Published:Updated:

எந்திர நாய்.... எப்படியிருக்கிறது ஷாவ்மியின் புது ரோவோ 'சைபர்டாக்'?

சைபர் டாக் CyberDog
சைபர் டாக் CyberDog

சைபர்டாக்-இன் புகைப்படங்களைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் நம் தேவைகளைப் பூர்த்திசெய்யும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் வரும் ரோபோ போலவே இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிய தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் உருவாக்குவதில் தீவிர ஆர்வமுடைய நிறுவனம் ஷாவ்மி. ஸ்மார்ட் போன்கள், சார்ஜர்கள் என தினசரி மின்னணுச் சாதனங்களில் வடிவமைப்பில் புதிய பரிமாணங்களை எட்டிப் பிடிக்கும் முயற்சியில் இருக்கும் ஷாவ்மி, தற்போது 'எந்திரன்'களையும் உருவாக்கத் தொடங்கிவிட்டது. ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள், எந்திரன்தான். நான்கு கால்களுடன் நாய் போன்ற வடிவமைப்பைக் கொண்ட 'சைபர்டாக்' (CyberDog) என்ற எந்திரத்தை உருவாக்கி, பயனர்களின் பயன்பாட்டிற்கும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது ஷாவ்மி.

சைபர்டாக்
சைபர்டாக்

எந்திரங்கள் என்றதும் நாய் போன்ற வடிவமைப்புதான் எந்திரங்களை உருவாக்குவதற்கு எளிமையாக இருக்கிறதோ?! ஏனெனில் கடந்த வருடமே பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் 'ஸ்பாட்' என்ற எந்திர நாய்க்குட்டியை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தது. 74,500 அமெரிக்க டாலர் விலையில் வெளியான அந்த எந்திர நாய்க்குட்டி ஆபத்தான வேலைகளைச் செய்வதற்கும், மனிதர்களின் வேலையை எளிதாக்குவதற்கும், மனிதர்களுக்கு உதவுவதற்கும் ஏற்ற வகையில் பல செய்கைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்டிருந்தது. காவல்துறையுடனும், இராணுவத்துடனும் இணைந்து அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்றும் சோதனைகள் செய்யப்பட்டன.

பாஸ்டன் நிறுவனத்தைத் தொடர்ந்து சீனாவைச் சேர்ந்த யுனிட்ரீ ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனமும் நான்கு கால்கள் கொண்ட, நாய் போன்ற உருவத்தைக் கொண்ட 'யுனிட்ரீ கோ 1' என்ற எந்திரத்தை வடிவமைத்து சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. பாஸ்டன் நிறுவன எந்திரன் போல விலை மிகவும் உயரத்தில் இல்லாமல் 2,700 அமெரிக்க டாலர் என்ற குறைந்த விலையில் இந்த எந்திரத்தை வெளியிட்டிருந்தது யுனிட்ரீ நிறுவனம். யுனிட்ரீ நிறுவனம் அப்போது வெளியிட்டிருந்த ஒரு காணொலியில், அதிகாலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் நபருடன் யுனிட்ரீ கோ 1-ம் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு உடன் செல்வது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த எந்திரம், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் பயன்படுத்தும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற வகையில் சொல்லாமல் சொல்லியது. அதிரடியான விலைக்குறைப்பும் அதற்கு நியாயம் சேர்த்தது.

சைபர்டாக்
சைபர்டாக்

அதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஷாவ்மி நிறுவனம் தனது சைபர்டாக்-ஐ வெளியிட்டிருக்கிறது. பாஸ்டன் மற்றும் யுனிட்ரீ நிறுவனங்களைவிட இன்னும் விலை குறைவாக 1,540 அமெரிக்க டாலர் என்ற விலையில் இந்த எந்திரத்தை வெளியிட்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 1,15,000 ரூபாய். மற்ற இருநிறுவனங்களையும் போல் குறிப்பிட்டு இந்த விஷயத்திற்காகத்தான் இந்த எந்திரத்தை வடிவமைத்திருக்கிறோம் என்று ஷாவ்மி கூறவில்லை. மாறாக இதனை Open Source ஆகவே வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய எந்திரத்தில் என்னென்ன புதிய அம்சங்களைச் சேர்க்கலாம், என்னென்ன புதிய பயன்பாடுகளை இதைக் கொண்டு பயன்படுத்தலாம் என யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். இதை மேம்படுத்த ஷாவ்மியும் பயனர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது. தற்போது 1000 எந்திரங்களை மட்டுமே விற்பனை செய்யும் முடிவில் இருக்கிறது ஷாவ்மி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சைபர்டாக்-இன் புகைப்படங்களைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் வரும் ரோபோ போலவே இருக்கிறது. ஷாவ்மி நிறுவனமே தயாரித்திருக்கும் சர்வோ மோட்டார் பொருத்தப்பட்ட, 3 கிலோ எடையுடன் இருக்கும் சைபர்டாக்-ஆல் நொடிக்கு 3.2 மீ வரை நகர முடியும். சூழ்நிலையை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவதற்கு டச் சென்சார், கேமரா, அல்ட்ராசானிக் சென்சார். ஜி.பி.எஸ் ஆகியவை சைபர்டாக்-இல் பொருத்தப்பட்டிருக்கின்றன. Nvidia-வின் ஜெட்சன் சேவியர் செயற்கை நுண்ணறிவு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

CyberDog
CyberDog

'Deep learning' திறன் படைத்ததாக இருக்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவின் மூலம் சைபர்டாக்-ஆல் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு அதன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள முடியும். நம்முடைய கட்டளைக்கு இணங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சைபர்டாக்-ஐ நம் ஸ்மார்ட் போன் செயலியுடனும் இணைத்துக் கட்டுப்படுத்த முடியும்.

எந்திர வடிவமைப்பின் முதல் கட்டத்தை பாஸ்டன் மற்றும் ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள் எட்டியிருக்கின்றன. எந்திரங்கள் என்னென்ன வேலைகளுக்கு, என்னென்னப் பரிமாணங்களில் உருவாகப்போகின்றன (உருவாக்கப்போகிறோம்) என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு