
- அண்டன் பிரகாஷ்
உலகின் எந்தப் பெரிய நகரத்திற்குச் சென்றாலும், வானுயர்ந்த கட்டடங்களில் இயங்கும் பல வணிகங்களில் பிரதானமாக இருப்பது வங்கிகளாகவே இருக்கும். இந்த வங்கிகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் மத்திய வங்கி அமைப்பு பெரும்பாலான நாடுகளில் உண்டு. இந்தியாவில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்றும், அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் என்றும் பல நாடுகளில் பல வித பெயர்களில் அறியப்படும் இந்த மத்திய வங்கிகள் தமது நாட்டின் நாணயக் கொள்கையை (Monetary Policy) வடிவமைத்து நடத்துகின்றன. பணச் சுழற்சியின் அளவு எப்படி இருக்க வேண்டும், வட்டி விகிதம் எவ்வளவு போன்றவற்றை நிர்ணயிக்கும் மத்திய வங்கியின் முடிவுகள், அந்தரக் கயிற்றில் நடப்பதற்கு நிகரானவை. கரணம் தப்பினால் மரணம். பை தி வே, பணக்கொள்கை (Fiscal Policy) என்பது அரசுகளால் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள். மக்களுக்கும், நிறுவனங் களுக்கும் நேரடியாகவும், மறை முகமாகவும் எவ்வளவு வரி விதிக்க வேண்டும், நாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும் போன்ற முடிவுகள் பணக் கொள்கையைத் தீர்மானிக்கிறது.
கிரிபாட்டி, டுவாலு, பலாவு - இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டி ருக்கிறீர்களா? நானும் கேள்விப்பட்ட தில்லை. மிகச் சிறிய மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் கொண்ட இதுபோன்ற சில நாடுகளில் மத்திய வங்கிகள் இல்லை. பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய வங்கி எப்படிச் செயல்பட வேண்டும் என எழுதி வைத்திருக்கிறார்கள். சரி, மத்திய வங்கி என்ற ஒன்று இருக்கும்போது, எதற்காக மற்ற வங்கிகள்? கொள்கை முடிவுகளை மத்திய வங்கி எடுத்தாலும், அதை வாடிக்கையாளர்களுக்கு வணிக முறையில் கொண்டு சேர்த்து, பணச்சுழற்சி செய்து பொருளாதாரத்தை சூடாக வைத்திருக்க ஒரு வழி வேண்டும். இந்த நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்ட வங்கிகளின் வணிக அமைப்பு (Business Model) மிகவும் எளிதானது. பணப்பரிவர்த்தனைகளில் இடைத்தரகராக இருப்பதுடன், டெபாசிட் செய்யப்படும் பணத்திற்குக் குறைந்த வட்டி கொடுத்து, அந்தப் பணத்தை வீட்டுக்கடன், வாகனக்கடன் எனப் பல வழிகளில் அதிக வட்டிக்குக் கொடுத்து, அந்த இரண்டு வட்டிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை லாபமாகப் பெற்றுக் கொள்கின்றன வங்கிகள். அதிலென்ன பெரிய லாபம் வரும் என நினைக்க வேண்டாம். உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் (annual global gross product, மொழிபெயர்த்தால், ‘வருடாந்தர உலகளாவிய மொத்த உற்பத்தி’) கூட்டினால், மொத்தம் 87 ட்ரில்லியன் டாலர் வருகிறது. உலகின் டாப் ஆயிரம் வங்கிகள் வைத்திருக்கும் சொத்துகளின் அளவு, 128 ட்ரில்லியன் டாலர். ஆக, வங்கிகள் அனைத்தையும் மூடி அவற்றின் சொத்துகளை உலக மக்களுக்குக் கொடுத்து விட்டால், ஒன்றரை ஆண்டுகள் யாரும் வேலை பார்க்க வேண்டியதில்லை.

நவீன வரலாற்றில் வங்கிக் கட்டமைப்பு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. உற்பத்திப் பொருளாதாரங்கள் கொண்ட அனைத்து நாடுகளுக்கும் வங்கிக் கட்டமைப்பு அத்தியாவசியம் என்பது எழுதப்பட்ட விதியாகிவிட்டது. தொழில் நுட்பங்களின் வளர்ச்சியால், வங்கிக் கட்டமைப்புகள் சற்றே முன்னேற்றம் பெற்று, பணத்தை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நகர்த்தும் வேகத்தை அதிகப்படுத்தின என்பது உண்மைதான் என்றாலும், அடிப்படைக் கட்டமைப்புகளில் பெரிய மாற்றங்களை வங்கிகள் சந்திக்கவில்லை, இதுவரை.
பிட்காயின், எத்தூரியம் உள்ளிட்ட கிரிப்டோ பணப் பிணையங்கள், இடைத்தரகர் இல்லாமல் பணத்தை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்புவதை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் செய்கின்றன என்பதைப் பல நாடுகள் உணர்ந்தன. ‘தங்கள் நாட்டின் பணத்தை டிஜிட்டல் வழியில் வெளியிட்டால் என்ன’ என யோசித்து, சில நாடுகள் இதற்கான முதல் படியை எடுத்து வைக்கத் தொடங்கிவிட்டன. பிட்காயினின் மொத்த மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. பேபால் சேவையில் கிட்டத்தட்ட 40 கோடிப் பயனீட்டாளர்கள் இருக்கி றார்கள். கூகுள் பே, வென்மோ, சீனாவின் ANT நிறுவனம் உள்ளிட்ட உலக ளாவிய நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களில் 300 கோடிப் பயனீட்டாளர்கள் இருக்கி றார்கள். மனதில் கொள்ளவும் - இந்த நிறுவனங்கள் வங்கிகள் அல்ல. மாறாக, தத்தம் வங்கிகளை இணைத்த பயனீட் டாளர்கள் பணத்தை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்பும் வசதியைச் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களே. இது இப்படியிருக்க, உலகின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 200 கோடிப் பேருக்கு ஒரு வங்கிக் கணக்குகூட இல்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவர்களை பணப் பரிவர்த்தனை வட்டத்திற்குள் கொண்டு வர பல முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.
பலரும் நினைப்பதற்கு மாறாக, கிரிப்டோ பணப் பரிவர்த்தனைகளைத் தெளிவாக அரசாங்கங்களால் கண்காணிக்க முடியும். காகிதத்தில் அச்சிட்ட பணத்தை எப்படி அரசாங்கம் அதன் மதிப்பிற்கு நிகராக உறுதி செய்கிறதோ, அதுபோலவே தாங்கள் வெளியிடும் கிரிப்டோ டோக்கன் பணத்திற்கு நிகரான மதிப்பை எப்போதும் நாங்கள் கொடுத்துவிடுவோம் என அரசு சொல்ல முடிந்தால் இன்னொரு பண வடிவத்தை எளிதில் உண்டாக்கலாம் அல்லவா? அதைத்தான் செய்யத் தொடங்கியுள்ளன மத்திய வங்கிகள். இந்தத் திட்டவடிவை மத்திய வங்கியின் டிஜிட்டல் பணம் (Central Bank Digital Currency, சுருக்கமாக, CDBC) என அழைக்கிறார்கள். இங்கிலாந்தின் மத்திய வங்கியான Bank of England ஒரு முன்னோடி. அவர்கள் வெளியிட்டிருக்கும் CDBC அந்த நாட்டின் எல்லையைத் தாண்டி விநியோகமாகி பரிசோதனை முறையில் பயன்பாட்டில் இருக்கிறது. சீனா, தாய்லாந்து, வெனிசுலா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் CDBC வெளியிடும் முயற்சிகளில் மும்முரமாக இருக்கின்றன. வரும் காலத்தில் உங்கள் மொபைல் எண்ணுடன், இணைக்கப்பட்ட கிரிப்டோ வாலட்டில் பல நாடுகள் வெளியிட்ட பணத்தைச் சேமித்து வைக்க முடியும். உங்கள் கைரேகை அல்லது முகத்தின் அமைப்பு போன்ற தனிப்பட்ட விவரங்களைக் கொண்டு பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகச் செய்ய முடியும். ஆனால், வங்கிகளுக்கு இது நல்ல செய்தி அல்ல. காரணம், தங்களிடம் பணத்தை டெபாசிட் செய்வதற்குப் பதிலாக, மக்கள் நேரடியாக மத்திய வங்கி வெளியிடும் பணத்தைக் கொண்டு பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்தால், வர்த்தக வங்கிகளின் முக்கியத்துவம் குறைந்து அவை திவாலாகும் நிலை வரலாம்.
நம் வாழ்வில் எதிர்பாராமல் திடீரென நிகழும் அதிர்ச்சியை Trauma என அழைக்கிறார்கள். அதிர்ச்சி நிகழ்ந்த பின்னர் நமக்குள் உண்டாகும் மாற்றங்களை ‘அதிர்ச்சிக்குப் பின்னரான மன உளைச்சல் சீர்கேடு’ (Post Traumatic Stress Disorder, சுருக்கமாக PTSD) என அழைக்கிறார்கள். இந்தப் பதம் தொடர்ந்து பிரபலமாவதை, சென்ற வாரத்தில் நாம் பார்த்த கூகுள் ட்ரெண்ட்ஸ் தளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
உளவியல் அறிவியல் வளர்ந்து வந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போரில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய பல வீரர்களின் குணங்கள் மாறியிருந்ததைக் கண்டறிந்து, ‘அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி’ என்பதிலிருந்து ஆரம்பித்தது PTSD-ன் அறிவியல். உக்கிரமான போர் நிகழ்வுகள் மட்டுமல்ல, குடும்ப வன்முறைகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மனைவியை அடிக்கும் கணவனைப் பார்க்கும் குழந்தைகளின் மனநிலை, போரில் தனக்கு அருகே நின்றபடி இருக்கும் தன் நண்பன் குண்டு பட்டு இறப்பதற்கு சமமானது என்கிறார்கள். பாலியல் வன்முறை, பெரும் இயற்கைப் பேரிடர்கள், வாகன விபத்து போன்றவையும் PTSD வகையறாவில் வரும்.

முதலில் சில PTSD அடிப்படைகள்
இந்த உளவியல் சீர்கேடு நிகழ்வது முழுக்க மனித மூளைக்குள் என்பதால், மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன:
அமிக்டலா (amygdala): கையைத் தூக்கி தலைக்குப் பின்னால் கீழ்ப் பகுதியில் மூளை முடிவு படும் இடத்தைத் தடவிப் பாருங்கள். இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் அமிக்டலா, மன அழுத்தத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மூளையின் பகுதி. நான்கு வயதில் நீங்கள் எதிர்பார்க்காதபடி, உங்களுக்கு மிக அருகில் தீபாவளிப் பட்டாசு வெடித்து அதில் நீங்கள் அதிர்ச்சி அடைந்திருந்தால், அந்தச் சத்தம், அதிலிருந்து வந்த வெளிச்ச அளவு போன்றவை அமிக்டலாவில் சேகரமாகி யிருக்கும். இப்படி அதிர்ச்சிச் சம்பவங்களை அட்டவணை போட்டுச் சேமித்திருப்பதன் மூலம், அதே சம்பவம் மீண்டும் நடைபெற்றால், அதை எதிர்க்க வேண்டுமா அல்லது இடத்தை விட்டு ஓட வேண்டுமா (Fight or Flight) என்பதை நீங்கள் நினைத்து முடிவு எடுக்கவெல்லாம் வேண்டாம்; கண்ணிமைப் பதற்குள் அமிக்டலாவில் இருந்து வந்த சமிக்ஞை இதைச் செய்து முடித்திருக்கும்.
ஹிப்போகாம்பஸ் (Hippocampus): முக்கிய நினைவுகளைச் சேமித்து வைக்கும் இந்தப் பகுதி, மூளையின் நடுவில் அமைந்திருக்கிறது. நம் உடலைக் கணினி எனக் கருதிக்கொண்டால், அதன் Hard Drive என ஹிப்போகாம்பஸை அழைக்கலாம். அமிக்டலாவில் அதிக விவரங்களைச் சேமிக்க முடியாது என்பதால், ஹிப்போகாம்பஸில் இருக்கும் விவரங்களைத்தான், தேவைப்படும்போது முடிவுகள் எடுக்க அமிக்டலா பயன்படுத்திக்கொள்ளும்.
முன்நெற்றி கோர்டெக்ஸ் (Pre-frontal Cortex): நெற்றிக்கு அடுத்து இருக்கும் மூளையின் இந்தப் பகுதிதான் நம்மைச் சுற்றி நடப்பவற்றை தீர்க்கமாக அலசவும், தீர்மானமான முடிவுகள் எடுக்கவும் பயன்படுகிறது. உடல் என்ற கணினியில் CPU என இதை அழைக்கலாம்.
சாதாரண தருணங்களில் மேற்கண்ட மூன்று பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயல்பாகப் பணியாற்றியபடி இருக்கும். அதிர்ச்சி நிகழ்வு நடக்கையில், இவற்றிற்கிடையேயான சமநிலை தவறிப்போய் PTSD-க்கு இட்டுச் செல்கிறது. நடந்த அதிர்ச்சி சார்ந்த சம்பவங்களை ஹிப்போகாம்பஸ் சேமித்து வைக்கத் திணறும். அமிக்டலாவை கோர்டெக்ஸ் தொடர்பு கொண்டு ‘அமைதியாக இரு’ எனச் சொல்வதில் சிக்கல் ஏற்படும். விளைவு, தூங்கச் செல்கையில் கெட்ட கனவுகள் வந்து குழப்பத்தை ஏற்படுத்தி, தூங்குவதை இடையூறு செய்யும். இதை ஈடுகட்டுகிறேன் பேர்வழி என மது குடிக்க ஆரம்பிப்பது, தூக்க மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்றிப் பயன்படுத்துவது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களில் ஈடுபட, அவர்களது மனநிலையும் உடல்நிலையும் தொடர்ந்து சீரழியும்.
சரி, இதிலிருந்து எப்படி மீள்வது? நடந்த சம்பவத்தை மறக்கவோ, அல்லது அது நடந்தது என்பதை உணர்ந்து கொண்டு, நினைவுகளைச் சரி செய்து கொள்வதோ உளவியல் சிகிச்சை மூலம் சாத்தியம். தொழில்நுட்பத் தீர்வுகளும் இப்போது வரத் தொடங்கியிருக் கின்றன. ஆக்குலஸ் போன்ற Virtual Reality மூலம் நடந்த சம்பவத்தை மீண்டும் பார்க்கும்படி நேரடியாக கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து, அதை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலம் அது தன் மீது செலுத்தும் ஆதிக்கத்தைக் குறைப்பது இதற்கு ஓர் உதாரணம்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் PTSD சிக்கல் உண்டு. குறிப்பாக நம்மோடு நெருங்கி வாழும் நாய்களுக்கு ஏற்படும் திடீர் அதிர்ச்சிச் சம்பவங்கள் அவற்றின் நலத்தையும் நடத்தையையும் பாதிக்கும் என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடக்கின்றன. எங்கள் வீட்டு ஆஸ்ட்ரேலியன் ஷெப்பர்ட் வகை நாய், தன்னை வளர்த்தவரால் திடீரெனக் கைவிடப்பட்டதால், மனித வாசம் வீட்டில் இல்லை என்றால் பதற்றத்தில் மூழ்கிவிடும். உடைகளை இழுத்துத் தரையில் போட்டு, அதன் வாசத்தை மோந்தபடி எங்களுக்காகத் தவிப்புடன் காத்திருப்பது ஒருவித PTSD என்றார் கால்நடை மருத்துவர்.
இந்தக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை எப்போதும்போல +1 628 240 4194 என்ற வாட்ஸப் எண்ணுக்கு அனுப்புங்கள்.
- Logging in...