Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 30

UNLOCK அறிவியல் 2.O - 30
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல் 2.O - 30

- அண்டன் பிரகாஷ்

ஏட்டிக்குப் போட்டியாக அமெரிக்க நாசாவின் ‘ரோவர்’ வாகனம் போலவே, தகவல் சேகரிக்க, செவ்வாய்க் கிரகத்தில் வாகனம் ஒன்றை ஓட விட்டது சீனா என்ற செய்தியை சென்ற வாரத்தில் பல ஊடகங்களில் நீங்கள் பார்த்தோ, படித்தோ இருக்கலாம். ஊடகங்களில் அதிகம் வெளிவராத வான்வெளி அறிவியல் செய்தி, சீனா ஏவிய ராக்கெட் பாதி வழியில் நொறுங்கிக் கடலில் விழுந்த நிகழ்வு. சென்ற வாரம் மாலத்தீவிற்கு அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.

“யார் வேண்டுமானாலும் ராக்கெட் ஏவிவிட முடியுமா? வல்லான் வகுத்த வாய்க்கால் போல யார் பலமாக இருக்கி றார்களோ அவர்களுக்குத்தான் வான்வெளி சொந்தமா?” மலேசியாவிலிருந்து, தொடரின் வாசகர் இ.ராஜ் வாட்ஸப்பில் சில வாரங்களுக்கு முன்னால் ஆடியோ பதிவாகக் கேட்ட கேள்வி இந்தத் தருணத்தில் நினைவிற்கு வருகிறது. கேள்வி இந்த வாரம் இன்னும் முக்கியத்துவத்துவம் பெறுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. உடைபட்ட ராக்கெட், துணைக்கோள்கள் போன்ற வற்றிலிருந்து 2,500-க்கும் மேற்பட்ட தட்டுமுட்டுத் துண்டுகள் இப்போது வான்வெளியில் குப்பையாகச் சுற்றிக்கொண்டிருப்பதை முந்தைய வாரக் கட்டுரை ஒன்றில் அலசினோம். இந்தக் குப்பை வரும் வருடங்களில் இன்னும் அதிகமாகும். விண்வெளிப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கப்போகும் இந்த வான்குப்பைகளில் பெரும்பாலனவை சில சென்டிமீட்டர் அளவே ஆனவை. 400-லிருந்து 2,000 கிலோமீட்டர்களுக்குள் இருக்கும் பூமியின் கீழ்ச்சுற்றுப் பாதையில் (Lower Orbit) சுற்றிக்கொண்டிருக்கும் இவை பூமியின் வளி மண்டலத்திற்கு வந்துவிட்டால், புவியீர்ப்பின் காரணமாக இழுக்கப்படும் வேகத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். இயங்கிக்கொண்டிருக்கும் துணைக்கோளுக்கு, புவியீர்ப்பு தன்னை இழுத்துவிடாமல், தனது வட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்க அவ்வப்போது உந்துவிசை (Thrust) கொடுக்க சூரிய ஒளியால் இயங்கும் இயந்திரம் இருக்கிறது. உடைந்த பகுதிக்கு அப்படி எதுவுமில்லை என்றாலும், இவை வளி மண்டலத்திற்குள் இழுக்கப்படாமல் எது தடுக்கிறது? இந்தக் கேள்விக்கு சமீபத்தில் விடை கிடைத்திருக்கிறது.

UNLOCK அறிவியல் 2.O - 30

விண்வெளிக் குப்பைகளை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றிய வருடாந்தர மாநாடு கடந்த பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. சென்ற மாதம் நடந்த இந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி அறிக்கை, வளி மண்டலத்தில் நாம் ஏற்படுத்திவரும் கரியமில வாயுவுக்கும், சுழன்று கொண்டிருக்கும் குப்பைகளுக்குமான தொடர்பை அலசியது. கரியமில வாயுவின் மூலக்கூறுகள் சூரிய ஒளியை உள்வாங்கி, தனக்குள் வெப்பத்தை அடக்கிக்கொள்வதன் மூலம் விரிவடைகிறது. இந்த மூலக்கூறுகள் விரிவடைய விரிவடைய, வளி மண்ட லத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என்கிறது மேற்படி கண்டுபிடிப்பு. இதன் காரணமாக, வளி மண்டலத்திற்குள் நுழைந்து, பூமியால் ஈர்க்கப்பட்டு எரிந்துபோக வேண்டிய விண்குப்பைகள் வளிமண்டலத்திற்கு மேலேயே அடைபட்டுக் கிடக்கின்றன. கரியமில வாயு வளிமண்டலம் சென்றடைவதை நாம் நிறுத்த வில்லையெனில், இந்த நூற்றாண்டின் இறுதியில் எண்பது சதவிகித வளிமண்டலத்தை இழந்துவிடுவோம் என்றும் எச்சரிக்கிறது அறிக்கை. விண்குப்பை மேலாண்மை மாநாட்டின் வலைத்தளம் - https://space-debris-conference.sdo.esoc.esa.int/

மலேசிய வாசகர் கேள்விக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் ராக்கெட் விடலாம் என்பது சாத்தியமில்லாதது. முதலில் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு, இந்தியாவிற்கு ISRO, அமெரிக்காவிற்கு NASA. துணைக்கோள்களை ஏவும் ராக்கெட்டுகளை விடுவதற்கு அந்தந்த நாடுகளின் தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் அனுமதி பெற்றாக வேண்டும். இவை அனைத்தையும் தாண்டி, சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union) என்ற ஐக்கிய நாடுகளின் அமைப்பு இருக்கிறது. பல நாடுகளில் இருந்து ஏவப்படும் துணைக்கோள்கள் ஒன்றோடு ஒன்றாக மோதிக்கொள்ளாமல் இருக்கவும், அவற்றிலிருந்து பெறப்படும் சமிக்ஞைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளாமல் இருப்பதற்கும், இவற்றைப் பிரித்துக் கொடுக்கும் பணியையும் செய்கிறது மேற்படி அமைப்பு. இந்த அமைப்பின் அனுமதியும் அவசியம்.

அடிப்படை அறிவியல் மற்றும் அதையொட்டிக் கட்டப்படும் தொழில்நுட்பம் என்பதாகத்தான் அறிவியல் சார் சிந்தனைகள் நமக்குப் பயனளிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. அதற்கு மிக எளிய உதாரணமாக, ராக்கெட்டையே எடுத்துக் கொள்ளலாம். ‘ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை இருக்கிறது’ - நியூட்டனின் மூன்றாவது விதி எனப் பிரபலமாக அறியப் படுவது இது. அவர் தலைமீது விழுந்த ஆப்பிள் கொண்டு வந்த அறிவியல் சிந்தனை களிலிருந்து வளர்ந்ததுதான் புவியீர்ப்பு சக்தி பற்றிய அறிவு. அதன்பின் 200 ஆண்டுகள் கழித்து, விமானம் என்பது வடிவமைக்கப்பட்டு, அதன் பின்னர் ராக்கெட்டுகளும் சாத்தியமானபோது, மேற் கண்ட இரண்டு அறிவியலும் கலந்து அந்தத் தொழில் நுட்பத்திற்கு அச்சாணிகளாக அமைந்தன.

பல வகை அறிவியல் பிரிவுகள் அவியலாக இணைந்து புதிய துறையாக உருமாறுவதும் உண்டு. அப்படிப்பட்ட துறைக்கு நல்ல உதாரணம் - தடய அறிவியல் (Forensic Science). முதலில், சட்டத்தை நிலைநாட்டப் பயன்படுத்தப் படும் அறிவியல் எனத் தடய அறிவியலைச் சொல்லலாம். ‘கையெழுத்து அசலானது தானா’ என்பதில் தொடங்கி ‘ரத்தம் எப்படித் தெளிக்கும்’ என்பது தொடர்ந்து நச்சுக்களின் வேதியியல் எனக் கலவையான திறன்களை தடய அறிவியலாளர்கள் கொண்டிருக்க வேண்டும். இந்த அறிவியல் துறையின் வளர்ச்சி, குற்றச் செயல்கள் எப்படி நடந்தது என்பதைத் தீர்க்கமாகவும், விரைவாகவும் கண்டறிந்து அவற்றைச் செய்தவர்களுக்கான தண்டனை வாங்கித்தருவது மட்டுமல்ல; குற்றம் செய்யாமல் சூழ்நிலை காரணமாகத் தவறாக தண்டிக்கப் பட்டவர்களை விடுவிக்கவும் பயன்படுகிறது.

UNLOCK அறிவியல் 2.O - 30

தடய அறிவியல் துறை தொடும் அடிப்படை அறிவியல் பிரிவுகள் பல என்பதால் ஒரே ஒரு விறுவிறுப்பான பிரிவு ஒன்றை மட்டும் பார்க்கலாம்.

தீ எரிப்பு என்பது விபத்தாகவோ, அல்லது குற்றத்தை மறைக்கவோ நடத்தப்படலாம். சம்பவ இடத்தை அலசும் தடய அறிவியலாளர்கள் தேடுவது - டயட்டோம் என்ற பாசி வகையை. தீ எரிந்த இடத்தில் பாசியைத் தேடுவது எதற்கு என்ற கேள்வி எனக்குள்ளும் எழுந்தது. அதற்குப் பதில் தீக்குச்சியில் இருக்கிறது. தீக்குச்சியின் முனையில் இருக்கும் சல்பர் கலந்த பொட்டாசியம் குளோரேட், ஆக்சிஜனை உறிஞ்சும் முகவராகப் பணியாற்ற, அதை குச்சியின் முனையில் ஒட்ட வைக்க பசையுடன் சேர்ந்த கண்ணாடித்தூள் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கண்ணாடித்தூள் சிறப்பாகப் பெறப்படுவது. கடல்களிலும், நதிகளிலும், குளங்களிலும் இருக்கும் டயட்டோம் பாசிவகை சிலிக்கனால் ஆன ஓர் உறையைத் தன்னைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறது. டயட்டோம் பாசியைக் காயவைத்துப் பயன்படுத்தினால், கண்ணாடி போலவே செயல்பாடு இருக்கும். தீக்குச்சி உரசுவதற்கு உதவியாக வைக்கப்படும் டயட்டோம் அத்தனை வெப்பத்திலும் அழிந்து போவதில்லை. தீ எரிப்புத் தடயங்களைச் சல்லடை போட்டுத் தேடுபவர்கள் டயட்டோமைக் கண்டறிந்தால், அது எந்த நிறுவனத்தின் தீப்பெட்டி என்பதைக் கண்டுபிடித்து குற்றம் புரிந்தவரை இன்னும் ஓர் அடி நெருங்க உதவியாக அமையும்.

ஆனால், தீ எரிப்பதற்குத் தீக்குச்சி மட்டுமே போதாது; கெரசின், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் வகைகள் ஏதாவது பயன்பட்டிருக்கும். இந்த எண்ணெய் எங்கே, எப்போது வாங்கப்பட்டது என்பது வரை சாத்தியமாக்குகிறது தடய அறிவியல். தீ எரிப்புச் சம்பவ இடத்தில் இருக்கும் சாம்பல் இத்யாதிகளைத் திரட்டி வேதியியல் பகுப்பாய்வு செய்து அது என்ன எண்ணெய் என்பதைக் கண்டறிய முடியும். வாகனங்களின் எஞ்சின்கள் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட சில மூலக் கூறுகளைச் சேர்க்கிறார்கள். இவை ஆவியாகிப் போவதில்லை. எரிக்கப்பட்ட இடத்தில் எச்சமாக ஒட்டி யிருக்கும் இந்த மூலக்கூறுகளைப் பிரித்து எடுத்து, அது எந்த நிறுவனத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டது, அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் எங்கே விற்கப்படுகின்றன என குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வட்டத்தைச் சுருக்கிவிடலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 30

தவறாக தண்டனை பெற்றவர்களைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்க உதவியாக இருப்பது தடய அறிவியலின் டிஎன்ஏ ஆதாரப் பிரிவு. இந்த முறையில் அமெரிக்காவில் மட்டும் இதுவரை விடுவிக்கப்பட்ட 375 பேரில் 21 நபர்கள் மரணதண்டனைக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்கள். குற்றத்திற்கான நோக்கம், அது நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நேரடி, மறைமுக சாட்சிகள் எனப் பலவற்றின் அடிப்படையில் குற்றம் நிரூபணமாகி தண்டனை வழங்கப்படுகிறது. இருபது ப்ளஸ் வருடங்களுக்கு முன்னால் தண்டனை கொடுக்கப்பட்டவர்களின் ஆதாரங்களில் ரத்தம், முடி, விந்து, சருமம் போன்றவற்றில் இருக்கும் டிஎன்ஏ கூறுகள் அழிந்துபோவதேயில்லை என்பதால், அவற்றை மீண்டும் எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்து, ஆவணத்தில் இருப்பது தண்டனை பெற்றுக் கொண்டிருப்பவரின் ரத்தமல்ல என்பதை எளிதாக நிரூபித்து, பல ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்தப்பட்ட அநீதியை சரி செய்கிறார்கள்.

UNLOCK அறிவியல் 2.O - 30

தொட்டு உணர்ந்து நடத்தப்படும் குற்றங்களுக்கு மட்டுமல்ல; ஒரு கணினி, கீபோர்டு சகிதம் எங்கோ அமர்ந்து நடத்தும் குற்றச் செயல்களைக் கண்டறியும் சைபர் பாதுகாப்புத் தடய அறிவியல் தொழில்நுட்பத்திற்கு வரும் ஆண்டுகளில் தேவை அதிகரிக்கும். வீடுகளை ஸ்மார்ட் ஆக்குகிறேன் பேர்வழி என்ற பெயரில் இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்கள் அதிகரித்துக்கொண்டே போவது ஒருபுறம் என்றால், பிணையங்கள் இல்லாமல் எந்த வணிக நிறுவனமும் இயங்காது என்ற நிலை மறுபுறம் என்பதால், இவற்றிற்குள் நுழைந்து மிரட்டிப் பணம் பறிக்கும் ransom வகை குற்றங்கள் அதிகரித்தபடி இருக்கின்றன. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்: அமெரிக்காவின் பல மாநிலங்களை கிட்டத்தட்ட 9,000 கிலோமீட்டர்களுக்கு இணைத்துப் பெட்ரோல் பொருள்களைக் கொண்டு செல்லும் கலோனியல் பைப்லைன் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்கத்தில் புகுந்து, ‘பணம் தரவில்லை என்றால் இயக்கவிட மாட்டோம்’ என இணைய கிரிமினல்கள் சிலரின் மிரட்டலால், கொலோனியல் நிறுவனம் பல நாள்கள் செயலிழந்தது. விளைவு - சென்ற வாரத்தில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. அதிகார பூர்வமாகச் சொல்லவில்லை என்றாலும், ஐந்து மில்லியன் டாலர்களை கலோனியல் கொடுத்து பைப்லைனை மீண்டும் இயக்க வைத்தது என்கிறார்கள். இதில் கடைசி ட்விஸ்ட் - சம்பவம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், ‘அவசரமாக சைபர் பாதுகாப்பு நிபுணர் வேண்டும்’ எனத் தனது வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது கலோனியல்.

படித்து முடித்து விட்டீர்களா? அலைபேசியை எடுங்கள். +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் உங்களது பின்னூட்டங்களை அனுப்புங்கள்.

- Logging in..