Published:Updated:

வீடியோ பதிவேற்றும் விதிமுறைகளை மாற்றிய யூ-டியூப்... க்ரியேட்டர்கள் அறிய வேண்டியது என்ன? #YouTube

யூடியூப்
யூடியூப்

யூடியூப்பின் இந்த மாற்றங்கள் டிசம்பர் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

கடந்த மாதம் யூடியூப் நிறுவனம் தனது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவேற்ற புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் முக்கியமான மாற்றமாக "இனி தங்களது இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவிடுவோர் அது குழந்தைகளுக்கு ஏற்றதா இல்லையா என்பதைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

யூடியூப்
யூடியூப்

அதாவது, இனி வரும் நாள்களில் அனைத்துப் படைப்பாளர்களும் தங்களின் வீடியோ குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்ற வகையிலான வீடியோக்களில் இனி, கமென்ட் பகுதி முடக்கப்பட்டிருக்கும் மற்றும் இதர பிற அம்சங்களும் செயல்படாது. ஆனால், இதர வீடியோக்கள் எப்போதும் போலவே எல்லா அம்சங்களுடனும் இருக்கும். இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணம் Federal trade Commission (FTC) யூடியூபை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனத்துக்கு 175 மில்லியன் டாலர் அபராதமாக விதித்ததுதான்.

குழந்தைகளின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் யூடியூப் பெற்ற வழக்கில் இந்த அபராதமானது விதிக்கப்பட்டது. தற்போதுள்ள புதிய நடைமுறையை யூடியூப் படைப்பாளர்கள் பின்பற்றவில்லையெனில் வீடியோக்கள் மீது யூடியூப் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதை மீறிச்செயல்படும் படைப்பாளர்களுக்கு $42,530 அபராதமாக விதிக்கப்படும் என்பது வெறும் வதந்தி. இந்த அபராதம் ஆன்லைனில் குழந்தைகளுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு சட்டத்தை (Children's Online Privacy Protection Act, COPPA) மீறும் வலைதள நிறுவனங்களுக்கு மட்டுமே விதிக்கப்படும்.

இதனால், இனி படைப்பாளர்கள் தங்களது வீடியோக்களின் வகைகளை யூடியூப் நிறுவனம் சரிபார்ப்பதற்கு முன்னரே குறிப்பிட வேண்டும். இதற்கேற்ப யூடியூபில் செயற்கை நுண்ணறிவானது வீடியோக்கள் குழந்தைகளின் தரத்திற்கு ஏற்றதா இல்லையா என்பதைத் தரம் பிரித்துவிடும். இதன்மூலம் குழந்தைகளின் வயதுக்கு மீறிய வீடியோக்களைக் கண்டறிய முடியும். மேலும், குழந்தைகளுக்கான வீடியோக்களில் தனிப்பட்ட விளம்பரங்களும் இனி தோன்றாது. இதனுடன் வீடியோவின் கடைசி நொடிகளில் தோன்றும் எண்ட் கார்டஸ் மற்றும் இன்ஃபோ கார்ட்ஸ் ஆகியவையும் இனி இடம்பெறாது.

` சமையலோடு கலந்த மனிதாபிமானம்!' - `யூடியூப் தாத்தா' மறைவால் கலங்கும் நெட்டிசன்கள்

யூடியூப் வெளியிட்ட வீடியோவில் "எல்லாத் தானியங்கி சாதனங்கள் போல எங்களுடைய மென்பொருளும் எப்போதும் துல்லியமாக இருக்காது. அதனால், உங்கள் வீடியோவுக்கான வயது வரம்பைத் தீர்மானிப்பதில் எங்களைச் சார்ந்து இருக்காதீர்கள். நீங்கள் உங்களுக்கு ஏற்ற பார்வையாளர்களின் வயதினை நிர்ணயிக்கவில்லை என்றால் அல்லது ஏதேனும் தவறு இருந்தால் மட்டுமே வயது வரம்பை நாங்கள் நிர்ணயம் செய்வோம். பெரும்பாலான வீடியோக்களுக்கு நீங்கள் அளிப்பவற்றையே ஏற்றுக்கொள்வோம்" என்றது. "இதே போல் நீங்கள் பதிவேற்றும் ஒவ்வொரு வீடியோவுக்கும் உங்களுக்கு ஏற்ற பார்வையாளரைத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு முன், உங்கள் சேனலுக்கு நீங்கள் பார்வையாளர்கள் வரம்பை நிர்ணயத்திலிருந்தாலும் இதை ஒவ்வொரு வீடியோவுக்கும் செய்ய வேண்டியது அவசியம். இதைச் செய்ய YouTube Studio>Settings>Advance Setting சென்று Audience பிரிவின்கீழ் உங்கள் சேனலுக்கு ஏற்ற பார்வையாளர்கள் யார் என நிர்ணயம் செய்யுங்கள்.

மற்றொரு முக்கிய மாற்றமாக ஒரு யூடியூப் சேனலின் தரம் குறைவாக இருந்தாலோ அல்லது யூடியூபிற்கு பலன் அளிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்படவில்லை (Not commercially viable) என்றாலோ அந்த சேனல் நீக்கப்படலாம் எனத் தெரிவித்திருக்கிறது யூடியூப். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து குறைவான பார்வையாளர்கள் கொண்ட யூடியூப் படைப்பாளர்களிடையே தங்களது யூடியூப் சேனல் நீக்கப்படுமோ என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் தங்களது சொந்தப் பயன்பாட்டிற்காக வீடியோக்களைப் பதிவேற்றி யூடியூப்பில் சேகரித்தவர்களின் கணக்குகளும் இதைக் காரணம் காட்டி நீக்கப்படலாம் என்றும் பரவலாகப் பேசப்பட்டது.

`யூடியூப் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டேன்!' - ஏடிஎம் கொள்ளையில் சிக்கிய சென்னை இன்ஜீனியர்

ஆனால், இந்தப் புதிய மாற்றத்தைக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள யூடியூப் "உங்களது சேனல் மற்றும் வீடியோக்கள் எங்களின் வியாபார யுக்திக்கேற்ப இல்லையெனில் எங்கள் சேவையிலிருக்கும் சில வசதிகள் மற்றும் சில அம்சங்களை மட்டுமே நீக்குவோம். இது எந்தவித புதிய பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை" என்று கூறியுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் டிசம்பர் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துவிட்டது.

இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூப் போன்ற தளங்கள் வயது வரம்பின்றி அனைவராலும் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் வீடியோ பதிவேற்றத்தில் குழந்தைகளின் நலன் கருதிச் சிறப்பு நடைமுறைகளை யூடியூப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது நிச்சயம் ஆரோக்கியமானதுதான்.

அடுத்த கட்டுரைக்கு