ஒரு முறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் "இந்த உலகத்துலயே மிகச் சிறந்த மேதைனு உங்களைக் கொண்டாடுறாங்க, இதை நீங்க எப்படி உணர்றீங்க?" ன்னு ஒரு கேள்வி கேட்டாங்க. அதுக்கு ஐன்ஸ்டீன், "இதை நீங்க டெஸ்லா கிட்டல்ல கேக்கனும், என்கிட்ட கேக்குறீங்க!" அப்படின்னு சொன்னாராம். இப்படி ஐன்ஸ்டீனே புகழாராம் சூட்டிய மேதை டெஸ்லா. டெஸ்லா யாருன்னு சாதாரண மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். ஆனால், அறிவியல் மேல ஆர்வம் கொண்டவங்களுக்கு டெஸ்லா ஒரு மாபெரும் மேதைன்னு தெரியும். நம்ம எல்லோருக்குமே ஐன்ஸ்டீன், எடிஷன் போன்றவர்களின் கண்டுபிடிப்புகளைப் பத்தியும் அவர்கள் அறிவியல் துறைக்கு எந்த வகையில எல்லாம் ஒரு தூணா இருந்தாங்கங்கிறதைப் பத்தியும் நிறைய சொல்லிக் கொடுத்துருப்பாங்க. ஆனால், டெஸ்லாவைப் பத்தி கொஞ்சமே கொஞ்சம்தான் நம்ம பாடப் புத்தகத்துல வரும்.

1856-ல் ஆஸ்திரிய பேரரசுப் பகுதியில் இருந்த ஸ்மிலிஜான் கிராமத்துல இடி, மின்னலோட புயல் வீசிட்டு இருந்துச்சு. Duka-ங்கிற பொண்ணுக்கு அந்த நேரத்துல ஒரு குழந்தை பிறக்குது. "இந்த மாதிரி அபசகுணமான நேரத்துலையா இந்த குழந்தை பிறக்கணும்!, இது இருளின் குழந்தையாகத்தான் இருக்கும்" அப்படினு பிரசவம் பார்த்த பெண் வருத்தப்படுறாங்க. அப்போ Duka தன்னோட குழந்தைய பார்த்துக்கிட்டே, "இல்லை, இது ஒளியின் குழந்தை" அப்படின்னு சொன்னாங்க. அந்தக் குழந்தை தான் நிக்கோலா டெஸ்லா. பிற்காலத்துல உலகமே ஒளியில் ஒளிர இந்தக் குழந்தையும் ஒரு காரணமா இருக்கப் போகுதுன்னு அப்போ யாருக்கும் தெரியாது.
ஆஸ்திரியால இருக்கிற இம்பீரியல் ராயல் டெக்னிகல் கல்லூரியில் சேர்ந்த டெஸ்லா முதல்ல நல்லாதான் படிச்சிட்டு இருந்தாரு. கல்லூரியிலேயே முதன்மையான மாணவராகவும் இருந்தாரு. ஆனால், என்ன காரணம்னு தெரியல, கல்லூரியில் மூன்றாவது ஆண்டு படிச்சிட்டு இருக்கும்போது சரியா படிக்காம பல பாடங்கள்ல தோல்வி அடைஞ்சு கல்லூரிப் படிப்பை முடிக்காமலே வெளியேறிட்டாரு. அதுக்கு அப்புறமும் எந்தக் கல்லூரியிலையும் படிச்சு டெஸ்லா பட்டம் வாங்கினதா எந்தத் தகவலும் இல்லை. 1884-ல அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தாரு டெஸ்லா. அமெரிக்காவுல அவர் இறங்குனப்போ அவர் கையில் இருந்தது வெறும் 4 சென்ட்கள்தான். அங்க எடிசன்கிட்ட வேலை பார்க்கத் தொடங்குறாரு டெஸ்லா. அந்த சமயத்துல் நேர்திசை மின்னோட்டத்தை (Direct Current) மேம்படுத்தி அதைப் பரவலா மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர்ற முயற்சியில் இருந்தாரு எடிசன். டெஸ்லாவுக்கு புதுசு புதுசா எதையாவது கண்டுபிடிச்சிட்டே இருக்கனும்ங்கிற ஆர்வம் அதிகமா இருந்துச்சு. பலநாள் தூங்காமகூட தன்னோட கண்டுபிடிப்ப மேம்படுத்துறதுல கவனம் செலுத்திட்டு இருந்தாரு டெஸ்லா. நேர்திசை மின்னோட்டத்தைவிட எதிர்திசை மின்னோட்டத்தை பயன்படுத்துனா இன்னும் எளிதாகவும், குறைவான செலவுலையும் மின்சாரத்தை நீண்ட தூரம் கடத்த முடியும்னு டெஸ்லா நம்புனாரு. இதை எடிசனுக்கு புரியவைக்கவும் முயற்சி செஞ்சாரு. ஆனால், இதை வேலைக்காகாத ஐடியானு எடிசன் நிராகரிச்சுட்டாரு. எடிசனைப் பொருத்தவரைக்கும் நேர்திசை மின்னோட்டம் தான் நிஜத்துல செயல்படக்கூடியதுனு முழுசா நம்புனாரு.

இதன்பிறகுதான் எடிசனைவிட்டுப் பிரிஞ்சுவந்து தனியாகவே எதிர்திசை மின்னோட்டத்தை வச்சு மின்சாரத்தைக் கடத்தும் முறையை மேம்படுத்தத் தொடங்கினாரு டெஸ்லா. இந்த சமயத்துலதான் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ்ங்கிற தொழிலதிபரோட அறிமுகம் டெஸ்லாவுக்கு கிடைக்குது. டெஸ்லாவோட மூளையோட தன்னோட பணத்தை இணைச்சு, எடிசன்கூட போட்டியிட ஆரம்பிச்சாங்க. டெஸ்லாவோட எதிர்திசை மின்சாரமுறை ஆபத்தானதுனு எடிசன் பிரச்சாரம் பன்றாரு. ஏற்கனவே எடிசன் மக்களுக்குப் பயன்படக்கூடிய சில கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருந்ததால மக்களும் எடிசனுக்கு கொஞ்சம் ஆதரவாவே இருந்தாங்க. ஆனால், கடைசியில் தன்னோட யோசனைதான் மின்சாரத்தை எளிதா கடத்துறதுக்கான வழினு நிரூபிச்சாரு டெஸ்லா. இன்னைக்கு அந்த முறையில் தான் மின்சாரத்தை அதிக தூரங்களுக்குக் கொண்டுட்டுப்போய் நாம பயன்படுத்திகிட்டு இருக்கோம்.
இது மட்டும் இல்லை, இன்னைக்கு டிவி ரிமோட்ல ஆரம்பிச்சு, மொபைல் போன் வரைக்கும் டெஸ்லாவோட கண்டுபிடிப்போ, ஐடியாவோ ஏதோ ஒன்னு அதுல இருக்கும். நீர்நிலைகள்லருந்து மின்சாரம் தயாரிக்கிற முதல் Hydro Electric Powerplant-ஐ வடிவமைச்சது டெஸ்லாதான். 1896-ல நயாகரா நீர்வீழ்ச்சியிலதான் முதல் Hydroelectric powerplant-ஐ கட்டுனாங்க. அதை வடிவமைச்சது டெஸ்லா. இப்படி டெஸ்லா கண்டுபிடிச்ச, மேம்படுத்திய கண்டுபிடிப்புகள் ஏராளம். கிட்டத்தட்ட 26 நாடுகள்ல, 196 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை டெஸ்லா வாங்கியிருந்தாரு. இன்னைக்கு வயர்லெஸ் எலக்ட்ரிசிட்டிங்கிறத ஒரு யோசனையா தான் முன்வச்சு பேசிட்டு இருக்காங்க. ஆனால், கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்னாடியே இதைப் பத்தி யோசிச்சவரு டெஸ்லா.
அறிவியல் உலகத்துல டெஸ்லாவோட பங்களிப்பை மனசுல வச்சு, அவருக்கு பெருமை சேர்க்கும்விதமா Magnetic Flux Density-ஐ அளக்குறதுக்கான அளவையா டெஸ்லாவோட பெயரைப் பயன்படுத்துறாங்க. மேலும், எலான் மஸ்க்கோட டெஸ்லா நிறுவனத்தைப் பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். அந்த பெயரே நிக்கோலா டெஸ்லாவ கவுரவப்படுத்துறதுக்காகத் தான் எலான் தன் நிறுவனத்துக்கு சூட்டியிருக்காரு.

தன்னோட கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கணும்கிற ஆசை எப்போதும் டெஸ்லாவுக்கு இருந்ததே இல்லை. டெஸ்லாவோட ஆசையே அறிவியலும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மக்களுக்குப் பயன்படணும் அப்படிங்கறதுதான். அறிவியல் உலகத்துக்கு இவ்வளவு பங்காற்றியிருந்தாலும், தன்னோட கடைசி காலகட்டத்துல கவனிக்க யாரும் இல்லாம நியூயார்க்ல ஒரு ஹோட்டல்ல, ரத்தக் குழாய்கள்ல அடைப்பு ஏற்பட்டு 1943, ஜனவரி 7-ஆம் தேதி இறந்து போனாரு டெஸ்லா. இன்றைக்கு டெஸ்லாவோட நினைவு நாள்.
மத்தவங்க உங்களோட கண்டுபிடிப்பை திருடுறதைப் பத்தி என்ன நினைக்குறீங்கனு டெஸ்லாகிட்ட கேள்வி கேட்கப்படுது. அதுக்கு டெஸ்லா இப்படி பதில் சொல்றாரு, "அவங்க என்னோட கண்டுபிடிப்பைத் திருடுறதப்பத்தி எனக்குக் கவலையில்லை. ஆனால், சொந்தமா யோசிக்கிற அளவுக்குத் திறன் அவங்க கிட்ட இல்லையேங்கிறது தான் எனக்கு கவலையா இருக்கு" அப்படினு சொன்னாராம்... அதுதான் டெஸ்லா!