பிரபல சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மூன்றும் சில மணிநேரங்களாகச் சரியாக வேலைசெய்யவில்லை என உலகமெங்கும் இருந்து புகார்கள் எழுந்தன. மூன்றுமே தற்போது பேஸ்புக்கிற்குச் சொந்தமான சேவைகள்தான்.

இவற்றில் படங்கள், வீடியோக்கள், ஸ்டோரி போன்ற மீடியாக்களை லோட் செய்யமுடியாமல் தவிக்கின்றனர் பயனாளர்கள். இதுபோன்ற பின்னடைவுகளைப் பதிவுசெய்யும் பிரபலமான தளமான DownDetector-ல் இது மூன்று குறித்த புகார்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுள்ளன.



தற்போது உலகளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் முதல் மூன்று விஷயங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்தான். லட்சக்கணக்கில் ட்வீட்கள் சில மணிநேரத்தில் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து ஃபேஸ்புக் தங்களது அதிகாரபூர்வப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ``சிலர் எங்கள் ஆப்களில் படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோடு செய்யமுடியாமல் இருப்பது பற்றி நாங்கள் அறிவோம்.
இந்தச் சிக்கலுக்கு அவர்களிடம் மன்னிப்பு கோருகிறோம். முடிந்தளவு சீக்கிரம் இந்தப் பிரச்னையை சரிசெய்வோம்" என்று அதில் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமின் ட்விட்டர் பக்கத்திலும் இதே அறிக்கை பதிவிடப்பட்டது.

இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? இது ஹேக்கர்களின் வேலையா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகள் இந்தப் பிரச்னை முழுவதுமாக தீர்க்கப்பட்ட பின்னே கிடைக்கும் எனக் கூறப்பட்டது. இன்று அதிகாலை நேரத்தில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழையபடி ஃபேஸ்புக் சேவைகளை வழங்கி வருகிறது. இதேபோல் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் பழையபடி பயன்பாட்டுக்கு வந்துள்ளன.