Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 27

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல்

- அண்டன் பிரகாஷ்

‘வைரஸ் என்பது உயிரற்ற மூலக்கூறுகளின் தொகுப்பு என்கிறீர்கள். உயிருள்ள ஓர் உயிரி மட்டுமே தங்களைப் போலவே இன்னொரு உயிரியைப் பிரசவிக்க முடியும் என்ற நிலையில், பிற உயிரினங்களின் செல்களில் அமர்ந்துகொண்டு தங்கள் எண்ணிக்கையினைப் பெருக்கியபடி இருக்கின்றன என்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகும்?’

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வழக்கறிஞர் அ.பழநியாண்டி இப்படி ஒரு கேள்வியை வாட்ஸப்பில் அனுப்பியிருக்கிறார். பலருக்கும் மேற்கண்ட சந்தேகம் இருக்கக்கூடும் என்பதால், அதை முதலில் அன்லாக் செய்துவிடலாம்.

பாக்டீரியா, தாவரங்கள், விலங்குகள் என அனைத்து உயிர்களும் இனப்பெருக்கம் செய்வது இரண்டு வழிகளில். ஒன்று, பாலியல் உறவு (sexual reproduction) மூலமாகப் புதிய உயிரைப் படைப்பது. விலங்கு வகைகளில் வரும் மனிதனின் இனப்பெருக்கம் இதற்கு உதாரணம். மற்ற வழி, பாலியல் சாரா (asexual reproduction) இனப்பெருக்கம். ஒற்றை செல் உயிரியான பாக்டீரியா தனது செல்லைப் பிளந்து இரண்டாகி, அந்த இரண்டு செல் பாக்டீரியாக்களும் மீண்டும் பிளந்து எனத் தங்களைப் பெருக்கிக்கொண்டே போவது இந்த வகைக்கு உதாரணம்.

UNLOCK அறிவியல் 2.O - 27

வைரஸ் என்பது உயிரி அல்ல. உண்மையில், அது எதுவுமில்லாத, தன்னைப்பற்றிய விவரத்தை மட்டுமே உள்ளிட்ட ஒரு வஸ்தாது. அவ்வளவே. ஆனால், அதன் மரபணுவில் விபரீதமாக ஒரு கட்டளை எழுதப்பட்டிருக்கிறது. ‘கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன்னைப்போலவே ஒரு நகல் எடுத்துவிடவேண்டும்’ என்பதுதான் அந்தக் கட்டளை. ஆனால், அப்படி நகல் எடுப்பதற்கு ஒரு ஜெராக்ஸ் இயந்திரம் வேண்டுமல்லவா? அதுதான், வைரஸ் குடியேறும் செல். செல் சுவர்களை இடித்து உள்ளே புகுந்ததும் தனது சுய பிரதிகளை எடுக்க ஆரம்பிக்கிறது வைரஸ். புதிய நகல்கள் வெளியே குதித்து மற்ற செல்களில் குடியேறுகின்றன. கொரோனா வைரஸ் போன்ற மூச்சு அமைப்பைத் தாக்கும் வைரஸ்கள், மூச்சுக்குழாயில் இருந்து வேகமாக நுரையீரலை நோக்கித் தங்களது பெருக்கத்தை விரிவாக்கியபடி செல்கின்றன. குடியேற முடியாமல் இருக்கும் வைரஸ்கள் இருமல், தும்மல் போன்றவற்றின் மூலம் நீர்த்துளிகளில் (Droplets) பொதிந்த வண்ணம் வெளிவந்து மற்றவர்கள் மூச்சுக்காகக் காற்றை இழுக்கும்போது உள்ளே சென்று என இதன் பரவல் வேகம் அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உலகில் இருக்கும் அனைவரும் தனிமனித ஆறடி இடைவெளியைக் கடைப்பிடித்தால், கொரோனா வைரஸ் தானாக மறைந்துவிடும். இது கடினம் என்பதால்தான் மாஸ்க் அணிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது என்ற இரண்டாம் கட்டப் பாதுகாப்புகள் தேவை. ஓகே அடுத்த விஷயத்தைப் பார்ப்போம்.

டெக் உலகில் இரண்டு ஜாம்பவான்கள் தொடை தட்டி மல்யுத்தம் செய்யத் தயாராகிவருகிறார்கள். சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனங்கள் இரண்டும் கடந்த சில வருடங்களாகவே நடத்தும் “யார் பெரியவன்?” என்ற போரின் இறுதிக்கட்டம் வரும் வாரத்தில் நடந்தேறுவதுபோலத் தெரிகிறது. பின்னணி இதுதான்: ‘This Is Your Digital Life’ என்ற பெயரில் அலை மென்பொருள் ஒன்று பல வருடங்களுக்கு முன்னால் டெக் நிறுவனம் ஒன்றால் வெளியிடப்பட்டது. பயனீட்டாளரின் உளவியல் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் கேள்விகளைக் கொண்ட எளிய மென்பொருள். இது அவர்களது ஃபேஸ்புக் கணக்கையும் இணைக்கும்படி கேட்க, கிட்டத்தட்ட ஒன்பது கோடிப் பயனீட்டாளர்கள் தங்களது ஃபேஸ்புக் கணக்குகளை இணைத்தனர்.

இதிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை மேற்படி நிறுவனம், பிரிட்டனின் Cambridge Analytica என்ற அரசியல் ஆலோசனை (Political Consulting) நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. ட்ரம்ப் போட்டியிட்ட 2016 அமெரிக்க அதிபர் தேர்தல், பிரிட்டனில் நடத்தப்பட்ட Brexit பற்றிய வாக்கெடுப்பு போன்றவற்றில் மேற்படி நிறுவனம் நடத்திய ஆன்லைன் பரப்புரைகளுக்கு அடித்தளமாக இது இருந்தது என்பதும், இது ஃபேஸ்புக்கில் இருந்து பெறப்பட்ட தகவல் என்பதும் தெரிய வந்தது. ‘பயனீட்டாளர் அனுமதியில்லாமல் அவர்களது தகவல்கள் இப்படி வணிகமாகப்பட்டது குற்றம்’ எனப் பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவிக்க, ஃபேஸ்புக் மன்னிப்பு கேட்டு, பல கோடிகளுக்கு அபராதத் தொகையும் கட்டியது; Cambridge Analytica நிறுவனம் திவாலாகிப்போனதாக அறிவித்தது.

ஆனால், விவகாரம் இத்துடன் முடியவில்லை. ஆப்பிள் பயனீட்டாளர்கள் ஃபேஸ்புக் பயன்படுத்த அவர்களது சாதனங்களான ஐபோன் மற்றும் ஐபேட் போன்றவற்றைப் பயன்படுத்து கிறார்கள் என்பதால் ‘எந்த மென்பொருளும் பயனீட்டாளர் தகவலைத் திரட்டினால், அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்து அவர்களது அனுமதி பெற வேண்டியது அவசியம்’ என்ற கொள்கை முடிவை எடுத்தது ஆப்பிள்.

இடைக்குறிப்பு: கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் Remarketing என்ற முறைமையைப் பின்பற்று கின்றன. வலைதளங்களை நடத்துபவர்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்து இந்த வசதியைப் பயன்படுத்த விண்ணப்பித்தால், அந்தத் தளத்திற்கு பிரத்யேகக் குறியீட்டு எண் வழங்கப்படும். இந்தக் குறியீட்டு எண்ணை வலைதளத்தில் இணைத்துக் கொண்டால், பயனீட்டாளர் அந்த வலைதளத்திற்குச் செல்கையில் அவரது விவரங்கள் பேஸ்புக்கிற்குச் சென்றடையும். அவர் ஃபேஸ்புக் பயனீட்டாளராக இருக்கும் பட்சத்தில் அவரது வயது, இருக்குமிடம், பணி போன்ற விவரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்குத் தேவையான தகவல்களை வலைதளத்தால் கொடுக்க முடியும்.

விளம்பரம் என்பதை வணிகமாகக் கொண்டிருக்கும் எந்த நிறுவனமும் இந்த முறைமையைப் பின்பற்றுவதில் தவறேதுமில்லை. ஆனால், ‘தங்களது தகவல் இப்படிச் சேகரமாகிக் கொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்’ என்ற ஆப்பிள், அதைச் செயல்வடிவமாக்கி, இந்த வாரத்தில் வெளிவரும் அவர்களது புதிய iOS 14.5-ல் அதை உட்புகுத்திவிட்டார்கள். ஃபேஸ்புக் மென்பொருளைத் தரவிறக்கிப் பயன்படுத்த முயன்றால் ‘ஃபேஸ்புக் மற்ற மென்பொருள்கள், மற்றும் வலைதளங்களில் இருந்து உங்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டு ‘ஆம்’ என நீங்கள் அனுமதித்தால் மட்டுமே தகவல் திரட்டும் பணியைச் செய்ய முடியும். தங்களது வணிகத்தின் அடிப்படையான தகவல் திரட்டலுக்கு இது பெரிய தடங்கலாக இருக்கும் என்பதால் குமுறிக்கொண்டிருக்கிறது ஃபேஸ்புக்.

சமீபத்தில் E.O.Wilson என்ற உயிரியல் ஆராய்ச்சியாளர் எழுதிய நூல் ஒன்றைப் படித்து முடித்தேன். சமூக உயிரியலின் (Sociobiology) தந்தை எனக் கொண்டாடப்படும் வில்சன் அடிப்படையில் மைர்மகாலஜிஸ்ட் (Myrmecologist). இதய நோய் போன்ற ஏதோ மருத்துவத்துறை நிபுணர்போலத் தோற்றமளிக்கும் இந்தப் பிரிவின் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்வது எறும்புகளை. பள்ளி மாணவராக இருந்தபோதே எறும்புகளின் வாழ்க்கை பற்றி எழுந்த ஆர்வத்தைக் கல்லூரியில் தொடர்ந்து, ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராகி, உலகில் மிகப்பெரிய எறும்பு கலெக்‌ஷனை அமைத்தவர் எனப் பல புகழாரங்களுக்குச் சொந்தக்காரர் வில்சன்.

‘எறும்புகள் அவ்வளவு முக்கியமா’ என்ற கேள்வி உங்களைப்போல் எனக்குள்ளும் எழுந்தது. அவரது ‘எறும்புலகத்திலிருந்து கதைகள்’ (Tales from the Ant world) நூலைப் படித்த பின்னர் எறும்புகளின் முக்கியத்துவம் புரிந்தது. இதுபோன்ற சிறப்புத் துறைகளை எடுத்துக் கொண்டு அதில் ஆராய்ச்சி செய்பவர்களின் மீதான மதிப்பும் உயர்ந்தது.

UNLOCK அறிவியல் 2.O - 27

இதுவரை 15,000 எறும்பு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. குகைகளுக்குள்ளும், மனிதர்கள் இதுவரை சென்றிராத காட்டுப் பகுதிகளிலும் இருக்கும் எறும்பினங்கள் இன்னும் பத்தாயிரம் இருக்கலாம் என ஊகிக்கிறார்கள். பாக்டீரியாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிக அளவில் வாழும் உயிரினம் எறும்பு. இன்றைய நாளில் பூமியில் வாழ்ந்துவரும் எறும்புகளின் எண்ணிக்கை கோடி கோடியைத் தாண்டும். 800 கோடிகளுக்கும் குறைவாக வாழும் நமக்கு எதிராக எறும்புகள் ஒன்றிணைந்தால் நம் கதி அதோகதி. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பது இன்னும் சில வரிகளில் தெளிவாகும்.

சில எறும்பினங்கள் தங்கள் உடல் எடையை விட நூறு மடங்கு அதிகமான உணவுப்பொருளைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியும். மற்ற பூச்சியினங்களின் உறுப்பி னர்கள் போலல்லாது, எறும்புகள் 30 ஆண்டுகள் வரை வாழும். உங்கள் வீட்டு சமைய லறையில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைக் கொட்டி வைத்தால், உடனடியாக எறும்புகள் விசிட் செய்கிறதல்லவா? அந்த எளிய சீனி எறும்பின் (Sugar Ant) வாழ்க்கையைப் பார்க்கலாம்.

எறும்புகள் வாழும் சமூக அமைப்பை ‘காலனி’ என்கிறார்கள். மனித சமூகத்தைப் போலவே எறும்புகளின் காலனிகளிலும் அநீதிகள் உண்டு. உங்கள் வீட்டிற்கு வரும் எறும்பு, அதன் காலனியின் ராணி எறும்பிற்குப் பிறந்த வேலையாள் எறும்பு (Worker Ant). அது பெண்ணினமாக இருக்கும். காரணம், ஆணுக்கு இனப்பெருக்கம் என்பதைத் தவிர வேறு வேலை இல்லை. இனப்பெருக்கத்திற்குத் தேவையான பாலுறவு முடிந்ததும் ஆண் எறும்பு இறந்துவிடும் என்பதால், காலனியை நடத்துவது பெண் எறும்புகளே. எறும்பு ஒன்று தனியாகச் சென்று கொண்டிருந்தால், அது ஏதோ குறிக்கோளற்று நடப்பதாக நினைக்காதீர்கள். அது சாரணர் (Scouting) வேலையில் ஈடுபட்டிருக்கிறது. தன் காலனியைத் தாண்டி வட்ட வடிவில் நடந்தபடி, ஏதேனும் உணவுகளின் வாசனையை முகரமுடிகிறதா எனச் சுற்றி வந்தபடியே இருக்கும். சர்க்கரை வாசம் வந்ததும் அதை நோக்கி வந்து, சர்க்கரைத் துகளைத் தூக்கி வேகமாக காலனியை நோக்கி ஓடி, தன் உடலில் இருந்து வெளிவரும் ஃபெரமோன்கள் (Pheromones) என்ற வேதிப்பொருளை வெளியாக்கி, “வாங்க, வாங்க, சாப்பாடு இருக்கு” என்ற சமிக்ஞையை அனுப்பும். சர்க்கரை கொட்டியிருக்கும் இடத்திலிருந்து எவ்வளவு தூரம் நடந்தோம் என்ற விவரம் அதன் சிறிய மூளையில் எழுதப்பட்டிருக்கும். வேதியியல் வழி தகவலைப் படித்த மற்ற வேலையாள்கள், மேற்படி சாரணரைத் தொடர்ந்து சர்க்கரைப் புதையலுக்கு வருவார்கள். அவர்கள் அனைவரும் எடுத்துச் செல்லும் சர்க்கரை, காலனியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேர்த்து வைக்கப்படும். காலனிக்கு ஆபத்து வருகிறது என்றால், அதற்கான அளவில் ஃபெரமோன்கள் வெளியிட்டுத் தகவல் பரிமாறிக்கொள்கின்றன. இன்னொரு காலனியில் இருக்கும் எறும்பு தன் காலனி அருகே வந்தால், மூர்க்கத்துடன் சண்டையிட்டுத் துரத்துவது அல்லது கொல்வது எறும்புகளின் வாடிக்கை. இந்தக் காரணத்தால்தான் எறும்புகள் இணைந்து நமக்கு எதிராக அணி திரள்வது சாத்தியமில்லை என்றேன்.

சரி, எதற்காக எறும்புகளைப் பற்றி இவ்வளவு ஆழமாகப் படிக்க வேண்டும்? இரண்டு காரணங்களைப் பார்க்கிறேன். ஒன்று, வில்சன் போன்ற ஆராய்ச்சியாளர்கள் எறும்புகளால் சூழலியலுக்கு இருக்கும் பயனை ஆழமாக ஆராய்ச்சி செய்கிறார்கள். ‘ஒரு இடத்திற்கு சம்பந்தமில்லாத எறும்பினங்களைக் கொண்டு வந்தால், அது விவசாயத்திற்கு சேதம் விளைவிக்கும்’ என்பதைத் தீர்க்கமாக முன்னரே கண்டறிந்து சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, தென்னமெரிக்காவிலிருந்து வந்த தீ எறும்பு (Fire Ant) 70 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்படுத்திய சேதத்திலிருந்து இயற்கையாக மீட்டெடுக்கும் வழிகள் இத்தகைய ஆராய்ச்சிகளிலிருந்து கிடைக்கின்றன. மற்ற பயன், எறும்புகள் இயங்கும் விதத்தை நன்றாக அறிந்து அதிலிருந்து நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்துக்கொள்வது. உதாரணத்திற்கு, சிறிய மூளையை மட்டுமே கொண்டிருப்பதால், தனியொரு எறும்பிற்கு அத்தனை அறிவாற்றல் இல்லை; ஆனால், வேதியியல் முறையில் தகவல் பரிமாறிக்கொள்ளும் குழுக்களாக இருக்கையில் அவை இயங்கும் விதம் மேம்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதே கோட்பாட்டில் சிறிய ரோபாட்டுகளை வடிவமைக்கும் முயற்சி நடக்கிறது. அதிக சென்சார்கள் தேவையில்லை என்பதால், இந்த ரோபாட்டுகள் எடையில் மிகக்குறைவாக இருப்பதுடன், இயங்குவதற்கான சக்தியும் குறைவாகவே தேவைப்படுவதும் ஒரு பெரிய ப்ளஸ். இந்த எறும்பு டிசைன் ரோபாட்டுகளை வடிவமைக்கும் ஒரு முயற்சி பற்றித் தெரிந்து கொள்ள இந்த வலைப்பக்கத்திற்குச் செல்லுங்கள் - https://www.bbc.com/news/21956795

கடைசியாக, எறும்புகள் என்றால் அச்சமா? நீங்கள் செல்ல வேண்டியது அண்டார்ட்டிகாவிற்கு. அதைத் தவிர உலகின் அனைத்துக் கண்டங்களிலும் எறும்பினங்களின் காலனிகள் இருக்கின்றன.

இந்த வாரக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை எப்போதும் போல +1 628 240 4194 என்ற வாட்ஸப் எண்ணுக்கு அனுப்புங்கள்.

- Logging in...