சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

விமர்சனங்களுக்குத் தீர்வு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்!

truecaller
பிரீமியம் ஸ்டோரி
News
truecaller

truecaller

அதிகமாக தெரியாத எண்களில் இருந்துதான் நம் கைப்பேசிக்கு அழைப்புகள் வருகின்றன. எல்லோருடைய மொபைலிலும் சமூக வலைதளச் செயலிகளைப்போல நீக்கமற நிறைந்திருக்கும் இன்னொரு செயலி ட்ரூகாலர். ஆனாலும், சீன நிறுவனம், டேட்டா திருட்டு என ட்ரூ காலரின் மேல் அத்தனை கறைகள். எது சரி, எது தவறு எனத் தெரிந்துகொள்வதற்காகத் தேடியபோது காரி கிருஷ்ணமூர்த்தி ட்ரூகாலரில் சிக்கினார். கோத்தகிரியின் படுகர் இனத்திலிருந்து தற்போது ஸ்வீடனில் ட்ரூகாலரின் முதன்மை வர்த்தக அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

காரி கிருஷ்ணமூர்த்தி
காரி கிருஷ்ணமூர்த்தி

``ட்ரூகாலர் செயலின் தேவை தற்போது இருக்கிறதா?’’

“டெலிகாம் வளர வளர எங்களுக்கான தேவை அதிகரிக்கிறது. முன்புபோல் அல்லாமல், இப்போது எல்லோரும் ஸ்மார்ட்போன் வாங்கக்கூடிய ஜனநாயகமான சந்தை உருவாகியிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இன்னும் இ-மெயிலில்தான் புதிய மனிதர்களுடன் இணைய விரும்புகிறார்கள். இந்தியாவிலோ ‘உங்க நம்பர் இருந்தா கொடுங்க சார்’தான். அந்த நம்பருக்கான நம்பகத்தன்மையை ட்ரூகாலர் உறுதிசெய்கிறது.”

``சில செயலிகள் காலம் கடந்து நிற்பதில்லை. அந்தச் செயலிகளின் தேவையை மொபைல்களே அடுத்தடுத்த மாடல்களில் சரிசெய்துவிடுகிறது. இதை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?’’

“நிச்சயமாக, ஒரு மொபைலில் வெறுமனே ஒரு செயலியாக தேங்கிப் போவதில் எங்களுக்கும் விருப்பமில்லை. காலர் ஐடியில் ஸ்பாம் மட்டும் சொல்லும் நிறுவனமாக இருந்த ட்ரூகாலர், டயலர் ஆப்ஷன், மெசேஞ்சர் எல்லாம் கொண்டு வந்தது மக்களின் கருத்துகள் மூலம்தான். சில மொபைல் நிறுவனங்களும், எங்களிடம் பிரத்யேகமாக டயலர்கள் கேட்டார்கள். பிசினஸ் காலர் ஐடி என்பதைக்கூட அப்படித்தான் உருவாக்கிவருகிறோம். அதன் பின்னர்தான், அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றை டெலிவரி சர்வீசஸ் என இணைக்க ஆரம்பித்தோம். இந்த எண்களில் இருந்து கால் வந்தால் ஸ்பாம், ஜங்க் என்றெல்லாம் காட்டாது. இப்படிப் பல நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறோம். இப்படியான அப்டேட்டுகள் மூலம்தான் நாங்கள் இன்னும் தொடர்ந்து இருக்கிறோம்.”

``சரி, இப்போது ஸ்பாம், ஜங்க் எல்லாம் மொபைல் நிறுவனங்களே சொல்லி விடுகிறார்களே. பிறகு எதற்கு ட்ரூகாலர்?’’

“பெரிய பெரிய மொபைல் நிறுவனங்கள்கூட எங்களையொரு பென்ச் மார்க்காக வைத்து நாங்கள் தரும் சேவைகளைத் தர முயல்கிறார்கள். ஆனால் எங்களிடம் இருக்கும் டேட்டா அதிகம். அதுவும் பயனாளர்கள் மூலம் பெறப்பட்ட டேட்டா. எங்களின் சர்வரில் ஒவ்வொரு எண்ணையும் இணைத்தது பயனாளர்கள் தான். 12 ஆண்டுகளாக நாங்கள் மட்டுமே செய்து கொண்டி ருக்கிறோம். போட்டி நல்லது. ஸ்பாம், ஜங்க் காலர்களை யார் ஒழித்தால் என்ன?”

விமர்சனங்களுக்குத் தீர்வு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்!

``ஆனால், உங்களின் டேட்டா சர்ச்சையாகிக்கொண்டேதான் இருக்கிறது. ட்ரூகாலர் பற்றி இன்னும் விமர்சனங்கள் தொடர்கிறதே?’’

“நிறைய கேட்டுவிட்டோம். ட்ரூகாலரை இன்ஸ்டால் செய்தால், ஒட்டுமொத்த போன்புக்கையும் எடுத்துவிடுகிறார்கள் என்று சொன்னார்கள். நீங்கள் சீன நிறுவனம்தானே என்பார்கள். 2012-ம் ஆண்டே ஆப்பிள், கூகுள் இரண்டு நிறுவனங்களும் போன்புக் அப்லோடுக்குத் தடை விதித்துவிட்டன. அதைமீறி யாரும் செய்ய முடியாது. ஆனால், இதை எல்லா மக்களும் நம்ப வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்திய பயனாளர்களுக்கான சர்வரை மும்பையில் நிறுவியிருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய ராணுவம் சில செயலிகளை அபாயகரமானது என அறிவித்தது. அதில் ட்ரூகாலரும் ஒன்று. அதில், நிறைய சீனச் செயலிகள் இருந்ததால், எங்களையும் சீன நிறுவனம் ஆக்கிவிட்டார்கள். ஆனால், நாங்கள் ஸ்வீடன் நிறுவனம். மக்களிடமும் இதுகுறித்தெல்லாம் நக்கலைட்ஸ் போன்ற நிறுவனங்களை இணைத்துக்கொண்டு பேசிவருகிறோம். விழிப்புணர்வு மட்டுமே இதற்கான தீர்வு. மக்களைக் கோபித்துக்கொண்டோம் என்றால் தொழில் செய்ய முடியாது.”

``என் நண்பர்களில் பலர், ட்ரூகாலர் இன்ஸ்டால் செய்தால் தான் அதிகமான ஸ்பாம் காலே வருகிறது என்கிறார்கள். இதுவும் வெறும் அவதூறுதானா?’’

“அப்படி மொத்தமாய் அவதூறு என்று புறந்தள்ளிவிட முடியாது. நிறைய மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மக்களின் மொபைல் எண்களை மொத்தமாக விற்கிறார்கள். உங்களுக்கு வரும் நிறைய ஸ்பாம் கால்களை ட்ரூகாலர் கண்டு பிடித்துச் சொல்லிவிடுகிறது. அதனாலேயே, அதிகமான கால் வருவதாக நீங்கள் உணர்கிறீர்கள்.”