Published:Updated:

மத்திய அமைச்சர்களின் ஆதரவு... ட்விட்டருக்கு மாற்றாகுமா KOO?

ட்விட்டருக்கு மாற்றாகுமா 'கூ'?
ட்விட்டருக்கு மாற்றாகுமா 'கூ'?

ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கூ' என்ற ஆப்பை இனிமேல் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்த சில மத்திய அமைச்சர்கள் கூ-வில் கணக்கைத் தொடங்கினார்கள். அவர்களோடு பா.ஜ.க-வினரும் இணைந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்தது 'கூ' ஆப்.

உலக அளவில் பொழுதுபோக்கைத் தவிர்த்துப் பார்த்தால் சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கை விடவும் மிக முக்கிய இடத்தில் இருப்பது ட்விட்டர் தளம். பேஸ்புக்கை விடவும் இதில் பதிவிடப்படும் கருத்துகள் மிகச் சுருக்கமாக அமைவதோடு வேகமாகவும் மக்களைச் சென்றடைகிறது. அப்படிப்பட்ட ட்விட்டருக்கு எதிராக அதன் போட்டி ஆப் ஒன்று ட்விட்டரிலேயே ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆப்பான 'KOO' தற்போது ட்ரெண்ட் ஆகக் காரணம் என்ன ?

' கூ'- வின் திடீர் ட்ரெண்டிங்குக்கு காரணம் என்ன ?

இந்தியாவில் மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் ட்விட்டருக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் முந்தைய அதிபர் ட்ரம்புக்கும், ட்விட்டருக்கும் இடையே இருந்த மோதல் போக்கை உலகம் அறியும். பேஸ்புக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ட்விட்டர் அரசுடன் சில விஷயங்களில் ஒத்துப்போவதில்லை. ஒரு நாட்டின் அரசுக்கு எதிராகப் பதிவிடப்படும் கருத்துகளை நீக்குவதில்லை என்பது ட்விட்டர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்திய அரசும் ட்விட்டர் நிர்வாகமும் மோதிக் கொண்டது அது போல ஒரு விவகாரத்தில்தான். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்த ஒன்றாக மாறியபோதும் மத்திய அரசு பின்வாங்க மறுக்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல தரப்பினர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அப்படி போராட்டத்தை ஆதரிக்கும் நூற்றுக்கணக்கான கணக்குகளை நீக்கச் சொன்னது மத்திய அரசு. அது மட்டுமில்லாமல் பலர் பதிவிட்ட கருத்துகளையும் நீக்க ட்விட்டர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு கொடுத்த அனைத்து கணக்குகளையும் ட்விட்டர் நிர்வாகம் நீக்கவில்லை. இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு எனவும் விளக்கமளித்தது. இது தொடர்பாக எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் மத்திய அமைச்சர்கள் பலரும் ட்விட்ருக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கூ' என்ற ஆப்பை இனிமேல் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்த சில மத்திய அமைச்சர்கள் கூ-வில் கணக்கைத் தொடங்கினார்கள். அவர்களோடு பா.ஜ.க-வினரும் இணைந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்தது 'கூ' ஆப்.

'கூ' வை உருவாக்கியது யார் ?

அப்ரமேய ராதாகிருஷ்ணன் (Aprameya Radhakrishna) மற்றும் மயங்க் பிதாவட்கா (Mayank Bidawatka) என்பவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த 'கூ' ஆப். அப்ரமேய ராதாகிருஷ்ணன் தற்போது ஆப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியில் இருக்கிறார். கடந்த வருடம் இந்த ஆப் வெளியிடப்பட்டிருக்கிறது. ட்விட்டருக்கு போட்டியாகக் கிட்டத்தட்ட அதேபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது 'கூ'. கடந்த வருடம் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஆப்களுக்கான போட்டியில் கலந்து கொண்ட 'கூ' அதில் வெற்றியும் பெற்றது. அதேபோல பிரதமர் மோடியும் இந்த ஆப்பை குறிப்பிட்டுப் பேசியதால் 'கூ' பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Koo App
Koo App

கடந்த சில நாள்களாக ட்விட்டருடனான மோதல் காரணமாக இதன் டவுன்லோட் அதிகரித்திருக்கிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவிசங்கர், மற்றும் எடியூரப்பா, அனில்கும்ப்ளே, ஜக்கி வாசுதேவ் எனப் பலர் 'கூ' வில் கணக்கு தொடங்கி விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அது மட்டுமின்றி இந்தியர்கள் ட்விட்டருக்கு பதிலாக 'கூ' வில் இணையவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி சில மத்திய அரசு துறையின் கணக்குகளும் 'கூ'வில் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதிக அளவில் கவனம் பெற்றதால் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரில் மூன்று மில்லியன் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலும் டவுன்லோட் செய்யப்படும் ஆப் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியிருக்கிறது.

மோடி அரசுடன் வலுக்கும் மோதல்... ட்விட்டர் அதிகாரிகள் கைதா?!

இந்திய ஆப்! ஆனால் சீன முதலீட்டாளர் ?

பிரபலமாகும்போது கூடவே சர்ச்சைகளும் இணைந்து கொள்வது வழக்கம்தானே. அதுபோல 'கூ' ஆப்பின் மீதும் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு ட்விட்டரில் பதில் தெரிவித்து வருகிறார் அப்ரமேய ராதாகிருஷ்ணன். 'கூ' மீது வைக்கப்படும் முதல் குற்றச்சாட்டு இந்த ஆப்பில் சீன முதலீடும் இருக்கிறது என்பதுதான். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பரிசு பெற்ற ஒரு ஆப்பில் சீன முதலீடு இருப்பது ஏமாற்று வேலை என்பது பலரின் வாதமாக இருக்கிறது. அதற்கும் ட்விட்டரில் பதில் தெரிவித்திருக்கிறார் அப்ரமேய ராதாகிருஷ்ணன்.

''கூ ஆப்பை உருவாக்கியிருப்பது பெங்களூரில் உள்ள Bombinate Technologies என்ற நிறுவனம். இதில் சீன முதலீட்டாளரான ஷுன்வெய் கேப்பிடல் (Shunwei) மூதலீடு செய்திருக்கிறது உண்மைதான். ஆனால் அது Bombinate நிறுவனம் உருவாக்கிய மற்றொரு ஆப்பான வோக்கல் (Vokal)- லில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஷுன்வெய் கேப்பிடலின் முதலீடு 2.5 வருடங்களுக்கு முன்னால் பெரிய அளவில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவைச் சேர்ந்த 3one4 கேபிடல் மற்றும் Kalaari கேபிடல் ஆகியவை மட்டுமே நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கின்றன. சீன நிறுவனமான ஷுன்வெய் கேப்பிடல் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பங்கு வைத்திருக்கிறது. அதுவும் சீக்கிரம் மற்ற இந்திய முதலீட்டாளர்களின் கைகளுக்கு வரப்போகிறது. பின்னர் ஷுன்வெய் கேப்பிடல் முழுவதுமாக நிறுவனத்திலிருந்து வெளியேறிவிடும்'' என விளக்கமளித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

ட்விட்டரில் இருக்கும் பிரபல ஹேக்கரான எலியட் ஆல்டர்சன் என்பவர் 'கூ' ஆப் சில குறைகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். 'கூ' ஆப் மூலமாக ஒரு தனிநபரின் தகவல்கள் எளிதில் இணையத்தில் கசிந்துவிடும் என்பதும், கூ ஆப்புக்கான டொமைன் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் உரிமையாளர் சீனாவைச் சேர்ந்தவர் என்பதும் எலியட் ஆல்டர்சன் வைக்கும் குற்றச்சாட்டுகள். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். ' கூ' ஆப் டொமைன் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டது அதன் சர்வரும் இந்தியாவில்தான் இருக்கிறது என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

" 'கூ' ஆப்பிலிருந்து தகவல்கள் கசிவதாகத் தேவையற்ற செய்திகள் வெளியாகின்றன. பார்த்தால் அது பயனர்கள் கணக்கைத் தொடங்கும்போது அளிக்கும் அடிப்படை விவரங்களாக இருக்கின்றன (பெயர், பிறந்தநாள் போன்றவை) . இந்த தகவல்களை ஒருவருடைய கணக்குக்குச் சென்றால் சாதாரணமாகவே பார்க்க முடியும். எனவே இதை டேட்டா லீக் என எடுத்துக்கொள்ள முடியாது " என்கிறார். ஆனால் எலியட் ஆல்டர்சனோ தான் வெளியிட்ட தகவல்கள் அவற்றை ஒரு கணக்கில் வெளிப்படையாகக் காட்ட விரும்பாமல் மறைத்து வைத்திருப்பவரிடம் இருந்து பெறப்பட்டவை என்கிறார்.

ட்விட்டருக்கு எதிராகத் தாக்குப்பிடிக்குமா 'கூ' ?

Twitter| ட்விட்டர்
Twitter| ட்விட்டர்
Pinterest

ஒரு ஆப் சர்ச்சைக்கு உள்ளாகும்போது அதே போல இருக்கும் மற்றொரு ஆப்பை நோக்கி மக்கள் நகர்வது வழக்கம். வாட்ஸ்அப்பிற்கு பதிலாக சிக்னல் ஆப் ட்ரெண்ட் ஆனது சமீபத்திய உதாரணம். ஆனால் தொடக்கத்தில் வேகமாக இருக்கும் இந்த நகர்வு படிப்படியாகக் குறையும். காரணம் பழைய ஆப்பில் கிடைத்த பல விஷயங்கள் புது ஆப்பில் கிடைக்காமல் போவதுதான். இந்தியாவில் மட்டுமே பிரபலமாகிக் கொண்டிருக்கும் இந்த ஆப்பால் ட்விட்டர் போல ஒரு சர்வதேச கட்டமைப்பை உருவாக்க முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு