரம் கோடி பணத்தை இழந்துள்ளது. நமது அறிவுசார் சொத்துகளைத் திருடுவதைச் சீனா தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நமக்குச் சீனா தேவையில்லை. அவர்கள் இல்லாமல் நாம் இன்னும் செழிப்பாக இருப்போம். எனவே, உடனடியாக சீனாவிலிருந்து கிளம்புமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இது அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

President Donald Trump
President Donald Trump

முதலில் சட்டப்படி அமெரிக்க அதிபரால் இப்படி ஒரு உத்தரவைக் கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கும் பதிலை ரெடியாக வைத்திருந்தார் ட்ரம்ப். Emergency Economic Powers Act of 1977 சட்டத்தின் மூலம் தன்னால் முடியும் என்கிறார். ஆனால், இதிலும் இப்படி நேரடியாக இந்த உத்தரவை அவரால் பிறப்பிக்க முடியாது. இருந்தும் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் வர்த்தகத் தொடர்பை தற்போதே நிறுத்திக்கொள்ளுமாறு ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ட்ரம்ப்.

சீனா மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதால் இது எந்தளவுக்கு வீரியம் பெரும் என்பது தெரியவில்லை. ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே இது குறித்து ட்ரம்பிடம் கவலை தெரிவித்துவிட்டனர். இந்த வணிகப்போர் சூழல் தங்களைவிடக் கொரிய நிறுவனமான சாம்சங்குக்குச் சாதகமாக அமைகிறது என ஆப்பிள் தெரிவித்திருந்தது. ஆப்பிள் நிறுவனத்தையும் அதன் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்கையும் பெருமளவில் பாராட்டும் ட்ரம்ப் இதற்காகச் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொண்டாலும் முழுவதுமாக இதற்குச் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. மற்ற நிறுவனங்களின் நிலை இன்னும் மோசம்.

Donald Trump & Xi Jinping
Donald Trump & Xi Jinping

1980-களுக்குப் பின்னோக்கிச் சென்றால் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்க - சீன உறவு எவ்வளவு முக்கியமானது என்பது புரியும். ஆப்பிள் போன்ற புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு நிறுவனங்கள் அமெரிக்காவில் கோலோச்சத் தொடங்கிய காலம் அது. இதே நேரத்தில் சீனா தொழிற்சாலைகளை அமைத்து, அமெரிக்காவின் தேவைகளை நிறைவேற்றி பொருளாதாரத்தை வளர்த்தெடுத்தது. காலப்போக்கில் சீனாவும் தொழில்நுட்ப வடிவமைப்பில் களம் கண்டது. ஏற்கெனவே அமெரிக்காவின் வடிவமைப்புகளைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றிருந்ததால் இதை அசால்ட்டாக தட்டித்தூக்கியது சீனா. இதைப் பார்த்துதான் தங்களது தொழில்நுட்பத்தைச் சீனா திருடுவதாகக் குற்றம்சாட்டத் தொடங்கியது அமெரிக்கா. அங்கிருந்துதான் இந்தப் பிரச்னையும் தொடங்கியது.

சீனாவில் பொருள்களைத் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அது அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாகவே அமையும். அதனால் இப்போதே அதற்கான மாற்று வழிகளைத் தேடத்தொடங்கிவிட்டன அமெரிக்க நிறுவனங்கள். இதுதான் இந்தியாவின் பெரும் வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த விலையில் தொழிலாளர்கள் கிடைக்கும் முக்கிய நாடுகளாக இந்தியாவையும் வியட்நாமையும் பார்க்கின்றன. தற்போது ஆப்பிள் ஐபோன்கள் சென்னையில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், பல தொழிற்சாலைகள் இந்தியா வர வாய்ப்புள்ளது.

Mobile Market
Mobile Market

இருப்பினும் இந்தியப் பொருள்கள் மீதும் அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்திருந்தது. இந்தியாவும் பதிலுக்கு அமெரிக்கப் பொருள்கள் மீது வரிகளை விதித்தது. ஆனால், இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா வணிகம் சீனா-அமெரிக்கா அளவுக்குப் பெரிதும் அல்ல. அமெரிக்கா மொத்தமாகத் தங்களது நாட்டிலேயே அனைத்தையும் தயாரிக்க வேண்டும் என நினைக்கிறது. ஆனால், அதற்கேற்ற ஊழியர்களும் வசதிகளும் போதிய அளவில் அங்கிருக்குமா என்பது சந்தேகம்தான்.

Harbour
Harbour

நல்ல திறன்கொண்ட இளைஞர்களை வெளிக்கொண்டுவரும் கல்விமுறை மற்றும் சிறப்புப் பயிற்சிகள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் எனச் சில விஷயங்களைச் சரி செய்தால் போதும். சீனா 1980-களில் எப்படி வளர்ந்ததோ அது போன்றதொரு வளர்ச்சி இந்தியாவுக்கும் கிடைக்கும்.