Published:Updated:

யெஸ் பேங்க் வீழ்ச்சி, `டிஜிட்டல்' இந்தியாவுக்கான அலாரம். ஏன்? #LongRead

யெஸ் பேங்க்...'டிஜிட்டல்' இந்தியாவுக்கான அலாரம்
யெஸ் பேங்க்...'டிஜிட்டல்' இந்தியாவுக்கான அலாரம்

யெஸ் பேங்க்கின் இந்தச் சரிவால், மொத்த இந்தியாவின் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தொழில்களும் பாதித்திருக்கின்றன. அப்படி 'டிஜிட்டல்' இந்தியாவிற்கு என்ன செய்தது யெஸ் பேங்க்?

நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் யெஸ் பேங்க்கின் தற்போதைய நிலைகுறித்து இந்நேரம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். வராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கிட்டத்தட்ட திவால் ஆகும் சூழலில் இருக்கிறது இந்தத் தனியார் வங்கி. இதனால், ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வங்கிக்கு, ஒரு மாத தடைக்காலம் (moratorium) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 3-ம் தேதி வரை யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். இந்த ஒரு மாத காலத்திற்குள் யெஸ் பேங்கின் 49 சதவிகிதப் பங்குகளில், சுமார் 10,000 கோடி ரூபாயை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) முதலீடு செய்யும் எனவும், மீண்டும் அடுத்த மாதம் யெஸ் பேங்க் மீண்டும் முழு செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்

இந்த விவகாரத்தில், இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் தொழில்களைப் பற்றி ரிசர்வ் வங்கி யோசித்ததா எனத் தெரியவில்லை. யெஸ் பேங்க்கிற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் மொத்த இந்தியாவின் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தொழில்களும் பாதித்திருக்கின்றன.

`Anti-demonetization'
சிலர் இப்படி அழைக்கும் அளவுக்கு பெரும் பின்னடைவை இது ஏற்படுத்தியிருக்கிறது.

டிஜிட்டல் பேமென்ட் சேவைகள், பணமதிப்பிழப்பு நடக்கும்போதுதான் தழைக்கத்தொடங்கியிருந்தன. அதற்கு நேர்மாறான விளைவுகளை யெஸ் பேங்க்கின் இந்தச் சரிவு ஏற்படுத்தியிருக்கிறதாம்.

திருட்டுத் தலைவர்கள்... திவாலாகும் வங்கிகள்...
கொள்ளை போகும் மக்கள் பணம்!

அப்படி 'டிஜிட்டல்' இந்தியாவிற்கு என்ன செய்தது யெஸ் பேங்க்?

அப்படி கொடுத்த கடன்களில் 7.39% கடன்கள் திருப்பி வரவில்லை, கார்ப்பரேட் நிர்வாகப் பிரச்னைகள், மோசடியில் கைதாகியிருக்கும் நிறுவனர் என, யெஸ் பேங்க்கைச் சுற்றி ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் நமது டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றதில் யெஸ் பேங்க்கிற்கு முக்கியப் பங்கு உண்டு.

போன்பே உட்பட, பல பேமென்ட் சேவைகள் யெஸ் பேங்க்கை நம்பியே தங்களது சேவையைக் கொடுத்துவருகின்றன. ஸ்விகி, மேக்மைட்ரிப், ஓலா போன்ற முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் யெஸ் பேங்க்கின் உதவியுடனே இயங்கிவந்தன. இப்போது யெஸ் பேங்க்கிற்கு வந்திருக்கும் இந்த நிலையினால் இந்த நிறுவனங்கள் அனைத்துமே பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இப்படி, யெஸ் பேங்க் கண்மூடித்தனமாகக் கடன் கொடுத்து, இந்த நெருக்கடியில் சிக்கியதில் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள்தான்.
எனக் குமுறுகின்றன இந்த நிறுவனங்கள்
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் யெஸ் 
பேங்க்கின் பங்கு
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் யெஸ் பேங்க்கின் பங்கு

ஆனால், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, மனதில் சில கேள்விகள் எழாமல் இல்லை.

எப்படி 'டிஜிட்டல்' இந்தியாவின் மிக முக்கியமான அங்கமானது யெஸ் பேங்க்?

யெஸ் பேங்க் சரியப்போவதை அறிந்தும் ஏன் பல நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகள் செய்யவில்லை?

இதில் UPI-யை நிர்வகிக்கும் National Payments Corporation of India (NPCI) அமைப்பின் பங்கு என்ன?

போன்பே கதையை உதாரணமாக வைத்து, தற்போதைய நிலையை விளக்கிவிடலாம். இந்தியாவில் UPI பேமென்ட்டுகளை கொடுக்கத் தொடங்கிய முதல் நிறுவனம் போன்பே. யெஸ் பேங்க்குடன் கூட்டணி போட்ட முதல் பேமென்ட் ஆப்பும் போன்பேதான். யெஸ் பேங்க் வழி நடக்கும் கோடிக்கணக்கான பணப் பரிவர்த்தனைகளில் 50 சதவிகிதம், போன்பேவினால் நடப்பவை. இரு நிறுவனங்களிடையே பரஸ்பர சார்பு இருந்துவந்தது. ஆனால், நாளுக்கு நாள் யெஸ் பேங்க்கின் நிலை மோசமாகி வந்தாலும் அதற்குத் தயாராகாமலேயே இருந்தது போன்பே.

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ட்விட்டரில், "மாற்று ஏற்பாடுகள் செய்துகொண்டுதான் இருந்தோம். ஆனால், இப்படி வங்கி மொத்தமுமே செயலிழக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. இந்த அடி எங்களுக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுத்தந்திருக்கிறது" என்று பதிலளித்தார், போன்பேவின் துணை நிறுவனரும் CEO-வுமான சமீர் நிகம்.

யெஸ் பேங்க் இல்லாதது, போன்பேவுக்கு உயிர் இருந்து உடல் இல்லாத நிலை. இதுபோன்ற மூன்றாம் தரப்பு ஆப்களின் மொத்த டிஜிட்டல் பேமென்ட் கட்டமைப்பையுமே வங்கிதான் பார்த்துக்கொள்ளும். அவர்கள் உதவி இல்லாமல் இந்த ஆப்களால் இயங்க முடியாது. இதனால் ரிசர்வ் வங்கியின் தடை அறிவிப்பு வந்த பிறகு, போன்பேவாலும் மொத்தமாக சேவையை வழங்க முடியாமல்போனது. இந்த நேரத்தில் பேடிஎம், 'எங்கள் வங்கியின் (Paytm Payments Bank) UPI-யை வேண்டுமானால் முயற்சி செய்துபாருங்களேன்' என்று ட்வீட் செய்ய, டிஜிட்டல் வட்டாரத்தில் டென்ஷன் எகிறியது.

'உங்களிடம் அதற்கான திறன் இருந்தால், நாங்களே தேடி வந்திருப்போம்' என போன்பே அதற்குப் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே, தீவிர முயற்சிகளால் தடைபட்ட 24 மணி நேரத்தில் மீண்டு வந்தது போன்பே. இதற்குக் கைகொடுத்தது ஐசிஐசிஐ வங்கி.

`ஆபத்தில் உதவிய நண்பனை என்றும் மறக்க மாட்டோம்' என ஐசிஐசிஐ-க்கு நன்றியைத் தெரிவித்தார், சமீர் நிகம்.

முன்பே, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைவது பற்றி போன்பே பேசி வந்தது. ஏப்ரலில் எப்படியும் இந்தக் கூட்டணி அமைந்திருக்கும். இந்த ஒரு மாத தடைக்காலம், இதை உடனடியாகச் செய்யவேண்டிய நிலைக்கு போன்பேவைத் தள்ளியுள்ளது. இல்லையென்றால், இவ்வளவு வேகத்தில் மற்றொரு வங்கியுடன் கூட்டணி அமைத்துவிட முடியாது எனத் தெரிவிக்கின்றன, நெருங்கிய வட்டாரங்கள்.

போன்பேவில் இருக்கும் வாடிக்கையாளர்கள், அவர்களது UPI ஐடியைப் பார்த்திருந்தால் தெரியும், ____@ybl என அது இருக்கும். அந்த ybl யெஸ் பேங்க்கை குறிப்பதுதான். ஏற்கெனவே இருக்கும் போன்பே வாடிக்கையாளர்களின் @ybl கணக்குகள், அதே ஐடி -யுடனே இனியும் இயங்கும். ஆனால், UPI சேவையை ஐசிஐசிஐ வங்கி பார்த்துக்கொள்ளும்.

போன்பே
போன்பே

இவ்வளவு வேகமாக நடந்திருக்கும் வங்கி மாற்றம், இன்னும் சில கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. தேவையான ஒப்புதல்கள் வாங்கப்பட்டே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் சமீர் நிகம். ஆனால், NPCI முன்பு வெளியிட்டிருந்த சுற்றறிக்கையின்படி, கூட்டணி வங்கிகள்தான் கணக்கு எண், போன்ற வாடிக்கையாளர்களின் முக்கியத் தரவுகளை சேமித்து வைத்திருக்க வேண்டும். போன்பே போன்ற மூன்றாம் தரப்பு ஆப்கள், பெயர், போன் நம்பர், மெயில் ஐடி போன்றவற்றை மட்டுமே சேமிக்க வேண்டும். ஆனால், போன்பேயிடம் யெஸ் பேங்க் சேமித்துவைத்திருந்த தரவுகளும் இருந்தன. அதனால்தான், 24 மணி நேரத்தில் இன்னொரு வங்கிக்கு சேவையை மாற்ற முடிந்துள்ளது. இவை அனைத்தையும் பார்த்து NPCI என்ன செய்துகொண்டிருக்கிறதென்று தெரியவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்குத் தீர்மானமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. போன்பேவும், இதை முற்றிலுமாக வதந்தி என நிராகரித்திருக்கிறது.

NPCI
NPCI

இந்த விவகாரத்தில், UPI-யை நிர்வகிக்கும் NPCI மீது இன்னும் சில குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. அதில் முக்கியமானது, எப்படி போன்பேவை ஒரேயொரு கூட்டணி வங்கியுடன் மட்டும் NPCI இயங்கவிட்டது என்பது. செப்டம்பர் 2019ல் கூகுள் பே அறிமுகமானபோது, ஒன்றுக்கு அதிகமான வங்கிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மூன்றாம் தரப்பு ஆப்களுக்கு NPCI வழிவகை செய்திருந்தது. அதனால்தான், SBI, Axis, ICICI எனப் பல கூட்டணி வங்கிகளுடன் சேவையைத் தொடங்கியது கூகுள் பே. @okaxis, @okicici, @oksbi எனப் பல விதமான UPI ஐடிகள் கூகுள் பேவில் இருப்பது அதனால்தான்.

போன்பேவும் இதைச் செய்யலாம் என சென்ற வருடமே முடிவு செய்தது. ஆனால், இப்போது யெஸ் பேங்க்கிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் வரை வேறு வங்கிகளுடன் இணையவில்லை போன்பே. இப்படி, மாதங்களில் நடக்காதது ஒரு நாளில் நடந்தது, ஐசிஐசிஐ வங்கியுடன் கைகோத்தது போன்பே.

கூகுள் போன்ற முதிர்ச்சியான நிறுவனங்கள், தொழில் தொடர்ந்து இயங்குவதில் கவனத்துடன் இருக்கின்றன. அதற்கான முதலீடுகளைச் செய்கின்றன. ஆனால், புதிய ஸ்டார்ட்-அப்கள் வளர்ச்சியை நோக்கிய பரபர ஓட்டத்தில் இவைபோன்ற விஷயங்களைக் கவனிப்பதில்லை. அதனால்தான் இந்த நிலை.

இதில் NPCI-யையும் முழுவதுமாக குற்றம் சொல்லிவிட முடியாது. NPCI, இந்தச் சேவை ஆப்களுக்குத் தொடர்ந்து இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துவந்ததாகவே தெரிகிறது. சில வாரங்களுக்கு முன்கூட, 'ஒன்றுக்கும் அதிகமான வங்கிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்' என இந்த மூன்றாம் தரப்பு ஆப்களை வலியுறுத்தியிருக்கிறது NPCI. ஆனால், எந்தத் தேதிக்குள் இதைச் செய்ய வேண்டும் என்று காலக்கெடு எதுவும் குறிப்பிடவில்லை.

பிரச்னை என்னவென்றால், ரிசர்வ் வங்கியைப் போல NPCI-க்கு அதிகாரம் இல்லை. அது, UPI-யை நிர்வகிக்கும் ஓர் அமைப்பு அவ்வளவே. இதனால் NPCI கொடுக்கும் அறிவிப்புகளுக்கும் எச்சரிக்கைகளுக்கும் பெரிய மதிப்பு இருப்பதில்லை. NPCI -யிடமிருந்து வரும் அறிவிப்புகளை உத்தரவாக எடுத்துக்கொள்ளாமல், அறிவுரைகளாகவே எடுத்துக்கொள்கின்றன இந்த ஆப்கள். இந்தப் போக்குதான் பிரச்னையே. போன்பேகூட, ஐசிஐசிஐ உதவியுடன் தப்பித்துவிட்டது. ஆனால், பல நிறுவனங்கள் மாற்றுவழி தேடித் திண்டாடிவருகின்றன.

API பிசினஸ்!

டிஜிட்டல் நிறுவனங்கள், யெஸ் பேங்க் பக்கம் மொத்தமாக ஒதுங்க முக்கியக் காரணம், யெஸ் பேங்க்கின் API (application program interface) சேவைகள், மற்ற வங்கிகளைவிடவும் சிறப்பாக இருந்ததுதான். வங்கிகள் டிஜிட்டல் மென்பொருள் சேவைகளில் சற்று பலவீனமாகவே இருக்கும். ஆனால், யெஸ் பேங்க் அப்படி இல்லை. டிஜிட்டல் புரட்சி வெடிக்கத்தொடங்கும் முன்பே அங்கு பலமாகக் கால்பதித்துவிட்டது. அதனால்தான், யெஸ் பேங்க்கின் மொத்த வருமானத்தில் 5-8% இந்த API சேவைகளைக் கொடுப்பதில் கிடைக்கும்.

உதாரணத்திற்கு, ஓலா போன்ற ஒரு டிஜிட்டல் சேவையை எடுத்துக்கொள்வோம். உங்கள் பயணம் முடிந்ததும் அதற்கான தொகையை ஓலாவிற்கு செலுத்துகிறீர்கள். நீங்கள் செலுத்தும் தொகையில், அதற்கான பங்கை எடுத்துக்கொண்டு மீதியை ஓட்டுநருக்குக் கொடுக்கும், ஓலா. தற்போது, ஓலாவில் சுமார் 20 லட்சம் வாகன ஓட்டுநர்கள் இருக்கின்றனர். அதாவது, ஒரு சில மணி நேரங்களில் கோடிக்கணக்கிலான தொகை பல்லாயிரம் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும். இதை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் செய்ய, யெஸ் பேங்க்கின் மேலாண்மை API-களை பயன்படுத்துகிறது ஓலா.

UPI பேமென்ட்டுகளுக்கு யெஸ் பேங்க்குடன் கூட்டணி வைத்திருந்த நிறுவனங்கள்.
UPI பேமென்ட்டுகளுக்கு யெஸ் பேங்க்குடன் கூட்டணி வைத்திருந்த நிறுவனங்கள்.

இது சரியாக நடக்க, மென்பொருள் தரமாக இருப்பதோடு சரியான அளவிலான சர்வர்கள் இருக்க வேண்டும், நெட்வொர்க் கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். இதில், அனைத்து வங்கிகளுக்கும் முன், யெஸ் பேங்க் வலுவாகிவிட்டது. இந்த API-கள் வேகமாகச் செயல்படவில்லை என்றால், பின்வரும் பரிவர்த்தனைகள் குவிந்துவிடும். சிக்கல்கள் ஏற்படும். பணப் பரிவர்த்தனைகளில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், பணப் பரிவர்த்தனைகள் தவறாக நடந்துவிடும். அதாவது, ஓட்டுநருக்கு பணம் இரண்டுமுறை சென்றுவிடலாம். அல்லது மொத்தமாகச் செல்லாமலேயே இருந்துவிடலாம். இரண்டுமே நடக்கக்கூடாது. இதற்கு இந்த மூன்றாம் தரப்பு ஆப்களுக்கு தரமான API சேவைகள் தேவைப்பட்டது. அதனால் நிதி நிர்வாகத்திற்காகப் புகழ்பெற வில்லையென்றாலும், டிஜிட்டல் பலத்திற்காக யெஸ் பேங்க்கிற்கு டிக் அடித்தன டிஜிட்டல் நிறுவனங்கள்.

இதன்பின்னர், மற்ற வங்கிகளும் யெஸ் பேங்கிற்கு நிகரான API-க்களை உருவாக்கத் தொடங்கின. இருந்தும் யெஸ் பேங்க் மவுசு குறையவில்லை. களத்தில் முதலில் கால்வைத்த நிறுவனம் என்பதால், எப்போதும் இரண்டு அடி முன்னரே இருந்தது யெஸ் பேங்க். இதற்கான விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவையும் சிறப்பாக இருந்தது.

இப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஸ்மூத்தாக சென்றுகொண்டிருந்த சேவை இப்படி திடீரென்று நின்றுவிட்டதால், செய்வதறியாமல் நிற்கின்றன டிஜிட்டல் நிறுவனங்கள். சிக்கல்கள் இருந்தாலும் பெரிய நிறுவனங்கள் மாற்று வழிகளை எப்படியும் கண்டுபிடித்துவிடும். ஆனால் சற்றே சிறிய டிஜிட்டல் நிறுவனங்கள் வேறு வழி தெரியாமல் பரிவர்த்தனைகளை மீண்டும் மேனுவலாகவே செய்யத்தொடங்கிவிட்டன. அதாவது, நொடிகளில் முடிந்த வேலைக்கு மீண்டும் மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதற்கென ஆட்களையும் பணியமர்த்த வேண்டும்.

யெஸ் பேங்க் வீழ்ச்சியால் API தொழில் மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியிருக்கிறது. ஆனால், இம்முறை டிஜிட்டல் நிறுவனங்கள் சற்றே கவனமாகவே இருக்கும். இனி வங்கியின் தொழில்நுட்ப பலத்தைவிடவும் அதன் நிதி நிர்வாகத்தைவைத்தே இனி நிறுவனங்கள் கூட்டணி அமைக்கும். நல்ல சேவையைவிட தொடர்ச்சியாக இயங்குவது முக்கியம் என்பதை யெஸ் பேங்க் இந்த நிறுவனங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

ICICI Bank
ICICI Bank

இப்படி மொத்தமாக பல நிறுவனங்கள் வேறு வங்கிகளுக்கு இடம்பெயர்வதால், சில நாள்களுக்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் தடுமாற்றங்களைச் சந்திக்கும். 'சக்ஸஸ் ரேட்' முன்பு போல இருக்காது. வங்கிகளும் வேகமாக இந்த நிறுவனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கட்டமைப்புகளைக் குறுகிய நேரத்தில் மேம்படுத்த வேண்டும்.

இப்போதைய டிரெண்டை வைத்துப் பார்த்தால், ஐசிஐசிஐ வங்கியைத்தான் நிறுவனங்கள் விரும்புவதாகத் தெரிகிறது. ஓலா, போன்பே, பாரத்பே போன்ற சேவைகள் ஏற்கெனவே ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்துவிட்டன. இதுமட்டுமல்லாமல் புதிய வாய்ப்புகளும் இனி ஏற்படும், வங்கிகளுக்கு API தயார் செய்து தருகிறோம், தொழில்நுட்ப விஷயங்களைப் பார்த்துக்கொள்கிறோம் என டெக் நிறுவனங்கள் இதற்குள் வரலாம்.

முன்பு சொன்னதுபோல UPI-யை நிர்வகிக்கும் அமைப்பாகவே இருக்கிறது NPCI. இந்த நிலை மாறலாம். மீண்டும் இந்த டிஜிட்டல் பேமென்ட் சிஸ்டத்தில் பிரச்னைகள் வராமல் இருக்கும் UPI மொத்தமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள்கூட வரலாம்.

எது எப்படியோ, இந்த நிகழ்வுகள் `டிஜிட்டல்' இந்தியாவுக்கு சரியான நேரத்தில் முக்கியமான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இதிலிருந்து, அனைத்து தரப்புகளும் பாடம் கற்பர் என நம்புவோம்.

அடுத்த கட்டுரைக்கு