Published:Updated:

“நானும் வொர்க் ஃப்ரம் ஹோம்தான்!”

 வேல்சாமி சங்கரலிங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேல்சாமி சங்கரலிங்கம்

இதே சூழல் இன்னும் எவ்வளவு காலம் தொடர்கிறதோ அதற்கேற்ற தாக்கத்தை அது நிச்சயம் விட்டுச்செல்லும்.

சிலிக்கான்வேலியிலிருந்து உலகையே ஆட்டிப்படைக்கும் டெக் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் ஜூம்மில்கூட ஒரு விருதுநகர்க்காரர் இருக்கிறார்.அவர், அந்நிறுவனத்தின் இன்ஜினீயரிங் & புராடக்ட் பிரிவுத் தலைவர் வேல்சாமி சங்கரலிங்கம். ஜூம் பற்றிப் பேச அவரை ஜூம்மிலேயே பிடித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``விருதுநகர் டு சிலிக்கான் வேலி... உங்கள் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்!”

``10-ம் வகுப்பு வரை விருதுநகரில்தான் படித்தேன். 11,12-ம் வகுப்புகள் ஏற்காட்டில் ஒரு போர்டிங் ஸ்கூல். கிண்டி பொறியியல் கல்லூரியில் இன்ஜினீயரிங்; அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் முடித்தேன். அதிலிருந்து நெட்வொர்க்கிங் கம்யூனிகேஷன் துறையில்தான் வேலை. நான் வேலை செய்துகொண்டிருந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றை Webex என்னும் வீடியோ கான்பரன்சிங் நிறுவனம் வாங்கியது. அங்குதான் ஜூம்மின் நிறுவனரான எரிக் யுவானுடன் பழக்கமானேன். பின்பு Webex நிறுவனத்தை சிஸ்கோ வாங்க, நானும் வேலை மாறிவிட்டேன். எரிக், ஜூம்மை ஆரம்பித்தான். சமீபத்தில், ‘ஜூம்மின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது... உன் சேவை தேவை’ என எரிக் அழைத்தான். இந்த நேரத்தில் பலருக்கு உதவிகரமாக ஜூம் இருக்கிறது, எரிக்கும் நெருங்கிய நண்பன் என்பதால் ஜூம்மில் இணைந்துவிட்டேன்.”

 வேல்சாமி சங்கரலிங்கம்
வேல்சாமி சங்கரலிங்கம்

``சரி, ஜூம்முக்கு வருவோம்... வீடியோ கான்பரன்சிங் சேவைகள் பல இருந்தும் ஜூம் மட்டும் எப்படி இப்படி அபாரமாக வளர்ந்திருக்கிறது?”

``எளிமைதான் காரணம். பெரு நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட சேவைதான் ஜூம். ஆனால் யார் வேண்டுமானாலும் எளிதில் பயன்படுத்த முடியும் என்பதால்தான் இத்தனை பேரைச் சென்றுசேர்ந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே ஜூம்மின் குறிக்கோள். இந்த வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கோவிட் 19, டிஜிட்டல் உலகில் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது?”

``ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. முன்பெல்லாம் வேலை பார்ப்பதற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்பது கட்டாயமான ஒன்றாக இருந்தது. இதை நாம் மாற்ற வேண்டும் என நினைத்திருந்தாலும் மாற்றியிருக்க முடியாது. ஆனால் இப்போது கொரோனாவால் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. ‘அனைவரும் இனி அலுவலகம் வர வேண்டுமா?’ என நிறுவனங்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டன. பெருநகரங்களிலிருந்து மட்டும்தான் வேலை பார்க்கவேண்டும் என்ற சூழலும் மாறிவிடும். இதனால் மக்கள் தொகை நெருக்கம் குறையும். இதே சூழல் இன்னும் எவ்வளவு காலம் தொடர்கிறதோ அதற்கேற்ற தாக்கத்தை அது நிச்சயம் விட்டுச்செல்லும்.”

“நானும் வொர்க் ஃப்ரம் ஹோம்தான்!”

``நாங்கள் ஜூம்மில் ஒன்றிணைந்து WFH பார்க்கிறோம்... ஜூம் எப்படி வேலைபார்த்துக்கொண்டிருக்கிறது?”

``நான் ஜூம்மில் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. இதுவரை நான் அலுவலகம் செல்லவே இல்லை. ரிமோட்டி லிருந்துதான் அனைத்துப் பணிகளையும் பார்த்து வருகிறேன். எரிக் செம எனர்ஜியான பர்சனாலிட்டி, மொத்த நிறுவனத்தையும் அப்படிதான் வைத்திருக்கிறார்.”

``ஜூம்மின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன, இதற்குக் காரணம் என்ன?”

“ஜூம் தொழில்நிறுவனங்களுக்கென வடிவமைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்களை அந்த நிறுவனங்களின் ஐ.டி பிரிவு பார்த்துக்கொள்ளும். ஆனால் இப்போது கொரோனாவால் அனைவருமே பயன்படுத்தத் தொடங்கி யிருக்கின்றனர். இதில்தான் சிக்கல். அவர்களுக்கும் சேர்த்துப் பல புதிய பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். ‘Zoom 5.0’ என்ற 90 நாள் திட்டத்தில் பாதுகாப்பு வசதிகளை முழுவதுமாக மேம்படுத்தியுள்ளோம். இத்தனை பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப் பட்டாலும் எளிமையாகவே இருக்கும் ஜூம். இந்த பேலன்ஸ் கொண்டுவருவதுதான் சவாலாக இருந்தது.”

“நானும் வொர்க் ஃப்ரம் ஹோம்தான்!”

``ஜூம் சீன நிறுவனம் என்ற மனநிலை நிலவுகிறதே!’’

``ஜூம் ஓர் அமெரிக்க நிறுவனம். எங்கள் தலைமையகம் இங்குதான் இருக்கிறது. அமெரிக்கப் பங்குச் சந்தையில்தான் பொது நிறுவனமாக இருக்கிறோம். எரிக் பிறந்தது சீனாவாக இருந்தாலும் அவர் அமெரிக்கக் குடிமகன்தான். பலரும் சொல்வதுபோல இலவசமாக ஜூம் பயன்படுத்தும் பயனாளர்களின் தகவல்கள் சீன வழியெல்லாம் செல்வதில்லை. எந்த டேட்டா சென்டர் அருகிலிருக்கிறதோ அங்குதான் தகவல் செல்லும். சீனா வழி செல்லக்கூடாது என எங்களால் கட்டுப்படுத்த முடியும். இந்திய அரசுடனும் தொடர்ந்து இணைந்து செயல்பட்டுவருகிறோம்.”

“ஜூமைப் போலவே ஒரு செயலியை இங்கு ஒரு பெரிய நிறுவனம் அறிமுகப்படுத்தி யிருக்கிறதே, பார்த்தீர்களா?”

``போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எங்கள் கையில் இல்லை. ஒன்று, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்த்துக்கொண்டிருக்கலாம். இல்லை, எப்படி நம் சேவையை மேம்படுத்தப்போகிறோம் எனப் பார்க்கலாம். ஜூம் இரண்டாவது ரகம்.”

``இந்தியாவுக்கென ஜூம் சிறப்புத் திட்டங்கள் வைத்திருக்கிறதா?”

“நிறைய வைத்திருக்கிறோம். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள், அனைத்தையும் ஒவ்வொன்றாக அறிவிக்கிறோம்!”