Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 26

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல்

- அண்டன் பிரகாஷ்

அடிப்படை நுண்ணுயிரியியல் ஆராய்ச்சி முடிவுகள் பலவும் கொரோனாத் தடுப்பூசிக்குப் பயன்பட்டிருப்பது பற்றிய கட்டுரை பலரது ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. போலியோ போன்ற நோய்களுக்கு எதிராக நாம் கண்டறிந்த தடுப்பூசிகளின் வழிமுறைகளோடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி கொடுத்த பலனால், பல புதுமைகளும் சேர்ந்திருக்கின்றன.

UNLOCK அறிவியல் 2.O - 26

பொதுவாக, தடுப்பு மருந்து கண்டறியப்படுவது இப்படி... நோயை உருவாக்கும் வைரஸை ஆராய்ச்சிக் கூடத்தில் பிரித்தெடுத்து, அது வளரும் தன்மையை மழுங்கடித்து, அதன் பலவீனமான பதிப்பாக மாற்றுவார்கள். அப்படி மாற்றப்பட்ட மறுபதிப்பு மண்ணாந்தை வைரஸ் உடலுக்குள் வந்ததும், உடலின் எதிர்ப்பு சக்திக்கான புரதத்தைத் (Antibody) தயாரித்து விரட்டும். பலவீனமான நிலையில் இருக்கும் வைரஸ் நோயை வரவழைக்க முடியாது; அதே நேரத்தில் நமது உடல் மேற்படி எதிர்ப்பு சக்தியை நினைவில் வைத்திருக்கும். ஒரு வேளை ஒரிஜினல் வைரஸ் உடலில் புகுந்தால், படித்து, தயாரித்து வைத்திருக்கும் எதிர்ப்புப் புரதத்தைக் கொண்டு விரட்டியடித்துவிடும். இந்தியாவில் விநியோகிக்கப்படும் கோவாக்ஸின் இந்த வகை. இது தவிர்த்து, சென்ற வாரத்தில் நாம் பார்த்தது போல், நம்மைத் தாக்கும் வைரஸின் மரபணு போலவே உருமாறிக்கொள்ள வகை செய்யும் mRNA வகைத் தடுப்பூசியும் முதன்முதலில் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசிகளின் பின்விளைவுகளைப் பற்றிய கவலைகள் உலகெங்கும் இருப்பது உண்மை. ஆனால், அதன் விநியோகம் தொடங்கி பல மாதங்களுக்குப் பின்னர் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் உற்சாகம் அளிக்கின்றன. “தடுப்பூசி பற்றி ஏதேதோ செய்திகள் வருதே” என்று கவலை தோய்ந்த ஆடியோ பதிவிட்ட சவுதி தமாமில் மீனவராகப் பணிபுரியும் மணவை ஸ்டாலின் முதல், எந்த நாட்டிலோ இருந்து இந்த வரியைப் படிக்கும் நீங்கள் வரை, தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறிவிடாதீர்கள்.

“இந்த வார அன்லாக் 2 படித்தபோது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், நான் அலைபேசிக் கடை வைத்திருக்கிறேன்” என ஆரம்பித்து, தினசரி இரண்டு ஜிபி அளவில் டேட்டா பயன்படுத்திக்கொள்ளும் வசதி வந்துவிட்டதால், அலைபேசிகளில் கோப்புகளைச் சேமித்து வைத்திருப்பது என்பது இப்போதே குறைய ஆரம்பித்துவிட்டது என, தொழில்நுட்ப நுகர்வோர் பயன்பாட்டைத் தொடர்ந்து உற்று நோக்கும் ஊத்துக்குளி மேகநாதன்; பொருள்களின் இணையத்தின் (Internet of Things, சுருக்கமாக, IoT) எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்கலாம் என்பதை நீளமாக விவரித்துப் பகிர்ந்துகொண்ட சென்னை மின்பொறியாளர் லட்சுமி சங்கர் என 5ஜி பற்றிய கட்டுரைக்கும் பலவித வாட்ஸப் பின்னூட்டங்கள்.

சில தவறான புரிதல்கள் இருப்பதையும் இந்தப் பின்னூட்டங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, தூத்துக்குடி ஆசிரியர் ஒருவர் ஆடியோ வடிவில் “5ஜி முழுமையாக வந்ததும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், ஏன், கப்பலில் சென்றாலும் தடையில்லா இணைய இணைப்பு கிடைக்கப்போகிறது” எனத் தன் கருத்தைப் பகிர்ந்திருந்தார். கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் இணைய இணைப்பு இருந்தாலும் தண்ணீரில் தகவலைக் கடத்த முடியாது என்பதால், கப்பல்களுக்கு ஒரே வழி துணைக்கோள்கள் (Satellites) மட்டுமே. எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கும் கப்பல்கள் தொடர்ந்து இணையத்தில் இணைந்திருக்க, பல துணைக்கோள்களின் தொடர் இணைப்பு தேவைப்படும். இதனால், இணைப்பின் வேகம் குறைவு; ஆனால், செலவு அதிகம். கப்பலில் பணியாற்றுபவர்களைக் கேட்டால், ‘இணைய இணைப்பிற்குத்தான் மாதம் அதிகம் செலவாகிறது’ என்பார்கள்.

மின்சாரத்தில் இயங்கும் டெஸ்லா காரின் வெற்றிக்குப் பின் விண்கலங்களை ஏவும் எலான் மஸ்க்கின் SpaceX, இணைய இணைப்புத் துறையில் நுழைந்து வேகமாக வளர்ந்துவருகிறது. ஸ்டார்லிங்க் (Starlink) என்ற பெயரிடப்பட்டு இயங்கிவருகிறது இந்தப் புதிய சேவை. லிங்க் என்ற பெயரில் முடியும் இன்னொரு வினோதமான நிறுவனத்தையும் நடத்துகிறார் மஸ்க். அதைப் பற்றிக் கட்டுரையின் கடைசியில்.

UNLOCK அறிவியல் 2.O - 26

ஸ்டார்லிங்க் பூமியில் இருந்து 500 கிலோமீட்டர்கள் உயரத்தில் துணைக்கோள்களை ஏவிவிட்டு இணைய இணைப்பு கொடுக்கும் பணியைத் தீவிரப்படுத்திவருகிறது. இந்த சேவை வேண்டுமெனில் ஸ்டார்லிங்க் தளத்தில் பதிந்து கொண்டால், ஆப்பம் வடிவில் இருக்கும் வெண்ணிற டிஷ் ஆண்டனா அனுப்பி வைக்கிறார்கள். வீட்டில் இதைப் பொருத்த வேண்டும். இணைய இணைப்பிற்கென்றே தயாரிக்கப்பட்டு மேலே பறந்துகொண்டிருக்கும் செங்கல் அளவுள்ள துணைக்கோள்களுடன் ஆண்டனா தொடர்பு கொண்டு உங்களுக்கு இணைய சேவையைக் கொடுக்கிறது. பூமியும், துணைக்கோள்களும் நகர்வதற்குத் தகுந்தவகையில் தன் தலையை மாற்றிக்கொண்டு இணைய வசதியைத் தங்கு தடையில்லாமல் பெற்றுக்கொள்ள உதவுகிறது இந்த உயர் வகை ஆண்டனா. இதைத் தயாரிக்க ஆகும் செலவில் பாதிகூட பயனீட்டாளரிடமிருந்து ஸ்டார்லிங்க் வசூலிப்பதில்லை. நிறுவப்படும் ஆண்டனாக்களை இணைத்துப் பிணையமாக உருவாக்குவதில் ஸ்டார்லிங்க் கவனம் செலுத்துவது தெளிவாகத் தெரிகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் சற்றுக் குறைவான எண்ணிக்கையில் ஸ்டார்லிங்கின் துணைக்கோள்கள் பறக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் முப்பதில் இருந்து நாற்பதாயிரம் துணைக்கோள்களைப் பறக்கவிடப்போகிறோம் எனத் திகைக்க வைக்கிறது ஸ்டார்லிங்க். இன்றைய நிலவரப்படி பூமியைச் சுற்றும் துணைக்கோள்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாயிரத்திற்கும் குறைவு என்பதுடன் ஒப்பிட்டால் ஸ்டார்லிங்கின் பெரும் லட்சியம் புலப்படும். இத்தனை துணைக்கோள்களை இயக்குவதால் இருக்கும் சிக்கல்களையும் சொல்லியாக வேண்டும். பூமிக்கு மிக நெருக்கமான இடத்தில் இவை சுற்றுவதால், வான் ஆராய்ச்சியாளர்களுக்கு இவற்றிலிருந்து உமிழப்படும் ஒளி பெருந்தலைவலியாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, பூமியை நோக்கி வரும் விண்கற்களைப் (asteroid) பார்வையிடும் பணிக்கு இடையூறாக இருக்கிறது என்ற புகார் வந்ததும், கறுப்பு நிறத்தில் சூரிய ஒளியை பூமிக்குள் பிரதிபலிக்காத வகையில் வடிவமைத்து அனுப்பப் போகிறோம் எனச் சொல்லியிருக்கிறது ஸ்டார்லிங்க். இவ்வளவு நெருக்கமாகப் பறப்பதாக வடிவமைக்கப்பட் டிருப்பதால், ஒன்றோடு ஒன்றோ, அல்லது விண்கற்களிலோ மோதிச் சிதறும் ஆபத்து அதிகம். இப்படி மோதியதால் வந்த சிதறல்கள் மற்ற துணைக்கோள்களில் மோதி வான் மண்டலமே சிதறிய சில்லுகளால் நிறைந்துபோகும் சாத்தியத்தை கெஸ்லர் விளைவு (Kessler Syndrome) என்கிறார்கள் வானியற்பியல் வல்லுநர்கள். ஸ்டார்லிங்க் பற்றிய அதிக விவரங்களுக்கு https://www.starlink.com/faq என்ற வலைப்பக்கத்தைச் சொடுக்குங்கள்.

UNLOCK அறிவியல் 2.O - 26

ஆக, நெருக்கமான நகரங்களில் 5ஜி நம்மை வேகமான தகவல் பிணைப்பில் வைத்திருக்க, கிராமப்புறங்களையும் கடலையும் ஸ்டார்லிங்க் போன்ற சேவை ஓரளவுக்கு சுமாரான வேகத்தில் இணைத்திருக்க, உலகம் முழுதும் தகவல் குடையால் மூடப்படும் நாள் அதிக தூரத்தில் இல்லை. அந்தக் குடைக்குக் கீழ் அமையும் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத சாதனங்களாக ‘பொருள்களின் இணையம்’ இருக்கப்போகிறது.

இதனால் ஏற்பட உள்ள மிகப்பெரும் பிரச்னை, தகவல் திருட்டு மற்றும் அது சார்ந்த குற்ற நடைமுறைகள். இது எப்படி நடக்கும் என்பதை இப்போதே சில நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, தகவல் திருட்டு சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம். கண்ணாடித் தொட்டிகளில் ஆபரண மீன்களை வளர்ப்பவர்கள் தண்ணீரின் வெப்பம், அமில அளவு போன்றவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, சேகரிக்கப்படும் தகவலுக்கேற்ப பராமரிப்பு வேலைகளைத் திட்டமிடுவார்கள். வாரம் ஒருமுறை இந்த அளவீடுகளை நேரடியாகச் செய்வது அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் பணி. இதற்குப் பதிலாக இந்த அளவீடுகளைத் தானாகவே தொடர்ந்து எடுத்துக்கொண்டு, அதை இணைய இணைப்பு மூலம் தெரிவிக்கும் ‘பொருள்களின் இணைய’ சாதனங்கள் வந்துவிட்டன.

சூதாட்ட நிறுவனம் (Casino) ஒன்றில் அப்படி வைக்கப்பட்ட மீன்தொட்டியில் இருந்த சாதனத்தை சமரசம் செய்து, அதன்மூலம் நிறுவனத்தில் கணினியில் இருந்த விவரங்கள் திருடப்பட்டு, பின்லாந்து நாட்டில் இருக்கும் ஏதோ ஒரு கணினிக்கு அனுப்பப் பட்டுக்கொண்டிருந்தது அம்பலமானது. மீன்தொட்டியில் வெப்பம் கண்காணிக்கும் ஒரு சென்சாரை சமரசம் செய்ய முடிகிறது என்றால், தானியங்கி வாகனம் போன்றவற்றில் இருக்கும் நூற்றுக்கணக்கான சென்சார்களை எவ்வளவு பத்திரமாக வடிவமைக்க வேண்டும் என்பது பெரிய சவால்.

இறுதியாக, மஸ்க்கின் மற்றொரு ‘லிங்க்’ நிறுவனத்தின் பெயர் நியூராலிங். இது ஒரு விசித்திர ‘பொருள்களின் இணையம்’ சார்ந்த நிறுவனமே. ஆனால், பொருளுக்கு பதில் மூளை. நம் மூளையில் இருக்கும் 8,800 கோடி நியூரான்கள் தகவல்களை அநாயாசமாகக் கடத்தும் பணியைச் செய்கின்றன. நரம்பு செல் பகுதியான டென்ட்ரைட், சமிக்ஞையைப் பெற்றுக்கொள்ள, சோமா எனப்படும் செல் அதில் என்ன இருக்கிறது என்பதைக் கணக்கீடு செய்து, ஆக்ஸான் என்ற கேபிள் வழியாக கணக்கிட்ட தகவல் வெளியே அனுப்பப்படுகிறது. அடிப்படையில் பார்த்தால் இந்தப் போக்குவரத்து மின்சார சமிக்ஞைகளால் அமைக்கப்பட்டது. அப்படியானால், அதைப் பதிவு செய்து கொள்ளவும், தேவைப்படும் விதத்தில் வெளிப்புறத்தில் இருந்து தகவலை அனுப்பவும் முடிய வேண்டும் என்ற அடிப்படையில் கட்டப்பட்டது நியூராலிங்க் தொழில்நுட்பம்.

மூளையில் இருக்கும் மின்சாரச் செயல்பாடுகளைப் பதிவு செய்யும் தொழில்நுட்பங்கள் பல ஆண்டுகளாக இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தலையில் சிறிய உலோகத் தகடுகளை ஒட்டிவைத்து நடத்தப்படும் EEG (electroencephalogram) கருவிகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மூளையின் மொத்த மின் செயல்பாட்டைக் கலவையான சத்தமாகவே பதிவு செய்யும். நியூரான்கள் எகிறிப் பாய்ந்து தகவலைக் கொண்டு போவதைப் பதிவு செய்ய மூளைக்குள் கம்பி ஒன்றைப் பதிந்து வைத்தால் மட்டுமே முடியும்.

இதற்கு இப்படி உதாரணத்தைச் சொல்லலாம்: உங்களது பிரிய சிஎஸ்கே அணி, பரம வைரியான ஆர்சிபியுடன் மோதுகிறது. நீங்கள் மைதானத்தின் வெளியே நிற்கிறீர்கள். விளையாட்டு சூடாகிறது. மைதானத்திலிருந்து வரும் சத்தத்திலிருந்து ஒருவழியாக யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் கணிக்க முடியும். ஆனால், ஓவர் பை ஓவர் துல்லியமாகப் புரிந்துகொள்ள, நீங்கள் மைதானத்திற்குள் இருந்தாக வேண்டும். நியூராலிங்கைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது, ‘மூளைக்குள் கம்பியெல்லாம் சாத்தியமா?’ என உங்களைப்போல சற்று மிரண்டுதான்போனேன். ஆனால், சென்ற மாதத்தில் நியூராலிங் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவு, ‘இந்தத் தொழில்நுட்பம் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப்படும் நிலை வரும்’ என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 26

பரிசோதனை இதுதான்... மூளையில் நியூராலிங் சாதனம் பொருத்தப்பட்ட குரங்கு ஒன்று வீடியோ பிங் பாங் விளையாட்டு ஒன்றை முதலில் கையால் அசைக்கும் ஜாய்ஸ்டிக் கொண்டு விளையாடுகிறது. இந்த விளையாட்டின்போது உருவாகும் நியூரான் போக்குவரத்தைப் பதிவு செய்துகொண்ட நியூராலிங், சற்று நேரத்திற்குப் பின்னால், கணினி எப்படி பந்தைக் கொண்டு செல்லும் என்பதைக் கணித்து நேரடியாக சமிக்ஞைகளை அனுப்பி மட்டையை நகர்த்த வைக்கிறது, இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், குரங்கு தன் மனதின் மூலம் மட்டையை இயக்குகிறது. ‘இதனால் மனிதர்களுக்கு என்ன பயன்’ என்ற கேள்விக்கான பதிலாக ஓர் உதாரணம் கொடுக்கிறேன் - விபத்தில் முதுகுத் தண்டில் பாதிப்பு ஏற்பட்டு, உடல் நகர முடியாமல், ஆனால் மூளை முழுக்க நன்றாக இயங்கும் விதத்தில் இருப்பவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் மிகப் பெரும் உதவியாக அமையும். அவர்கள் மனதில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டியை இயக்க முடியும்; ஈமெயில் எழுத முடியும், ஏன், கார்கூட ஓட்ட முடியும். (மனதின் மூலம் பிங் பாங் ஆடும் குரங்கின் வீடியோ -


எப்போதும்போல இந்த வாரக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் அனுப்புங்கள்.

- Logging in...