கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகப் பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருந்தது. ஒரு வருடத்தைக் கடந்து அலுவலகத்திற்கே செல்லாமல் பல நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். எந்த நேரமும் திரையையே பார்த்துக் கொண்டிருப்பது மனிதர்களின் கண்களுக்குப் பழக்கம் இல்லாத ஒன்று.
அலுவலகத்தில் கணினியிலேயே வேலை பார்ப்பவர்கள் கூட அவ்வப்போது அருகில் இருக்கும் நபர்களுடன் உரையாடும் போதுதான், இருக்கம் குறையும். ஆனால், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் போது சக ஊழியர்களுடன் பேசுவதற்குக் கூட கணினித் திரையைத்தான் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கடுமையான மனச் சோர்விற்கு ஆளாவதாக பல துறையை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளே தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பெரும்பாலானவர்கள் வீடியோ கால் மற்றும் கான்பரன்ஸிங்கிற்கு ஜூம் (Zoom) செயலியையே பயன்படுத்துகின்றனர். வேலை பார்க்கும் போது கூட அவ்வப்போது கண்களை வேறு பக்கம் திருப்பி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அலுவலகம் சார்ந்த மீட்டிங்குகளில் பங்கேற்கும் போது முழுவதுமாகத் திரையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். தொடர்ந்து அதே போன்ற அடுத்தடுத்து மீட்டிங்குகளில் பங்கேற்கும் போது கடுமையான மனச் சோர்வு உண்டாகிறது. இதனை 'Zoom Fatigue' என்றழைக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதனை ஜூம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எரிக் யுவானும் (Eric Yuan) ஒத்துக் கொண்டுள்ளார். சென்ற வருடம் ஒரு நாளில் அடுத்தடுத்து 19 ஜும் மீட்டிங்குகளில் தான் தொடர்ந்து பங்கேற்க வேண்டி இருந்ததாகவும், அன்று கடுமையான மனச் சோர்வு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த ஜூம் மீட்டிங்குகளில் பங்கேற்பதைத் தவிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி முடிவில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் இதனால் மனச்சோர்விற்கு ஆளாவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 14 சதவிகிதம் பேர் இதனால் மனச் சோர்விற்கு ஆளாகியிருக்கிறார்கள், ஆண்கள் 6 சதவிகிதம் பேர் மட்டுமே.

அலுவலகங்களில் நேரடியாக ஒரு சந்திப்பில் ஈடுபடும் போது அருகில் இருப்பவருடைய முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஜூம் மீட்டிங்குகளில் இருக்கும் போது, அவர்களுடைய முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நகரக் கூட முடியாமல் ஒரே இடத்திலேயே அடைபட்டது போன்ற உணர்வை அது ஏற்படுத்தும். அது கடுமையான மன அழுத்தத்தையும் உண்டாக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பிரச்னையைக் கையாள, வாரம் ஒரு நாள் ஜூம் மீட்டிங்குகள் இல்லாமல் இருப்பது அல்லது ஒவ்வொரு மீட்டிங்குக்கும் இடையே சிறிது நேரம் இடைவெளி விடுவது என இந்த மனச் சோர்வில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை யோசித்து வருகின்றனர். மேலும், தேவையான போது மட்டும் வீடியோ கான்பரன்ஸிங் செய்யலாம், ஒரு போன் காலிலேயோ அல்லது மின்னஞ்சலிலேயோ முடிகின்ற விஷயத்திற்கு வீடியோ கால் செய்ய வேண்டாம் என அதன் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளையும் யோசித்து வருகின்றனர்.
கொரோனா அதிகமாகப் பரவும் இந்த நேரத்தில் உடல் நலத்தோடு சேர்த்து நம் மன நலனையும் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.