Published:Updated:

UNLOCK அறிவியல் 2.O - 33

UNLOCK அறிவியல்
பிரீமியம் ஸ்டோரி
News
UNLOCK அறிவியல்

- அண்டன் பிரகாஷ்

அமேசானை நிறுவி இதுவரை அதன் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஜெஃப் பெசோஸ், இந்த மாதத்துடன் அந்தப் பதவியிலிருந்து கீழிறங்குகிறார். ஓய்வு பெறுவதால், சோபாவில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்தபடி நாள்களைப் போக்கப் போகிறார் என நினைத்துவிட வேண்டாம். அமேசான் நிறுவனத்துப் பங்குகளை வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர் என்ற அளவில் விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு Blue Origin என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் பெசோஸ். எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் Blue Origin சற்றே திணறித் தள்ளாடுகிறது. வணிகத் தோல்விகளையெல்லாம் பற்றிக் கவலைகொள்ளாமல், பெசோஸ் தனது நிறுவனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் குறியாக இருக்கிறார்.

UNLOCK அறிவியல் 2.O - 33

தனது பெயரை பிரபலப்படுத்த Blue Origin சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. விண்வெளிக்குச் செல்ல விருப்ப முள்ளவர்கள் ஏல முறையில் விண்ணப்பிக்கலாம். ஏலத்தில் வெற்றி பெறுபவர் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டில் பயணிக்க வாய்ப்பு கொடுக்கப்படும். இந்த வரி எழுதப்படும் வரை 150 நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன; அதிகப்படியான ஏலத்தொகை 3.2 மில்லியன் டாலர் என்கிறது Blue Origin. நாசா போன்ற அரசாங்க விண்வெளி நிறுவனங்கள் மூலமாக விண்வெளி வீரராக வேண்டுமென்றால், உயர் படிப்பும், உடலுறுதியும், நீண்ட காலப் பயிற்சியும் இருக்க வேண்டும். மேற்படி ஏல வெற்றியாளர் அப்படியெல்லாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. சீட் பெல்ட் போட்டுக்கொண்டு ராக்கெட் உள்ளே ஜன்னல் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும். அறுபது அடி கொண்ட ராக்கெட் 11 நிமிடத்தில் பூமியில் இருந்து விண்ணில் நூறு கிலோமீட்டரைத் தொட்டுக் கீழிறங்கத் தொடங்கிவிடும். பாராசூட்டுகள் மூலமாக டெக்சாஸ் மாநில பாலைவனப் பகுதி ஒன்றில் வந்திறங்குபவர்களை குட்டி யானை வாகனம் ஒன்றில் வைத்து பத்திரமாக அழைத்து வந்துவிடுவார்களாம். ஏலத்தில் விண்வெளி வீரர் என்ற விளம்பரத்தையும் தாண்டி பெசோஸ் இன்னொரு அதிரடி அறிவிப்பைச் செய்திருக்கிறார். அவரும், அவரின் சகோதரர் மார்க் இருவரும் ஏல வெற்றியாளருடன் ராக்கெட்டில் பயணிக்கப் போகிறார்களாம். மன்னிக்கவும், ஜூன் 12 அன்று இந்த ஏலம் முடிந்துவிடும் என்பதால், இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு ஏலத்தில் பங்கு பெற வாய்ப்பில்லை.

அமேசானில் இருந்து ஆப்பிளுக்குத் தாவலாம்

ஆப்பிளின் உலகளாவிய உருவாக்குபவர் மாநாடு (Worldwide Developer Conference, சுருக்கமாக, WWDC) தொடங்கிய நாளில் நானும் இந்த வாரக் கட்டுரையைத் தொடங்குகிறேன். இரு திரைகள் இணைக்கப்பட்ட கணினியில் ஒரு திரையில் மாநாட்டுத் தகவல்கள் ஓடிக்கொண்டிருக்க, மறு திரையில் கட்டுரை. தங்களது தொழில் நுட்பங்களின், மென்பொருள்களின் அடுத்த வெர்ஷன்களில் இருக்கும் புதுமைகளை ஆப்பிளில் பணிபுரியும் பலர் பகிர்ந்து கொண்டார்கள்.

குறிப்பிடத்தக்க சில அறிவிப்புகள்

நண்பர்களுடன் இணைந்து திரைப்படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது சாத்தியமில்லாததாக மாறிக் கொண்டிருக்கும் இந்த நாள்களுக்குப் பொருத்தமாக Shareplay என்ற வசதியைக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள். எந்த streaming சேவை வேண்டுமோ, அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நண்பர்களை அழைத்தால், அனைவரும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும். யூடியூப் வீடியோக்கள், ஏன், வலைத்தளப் பக்கங்களை ஒன்றாகப் பார்ப்பதுகூட சாத்தியம்.

UNLOCK அறிவியல் 2.O - 33

பள்ளிகள் மூடப்பட்டு, லாக்டௌன் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நாள்களில் குழந்தைகள் அலைபேசி, டேப்லெட் எனப் பல்திரைகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருப்பது அத்தியாவசியம் ஆகியுள்ளது. குழந்தைகள் எவ்வளவு நேரம் திரைகளைப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள் என்பதற்கு சமமாக திரைகளற்ற பொழுதுபோக்கு மற்றும் கற்கும் நேரத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கல்வியாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதை அடிப்படையாக வைத்து அலைபேசி உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தப்படும் திரை நேர (Screentime) தகவலை எளிதாக எடுத்துக்கொள்ளும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள். இதற்கான மென்பொருள்களை விரைவில் அவர்களது AppStore-ல் காணலாம்.

அலைபேசி என்பது கைகளில் இருக்கும் வலிமையான கணினி என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இதனால், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பணிகளுக்கும் தேவைப்படும் சாதனமாக மாறிவிட்டது அலைபேசி. இப்படி அலைபேசி தவிர்க்கமுடியாமல் ஆகிவிட்டதால் பணிக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாது ஆகிவிடும் சிக்கலும் நவீன வாழ்க்கையில் வந்திருப்பது உண்மை. இந்தக் கோளாறை Focus என்ற வசதி மூலம் தீர்க்க முனைகிறது ஆப்பிள். பணி நேரம் என்பதை நிர்ணயித்துக் குறித்து வைத்துக்கொண்டால், அந்த நேரத்தில் பணி சம்பந்தப்பட்ட அழைப்புகளும், மின்னஞ்சல்கள் மற்றும் பதிவுகளுக்கு உங்கள் அலைபேசி தானாகவே முன்னுரிமை கொடுத்துவிடும். அந்த நேரம் கடந்துவிட்டால், நண்பர்களின் பதிவுகள், விளையாட்டு அழைப்புகள் என உங்கள் தனிப்பட்ட வாழ்வு முக்கியத்துவம் பெறும்.

நிற்க, உலகில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் ஒரு நாள் முழுக்க அலைபேசி பயன்படுத்தாமல் இருந்தால் என்னாகும் என்ற விபரீதக் கற்பனை செய்து பார்த்தேன். அது கற்பனையாக மட்டுமே இருக்கும் என்பதே உண்மை.

காரணம் - Nomophobia.

அதென்ன போபியா? அன்லாக் செய்வோம்.

Phobia என்றால் பயம் என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். NO MObile என்பதன் சுருக்கம்தான் Nomo. ஆக, நம்மிடம் அலைபேசி இல்லாது போய்விடுமோ என எழும் பயம் Nomophobia. இந்தப் பதத்தை முதலில் படித்தபோது யாரோ சமூக ஊடகத்தில் இட்டுக் கட்டியது என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால், இது அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து கொடுக்கப்பட்ட பெயர் என்பது தெரிந்தபோது ஆர்வம் அதிகமானது. முதலில் போபியாவின் அறிவியல் அடிப்படை களைப் பார்த்துவிடலாம்.

சிலருக்கு தண்ணீரைப் பார்த்து பயம்; சிலருக்கு உயரத்தில் நிற்பது பயம்; சிலருக்கு மேடைப் பேச்சு என்றால் பயம்; சிலருக்கு சிலந்தியைக் கண்டால் பயம்; சிலருக்கு சர்க்கஸ் கோமாளியைக் கண்டால் பயம் என போபியா வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு லிஃப்ட் என்றால் படு பயம். பத்து மாடிகள் என்றாலும் படியேறியே செல்வார். உலக அளவில் சுமார் முப்பது கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு வகையான பயம் பலமாக இருக்கிறது என்கிறார்கள்.

UNLOCK அறிவியல் 2.O - 33

போபியா எப்படி நமக்குள் பதிவாகி பய உணர்வைக் கொடுக்கிறது ?

பயத்தைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்யும் மனோவியல் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் மிகத்துல்லியமாக இதைக் கண்டறிந்துவிட்டனர். பயம் ஏற்படுத்தும் பொருளையோ அல்லது சந்தர்ப்பத்தையோ பயம் இருப்பவர்களிடையே அறிமுகப்படுத்தும்போது அவர்களது மூளையில் நடக்கும் மாற்றங்களையும், நியூரான்களின் ஓட்டங்களையும் PET (Positron-Emission Tomography) மற்றும் fMRI (functional Magnetic Resonance Imaging) கருவிகளை வைத்து தெளிவாகப் பார்த்து அவர்கள் கண்டறிந்தது - அமெஹ்டலா.நாம் இந்தத் தொடரின் பல கட்டுரைகளில் மூளையின் அமெஹ்டலா பற்றிப் பார்த்திருக்கிறோம். பாதாம் பருப்பு அளவில் அமைந்திருக்கும் அமெஹ்டலா நினைவு, முடிவு செய்யும் திறன் ஆகியவற்றுடன் உணர்ச்சிபூர்வ முடிவுகளை எடுக்கும் பகுதியாகவும் பணியாற்றுகிறது. எதைப் பற்றிய பயம் என்றாலும், அது பதிவாகி நம்மை அந்த உணர்வின்படி இயங்க வைப்பது மேற்படி அமெஹ்டலாவே.

சரி, எப்படி பயம் பதிவாகிறது ?

மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். (1) வாழ்வில் நடந்திருக்கும் எதிர்மறை அனுபவங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, குளிக்கும் போது தண்ணீர் சுவாசப் பாதையில் நுழைந்து சில நொடிகள் மூச்சு விட சிரமமானது அமெஹ்டலாவின் பதிவாகி, தேங்கியிருக்கும் தண்ணீரைப் பார்த்ததுமே பயத்தை வரவழைக்கும். பை தி வே, தண்ணீரைப் பார்த்தால் வரும் பயத்தை aquaphobia என்கிறார்கள். (2) மரபணுக்களில் பயம் என்பது எழுதப்பட்டு பெற்றோரிடமிருந்து உங்களுக்கு வந்திருக்கலாம். எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளில் இது அழுத்தமாக நிரூபிக்கப்பட் டிருக்கிறது. (3) மூளையில் ஏற்படும் வேதி மாறுபாடுகள் சில தருணங்களில் அமெஹ்டலாவை பாதித்து பயத்தைக் கொண்டு வரலாம்.

UNLOCK அறிவியல் 2.O - 33

இருக்கட்டும், பயத்தை எப்படிப் போக்குவது ?

உளவியல் மற்றும் வேதியியல் என இரு அறிவியல் வழிமுறைகள் பயத்தை அமெஹ்டலாவில் இருந்து மாற்றியமைக்கப் பயன்படுகின்றன. மிக முக்கியமான உளவியல் வழிமுறை - வெளிப்படுத்தும் சிகிச்சை (Exposure Therapy). எதைப் பற்றிய பயம் இருக்கிறதோ அதை முதலில் சிறிய அளவில் அறிமுகப்படுத்திவிட்டு, அதன் பின்னர் தொடர்ந்து அறிமுக அளவை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால், நாளடைவில் அமெஹ்டலாவில் பயம் மழுங்கிப் போய்விடும். உதாரணத்திற்கு, பாம்பு பற்றிய உச்சக்கட்ட பயம் இருப்பவருக்கு முதலில் பாம்பின் கோட்டுருவப் படங்களைக் காட்டிவிட்டு, பின்னர் கலர் புகைப்படங்களுக்கு முன்னேறி, நாளடைவில் பாம்பை நேரடியாகப் பார்க்க வைப்பதன் மூலம் பாம்பு பற்றிய பயமான ophidiophobiaவை விரட்டிவிடலாம். இந்தச் சிகிச்சைக்கு Virutal Reality மற்றும் Augmented Reality தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. பாதுகாப்பான அறையில் இருந்துகொண்டு, பயம் வரவழைக்கும் சூழலை தத்ரூபமாகக் கண்களுக்குக் கொண்டுவருவதன் மூலம் பயத்தைக் களையும் சிகிச்சையைச் சிறப்பாக அளிக்க முடிகிறது.

அறிவாற்றல் சார்ந்த நடத்தை (Cognitive Behavioral Therapy), பயத்தை குணமாக்கப் பயன்படும் மற்றொரு உளவியல் சிகிச்சை முறை. பயத்தைக் கொண்டு வரும் பொருள் அல்லது சூழலைப் பற்றி ஆழமாக அலசி அறிந்துகொள்வதன் மூலம், பயத்தின் அடிப்படை தகர்க்கப்பட்டு அமெஹ்டலா தன்னை ரீ-வயரிங் செய்துகொள்ள உதவுகிறது. உளவியல் வழிமுறைகள் உதவவில்லை என்றால், மருந்துகள் மூலம் பயத்தை மழுங்கடிக்கும் சிகிச்சைகளும் இருக்கின்றன.

நோமோபோபியாவிற்கு வருவோம். சராசரி பயனீட்டாளர் அலைபேசியை ஒரு நாளில் 80 முறை பயன்படுத்துகிறார். 75 சத பயனீட்டாளர்கள் கழிவறைக்கு அலைபேசியைக் கொண்டு சென்று விடுகிறார்கள். ‘காலணி போடாமல்கூடச் செல்வேன்; அலைபேசி இல்லாமல் செல்ல மாட்டேன்’ என 20 சதவிகித பயனீட்டாளர்கள் சர்வே ஒன்றில் தெரிவித்திருக்கிறார்கள்.

* அலைபேசியை அணைத்துவிட்டு சில மணி நேரம் இருக்க முடிகிறதா?

* பேட்டரி முழுக்க சார்ஜுடன் இருக்கும்போதும் சார்ஜ் செய்ய வேண்டும் என மனம் துடிக்கிறதா?

* வெளியே செல்கையில் அவ்வப்போது பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்து அலைபேசி இருக்கிறது என்பதை உறுதி செய்கிறீர்களா?

* படுக்கச் செல்கையில் அலைபேசி சகிதம் செல்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு ‘ஆம்’ என பதில் அளித்தால், நோமோபோபியா இருக்கும் சாத்தியம் இருக்கிறது.

நோமோபோபியா உங்களுக்கு இருக்கிறது என சந்தேகம் வருகிறதா? இந்த வாரக் கட்டுரைக்கான பின்னூட்டங்களை எப்போதும் போல் +1 628 240 4194 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பி விட்டு, அலைபேசியை அணைத்துவிட்டு 24 மணி நேரம் இருக்க முயலுங்கள். சாத்தியப்பட்டதா, இல்லையா என்பதை இன்னொரு பதிவின் மூலம் அதே எண்ணுக்குத் தெரியப்படுத்துங்கள்.

- Logging in